Skip to content
Home » என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

வ.உ.சி - பாரதி

‘அச்சம் வேண்டாம். நாளடைவில் பழகிவிடும். நானும் ஒரு காலத்தில் மேடையைக் கண்டு நடுங்கியிருக்கிறேன்’ என்று ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டன் சொன்னபோது, மன்னிக்கவும், ஒரேயொரு சொல்கூட நம்பும்படியாக இல்லை என்று நேரடியாகவே சொல்லிவிட்டேன். சிரித்தார். ‘முழுக்க உண்மை. ஆரம்பத்தில் எனக்கும் பொதுவிடங்களில் பேச வராது. போகப் போகத்தான் பழகிக்கொண்டேன்.’

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறையும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் (எம்ஐடிஎஸ்) இணைந்து நடத்திய ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ நூல் குறித்து நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் ஆய்வாளர் பழ. அதியமானோடு இணைந்து உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. வ.உ.சி.யின் நினைவு தினத்தன்று (செப்டெம்பர் 5) இணையம் வாயிலாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இருப்பதிலேயே சன்னமாக இயங்கியது திரு. மணிகண்டனின் ஒலிபெருக்கிதான் என்றாலும் ஓங்கி ஒலித்தது அவர் குரல். வ.உ.சி. பற்றிய உயிரோட்டமிக்க ஒரு சித்திரத்தைத் தனது தலைமையுரையில் தீட்டிவிட்டார். பாரதிதாசனின் பாடல் வரிகளை அவர் கவனப்படுத்திய விதம் ஈர்த்தது.

பெருமழை பெய்து முடித்தபிறகு சாரல் போல் நானும் பேசவேண்டுமா என்று தன்னடக்கத்தோடு தொடங்கிய பழ. அதியமான் ஐயா, தனக்குப் பிறகு பேசுவதற்கு இன்னோர் உயிர் படபடப்போடு காத்திருக்கிறதே; ஒன்றிரண்டு சொற்களாவது அந்த உயிரும் பேசியாகவேண்டுமே; அதற்காகவேனும் புத்தகத்தில் எதையேனும் மிச்சம் வைப்போம் என்பது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைகொண்டாரில்லை. முன்னட்டை தொடங்கி பின்னட்டை ‘பார் கோட்’ வரை; ‘இம்ப்ரிண்ட்’ தொடங்கி அடிக்குறிப்புவரை; சமர்ப்பணம் முதல் இறுதிப்பக்க ‘திலக மகரிஷி’ நூல் விளம்பரம் வரை பிழிந்து, பொழிந்துவிட்டார்.

அழைப்பிதழில் இந்த இருவர் பெயரைப் பார்த்ததுமே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை எப்படியோ யூகித்து எனது உரையை எழுதி எடுத்து வந்துவிட்டேன். நிற்க. அவசர அவசரமாக ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது நமக்கும் நாம் பிடிக்கவேண்டிய வண்டிக்கும் நடுவிலுள்ள பாதையில் திடீரென்று ஒரு ரயில் வண்டி வானிலிருந்து குதித்து ஓட ஆரம்பிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? எனக்கு அடிக்கடி நடக்கும். இதுவும் கடந்து போகும் என்று தேற்றிக்கொண்டு, நகம் கடிக்கத் தொடங்கும்போதுதான் ஒரு பேருண்மை புலப்படும். என்னை அந்தப் பக்கம் போகவிடாதபடி வழியை மறித்துக்கொண்டு ஓடுவது சாதாரண வண்டியல்ல, உலகின் நீளமான சரக்கு ரயில்!

இன்னதென்று கண்டுபிடிக்கமுடியாத பிரம்மாண்டமான உதிரி பாகங்களை ஒவ்வொரு பெட்டியிலும் சுமந்துகொண்டு அனகோண்டா போல் நீண்டுகொண்டே போகும் அந்தச் சரக்கு ரயில். இதுதான் கடைசிப் பெட்டி என்று நான் நினைக்கும்போதெல்லாம் அதன்பின்னால் குறைந்தது நூறு புதிய பெட்டிகளாவது மாயம்போல் தோன்றும். வண்டி முழுக்கக் கடந்து செல்வதற்குள் ஒரு யுகம் இனிதே முடிவுக்கு வந்திருக்கும். எனது உரையை நான் வாசித்து முடித்தபோது அப்படியொரு உணர்வை மற்றவர்களும் அடைந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

0

மார்ச் 1987இல் வெளிவந்த நூலின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவம் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’. தனது நூலைச் செழுமைப்படுத்தவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதை முகப்பிலுள்ள நன்றியுரையில் சலபதி குறிப்பிடுகிறார்.

‘வரலாறு என்ற பெயரில் கதைவிடும் தமிழ் மனப்பாங்குக்கு மாற்று, எழுத்தாவண வழிபாடாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். இ.பி. தாம்ஸன், எரிக் ஹாப்ஸ்பாம், ஜார்ஜ் ரூடே, ரணஜித் குகா ஆகியோரின் எழுத்துகள் புதிய வாயில்களைத் திறந்துவிட்டன. இந்த வெளிச்சத்தில் அச்சிறுநூலைத் திருத்தி, செழுமையாக்கி, விரிவாக்க வேண்டும் என்ற ஆசை முப்பந்தைந்து ஆண்டுகள் கழித்து ஈடேறுகிறது. இந்தக் கால இடைவெளியில் ஏராளமான புதிய சான்றாவணங்களைத் திரட்டியதோடு வரலாற்றியல் கோட்பாடுகளைப் பயில்பவனாகவும் பயிற்றுவிப்பவனாகவும் பெற்ற புரிதலின் வெளிச்சத்தில் இந்நூல் மும்மடங்கு பெருகியுள்ளது.’

புதிய தரவுகள் கிடைக்கும்போது மட்டும் வரலாறு மாறுவதில்லை. ஏற்கெனவே நம்மிடமுள்ள தரவுகளைப் புதிய நோக்கில் ஆராயும்போதும் புதிய கேள்விகளை எழுப்பும்போதும்கூட வரலாறு மாறத்தான் செய்கிறது என்பார் ரொமிலா தாப்பர். சலபதியின் நூலில் இரண்டும் நிகழ்கின்றன. தகுந்த தரவுகளைக் கண்டறிந்து, வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்தி அவற்றை ஆராயும்போது வரலாறு துலக்கம் பெறுகிறது. அதே போல் ஏற்கெனவே உள்ள தரவுகளையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டுக்கு, திருநெல்வேலி எழுச்சி பற்றி நமக்குக் கிடைக்கும் தரவுகளில் பெருமளவு அரசு ஆவணங்களாக இருக்கின்றன. அவை அரசு தரப்பை மட்டுமே நமக்கு வெளிப்படுத்துகின்றன. ‘எழுச்சியில் ஈடுபட்டவர்களின் அனுபவப் பகிர்வுகள் இல்லை. நீதிமன்ற ஆவணங்களும்கூட இதழ்களிலிருந்து திரட்டப்பட்டவையே தவிர, முழுமையானவையல்ல’ என்கிறார் சலபதி. ‘எலீட் மேல்தட்டு தரவுகள்’ என்று இவற்றை அழைக்கிறார் ரணஜித் குஹா.

இருந்தும் ஆங்கிலேய அரசுத் தரவுகளை அவர்களுக்கே எதிராகத் திருப்பி, எவ்வளவு பாரபட்சத்துடன் வ.உ.சி உள்ளிட்டோர்மீது அவர்கள் வழக்கு நடத்தினார்கள் என்பதை விரிவாக எடுத்துக்காட்டுகிறார் சலபதி.

புத்தகத்தின் தலைப்பில் வ.உ.சி. இடம்பெற்றிருந்தாலும் சலபதியின் நூல் அவரை மட்டும் மையப்படுத்தாமல் திருநெல்வேலி எழுச்சியில் பங்குகொண்ட முகம் தெரியாத ஒரு பெரும் திரளான மக்களின் வரலாறாகவும் விரிந்திருக்கிறது. ஆனால் முகமற்ற மனிதர்களின் செயல்பாடுகளை எவ்வாறு ஆராய்வது? வரலாற்றில் அவர்கள் வகித்த பாத்திரத்தை எப்படி மதிப்பிடுவது? அதற்கான முறையியலை சலபதி குறிப்பிட்டிருக்கும் ஆய்வாளர்கள் வகுத்தளித்திருக்கிறார்கள். அவர்களுடைய சில படைப்புகள் எனக்கு அறிமுகமானவை என்பதால் சலபதியின் நூலோடு அவர் சுட்டிக்காட்டிய படைப்புகளையும் சேர்த்து அறிமுகப்படுத்தும் வகையில் என் உரையை அமைத்துக்கொண்டேன்.

திருநெல்வேலி எழுச்சி பற்றிய விரிவான முதல் சமூக, அரசியல் ஆய்வு என்று இந்நூலைச் சொல்லமுடியும். தனிப்பட்ட ஒரு பிராந்திய நிகழ்வாக அல்லாமல் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக 1908 எழுச்சியை அவர் அடையாளப்படுத்துகிறார். இந்த எழுச்சியில் யாரெல்லாம் பங்குபெற்றனர்? அவர்களுடைய சமூகப் பின்னணி எத்தகையது? அவர்களுக்கு அரசியல் பார்வை இருந்ததா? அவர்களுடைய நோக்கங்கள் என்னென்ன? அவர்கள் திரட்டப்பட்டவர்களா அல்லது தன்னிச்சையாகத் திரண்டவர்களா? எழுச்சி எத்தகைய விளைவுகளைத் திருநெல்வேலியிலும் அதற்கு வெளியிலும் ஏற்படுத்தியது? அனைத்தையும் விவாதிக்கிறார் சலபதி.

0

ஒருமுறை எட்டயபுரம் மன்னரைப் பார்ப்பதற்குத் தன் நண்பர்களோடு சென்றிருக்கிறார் பாரதி. உனக்கு வேண்டியதை வாங்கிக்கொடுக்கிறேன் என்று செல்லம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவர், சில தினங்கள் கழித்து குதிரை வண்டிகளோடு வந்து இறங்கினார். மூட்டை முடிச்சுகளுக்குக் குறைவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றதும் வீட்டுக்குள் மூட்டைகள் கொண்டுவந்து இறக்கப்படுகின்றன. செல்லம்மா பிரிக்கிறார்.

‘கடைசியாக நான் மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்ததும் எனக்குக் கோபந்தான் வந்தது. அத்தனையும் புத்தகங்கள்! புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், திருக்குறள், திருவருட்பா, கம்பராமாயணம், ஆங்கிலப் புத்தகங்கள்! ஒரே ஒரு புடவை மட்டும் வாங்கி வந்தார்.’

பாரதியோடு சென்ற நண்பரோ மன்னர் கொடுத்த 500 ரூபாயில் தன் வீட்டுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிக்கொண்டதோடு நில்லாமல் 300 மிச்சம் பிடித்து எடுத்துச் சென்றிருக்கிறார். பாரதிக்கும் அதே தொகைதான் கிடைத்திருக்கிறது. ஆனால் புத்தகங்கள் வாங்கிய பின் கையில் எஞ்சியிருந்தது 15 ரூபாய் மட்டுமே.

செல்லம்மாவின் முகக்குறிப்பை உணர்ந்து, ‘செல்லம்மா, நீ பணத்துக்கு ஆசைப்படாதே. அழியும் பொருளைக் கொடுத்து அழியாத கல்விச் செல்வத்தைக் கொணர்ந்தேன். என் மனத்திற்குப் புத்தகங்களே ஆனந்தங் கொடுக்கின்றன. என்னுடைய சந்தோஷம் உனக்குத் திருப்தி அளிக்கவில்லையா?’ என்று கேட்டிருக்கிறார் பாரதி.

‘ரொம்ப திருப்தி’ என்று பதில் வந்தது.

செல்லம்மாவின் ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் இடம்பெற்றிருக்கும் மறக்கமுடியாத காட்சி இது.

பாரதி விழாவில் (செப்டெம்பர் 12) கலந்துகொள்ளுமாறு இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறையிலிருந்து அழைப்பு வந்திருந்தது. பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இறங்கி எதிர் திசையில் பார்த்தால் இந்துக் கல்லூரி தெரியும். செடி, கொடி, மரங்களோடு அழகாக இருந்தது வளாகம். கல்லூரி முதல்வர் க. கல்விக்கரசி, பேராசிரியர் உஷா மகாதேவன் இருவரையும் சந்தித்து உரையாடினேன்.

ம. கோபாலகிருஷ்ண ஐயரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளை உள்ளடக்கிய ‘அரும்பொருட்டிரட்டு’ எனும் நூலையும் சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளிவந்திருக்கும் ம.கோ வாழ்க்கை வரலாற்று நூலையும் முனைவர் உஷா மகாதேவன் வழங்கினார். முதல் நூலின் பதிப்பாசிரியர், இரண்டாம் நூலை எழுதியவர். ம.கோ, வேறு யாருமில்லை இவருடைய பாட்டனார்தான் என்று அறிமுகப்படுத்தி வைத்தார் தமிழ்த் துறைத் தலைவர் ச. முருகேசன்.

‘கவிக்குயில் பாரதியார்’ எனும் நூலில் இடம்பெறும் சுத்தானந்த பாரதியின் சுவையான மேற்கோளொன்று நூலின் முகப்பில் இடம்பெற்றுள்ளது. ‘மதுரையில் இவரே (கோபாலகிருஷ்ண ஐயர்) பாரதிக்கு எல்லா உதவியும் செய்த அரிய நண்பர். மதுரைக் கல்லூரியிலும், சங்கத்திலும், திருச்சிக் கல்லூரியிலும் இருந்து இவர் தமிழுக்கு அரிய பணி செய்தார். தமிழ் நாட்டுப் பத்திரிகைத் துறையான ‘சுதேசமித்திரன்’ மணி என்னும் ஜி. சுப்பிரமணிய ஐயர், இவருடைய நண்பர். இவர் உதவியை, அவர் அடிக்கடி நாடி வருவது உண்டு. ஒரு தரம் ஜி.சு. ஐயர் மதுரைக்கு வந்து புலவர் மணியுடன் அளவளாவியபோது, ‘நல்ல தமிழ் எழுதக்கூடிய உணர்ச்சி பெற்ற வாலிபர் வேண்டும். சுதேசமித்திரனில் எனக்குத் துணை செய்ய ஒருவர் தேவை’ என்றார். ‘இதோ! தங்கமான உணர்ச்சிக் கனல்’ என்று பாரதியாரை அழைத்துவந்து புலவர் (ம.கோ) அறிமுகப்படுத்தினார்.’

‘பருக்கை’ நாவலாசிரியர் வீரபாண்டியன், இந்துக் கல்லூரிக்கு என்னை அறிமுகப்படுத்திய நண்பர் ரமேஷ் இருவரும் அங்கிருக்கும் தமிழ்த் துறையில் பணியாற்றுகிறார்கள். ரமேஷ் தன்னுடைய தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து பல நூல்களை அலுவலகத்துக்கு எடுத்து வந்து வைத்து மாணவர்களுக்கு அளித்து, படிக்குமாறு ஊக்கப்படுத்தி வருகிறார். புத்தகத்தைக் கொடுப்பதற்குமுன்பு ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்கிறார். திரும்பி வந்ததும் கோடு போட்டு அடித்துவிடுகிறார். மற்ற கல்லூரிகளோடு ஒப்பிடும்போது இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறையில் மாணவர்கள் அதிகம் இணைந்து படிப்பதாக அறிகிறேன். பெரும்பாலும் வசதி குறைவான குடும்பங்களிலிருந்து வருபவர்கள். குறிப்பாக, மாலை வகுப்பில் (சுழற்சி 2 என்று அழைக்கிறார்கள்) சேர்ந்து படிக்கும் பலரால் குறைவான கல்லூரிக் கட்டணத்தைக்கூடச் சரியாகக் கட்டமுடியாத நிலையே நீடிக்கிறது.

நிகழ்ச்சிகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்கள். பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று பலவற்றில் கலந்துகொண்டு கேடயங்கள் பெற்றார்கள். கலை நிகழ்ச்சிகள் மாலை வரை நீண்டு சென்றன. ஒரு பெண் பரதம் ஆடினார். சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து படக்காட்சிகளுக்கு உதட்டசைத்து நடித்துக் காட்டினார்கள். ‘நான் கால் மேல் கால் போட்டு உட்காருவேன்டா’ எனும் கபாலி வசனத்தை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. தமிழ்மொழியை உயர்த்திப் பிடிக்கும் சில வசனங்களுக்கும் அரங்கம் அதிர்ந்தது.

இந்த முறை எதுவும் எழுதிக்கொண்டு போகவில்லை. எனக்குத் தெரிந்த பாரதியைப் பேச ஆரம்பித்தேன். பாரதி கொண்டுவந்த மூட்டைகளை செல்லம்மா பிரித்தபோது உள்ளே என்ன இருந்தது தெரியுமா என்று மாணவர்களை நோக்கிப் பார்வையைச் சுழலவிட்டபோது முதல் வரிசையிலிருந்த ஒரு மாணவி, ‘ஓ எனக்குத் தெரியுமே’ என்று என்னை நோக்கித் தலையசைத்தார். மகிழ்ந்துபோனேன். எங்களுக்கும் இந்தக் கதை தெரியும் என்பதுபோல் வேறு சில மாணவர்களும் என்னைப் பார்த்தனர். கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, அடுத்த கதைக்குத் தாவினேன்.

0

பகிர:
மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *