‘அவர்கள் என்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப்போடலாம். ஆனால் நான் தவறென்று கருதும் ஒன்றை ஏற்குமாறு செய்யமுடியாது’ என்றார் காந்தி.
தவறென்று அவர் இங்கே குறிப்பிடுவது இந்தியாவைத் துண்டாடும் திட்டத்தை. இந்தியா இரு துண்டுகளாகப் பிரிக்கப்படவேண்டும் என்னும் கோரிக்கை காந்தியைக் கடும் உளைச்சலில் தள்ளியது. இந்தியாவை அவர் ஓர் மனித உடலாகக் கண்டார். ஓருடலை எப்படி இரு துண்டுகளாக வெட்டமுடியாதோ, அப்படியே இந்தியா என்னும் தேசத்தையும் வெட்டமுடியாது. துண்டாடப்பட்ட உடலில் உயிர் இருக்காது. ஆன்மா இருக்காது.
இது தேசக் கோட்பாடு தர்க்கமற்றது என்றார் காந்தி. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே எல்லைக்குள் ஒன்றாக வாழ்வது இனியும் சாத்தியமில்லை என்னும் வாதம் அவருக்குள் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இந்துக்களின் பண்பாடும் இஸ்லாமியர்களின் பண்பாடும் எதிரெதிரானவை அல்ல. இந்தியாவில் இருப்பது அனைவருக்கும் பொதுவான ஒரே பண்பாடுதான். இந்து வேறு, முஸ்லிம் வேறு என்பதையும்கூட அவர் ஏற்கவில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இந்துதான். ஒருவர் இஸ்லாமியராக இருக்கிறார் என்பதற்காக அவர் தனக்கென்று ஒரு தனி தேசம் ஏன் கேட்கவேண்டும்?
நான் தனியானவன். உங்கள் எல்லோரையும்விட்டுப் பிரிந்து நிற்க விரும்புகிறேன் என்று எவர் சொன்னாலும் காந்தி பாதிக்கப்பட்டார். இரட்டை வாக்குரிமையை அவரால் ஏற்கமுடியாமல் போனதற்கான காரணமும் இதுதான். நீங்களும் இறைவனின் குழந்தைகள்தான், தனியாக விடப்பட்டதுபோல உணரவேண்டாம். துண்டாகத் தனித்துப் போய்விடவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அம்பேத்கருடன் அவர் கொண்ட முரணும் ஜின்னாவுடன் அவர் கொண்ட முரணும் வெறும் அரசியல் முரண்கள் மட்டுமல்ல; இந்த இரண்டுமே காந்திக்கு ஆன்மிக முரண்கள்.
ஜின்னா மதத்திலிருந்து விலகி நின்றவர். பின்னர் அரசியலுக்காக அவர் இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கவேண்டியிருந்தது. அதையும்கூட அவர் மனமுவந்து செய்யவில்லை. காந்தியோ ஆரம்பம் முதல் இறுதிவரை மதத்தைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டவர். இவர் ஏன் எல்லாவற்றிலும் மதத்தை இழுத்துக்கொண்டு வருகிறார் என்று ஜின்னாவே குறைபட்டுக்கொண்டிருக்கிறார். ‘மதத்தையும் அரசியலையும் அவரைப் போல் ஒன்று கலப்பது கடும் குற்றமாகும்’ என்றும் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.
1940களில் இஸ்லாத்தின் பெயரால் ஜின்னா தனிநாடு கோரிக்கையை எழுப்பினார். ஜின்னாவின் கோரிக்கையை காந்தி அதே இஸ்லாத்தின் பெயரால் எதிர்த்தார். ‘பாகிஸ்தான் வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோருவது இஸ்லாத்துக்கு விரோதமானது. அப்படிக் கோருவது ஒரு பெரும்பாவம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்று அறிவித்தார் காந்தி. ‘இஸ்லாம் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் மதம். இந்தியாவைப் பிரிக்கவேண்டும், மக்களை எதிரெதிரே நிறுத்தி மோத வைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல இஸ்லலாத்துக்கும் விரோதிகளே.’
இந்து மதத்தின் பெயரால் தீண்டாமையை நீங்கள் நியாயப்படுத்தினால் அதே இந்து மதத்தின் பெயரால் தீண்டாமையையும் உங்களையும் காந்தியால் எதிர்க்கமுடியும். ஒரு நல்ல இந்துவால் தீண்டாமையைக் கடைபிடிக்கமுடியாது என்றுதான் அவர் சொல்வார். அவ்வாறே ஒரு நல்ல இஸ்லாமியர் தனிநாடு வேண்டும் என்று கோரமாட்டார். கோரவும் கூடாது. இந்து மதத்திலிருந்து பிரிந்து செல்வோரும் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வோரும் இந்து மதத்தையும் அறியமாட்டார்கள், இந்தியாவையும் அறியமாட்டார்கள். பிரிவினை எண்ணத்தை இஸ்லாம் விதைக்கவில்லை. தீண்டாமையை இந்து மதம் பரிந்துரைக்கவில்லை. மதங்கள் அன்பை வலியுறுத்துகின்றன. அனைவரும் இணைந்திருக்கவேண்டும் என்கின்றன. வன்முறை கூடாது என்கின்றன. அப்படி இருக்க எப்படி மதத்தின் பெயரால் இவர்களால் வெறுப்பையும் வன்முறையையும் பிளவுகளையும் வளர்த்தெடுக்கமுடிகிறது என்று குழம்பினார் காந்தி. சுற்றிலும் வகுப்புவாதத் தீ பற்றி எரிந்துகொண்டிருந்தபோது இதை மதமா பற்ற வைத்தது என்று ஒரு குழந்தை போல் அதிர்ச்சியோடு கேட்டார் அவர்.
ஒரு நல்ல இந்துவும் ஒரு நல்ல இஸ்லாமியரும் ஏன் இணைந்திருக்கமுடியாது? அப்படித்தானே எல்லா வீதிகளிலும் இதுவரை மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? அது ஏன் அப்படியே தொடரக்கூடாது? ஏன் அதில் ஓர் உடைப்பை ஏற்படுத்தவேண்டும்?
பிரிவினைக்கு இஸ்லாமியர்கள் மட்டுமே காரணம் என்று காந்தி நினைக்கவில்லை. இந்துக்கள் அவர்களை அரவணைத்துக்கொள்ளத் தவறியதால்தான், அன்பு செலுத்தத் தவறியதால்தான் இஸ்லாமியர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். இதை மாற்றியாகவேண்டும். ஒவ்வொரு இந்துவும் இஸ்லாமியரின் அன்பை நாடவேண்டும் என்றார் காந்தி. ‘நம் அன்பின் கைதிகளாக’ இஸ்லாமியர்களை மாற்றவேண்டும். இந்தியா பிரிந்தால் என்னாகும்? அவள் காணாமல் போய்விடுவாள். தன் பெருமிதத்தை இழந்துபோவாள் என்று எச்சரித்தார்.
இதே தர்க்கத்தைத்தான் காந்தி தீண்டாமை பிரச்சனையிலும் கையாண்டார். தலித் மக்கள் இந்து மதத்திலிருந்து விலகிச் சென்றால் அதற்கான காரணத்தை சாதி இந்துக்கள் தங்களுக்குள் தேடிக்கொள்ளவேண்டும் என்றார் அவர். ஒவ்வொரு இந்துவும் ‘இறைவனின் குழந்தைகளை’ அரவணைத்துக்கொண்டால், அவர்கள்மீது அன்பு செலுத்தினால், அவர்களை ‘நம் அன்பின் கைதிகளாக’ மாற்றினால் அவர்கள் நம்மோடு என்றென்றும் இணைந்திருப்பார்கள் என்று காந்தி நம்பினார்.
ஆனால் அவருடைய நம்பிக்கையை இந்துக்களும் இந்தியர்களும் பகிர்ந்துகொள்ளவில்லை. மேலடுக்குகளில் இருந்த இந்துக்களால் கீழடுக்குகளில் இருந்த இந்துக்களோடு உளப்பூர்வமாக இணையமுடியவில்லை. இஸ்லாமியர்களை இந்துக்களால் வென்றெடுக்கமுடியவில்லை. இந்த யதார்த்தம் புரியத் தொடங்கியபோது காந்தி துவண்டுபோனார்.
இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை அவரால் கற்பனைக்கூடச் செய்து பார்க்க இயலவில்லை. அப்படியொரு இந்தியாவை நாம் உருவாக்கத்தான்வேண்டுமா என்று செப்டெம்பர் 1947இல் மீண்டும் மீண்டும் கேட்டார் அவர். ஜும்மா மஸ்ஜித் இல்லாத டெல்லி ஒரு டெல்லியா? இஸ்லாமிய மரபுகள் இல்லாத, இஸ்லாமிய மக்கள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? அக்டோபர் 1947இல் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் காந்தி தனது துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். ‘டெல்லிக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றை அழிக்கவேண்டும் என்று நினைப்பது மதிகெட்ட செயல்’.
காந்தி எதிர்த்த பிரிவினையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. இந்தியாவும்தான். காந்தி எதிர்த்த தீண்டாமை ஒரு யதார்த்தமாக அப்படியே தொடர்ந்தது. அப்போதும்கூட காங்கிரஸிடமிருந்துதான் காந்தி விலகி நின்றாரே தவிர மக்களிடமிருந்து அல்ல. கட்சியைத் துறக்கலாம். மக்களைத் துறப்பது சாத்தியமற்றது. தீண்டாமையைத் துறக்கலாம். அதைக் கடைபிடிப்பவர்களைத் துறப்பது அவருக்குச் சாத்தியமல்ல. பிரிவினை கோரிக்கையை நிராகரிக்கலாம். அதைச் சாத்தியப்படுத்துபவர்களை அவரால் நிராகரிக்கமுடியாது. வன்முறையைத்தான் வெறுக்கவேண்டுமே தவிர, அதைக் கைகொள்பவர்களை அல்ல. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் வீழ்த்தப்படவேண்டும் என்பதும் பிரிட்டன் வீழ்த்தப்படவேண்டும் என்பதும் ஒன்றல்ல அவருக்கு. தவறான கருத்தாக்கங்களோடு தொடர்ந்து போரிடவேண்டும். தவறிழைப்பர்களோடு தொடர்ந்து உரையாடவேண்டும். இதுதான் காந்தியின் அறம். இந்த அறம்தான் அவரை ஒவ்வொருமுறையும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் கொண்டு சென்று நிறுத்தியது.
செப்டெம்பர் 1947 அன்று காந்தி பற்றியெறிந்துகொண்டிருந்த டெல்லிக்கு வந்ததை, நீண்ட வறட்சிக்குப் பிறகு பெய்த மழையாக இஸ்லாமியர்கள் கண்டிருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்னால் கல்கத்தாவில் வகுப்புவாத மோதல் மூண்டபோது மூன்றே நாள்களில் 4,000 பேருக்கு மேல் வீதிகளில் வெட்டிக் கொல்லப்பட்டனர். காந்தியின் வருகைக்குப் பிறகே அமைதி அங்கே நிலைநாட்டப்பட்டது. அதே மாயத்தை காந்தி டெல்லியிலும் நிகழ்த்துவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இனி அவர் பார்த்துக்கொள்வார்; நாம் பிழைத்துவிடுவோம் என்று பல இஸ்லாமியர்கள் பெருமூச்சுவிட்டனர்.
28 நவம்பர் 1947 அன்று குரு நானக் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு குருத்வாராவில் சீக்கியர்களுக்கு மத்தியில் உரையாற்றுவதற்காகக் காந்தி சென்றிருக்கிறார். வழியில், சாந்தினி சவுக்கில் ஒரேயொரு முஸ்லிமைக்கூடக் காணமுடியாதது காந்தியைப் பாதித்தது. அன்று மாலை நடைபெற்ற பிரார்த்தனையில் தன் வேதனையையும் கோபத்தையும் காந்தி பகிர்ந்துகொண்டார். ‘சாந்தினி சவுக்கில் ஒரேயொரு முஸ்லிம்கூட இல்லை என்பதைவிட நமக்கு வேறு என்ன அவமானம் தோன்றிவிடமுடியும்?’
இந்து, முஸ்லிம் இரு தரப்பினரின் குற்றங்களையும் காந்தி நிராகரித்தார். இருவரையும் கடுமையாக விமரிசித்தார். ஆனால் அவர் அறம் சிறுபான்மையினரோடு கூடுதல் கரிசனத்தோடு நடந்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தியது. இந்து தேசியவாதிகள் காந்தியை வெறுத்ததற்குப் பிரதான காரணமாக இது மாறியது. இந்த வெறுப்புதான் நாதுராம் கோட்சேவின் துப்பாக்கி வழியே வெளிப்பட்டு காந்தியைக் கொன்றது.
0
காந்தியின் அறம் அவருடைய மத நம்பிக்கையில் வேறூன்றியிருந்தது. அவருடைய அரசியலை அவர் மதமே தீர்மானித்தது. அவருடைய குடும்ப வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டையும் அவர் மதமே வழிநடத்தியது. சறுக்கல்களிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் மீண்டெழும் பலத்தை அவர் தன் மதத்திடமிருந்தே பெற்றுக்கொண்டார்.
மதத்தை உண்மையாக நம்பும் ஒருவர் பொது வாழ்வில் ஈடுபடுவது தவிர்க்கவியலாதது என்னும் முடிவுக்கு தொடக்கக்காலத்திலேயே வந்து சேர்ந்துவிட்டார் காந்தி. ‘சதையின் ஆதிக்கத்திலிருந்து என் ஆன்மாவை விடுவிக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தேச சேவைகளில் ஈடுபட்டேன்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். ‘என் நாட்டுக்காக, என் மக்களுக்காக, என் தேசத்தின் விடுதலைக்காக நான் என் உடலை வருத்திக்கொள்வதென்பதும் என் தனிப்பட்ட விடுதலைக்காகத்தான். நான் முழுநிறைவான மானுடனாக இருந்தால்தான் என் சொற்கள் முழுநிறைவானவையாக இருக்கும். அப்போதுதான் மக்கள் அதைப் பொருட்டுபடுத்துவார்கள்’ என்றார் காந்தி. இந்த நிறைவை மதமே அவருக்கு அளித்தது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை வேத வாக்காக ஏற்றுக்கொண்டவர் அவர்.
அவருடைய அப்பழுக்கற்ற நம்பிக்கை பல சமயம் அபத்த எல்லைகளைத் தாண்டியிருக்கிறது. பேத்தி போன்ற மனுவுக்கு ஒருமுறை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய தேவை எழுந்தபோது, ‘என்னுடைய ஆன்மிகக் குறைபாடுதான் இதற்குக் காரணம்’ என்று காந்தி நொந்து கொண்டிருக்கிறார். ‘ராம நாமம் என் இதயத்தில் வலுவாக நிரம்பியிருந்தால் இந்தச் சிறுமி நோய்களிலிருந்து இந்நேரம் விடுதலை பெற்றிருப்பாள்.’
காந்தியின் மதம் முழுக்க முழுக்க அறம் சார்ந்தது, மானுட விழுமியங்கள் சார்ந்தது. அதனால்தான் அவரால் இந்து மதத்துக்குள் நிலவும் கடுகளையெல்லாம் அடையாளம் காணமுடிந்தது. சாதி அடுக்குமுறை அநீதியானது என்று அவரால் சொல்லமுடிந்தது. எல்லோரும் அறிந்த இந்து மதத்தை ஏற்றுக்கொண்டவரல்லர் அவர். தனக்கான மதத்தை அவரே உருவாக்கிக்கொண்டார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கருணை, அகிம்சை, உண்மை ஆகியவற்றை அவர் தன்னுடைய கடவுள்களாக வரித்துக்கொண்டார். பௌத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்று எல்லா மதங்களோடும் அவரால் உரையாடமுடிந்தது. எல்லா நம்பிக்கைகளையும் மதிக்கமுடிந்தது. எல்லோரோடும் இணைந்து நிற்கமுடிந்தது.
காந்தியின் மதம் உலகளவு பரந்து விரிந்திருக்கிறது. அதில் எல்லோருக்கும் இடமிருக்கிறது. ஆனால் காந்தி தனியாகவே அந்த உலகில் அன்றுமுதல் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
0