ஒரு நல்ல துப்பறியும் நாவல் தனக்கான நேரத்தை எப்படியோ திருடிக்கொண்டு விடுகிறது. இன்னின்ன நூல்களைத் தொடங்கவேண்டும், இன்னின்னவற்றை முடிக்கவேண்டும், ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகளை இப்போதாவது எழுதி முடிக்கவேண்டும் என்று என்னென்னவோ திட்டமிட்டு வைத்திருப்பேன். அதற்குமுன்பு ஒரு புரட்டு புரட்டிப் பார்க்கலாம் என்று ஒரு துப்பறியும் நாவலை அலட்சியமாகக் கையில் எடுப்பேன். புகை ஒன்று அறைக்குள் பரவும். அந்தப் புகை மெல்ல, மெல்ல வளர்ந்து டிராகுலாவாக மாறி நேரத்தை உறிஞ்சிக் குடிக்க ஆரம்பிக்கும். மயக்கத்திலிருந்து விடுபட்டு எழும்போது ஜன்னல் வழியாக வௌவால் வெளியேறிக்கொண்டிருக்கும்.
நீல நொய்ஹௌஸ் (சரியான உச்சரிப்பு தெரியவில்லை. ஆங்கிலத்தில் Nele Neuhaus) எழுதிய The Ice Queen எனும் நாவலைச் சில வாரங்களுக்கு முன்பு படித்தேன். காதல் கதைகளும் குதிரைக் கதைகளும் எழுதிக்கொண்டிருந்த இந்த ஜெர்மானிய எழுத்தாளர் துப்பறியும் கதைகள் எழுதத் தொடங்கிய பிறகு உலகப் புகழ்பெற்றவராக மாறியிருக்கிறார். நாஜி ஜெர்மனி பற்றிய புனைவுகளைத் தேடிக்கொண்டிருந்தபோது இவர் பெயர் சில இடங்களில் குறுக்கிட்டதால் முயன்று பார்ப்போம் என்று இந்நாவலைத் தேர்ந்தெடுத்தேன்.
இறக்கும் தருவாயிலுள்ள 92 வயது ஜோஸி கோல்ட்பெர்க் என்பவரின் வீட்டுக் கதவு ஒரு நாள் தட்டப்படுகிறது. திறந்து பார்த்துவிட்டு உள்ளே வா என்று வரவேற்கிறார் ஜோஸி. அடுத்த நொடி நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு கீழே விழுகிறார். மற்றொரு முதியவரும் இதேபோல் கொல்லப்படுகிறார். காவல்துறையைச் சேர்ந்த ஆலிவர் போடென்ஸ்டீன், பியா கிர்ச்சாஃப் இருவரும் துப்பறியத் தொடங்குகிறார்கள். ஏற்கெனவே வாடி வதங்கியிருக்கும் முதியவர்கள் எதற்காகக் கொல்லப்படவேண்டும்? இதற்கான விடை இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கிழக்கு புருஷ்யாவில் அடங்கியிருக்கிறது.
இதே எழுத்தாளரின் Snow White Must Die நாவலை இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதுவும் ஜெர்மனியில் நடக்கும் கதைதான் என்றாலும் முந்தையதைப் போல் வரலாற்றுப் பின்புலம் இல்லாத சாதாரண ஒரு களம். இதிலும் அதே துப்பறியும் இணைதான்.
பெண் என்பதாலோ என்னவோ நீல் நியூஹாஸின் எழுத்தில் பியா உயிரோட்டத்தோடு இருக்கிறார். ஆலிவரும் பியாவும் ஒருமுறை காரில் சென்றுகொண்டிருப்பார்கள். ஆலிவர் நிதானமிழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த வண்டியில் இடித்துவிடுவான். நெற்றியிலிருந்து கொஞ்சம் ரத்தம் பொங்கி வருகிறது. முதலில் பயந்துபோகும் பியா மறுகணம் சிரிக்கிறாள். எரிச்சலோடு திரும்பிப்பார்க்கும் ஆலிவரிடம் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்கிறாள். அதொன்றுமில்லை. நீங்கள் மேல்தட்டு வர்க்கம், பிரபு குலத்தில் பிறந்தவர். உங்கள் ரத்தம் எங்களுடையதைப் போல் சிகப்பாக இருக்காது என்று நினைத்திருந்தேன்!
ஆலிவர் அப்போது கடும் உளைச்சலில் தவித்துக்கொண்டிருந்தான். தன் மனைவி வேறொரு நபரை ரகசியமாகச் சந்தித்துக்கொண்டிருந்ததைத் தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடிக்கிறான். அது அவனைக் குலைத்துப்போடுகிறது. வீட்டில் இயல்பாக இருக்கமுடியவில்லை. இயல்பாகப் பணிபுரிய முடியவில்லை. விசாரணை நடத்தும்போது தடுமாறுகிறான். தன்னுடைய மேலதிகாரிக்கு என்னவோ ஆகிவிட்டது என்பதை பியாதான் முதலில் கண்டுபிடிக்கிறாள். யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஆலிவர் பியாவிடம் மனம் திறக்கிறான். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நீங்களே குழம்பிக்கொள்ளாதீர்கள். நான் விசாரித்துச் சொல்கிறேன் என்று ஆலிவரை அமைதிப்படுத்தி அனுப்பி வைக்கிறாள் பியா.
இந்த ஆண்கள்தான் எத்தனை பெரிய கோழைகள் என்று சலித்துக்கொள்கிறாள் பியா. எத்தனையோ சிக்கலான வழக்குகளை ஆலிவர் தன் வாழ்வில் சந்தித்திருக்கிறான். எண்ணற்ற மக்களின் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறான். கோரமான, குரூரமான மரணங்களைத் துப்பறிந்திருக்கிறான். ஆனால் தனக்கொரு சிக்கல் என்றதும் இதோ முற்றிலுமாக உடைந்துவிட்டான். செல்வமும் செல்வாக்கும் திறமையும் வாழ்நாள் முழுக்கத் தன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று நம்பிவிட்டானா? மற்றவர்களுடைய திருமண வாழ்வில் மட்டுமே நெருக்கடிகள் தோன்றும், மற்றவர்களுடைய மனைவிகள் மட்டுமே துரோகம் இழைப்பார்கள் என்று நினைத்துவிட்டானா? ஊருக்கெல்லாம் ஆறுதல் சொல்லிக்கொண்டு மிடுக்காகத் திரியும் இவர்கள் தங்களுக்கொரு பிரச்சினை வரும்போது சுண்டெலி போல் மூலையில் சுருண்டுவிடுகிறார்கள், ச்சே!
பியாவின் கோபம் ஒரு துப்பறியும் கதையை நல்ல துப்பறியும் கதையாக மாற்றியமைக்கிறது.
0
தி நியூ யார்க்கரின் விசிறி நான். அவர்களுடைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து வைத்தால் ஆவணக் காப்பகத்திலிருந்து காலத்துக்கு ஏற்ற கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து உங்கள் மின்னஞ்சலுக்குத் தொடர்ச்சியாக அனுப்பி வைப்பார்கள். இரு தினங்களுக்கு முன்பு ஹாலோவீன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டிராகுலா பற்றிய சில கட்டுரைகளைத் தொகுத்துக் கொடுத்திருந்தார்கள். பிராம் ஸ்டோக்கருக்கு முந்தைய காலம் தொடங்கி இன்றைய தேதி வரை டிராகுலா இலக்கியம் செழித்து வளர்ந்த கதையை விவரித்து ஜோன் அகோசெலா எழுதியதையும் (In the Blood) மீ2 காலத்தில் யார் டிராகுலா என்னும் கேள்வியை எழுப்பும் ஒரு கட்டுரையையும் படித்தேன்.
பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தது. இப்போது புரட்டினாலும் டிரான்ஸில்வேனியாவின் அடர்ந்த காடுகளுக்குள் இப்புத்தகம் என்னை இழுத்துச் சென்றுவிடும். ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் படத்தை முதன் முதலில் பார்த்தபோது சிறுவயதில் என்னை உறங்கவிடாமல் அலைக்கழித்துவிட்டு மாயமாகிப் போன கனவொன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னை அடையாளம் கண்டு மீண்டும் ஆக்கிரமித்தது போல் இருந்தது.
டிராகுலாவின் வெற்றிக்கு அந்நாவலின் கட்டமைப்பும் ஒரு முக்கியக் காரணம் என்கிறது நியூ யார்க்கர் கட்டுரை. கவுண்ட் டிராகுலா ஒரு கற்பனைப் பாத்திரமல்ல; உண்மையில் வாழ்ந்தவர் என்று வாசிப்பவர் நம்பும்படி டைரி குறிப்புகள், ஆவணங்கள், கடிதங்கள், தந்திகள், செய்தித்தாள் நறுக்குகள், வாக்குமூலங்கள் போன்றவற்றின் தொகுப்பாக நாவலை உருவாக்கியிருப்பார் ஸ்டோக்கர். பல்வேறு கோணங்களில், பல திசைகளில் கதை விரிந்து செல்லும். டிராகுலாவின் நிழல்போல்.
ஸ்டோக்கருக்கு முன்பே ரத்தக்காட்டேரி தோன்றிவிட்டது. 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியின் ரத்தக்காட்டேரி அச்சம் உச்சத்தில் இருந்திருக்கிறது. ரத்தக்காட்டேரியைக் கொல்வதற்கு மூன்று வழிகள் இருந்திருக்கின்றன. அதன் இதயப்பகுதியில் மரக்கழியைச் செருகவேண்டும். தலையைத் துண்டிக்கவேண்டும். கொளுத்தவேண்டும். மூன்றையும் சேர்த்தும் செய்யலாம். நேற்று இரவு எங்கள் வீட்டுக்கு வந்தது; அட்டகாசம் செய்தது என்பது முதல் எங்கள் குதிரைகளைக் கடுமையாக அச்சுறுத்திவிட்டது என்பதுவரை பலவிதமான குற்றச்சாட்டுகள் காட்டேரிகள்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.
ரத்தக்காட்டேரியின் தொடக்கத்தைப் பலரும் ஆராய்ந்திருக்கிறார்கள்; பலவிதமான யூகங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். செர்பிய ஜிப்சி மக்களிடையே நிலவிய நம்பிக்கை இது. பறிக்கப்பட்ட பூசணிக்காய்களை பத்து நாள்களுக்கு மேல் ஓரிடத்தில் வைத்திருந்தால் அவை சத்தமெழுப்பியபடி குலுங்கிக் குதிக்க ஆரம்பிக்கும். அதன்பின் அவை ரத்தக்காட்டேரிகளாக மாறிவிடும்.
பிராம் ஸ்டோக்கர் இந்தக் கிராமத்து நம்பிக்கைகளையெல்லாம் களைந்துவிட்டு, கோட் சூட் அணிந்த ஒரு நவ நாகரிக மனிதனாக டிராகுலாவை வளர்த்தெடுத்தார். இந்தா ரத்தம் என்று கழுத்தை நீட்டும் பெண்கள்கூட டிராகுலாவின் அழகில் சொக்கிப்போவதாக ஸ்டோக்கர் காட்டியிருப்பார்.
ஒரு பக்கம் டிராகுலா சத்தம் போடாமல் இளஞ்சூடான ரத்தத்தைக் குடித்துக்கொண்டே இருக்கும். மற்றொரு பக்கம், மருத்துவர், டிராகுலாவை வேட்டையாட வந்தவர், காதலர் என்று தொடங்கி நாவல் முழுக்க யாராவது யாருக்காவது ரத்த தானம் செய்துகொண்டே இருப்பார்கள். ரத்தம் எவ்வாறு ஒருவரிடமிருந்து இன்னொரு உடலுக்குள் பாய்கிறது, பாயும்போது கொடுப்பவருக்கு என்ன ஆகிறது, பெற்றுக்கொள்பவரின் உடலுக்கு என்ன நேர்கிறது என்று அனைத்தையும் நுணுக்கமாக விவரித்திருப்பார் ஸ்டோக்கர்.
மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்னும் எளிய கதையாக மட்டும் இருந்திருந்தால் டிராகுலா ஒரு செவ்வியல் படைப்பாக மாறியிருக்காது. ‘டிராகுலா தொழிற்சாலை’ என்று சொல்லும் அளவுக்கு இவ்வளவு புதிய நாவல்களும் மறுகூறல்களும் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விவாதங்களும் பெருகியிருக்காது. டிராகுலாவுக்கு இன்று எந்த அளவுக்குச் செல்வாக்கு நீடிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் ‘பிரேக்கிங் டான்’ (நான் வாசித்ததில்லை) படித்த, பார்த்த பதின்பருவத்தினரிடம் பேசிப் பாருங்கள்.
ஸ்டோக்கரின் நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உலகெங்கும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறார்கள். டிராகுலாவைப் பரிசுத்த வேதாகமம் போல் கருதி வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். ஸ்டோக்கர் எழுதிய ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு சொல்லுக்கும் விரிவான அடிக்குறிப்புகளும் விளக்கங்களும் யூகங்களும் அளித்து பல ‘ஆய்வுப்பதிப்புகள்’ வெளிவந்திருக்கின்றன.
அயலவரை, அகதிகளை, மாற்று மதத்தினரை, சிறுபான்மையினரை வெறுக்கும், எதிர்க்கும் போக்கு உலகெங்கும் தீவிரம் கொண்டிருக்கும் இக்காலத்தில் டிராகுலாவின் கதையைப் படிக்கும்போது நாம் உண்மையில் ஒரு கற்பனைக் கதையைத்தான் படிக்கிறோமா? பரிசுத்தமான ரத்தம், ரத்தக் கலப்பு என்றெல்லாம் ஸ்டோக்கர் இயல்பாக எழுதிச் சென்றிருப்பது இன்று ஏன் வேறு பொருளை நமக்கு அளிக்கவேண்டும்? இனம் பற்றிய விவாதங்களையெல்லாம் தெரிந்துகொள்ளாமல்தான் ஸ்டோக்கர் டிராகுலாவை உருவாக்கினார் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியுமா? எதிர்காலத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் அவர் இந்நாவலை எழுதியிருக்கமுடியும் அல்லவா?
‘கிளாசிக் ஸ்டேஜ் கம்பெனி’ அரங்கேற்றிய ஒரு மேடை நாடகத்தில் டிராகுலா எந்தவோரிடத்திலும் கவர்ச்சிகரமானவராகத் தோன்றவில்லை. டிராகுலாவிடம் மயங்கும் அல்லது அஞ்சி நடுங்கும் பெண்கள் இதில் இல்லை. இந்தப் பெண்கள் தங்களை மீட்டெடுக்க எந்த ஆண்களையும் நம்பியிருக்கவில்லை. ஸ்டோக்கரின் நாவலில் டிராகுலாவை வேட்டையாடுபவர் ஓர் ஆண் (வான் ஹெல்சிங்) என்றால் இந்த நாடகத்தில் அவர் பெண்.
இப்படியொரு பெண்ணிய டிராகுலாவைக் கற்பனை செய்திருப்பவர் கேட் ஹமில் எனும் நாடகாசிரியர். முன்னதாக, ஜேன் ஆஸ்டன், தாக்கரே போன்றோரின் படைப்புகளை இவர் பெண்ணியப் பாணியில் மறு அறிமுகம் செய்திருக்கிறார். அதற்கான அவசியம் இருப்பதாக கேட் ஹமில் நம்புகிறார். உணர்கிறோமோ இல்லையோ நாம் உலகை எவ்வாறு பார்க்கிறோம் என்பதை இத்தகைய படைப்புகளும் நிர்ணயிக்கின்றன என்கிறார் ஹமில். ஆண் மைய படைப்புகளை வாசித்துப் பழகி, அதன்மூலம் ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொண்டு, அதுவே இறுதி உண்மை, அதுவே உலகப் பொதுவான நியதி என்று ஏற்றுக்கொண்டிருப்பவர்களோடு இப்படியெல்லாம் உரையாட வேண்டியிருக்கிறது என்கிறார் அவர்.
ஹமிலின் டிராகுலா சவப்பெட்டிக்குள் வாழ்வதில்லை. மின்னும் சிவப்புக் கண்களையோ வாயிடுக்கில் கூர்மையாக நீண்டிருக்கும் பற்களையோ அவர் கொண்டிருக்கவில்லை. எந்தவொரு நவீன ஐரோப்பிய ஆணைப் போலவே டிராகுலா தோற்றமளிக்கிறார். ஏனெனில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களுக்கென்று தனித்த அடையாளம் எதுவும் இல்லை என்கிறார் ஹமில். அவர்கள் மிக இயல்பானவர்கள். நம் வீதிகளிலும் வீடுகளிலும் அவர்கள் நிறைந்திருப்பார்கள். அசப்பில் நம்மைப் போலவே இருப்பார்கள். கற்பனையைக் காட்டிலும் அச்சுறுத்துகிறது நிஜம்.