Skip to content
Home » என்ன எழுதுவது? #12 – கலீலியோ

என்ன எழுதுவது? #12 – கலீலியோ

கலீலியோ

கலீலியோ : உற்றுப் பார். நிலவின் ஒளி தெரிகிறதா? அந்த ஒளியில் தெரியும் சிறிய துகள்களை எப்படி விளக்குவாய்?

சாக்ரிடோ : அந்தத் துகள்கள் எல்லாம் மலைகள் என்றா சொல்கிறாய் கலீலியோ? நிலவில் மலைகள் இருக்கமுடியுமா?

கலீலியோ : நாம்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!

சாக்ரிடோ : அப்படியானால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நமக்குக் கற்பிக்கப்பட்டு வரும் அறிவியல் பொய் என்கிறாயா? நிலவிலும் பூமியில் உள்ளதைப் போல் மலைகளும் பள்ளத்தாக்குகளும் இருக்கும் என்கிறாயா? நிலவு மற்றொரு பூமியா? பூமியே ஒரு நட்சத்திரம்தான் என்றும் சொல்வாயா?

கலீலியோ : ஆமாம், சொல்வேன். நிலா பள்ளத்தாக்கும் மலையும் கொண்ட மற்றொரு பூமி. பூமியும் ஒரு நட்சத்திரம்தான். நமக்கு நிலா தெரிவதுபோல், நிலாவுக்கு நாம் தெரிவோம். நிலவிலிருந்து பார்க்கும்போது பூமி சில சமயம் பிறைபோல் காட்சியளிக்கலாம். சில சமயம் அரை பூகோளமாகத் தோன்றலாம். சில சமயம், எதுவும் தெரியாமலும் போகலாம்.

சாக்ரிடோ : கலீலியோ, இதையெல்லாம் கேட்க எனக்குப் பயமாக இருக்கிறது. நாம் வாழும் பூமி பிரபஞ்சத்தின் மையம் கிடையாதா? நாம்தான் சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறோமா? சூரியன்தான் அனைத்துக்கும் மையமா?

கலீலியோ : ஆமாம், ஆமாம்.

சாக்ரிடோ : ஆ, கடவுளே! ஐயோ, கடவுள் எங்கே? அவர் எங்கே இருக்கிறார் கலீலியோ?

கலீலியோ : அவர் இல்லை. இங்கே எப்படி அவர் இல்லையோ அப்படியே வானிலும் அவர் இல்லை.

சாக்ரிடோ : கடவுள் எங்காவது இருந்தாகவேண்டுமே!

கலீலியோ : நான் கணிதவியலானான்; இறையியல் நிபுணன் கிடையாது.

சாக்ரிடோ : ஆனால் நீ மனிதன் அல்லவா? (கிட்டத்தட்ட கத்துகிறார்) உன் பிரபஞ்சக் கோட்பாட்டுத் திட்டத்தில் அவரை ஏன் காணமுடியவில்லை?

கலீலியோ : அவர் நமக்குள் இருக்கிறார். அல்லது எங்குமில்லை.

10, ஜனவரி 1610. கலீலியோ சொர்க்கத்தை ஒழித்த தினம் என்று இந்நாளைக் குறிப்பிடுகிறார் பெர்டோல்ட் பிரெக்ட் (Galileo, Bertolt Brecht, Tr. Charles Laughton, Grove Press). ‘கலீலியோ’ நாடகத்தின் மூன்றாம் காட்சியில் வானியல் ஆய்வாளருக்கும் அவர் நண்பர் சாக்ரிடோவுக்கும் இடையிலான உரையாடலிலிருந்து சில பகுதிகளை மேலே அளித்திருக்கிறேன். (துல்லியமான மொழிபெயர்ப்பில் அல்ல). அன்றைய இரவு தனது தொலைநோக்கியை வானை நோக்கித் திருப்பி, தான் கண்டுணர்ந்த உண்மையைத் தனது கணிதவியல் நண்பரிடம் பகிர்ந்துகொள்கிறார் கலீலியோ. கடவுளை நினைத்து வருந்தும் சாக்ரிடோ விரைவில் கலீலியோவை நினைத்து வருந்த ஆரம்பித்துவிடுகிறார். நீ சொல்வதெல்லாம் உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் இதை நீ வெளியில் சொன்னால் ஆபத்து உனக்கல்லவா? வேண்டாம், கலீலியோ. அழிவின் பாதையில் நீ முன்னேறிக்கொண்டிருக்கிறாய். உண்மை என்பதற்காக நீ சொல்வதை அதிகாரத்திலிருப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறாயா? ஓ, சொர்க்கம் என்றொன்று இல்லை என்கிறாயா, சரி குறித்து வைத்துக்கொள்கிறேன் கலீலியோ என்று போப் கனிவு கொள்வாரா? ஒரு கணம் முன்பு, தொலைநோக்கியின்முன்பு நீ நின்றுகொண்டிருந்தபோது நீ விதியோடு பிணைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். நிரூபணம் கிடைத்துவிட்டது என்று நீ சொன்னபோது, எரியும் உடலின் நாற்றத்தை உணர்ந்தேன்!

நண்பரே, கலங்காதே. மனித குலத்தின்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்கிறார் கலீலியோ. கோட்பாடுகள் புரியாமல் போகலாம். கணிதச் சமன்பாடுகள் கடினமானவையாக இருக்கலாம். ஆனால் கண்முன்னால் தோன்றும் உண்மையை மக்கள் மறுக்கமாட்டார்கள். யாருக்கு விருப்பமிருக்கிறதோ, யார் விழிப்போடு இருக்கிறார்களோ, அவர்கள் உண்மையைத் தரிசித்தே தீருவார்கள். ஏற்கவே செய்வார்கள். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இது நடந்தே தீரும்.

உங்கள் அறிவியல் அறிவைக் கொண்டு நீங்கள் ஏன் புதிய, புதிய கருவிகளை உருவாக்கித்தரக்கூடாது? எங்கள் லாபம் அதிகரிக்க ஏன் உதவக்கூடாது என்று அவரைத் துரத்துகிறார்கள் இத்தாலியின் செல்வந்தர்களும் வணிகர்களும். பிழைப்பை ஓட்ட கலீலியோவுக்கும் பணம் தேவையாகத்தான் இருக்கிறது என்றாலும் வணிகர்களுக்காகத் தன் ஆய்வு நேரத்தை வீணாக்க அவருக்கு விருப்பமில்லை. மாறாக, இதைக் கொஞ்சம் விளக்கமுடியுமா என்று கேட்டு வரும் மாணவர்களோடும் நண்பர்களோடும் நாள் முழுக்கச் செலவிடச் சொன்னாலும் தயங்க மாட்டார். வீட்டுக் காப்பாளர் திருமதி. சார்டியின் மகன் ஆண்ட்ரியா அவருடைய மாணவர் குழாமைச் சேர்ந்தவன். ஆனால் சார்டிக்கு அது கவலையளிப்பதாக இருக்கிறது. ‘கலீலியோவிடம் எப்போதும் கவனமாக இரு, ஆண்ட்ரியா. பூமிதான் உலகைச் சுற்றுகிறது என்று நேற்று இரவு அவர் என்னிடம் சொன்னார். விரைவில் இரண்டு இரண்டும் ஐந்து என்றுகூட அவர் சாதிக்கலாம்!’ விநோதமான ஆய்வுகள் என்றால்கூடப் பரவாயில்லை. இவர் முன்னெடுப்பவை ஆபத்தான தேடல்களாக அல்லவா இருக்கின்றன? நாளை இவருக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் என் மகனும் அல்லவா பாதிக்கப்படுவான்? கடவுளை மறுக்கும் சாத்தானோடு பணியாற்றியவன் என்றல்லா சமூகம் அவனைப் பழிக்கும்?

நீ ஓர் அறிவியல் மேதை கலீலியோ. ஆனால் ஒரு குழந்தைக்கு இருக்கும் அரசியல் அறிவுதான் உனக்கும் இருக்கிறது. நீ கண்டறிந்திருப்பது அறிவியல் உண்மையை என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய். அது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா என்று நண்பர் சாக்ரிடோ கவலை கொள்ளும்போது கலீலியோ அதைக் கண்டுகொள்வதாகவே இல்லை. மாறாக, தான் தங்கியிருந்த படுவா நகரிலிருந்து பிளாரன்ஸ் நகருக்குக் குடிபெயரும் முயற்சியில் இருந்தார் அவர். அங்கே தன் ஆய்வுகளுக்கு நிதியுதவியும் ஆதரவும் கிடைக்கும் என்பது அவர் கணிப்பு. அது ஏன் தவறான முடிவு என்பதைத் தன் நண்பருக்கு விளக்க சாக்ரிடோ மிகவும் மெனக்கெடுகிறார். இவ்வளவு ஆபத்தான சிந்தனையைச் சுமந்துகொண்டு வாடிகனுக்கு நெருக்கமான ஓரிடத்துக்குக் குடிபெயர்வது முட்டாள்தனமானது என்று மன்றாடுகிறார். திருச்சபையோடு மோதியதால் எரித்துக் கொல்லப்பட்ட புரூனோவை நினைவூட்டவும் தயங்கவில்லை சாக்ரிடோ.

அது வேறு, இது வேறு என்று மறுத்துவிடுகிறார் கலீலியோ. புரூனோ தனது நம்பிக்கையை வெறும் கருதுகோளாக மட்டுமே முன்வைத்தார். நானோ நிரூபணத்தைக் காட்டப்போகிறேன் என்று மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிவிடுகிறார் கலீலியோ. அவர் காலடி எடுத்து வைக்கும் நேரம் பார்த்து, கொள்ளைநோய் காட்டுத்தீ போல் பரவுகிறது. புறவுலகம் மாறும்வரை காத்திருப்போம் என்று கலீலியோ தன் ஆய்வுகளைத் தொடர்கிறார்.

கலீலியோவின் பெயரும் புகழும் சுற்றுவட்டாரங்களில் பரவ ஆரம்பிக்கிறது. ஆ, என்னால் நிற்கமுடியவில்லை. சரிந்து, சரிந்து அப்படியே பூமியின் விளிம்புக்குச் சென்று அங்கிருந்து தவறி விழுந்துவிடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது? பூமியைக் கொஞ்சம் நிற்கச் சொல் கலீலியோ என்று மேல்தட்டு வர்க்கத்தினர் சிரிக்கிறார்கள். ஒரு நல்ல நாளில் திருச்சபையிலிருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. போப் மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் கலீலியோவின் நண்பரும் கணிதவியலாளருமான கார்டினல் பார்பெரினி புதிய போப்பாகப் பொறுப்பேற்கவிருந்த சமயம் அது. இதை ஒரு நல்ல அறிகுறியாகக் காண்கிறார் கலீலியோ.

கணிதம் தெரிந்தவர் என்பதால் கார்டினல் தன்னைப் புரிந்துகொள்வார் என்றும் தன் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் நம்பி, ஒளிவுமறைவின்றித் தன் வாதங்களை அவையில் எடுத்து வைக்கிறார் கலீலியோ. கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தெடுத்து, கடவுளின் இருப்பை நிராகரிக்கும் தன் கோட்பாட்டை வலுவான சான்றுகளோடு நிறுவுகிறார் கலீலியோ. ஆனால் வரவேற்பையல்ல, கசப்பையே எதிர்கொள்கிறார். வாதம், விவாதம் வளர்ந்து சூடாகிறது. இறுதியில் அவரைக் கைது செய்து வாடிகனில் அடைக்கிறார்கள். உன் கண்டுபிடிப்பில் உண்மை தெரிகிறது. உன் சான்றுகள் மறுக்கவியலாதவை. தனிப்பட்ட முறையில் என்னால் உன்னோடு ஒத்துப்போகமுடிந்தாலும் ஒரு போப்பாக உன்னை ஆதரிக்கமுடியாது என்று முடித்துக்கொள்கிறார் கார்டினல். கலீலியோவைச் சித்திரவதை செய்யக்கூடாது என்றும் வதைப்பதற்காக வைத்திருக்கும் கருவிகளை அவரிடம் காட்டினாலே போதும் என்றும் கார்டினல் உத்தரவிட்டிருந்ததால் அவ்வாறே செய்கிறார்கள். ஆனால் அதுவே அவரை உலுக்கியெடுக்கப் போதுமானதாக இருந்தது. நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும், ஆய்வைப் பதிப்பிக்கக்கூடாது எனும் நிபந்தனையை ஏற்று, சிறையிலிருந்து வெளியில் வருகிறார் கலீலியோ.

இப்போதும் அவர் ஆய்வுகள் செய்துகொண்டுதான் இருக்கிறார் என்றாலும் வீட்டுக்காவலில் இருப்பதால் அவரை நாடி யாரும் வருவதில்லை. பல ஆண்டுகள் கழித்து ஆண்ட்ரியா அவரைத் தேடி வரும்போது, நான் பின்வாங்கியது ஒரு தந்திரமான ஏற்பாடு என்று அவனுக்குப் புரிய வைக்க முயல்கிறார் கலீலியோ. ஒருவேளை நான் திருச்சபையின் சொற்களை மீறியிருந்தால் புரூனோ போல் என்னையும் அவர்கள் கொளுத்தியிருப்பார்கள். இப்போது என்னால் அமைதியாகப் பணியாற்றமுடிகிறது. ஆய்வுகளைத் தொடரவும் முடிகிறது என்று விளக்கமளிக்கிறார். அவர் சொல்வதிலுள்ள நியாயத்தை ஆண்ட்ரியா ஏற்கிறான். விடைபெறும்போது தன்னுடைய கையெழுத்துப் பிரதியை ஆண்ட்ரியாவிடம் கொடுத்து, ரகசியமாக எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார் கலீலியோ. சிறைப்படுத்தமுடியாத அவர் சிந்தனை காற்றுபோல் உலகெங்கும் பரவிக் கலக்கிறது. கலீலியோ கணித்ததுபோல் எதிர்கால உலகம் உண்மையை ஏற்கிறது. அதிகாரத்துடனான போட்டியில் இறுதியில் வெல்பவர் கலீலியோதான் என்னும் செய்தியோடு நிறைவடைகிறது பிரெக்டின் நாடகம்.

பெரும்பாலானோர் இப்படித்தான் நாடகத்தை உள்வாங்கிக்கொண்டனர். பிரெக்டுக்கு இதில் உடன்பாடில்லை. அவர் கலீலியோவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்த விரும்புகிறார். கண்முன்னால் இருக்கும் சான்றை உலகம் ஏற்கும் என்றார் கலீலியோ. அதையே அவருக்கும் பொருத்திப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். கலீலியோ நாயகரா?

0

வரலாற்றிலிருந்து ஒரு நாயகரைத் தேர்ந்தெடுத்து, எழுதி, மேடையேற்றும்போது அது அவரைப் பற்றிய அல்லது அவர் காலத்தைப் பற்றிய படைப்பாக மட்டும் இருந்துவிடுவதில்லை. அந்நாடகத்தை யார் எழுதுகிறாரோ அவரைப் பற்றிய படைப்பாகவும் அவர் எப்போது எழுதுகிறாரோ அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் படைப்பாகவும் மாறிவிடுகிறது. எப்போதெல்லாம் மேடையேற்றப்படுகிறதோ அப்போதெல்லாம் அந்நாடகம் புதிய வடிவங்கள் எடுப்பதையும் காணலாம் என்கிறார் பிரெக்டின் கலீலியோவை ஆராயும் எரிக் பெண்ட்லி (1916-2020).

பெண்ட்லி பிரிட்டனில் பிறந்த அமெரிக்க நாடகக் கலைஞர், மொழிபெயர்ப்பாளர், விமரிசகர். பல ஐரோப்பிய நாடகாசிரியர்களின் படைப்புகளை இயக்கியிருக்கிறார். பெர்னார்ட் ஷா குறித்து பெண்ட்லி எழுதிய நூலை ஷா வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். இப்சென், கார்சியா லோகா, செகாவ், சார்தர் என்று பலருடைய நாடகங்களால் ஈர்க்கப்பட்டிருந்தாலும் இறுதிவரை பெண்ட்லிக்கு நெருக்கமாக இருந்தவர் பிரெக்ட்தான். அவருடைய கலீலியோ குறித்து விரிவாகச் சிந்திப்பதற்கு நமக்கு உதவும் கட்டுரைகளில் ஒன்று பெண்ட்லி எழுதியது.

17ஆம் நூற்றாண்டு அறிவியலாளரை பிரெக்ட் 20ஆம் நூற்றாண்டில் நினைவுகூர்ந்து எழுதவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டால்தான் அவருடைய கலீலியோவை நம்மால் நெருக்கமாக அறிந்துகொள்ளமுடியும் என்கிறார் பெண்ட்லி. பிரெக்டின் நாடகம் பெருமளவில் வரலாறுக்கு நெருக்கமானது. பூமி மையக் கோட்பாட்டை முன்வைத்ததற்காக 1633ஆம் ஆண்டு வாடிகன் அவரை விசாரித்துக் கண்டித்ததோடு, தன் கருத்தை மாற்றிக்கொள்வில்லையென்றால் எரித்துக் கொல்லப்படுவார் என்றும் எச்சரித்தது. திருச்சபைக்கு முரணான கோட்பாடுகளை வளர்த்து வைத்திருந்த புரூனோ முன்னதாக, 1600இல் ரோமில் எரித்துக்கொல்லப்பட்டிருந்தார். புரூனோ, கலீலியோ இருவரும் கோபர்நிகஸின் தடை செய்யப்பட்டிருந்த வானியல் கோட்பாட்டை ஏற்று, மேலதிக ஆய்வுகள் நடத்தி வந்தவர்கள். இந்நிலையில், திருச்சபையின் கோபத்துக்கு ஆளாவது உயிருக்கே ஆபத்தானதாக முடியும் என்று அஞ்சிய கலீலியோ தன் கருத்துகளைத் திரும்பப்பெற்றுக்கொண்டார். இருந்தும் தன் எஞ்சிய வாழ்நாளை அவர் வீட்டுச்சிறையில் கழிக்கவேண்டியிருந்தது.

பெர்டோல்ட் பிரெக்ட் ஜெர்மனியின் சர்ச்சைக்குரிய அறிவுஜீவிகளில் ஒருவராக 1920களில் அறிமுகமானவர். அதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த உயர் பண்பாட்டுக்கு மாற்றாக அடித்தட்டு மக்களின் பண்பாட்டின்மீது கவனம் செலுத்தினார் பிரெக்ட். நாடகத்தின் அடிப்படைகளைத் திட்டவட்டமாக மாற்றியமைக்கவேண்டும் என்றும் வேறொரு புதிய திசையில், நவீனப் பாதையில் நாடகத்தை இழுத்துச் செல்லவேண்டும் என்றும் அவர் விரும்பினார். அரிஸ்டாட்டில் காலத்து வரையறைகள் இனியும் பொருந்தாது. நம் காலத்துச் சிந்தனைகளுக்கேற்ப நாடகத்தை மாற்றியமைக்கவேண்டும் என்றார். அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட தளங்களில் மார்க்சியம் முன்வைத்த புரட்சிகர மாற்றத்தைப் பண்பாட்டுக்கும் பொருத்திப் பார்க்கும் விழைவு அவரிடமிருந்தது. வர்க்கப் போராட்டத்தை கலைக்கும் அழகியலுக்கும் நீட்டித்துப் பார்த்தால் என்ன? கலை ஏன் அரசியலற்று இருக்கவேண்டும்? ஒரு நாடகத்தைப் பார்வையாளர்கள் ஏற்க மட்டும்தான் வேண்டுமா? அத்துடன் விவாதிக்கக்கூடாதா? முரண்படக்கூடாதா?

நவீனக் கலைகளுக்கும் மார்க்சியத்துக்குமான உறவு குறித்து முக்கிய ஜெர்மானியச் சிந்தனையாளரான வால்டர் பெஞ்சமினிடமிருந்து தெளிவு பெற்றார் பிரெக்ட். அவர் எழுத்துகளில் மார்க்சியத்தின் தாக்கம் எங்கும் நிறைந்திருந்தது. அதனாலேயே நாஜிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்து விழுந்தார் பிரெக்ட். அவர்களுடைய ஆவணங்களில் ‘கம்யூனிஸ்ட் நாடகாசிரியர்’ என்று பிரெக்ட் குறிக்கப்பட்டார். ஹிட்லர் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பே பிரெக்டின் நாடகம் தடை செய்யப்பட்டது. ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நான்கு வாரங்களில், 25 பிப்ரவரி 1933 அன்று ஜெர்மானிய நாடாளுமன்றம் தீக்கிரையானது. இது கம்யூனிஸ்டுகளின் சதி என்று குற்றஞ்சாட்டி மாபெரும் தேடுதல் வேட்டையை நாஜிகள் தொடங்கி வைத்தனர். இது நடந்த மறுநாள், பிரெக்ட் ஜெர்மனியிலிருந்து தப்பிச் சென்றார். முதலில் ஸ்கேண்டிநேவியாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் குடியமர்ந்தார். பிரெக்டின் எழுத்துகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டன.

1938ஆம் ஆண்டு, அதாவது இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பு கலீலியோவை எழுதினார் பிரெக்ட். அதன்பின் அதில் பல திருத்தங்களை மேற்கொண்டார். (பிரெக்டின் வழக்கங்களில் ஒன்று எழுதியத் திரும்பத் திரும்ப மாற்றிக்கொண்டிருப்பது. கவிதை, நாடகம் என்று பல படைப்புகளுக்கு முதல் வடிவம், இரண்டாம் வடிவம் என்று பல வடிவங்கள் கிடைத்திருக்கின்றன). ஜூரிச்சில் 1943இல் கலீலியோ மேடையேற்றப்பட்டது. எழுத்து வடிவத்தை 1947இல் சார்லஸ் லாட்டன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பிரெக்டோடு இணைந்து பணியாற்றியவர் லாட்டன். லாஸ் ஏஞ்செலஸில் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டபோது கலீலியோவாக நடித்தவரும்கூட. அதன்பிறகு உலகின் பல நாடுகளில், பல மொழிகளில் கலீலியோ எண்ணற்றமுறை மேடையேற்றப்பட்டது.

பிரெக்டின் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாக மட்டுமின்றி, அவர் மனதுக்கு நெருக்கமான ஒரு படைப்பாகவும் கலீலியோ அறியப்படுகிறது. இதை அவர் எழுதும்போது இத்தாலியை நினைத்துக்கொண்டாரா அல்லது ஜெர்மனியையா? சுதந்திரச் சிந்தனைகளைத் தடை செய்யும் அதிகார அமைப்பைப் பேசும்போது அவர் திருச்சபையை நினைத்துக்கொண்டாரா அல்லது நாஜிகளையா? புரூனோவைக் கொளுத்திய, கலீலியோவை அச்சுறுத்திய அதே எதேச்சதிகாரம்தானே ஜெர்மனியை இப்போது நசுக்கிக்கொண்டிருக்கிறது? அதிகாரத்துக்கும் விடுதலைக்கும் இடையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தைதானே கலீலியோவும் அன்று எதிர்கொண்டிருப்பார்?

கலீலியோவை பிரெக்ட் கேள்விக்குட்படுத்துவது இங்கேதான். கலீலியோவின் அறிவியல் ஆற்றல் அளப்பரியது. புரட்சிகரமான ஒரு சிந்தனையை வளர்த்தெடுத்தவர். நம்பிக்கையை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல் நிரூபணத்துக்காக அல்லல்பட்டவர். அறியாமையை அகற்றி மக்கள் ஒளியைக் காணவேண்டும் என்று விரும்பியவர். உறைந்து நின்றுவிட்ட சிந்தனைகளை அகற்றிவிட்டுப் புதிய போக்குகளை உருவாக்க விரும்பியவர். ஆனால் அதிகாரத்தின் முன்பு கொண்டுவரப்பட்டபோது அவர் ஆற்றிய எதிர்வினை என்ன? வரலாற்றைத் தீர்மானிக்கவேண்டிய முக்கியத் தருணம் ஒன்றை எதிர்கொள்ள நேரிட்டபோது என்ன செய்தார் கலீலியோ? இந்தக் கேள்வியை எழுப்பாமல் கலீலியோவை மதிப்பிட இயலாது என்பது பிரெக்டின் வாதம்.

‘நம்பிக்கையின் யுகம் முடிவடைந்துவிட்டது. இது கேள்விகளின் யுகம்’ என்று தொடக்கத்தில் அறிவிக்கும் கலீலியோ இறுதியில் நம்பிக்கையின் முன்னால் கைகளைக் கட்டிக்கொண்டு அமைதி காத்தது குறித்து எப்போது பேசப்போகிறோம்? கொள்ளை நோயைக்கூடக் கண்டு அஞ்சாதவர், திருச்சபையிடம் அஞ்சி, தன்னை ஒப்புக்கொடுத்ததை எப்போது விமரிசிக்கப்போகிறோம்? அறிவியல் வரலாற்றை எழுதும் எவரும் கலீலியோவுக்கு உயர்ந்த இடத்தையே வழங்குவர். அறிவியலுக்கு வெளியில் அவர் என்ன செய்தார் அல்லது செய்யவில்லை என்பது அவர்களுக்குத் தேவையற்றது. ஆனால் கலீலியோ நம் எல்லோரையும்போல் ஒரு மனிதனும்தான் அல்லவா? அவரை அவ்வாறு அணுகும்போது, அவருடைய சாதனைகள்போலவே அவர் இழைத்த குற்றமும் பெரிதாகத் தோன்றும்போது என்ன செய்வது?

எந்த அளவுக்கு அறிவியல் நம்பிக்கை இருந்ததோ அதே அளவுக்கு இறை நம்பிக்கையும் இருந்தது கலீலியோவிடம். ஒரு கத்தோலிக்கராக அவர் இறைவனையும் அவர் வகிக்கும் பாத்திரத்தையும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். சொர்க்கம், நரகம் உள்ளிட்ட கருத்தாக்கங்களையும்தான். ஓர் அறிவியலாளராக அவருடைய பிரபஞ்ச வரைபடத்தில் கடவுளுக்கு எந்த இடமும் இல்லை. இறையியலுக்கும் அறிவியலுக்கும் இடையிலான மோதலில் தோற்றதென்னவோ அறிவியல்தான். கடவுளின் பீடத்தில் அறிவியலைப் பலிகொடுத்தவரைத்தான் அறிவியல் உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஹிட்லருக்கு அஞ்சி ஒரு கவிஞர் தன் பாடலைத் திரும்பப்பெற்றுக்கொண்டால் அவரைக் கவிஞர் என்று அழைக்கமுடியுமா? ஹிட்லருக்கு அஞ்சி ஒரு புரட்சியாளர் தன் அரசியலைக் கைவிடுவாரெனில் அவர் எவ்வகையான புரட்சியாளர்? அதோ அவரைப்போல் கொள்கைப் பிடிப்போடு இரு என்றல்ல; அவரைப் போல் இருக்காதே. அதிகாரத்தோடு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாதே என்றுதான் கலீலியோவைச் சுட்டி இன்றைய தலைமுறையினருக்குச் சொல்லவேண்டியிருக்கிறது. வரலாறு தனக்கு வழங்கிய வாய்ப்பை கலீலியோ நழுவவிட்டது துயரமானது என்கிறார் பிரெக்ட்.

0

பெர்டோல்ட் பிரெக்டின் வாழ்விலும் ஒரு ‘கலீலியோ தருணம்’ இருக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியரும் அரசியல் கோட்பாட்டாளருமான ஹன்னா அரெண்ட். அதிகாரத்தின் முன்னால் அமைதியாகி நின்றது கலீலியோ மட்டுமல்ல, பிரெக்டும்தான் என்கிறார் ஆரெண்ட். ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க யூதரான ஹன்னா அரெண்ட் எதேச்சதிகாரம் குறித்த விரிவான, நுட்பமான கோட்பாட்டுப் பார்வையை (The Origins of Totalitarianism, Hannah Arendt, Penguin) முன்வைத்தவர். ஹிட்லரின் ஜெர்மனியை ஸ்டாலினின் சோவியத் யூனியனோடு ஒப்பிட்டு, இரண்டுமே அடிப்படையில் ஒரே வகையான ஒடுக்குமுறையைத்தான் மக்கள்மீது ஏவுகின்றன என்று மேற்படி நூலில் வாதிட்டிருக்கிறார் இவர். இந்த ஒப்புமையை ஏற்காதவர்கள்கூட அவருடைய கோட்பாட்டின் முக்கியத்துவத்தை மறுப்பதில்லை.

கம்யூனிசத்தோடு பிரெக்ட் கொண்டிருந்த உறவை நுண்ணோக்கியின்கீழ் கொண்டுவந்து விவாதிக்கிறார் ஹன்னா அரெண்ட் (Men in Dark Times, Hannah Arendt, Mariner Books). ஒரு கவிஞருக்கு நேரக்கூடாத துயரம் அவருடைய ஆதார ஆற்றல் அவரைவிட்டு நீங்குவது. பிரெக்டுக்கு இறுதிக்காலத்தில் நடந்தது அதுதான் என்கிறார் அரெண்ட். அது எப்போது நிகழ்ந்தது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். பிரெக்ட் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தபோது இது நேரவில்லை. 1920களிலோ 1930களிலோ ஒருவர் கம்யூனிஸ்டாக இருப்பதென்பது குற்றமல்ல, தவறு என்று வேண்டுமானால் சொல்லலாம். அதன்பின், ஸ்டாலின் ஆட்சியில் ‘டிராட்ஸ்கியவாதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு ஏராளமானோர் மாஸ்கோ விசாரணையின்போது (1936 முதல் 1938வரை) தண்டிக்கப்பட்டனர். தனது நண்பர்கள் சிலரும் விசாரணைப் பட்டியலில் இருந்தனர் என்று தெரிந்தும் பிரெக்ட் வாய் திறக்கவில்லை. ஹிட்லரும் ஸ்டாலினும் உடன்படிக்கை செய்துகொண்டபோதும் (1939ஆம் ஆண்டு) கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து விலகி நிற்கவேண்டும் என்று மட்டுமல்ல, விமரிசிக்கவேண்டும் என்றுகூட பிரெக்ட் நினைக்கவில்லை.

ஆனால் இவற்றையெல்லாம் மன்னித்துவிடுகிறார் அரெண்ட். பிரெக்டின் குற்றம் என்று அவர் கருதுவது வேறொன்றை. எல்லா இடங்களுக்கும் சென்று வந்த பிறகு இறுதியாக 1949ஆம் ஆண்டு கிழக்கு பெர்லினில் குடியேறும் பிரெக்ட் அங்கே கம்யூனிச ஆட்சியின்கீழ் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை நேரில் காண்கிறார். அதைக் கண்ட பிறகும் ஸ்டாலினைப் புகழ்ந்த ஒரு கவிதையை எழுதுகிறார் அவர். பிரெக்டின் ஆதார ஆற்றல் அவரிடமிருந்து விலகிச் சென்றது அந்தத் தருணத்தில்தான். அதன் பிறகு அவர் எழுதியவற்றில் அழகோ உயிர்த் துடிப்போ வெளிப்படவில்லை என்கிறார் அரெண்ட்.

பிரெக்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிலும் உறுப்பினராக இருந்ததில்லை என்றாலும் இறுதிவரை மார்க்சியத்தின் தாக்கத்துக்கு உட்பட்டவராகவே இயங்கினார். ஸ்டாலின்மீதும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின்மீதும் அவருக்கு விமரிசனங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை. தனது அரசியல் பார்வையைத் தனிப்பட்ட முறையில் வால்டர் பெஞ்சமினிடம் அவர் விவாதித்திருக்கிறார். சோவியத் யூனியனிலும் சரி, கிழக்கு பெர்லினிலும் சரி, அவர் கண்களுக்கு நிச்சயம் குறைகள் தென்பட்டிருக்கும். குற்றங்களையும் அறிந்திருப்பார். ஆனால் வெளிப்படையாக எந்த விமரிசனத்தையும் இறுதிவரை அவர் முன்வைக்கவில்லை. பிரெக்டின் பார்வையை ஏற்று, கலீலியோவைக் கூண்டில் ஏற்றமுடியும் என்றால் அரெண்ட் குறிப்பிடுவதுபோல் பிரெக்டையும் அதே போன்ற கூண்டில் ஏற்றமுடியும்தான்.

0

கவிஞர்களைப் பற்றி விவாதிப்பதைவிட அவர்களுடைய மேற்ளோள்களை விவாதிப்பது எளிதானது. காரணம் வெகு சில கவிஞர்களே நல்ல, நம்பகமான குடிமக்களாக இருக்கிறார்கள் என்கிறார் ஹன்னா அரெண்ட். பெரும்பாலான கவிஞர்கள் பிரச்சினைக்குரியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய நடத்தை அரிதாகவே ஏற்புடையதாக இருக்கிறது. புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞரான எஸ்ரா பவுண்ட் ஒரு யூத வெறுப்பாளராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். அது அவருக்கு எதிராகத் திரும்பியபோது, தனக்கு மனநிலை சரியில்லை என்று காரணம் சொல்லி நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் கவிஞர்கள் ஒன்றுகூடி எஸ்ரா பவுண்டுக்கு ஒரு தீர்ப்பை அளித்தார்கள். 1948ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராக அங்கீகரித்து அவருக்கு விருது அளித்து மகிழ்ந்தார்கள். ஒரு குடிமகனாக பவுண்ட் எப்படி இருந்தார் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்களுக்குத் தேவை ஒரு கவிஞர் மட்டுமே.

பிரெக்டும் கவிஞர்தான், அவரிடமும் குறைகள் உண்டு என்றாலும் பவுண்ட் போன்றவரல்லர் அவர் என்கிறார் அரெண்ட். பிரெக்ட் சறுக்கிய இடத்தைக் கவனப்படுத்துகிறாரே தவிர, சறுக்கலுக்காக அவரைக் கைவிடுவதில்லை அரெண்ட். ஆனால் பிரெக்ட் கலீலியோவை மன்னிப்பதாகவே இல்லை. இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருவாயில் கலீலியோவை மீண்டும் மறுவாசிப்பு செய்தபோது, கலீலியோவின் குற்றம் முன்பைவிடப் பெரிதாக வளர்ந்து நிற்பதைக் கண்டார்.

ஹிரோஷிமாமீது வந்து விழுந்த அமெரிக்க அணுகுண்டு பிரெக்டை உலுக்கியெடுக்கிறது. இன்னொரு புதிய யுகத்தின் தொடக்கமாக அதை அவர் காண்கிறார். ஹிரோஷிமா யுகம். அந்த யுகத்தின் தொடக்கத்தை ஆராயும்போது அவர் மீண்டும் கலீலியோவை வந்தடைகிறார். ‘நவீன இயற்பியலின் ஆதி பாவம்’ என்று கலீலியோ தருணத்தை அழைக்கிறார் பிரெக்ட். கலீலியோ அன்று தலைகுனிந்ததற்கும் ஹிரோஷிமாவுக்கும் நேரடித் தொடர்பிருக்கிறது. அன்று அதிகாரத்தின் முன்பு கலீலியோ வளையாமல் இருந்திருந்தால் இன்று வானிலிருந்து அணுகுண்டு விழுந்திருக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, ஒரு சமூக நிகழ்வாகவும் சரி கலீலியோவின் தொடர்ச்சியே ஹிரோஷிமா என்று நீள்கிறது பிரெக்டின் வாதம்.

ஆனால் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை கலீலியோமீது சுமத்தமுடியுமா? கலீலியோவின் சறுக்கலை ஹிரோஷிமாவோடு முடிச்சுப்போடுவதற்கு அபாரமான கற்பனைத்திறன் தேவைப்படும் இல்லையா? கலீலியோ அன்று உறுதி காத்திருந்தால் ரோமில் கொல்லப்பட்டிருப்பார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஹிரோஷிமா நடந்திருக்காது என்று எப்படிச் சொல்லமுடியும்? இறந்து சில நூற்றாண்டுகள் கழித்து நேர்ந்த பெரும் சீரழிவுக்கு அவரைப் பொறுப்பாக்குவதைத் தர்க்கத்துக்கு முரணானது என்றுதானே அழைக்கமுடியும்? ஹன்னா அரெண்ட்போல் அந்தவொரு தருணத்தை சிவப்பு மையில் வட்டமிட்டுவிட்டு கலீலியோவை வரவேற்பதுதானே சரியானது?

ஆம் என்றாலும் பிரெக்ட் ஏன் அந்த ஒரு தருணத்தை அச்சுறுத்தும் அளவுக்கு இவ்வளவு பெரியதாக, இவ்வளவு மிகையாக வளர்த்துக் காட்டுகிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். ‘மேலிருப்பவர்கள் சொன்னதால் செய்தேன்’ எனும் இயந்திரத்தனமான, ஆபத்தான போக்கு எவ்வளவு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நேரடியாக உணர்ந்தவர் பிரெக்ட். அணுகுண்டின் உருவாக்கத்துக்குப் பின்னாலிருந்தவர்கள், அவர்களோடு இணைந்து பணியாற்றியவர்கள், அந்தக் குண்டை விமானத்தில் கொண்டுவந்து பொருத்தியவர்கள், விமானத்தை இயக்கியவர், குண்டை வீசியவர் அனைவரும் தங்களுக்குச் சொல்லப்பட்டதைச் செய்து முடித்தவர்கள். லட்சக்கணக்கான யூதர்களை வதைத்தவர்களும் கொன்றொழித்தவர்களும் திடீரென்று ஒரு நாள் மதியிழந்து இவ்வாறு செய்தவர்களில்லை. தங்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக் கேள்வியன்றிப் பின்பற்றியவர்கள்தாம். மனச்சாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு அமைதியாக, தங்கள் கடமையைச் செய்து முடித்தவர்கள்தாம். சொன்னதைத்தானே செய்தேன், அது எப்படிக் குற்றமாகும்? ஒரு சாதாரண ஊழியனான என்னால் எப்படி எனக்கு மேலிருக்கும் அதிகாரத்தை எதிர்த்து நின்றிருக்கமுடியும் என்றுதான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நாஜிகள் வாதாடினார்கள்.

வரலாற்று கலீலியோவைவிட்டு விலகி வந்தால்தான் பிரெக்டின் கலீலியோவை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். மேடையில் தோன்றும், நூலில் வெளிப்படும் கலீலியோ வேறு யாருமல்ல, நாம்தான்.

0

பகிர:
மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *