முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த பலரால் எளிமையாகவும் சுவையாகவும் எழுத முடிவதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர் தரவுகள் குறித்தோ ஆய்வு முறையியல் குறித்தோ கவலை கொள்வதில்லை. தமிழ்ச்சூழலில் அந்த வகையில் அரிதானவர், ஆ.இரா. வேங்கடாசலபதி. ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வைச் சுவையாக விவரித்துச் செல்லும் பதிவாகவும் விரிவான ஆய்வுகளை உள்ளடக்கிய முக்கிய ஆவணமாகவும் ஒரே நேரத்தில் திகழ்கிறது, அவருடைய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ (காலச்சுவடு).
தனது நூலின் முகப்பில், புதிய வாயில்களைத் திறந்துவிட்டவர்கள் என்று ஈ.பி. தாம்ஸன், எரிக் ஹாப்ஸ்பாம், ரணஜித் குகா, ஜார்ஜ் ரூடே ஆகிய நால்வரைக் குறிப்பிடுகிறார் சலபதி. நால்வரும் வரலாற்றியலின் திசைப் போக்கை மாற்றியமைத்தர்கள். ரணஜித் குஹா தவிர்த்து மற்ற மூவரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். ரணஜித் குஹாவும் பிரிட்டனில் பணியாற்றியவர்தான். நால்வரும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை, போராட்டங்களை, பங்களிப்புகளை, சிந்தனைமுறைகளை ஆராய்ந்தவர்கள். மார்க்சிய வரலாற்றாசிரியர்களாகவும் அறியப்படுபவர்கள்.
இவர்களுடைய சில படைப்புகளை சலபதியின் திருநெல்வேலி எழுச்சியோடு இணைத்து சில நிமிடங்கள் பேசலாம் என்று நினைக்கிறேன்.
0
முதலில் ரணஜித் குஹா.
ரணஜித் குஹாவின் ‘Elementary Aspects of Peasant Insurgency in Colonial India’ ஒரு நவீன வரலாற்றுச் செவ்வியல் நூலாக மதிக்கப்படுகிறது. இந்நூலில் 1783 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 110 விவசாயக் கிளர்ச்சிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார். அப்போது சில எளிய, அடிப்படையான கேள்விகளை அவர் எழுப்புகிறார். கிளர்ச்சி என்பது என்ன? அது எவ்வாறு நடைபெறுகிறது? அதை யார் முன்னெடுக்கிறார்கள்? அதில் கலந்துகொள்ளும் விவசாயிகள் யார்? அவர்கள் எவ்வாறு குழுவாகத் திரண்டனர்? எதற்காக வீட்டையும் வேலையையும் விட்டுவிட்டு போராட்டங்களில் இறங்கினர்? அவர்கள் தேவை என்ன? யாருக்கு எதிரான கிளர்ச்சிகள் இவை? அவற்றின் மூலம் அவர்கள் அடைந்தது என்ன?
சலபதியும் இதே கேள்விகளோடுதான் தன் ஆய்வை முன்னகர்த்திச் சென்றிருக்கிறார். 1908ஆம் ஆண்டு நடைபெற்ற திருநெல்வேலி எழுச்சிதான் நூலின் மையம் என்றாலும் அதற்கு முன்பும் பிறகும் நடைபெற்ற வெவ்வேறு எழுச்சிகளை அவர் கவனப்படுத்துகிறார். அப்படிச் செய்வதன்மூலம் திருநெல்வேலி எழுச்சி என்பது எரிநட்சத்திரம் போல் ஓரிடத்தில் சட்டென்று தோன்றி, தோன்றிய வேகத்தில் மறைந்தும் போன ஒரு நிகழ்வல்ல. காலனிய ஆட்சிக்கு எதிரான நீண்ட, தொடர்ச்சியான விடுதலைப் போராட்டத்தின் ஓர் அத்தியாயம்தான் அது என்பதை நிறுவுகிறார்.
ஆளும் பிரிட்டிஷ் வர்க்கம் விவசாயக் கிளர்ச்சிகளை எவ்வாறு அணுகியது, அவற்றை எவ்வாறு புரிந்துகொண்டது, அதன் எதிவினைகள் என்னவாக இருந்தன என்பதை ரணஜித் குஹா நெருக்கமாக ஆராய்ந்திருப்பார். முழுக்க, முழுக்க ஆளும் வர்க்கத்தின் பார்வையிலிருந்து மட்டுமே பதிவாகியிருந்த அத்தனை நிகழ்வுகளையும் தலைகீழாக்கி விவசாயிகளின் பார்வையிலிருந்து அவற்றை விவரித்திருப்பார்.
சலபதி செய்திருப்பதும் அதையேதான். ஆங்கிலேய அரசாங்க ஆவணங்களும் இதழ்களும் ‘Tinnevelly Riots’ என்றே 1908 நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். பெரிய அளவில் நடைபெற்ற மக்கள் எழுச்சி என்றாலும் வெள்ளையர் இதனைத் தமக்கும் தமது ஆட்சி அதிகாரத்துக்கும் எதிரான கிளர்ச்சியாகவும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவும் கண்டமையால் கலகம் என்றே வர்ணித்தனர் என்கிறார் சலபதி. இந்த வழக்கத்தை மற்றவர்களும் கேள்வியின்றி அப்படியே கையாண்டிருக்கின்றனர். சலபதி இதை மாற்றி, எழுச்சி என்று பொருத்தமாகப் பெயரிட்டு அழைக்கிறார். விவசாயிகளின் போராட்டத்தை காலனி அதிகாரிகளால் சட்ட ஒழுங்கு பிரச்சினையாகவும் தங்கள் அதிகாரத்துக்கு வேட்டு வைக்கும் கலகமாகவும் மட்டுமே பார்க்கமுடிந்தது என்றே ரணஜித் குஹாவும் குறிப்பிடுகிறார்.
விவசாயிகளின் கலகங்கள் சாரமற்றவை, அவற்றுக்குப் பெரிதாக அரசியல் நோக்கங்கள் இல்லை போன்ற வாதங்களை குஹா வலுவாக மறுத்திருப்பார். எதற்காக இந்தப் போராட்டம், அதில் நான் ஏன் பங்கு பெறுகிறேன், யாரை எதிர்த்து நான் போராடவேண்டும் போன்றவற்றை விவசாயிகள் நன்கு உணர்ந்திருந்தனர். தங்களைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்த வகையில், விவசாயிகளின் கிளர்ச்சிகளை அரசியல் நடவடிக்கைகள் என்றே கொள்ளவேண்டும் என்று குஹா வாதிடுவார். சலபதி இந்த வாதத்தைத் தனது நூலில் மிகத் தெளிவாக முன்வைக்கிறார்.
புதிய தரவுகள் கிடைக்கும்போது மட்டும் வரலாறு மாறுவதில்லை. ஏற்கெனவே நம்மிடமுள்ள தரவுகளைப் புதிய நோக்கில் ஆராயும்போதும், புதிய கேள்விகளை எழுப்பும்போதும்கூட வரலாறு மாறத்தான் செய்கிறது என்பார் ரொமிலா தாப்பர். சலபதியின் நூலில் இரண்டும் நிகழ்கின்றன. தகுந்த தரவுகளைக் கண்டறிந்து, வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்தி அவற்றை ஆராயும்போது வரலாறு துலக்கம் பெறுகிறது. அதே போல் ஏற்கெனவே உள்ள தரவுகளையும் அவர் புதிய கோணங்களில் அணுகி கேள்விக்கு உட்படுத்தும்போது புதிய விடைகள் கிடைக்கத் தொடங்குகின்றன.
எடுத்துக்காட்டுக்கு, திருநெல்வேலி எழுச்சி பற்றி நமக்குக் கிடைக்கும் தரவுகளில் பெருமளவு அரசு ஆவணங்களாக இருக்கின்றன. அவை அரசு தரப்பை மட்டுமே நமக்கு வெளிப்படுத்துகின்றன. ‘எழுச்சியில் ஈடுபட்டவர்களின் அனுபவப் பகிர்வுகள் இல்லை. நீதிமன்ற ஆவணங்களும்கூட இதழ்களிலிருந்து திரட்டப்பட்டவையே தவிர, முழுமையானவையல்ல’ என்கிறார் சலபதி. ‘மேல்தட்டு தரவுகள்’ என்று இவற்றை அழைக்கிறார் ரணஜித் குஹா.
இருந்தும் ஆங்கிலேய அரசுத் தரவுகளை அவர்களுக்கே எதிராகத் திருப்பி, எவ்வளவு பாரபட்சத்துடன் வ.உ.சி உள்ளிட்டோர்மீது அவர்கள் வழக்கு நடத்தினார்கள் என்பதை விரிவாக எடுத்துக்காட்டுகிறார் சலபதி. வழக்கறிஞர்கள் அக்கறையோடு வாதாடியபோதும் தீர்ப்பு என்னவாக இருக்கவேண்டும் என்பதை நீதிபதி முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதை சலபதி சுட்டிக்காட்டுகிறார். ஏன் வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது? அதிகாரிகள் முதல் நீதிபதி வரை அனைவரும் அவர்மீது மிகுந்த வன்மத்தோடு நடந்துகொண்டது ஏன்? போன்ற கேள்விகளுக்கு இந்நூல் முதல் முறையாக விரிவாக விடையளிக்கிறது.
ரணஜித் குஹாவின் ஆய்வுக்கும் சலபதியின் ஆய்வுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. குஹா ஆய்வு செய்யும் எழுச்சிகள் பெருமளவில் தலைமையற்றவை. எந்த வழிகாட்டுதலும் இல்லாத, சாமானியர்கள் மட்டுமே பங்கு பெற்ற போராட்டங்கள் அவை.
திருநெல்வேலி எழுச்சியின் வரலாறு அவ்வாறானதல்ல. வ.உ.சி., சுப்பிரமணியம் சிவா என்று தொடங்கி முக்கிய ஆளுமைகள் இதில் இடம்பெறுகின்றனர். பின்னணியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஒன்று இன்னொன்றைப் பாதிக்கிறது. சலபதி அனைத்துத் துண்டுகளையும் கண்டுபிடித்து, ஒழுங்குபடுத்தி, ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறார். திருநெல்வேலி எழுச்சி குறித்து நான் அறிந்தவரை இப்படியொரு நிறைவான சித்திரம் இதற்கு முன்பு முன்வைக்கப்பட்டதில்லை. ஒரு ரஷ்யப் புரட்சியை, ஒரு பிரெஞ்சுப் புரட்சியை, ஒரு 1857 சிப்பாய்ப் புரட்சியை எப்படி வாசிப்போமோ அதேபோல் திருநெல்வேலி எழுச்சியைப் படிப்படியாக, ஒவ்வொரு கட்டமாக நாம் வாசிக்கிறோம். நம் கண்முன்னால் எழுச்சி தொடங்குகிறது. வளர்கிறது. கூர்மையடைகிறது. ஓய்கிறது.
0
அடுத்து எரிக் ஹாப்ஸ்பாம்.
18ஆம் நூற்றாண்டிலும் 19ஆம் நூற்றாண்டிலும் நடைபெற்ற வெவ்வேறு கலகங்களை எரிக் ஹாப்ஸ்பாமின் மூன்று நூல்கள் ஆராய்கின்றன. அவை, Primitive Rebels (1959), Bandits (1969), Captain Swing (1969). கிரிமினல் குற்றவாளிகளாகவும் வன்முறையாளர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்தப்பட்டிருந்த பலரை மீட்டெடுத்து அவர்களுக்குரிய இடத்தை, அடையாளத்தை வழங்கியவர் ஹாப்ஸ்பாம். உதிரிகளாகவும் பெயரற்றவர்களாகவும் எந்தவிதச் செல்வாக்கும் அற்றவர்களாகவும் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு அடியில் கொண்டுவந்து நிறுத்தி அவர்களிடமிருந்து வரலாற்றை விரித்துச் செல்வார் ஹாப்ஸ்பாம்.
1908இன் நாயகனாக வ.உ.சி உயர்ந்து நிற்கிறார். நூலின் தலைப்பிலும் அவர் இடம்பெறுகிறார். இருந்தாலும் இது அவரைப் பற்றிய நூல் மட்டுமல்ல. திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நடைபெற்ற எழுச்சிகளில் எவ்வளவு பேர் பங்கேற்றிருப்பார்கள்? அவர்கள் யார்? தொழிலாளர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் என்று யூகிக்கலாமா? இளைஞர்கள், மாணவர்களின் சதவிகிதம் தோராயமாக எவ்வளவு இருக்கும்? ஆவணங்கள் சொல்லும் எண்ணிக்கையை நம்பலாமா? அணிதிரட்டல் எவ்வாறு நடைபெற்றிருக்கும்? கலந்துகொண்டவர்கள் போக மற்றவர்கள் இந்த எழுச்சியை எவ்வாறு கண்டனர்? போராட்டக்காரர்களுக்குப் பொது மக்களின் ஆதரவு கிடைத்திருக்குமா? அனைத்தையும் விவாதிக்கிறார் சலபதி.
பல்லாயிரக்கணக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சியில் தண்டனை பெற்றவர்கள் நூறு பேருக்குள் இருப்பார்கள் என்று குறிப்பிடும் சலபதி, அவர்களில் கால்வாசிபேரின் பின்னணியைக்கூடத் தெரிந்துகொள்வது இடராக இருக்கிறது என்று வருந்துகிறார்.
எழுச்சியின்போது அங்குமிங்குமாக நடைபெற்ற வன்முறையை விவாதிக்கும்போது முக்கிய அரசியல் சிந்தனையாளரான ஃபிரான்ட்ஸ் ஃபனானைக் குறிப்பிடுகிறார் சலபதி. ஆதிக்கப் பிரிவினர் அப்பாவிகள் மீது பிரயோகிக்கும் வன்முறையும் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில் வெடித்து எழுந்து தங்களை அடிமைப்படுத்துபவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கும் வன்முறையும் ஒன்றா என்னும் கேள்வியை எழுப்பியவர் ஃபனான். இந்த விவாதத்துக்குத் தத்துவார்த்த, உளவியல் பார்வையை வழங்கியவரும்கூட.
திருநெல்வேலி எழுச்சியில் அங்குமிங்குமாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குக் குற்றவாளிகள், கீழ்நிலை ரவுடிகள், கிரிமினல்கள், வேலையில்லாதவர்கள், உதிரிகள் ஆகியோர்தான் பொறுப்பு என்பது காலனி அதிகாரிகளின் வாதம். ஆனால் அப்படிப்பட்டவர்கள் எழுச்சியில் பங்கேற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிடும் சலபதி, இந்த வன்முறைச் சம்பவங்களின் இயல்புகளை நுணுக்கமாக ஆராய்கிறார். திருநெல்வேலியில் பொதுச்சொத்துகள் ஏறத்தாழ அனைத்தும் சேதமடைந்திருக்கின்றன. மாவட்ட முன்சீப் நீதிமன்றம், காவல் நிலையம், அஞ்சலகம், நகராட்சி அலுவலகம், எண்ணெய்க் கிடங்கு உள்ளிட்டவை தாக்கப்பட்டன.
காவல் நிலையத்துக்குள் புகுந்த சிலர் வந்தே மாதரம் என்று முழங்குமாறு அங்கிருந்தவர்களை வற்புறுத்தியிருக்கிறார்கள். ‘நீ சுதேசியா, பரதேசியா சொல்லு’ என்று போராட்டக்காரர் மிரட்டியிருக்கிறார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு நிலைமை கட்டுமீறி சென்றபோதும் வந்தே மாதரம் எனும் முழக்கம் நின்றபாடில்லை.
இத்தகைய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் சலபதி அவற்றில் காணப்படும் பொதுப்பண்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். காலனிய அடையாளங்களாக, அதிகார மையங்களாக அறியப்படும் கட்டடங்களே தாக்கப்பட்டிருக்கின்றன. காலனிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயர்கள்மீதும் அவர்களோடு கைகோத்து நிற்கும் இந்தியர்கள்மீதும் தங்கள் கோபத்தைத் திருப்பியிருக்கிறார்கள். வாதம் புரிந்திருக்கிறார்கள். மிகச் சில விதிவிலக்கு தவிர்த்து எங்கிருந்தும் பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்கிறார்.
வன்முறை குறித்துப் பேசும்போது ஓரிடத்தில் ஈ.எம். ஃபாஸ்டரின் A Passage to India எனும் புதினத்தை அடிக்குறிப்பில் அளிக்கிறார் சலபதி. 1920களில் நடைபெற்ற இந்திய சுதந்தரப் போராட்டங்களின் பின்னணியில் விரியும் கதை இது. அந்நிய ஆதிக்கத்துக்கு ஆளாகிறவர்கள் தங்கள் எஜமானர்களைக் கண்டு அச்சப்படுவது இயற்கை. தாங்கள் ஆளும் மக்களைக் கண்டு சர்வ அதிகாரமும் பெற்றிருக்கும் அதிகாரிகள் அஞ்சுவார்களா? அஞ்சுவார்கள் என்பதை ஃபாஸ்டரின் கதையைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.
சலபதி இக்கதையைத் தன் நூலில் நினைவுபடுத்தியதற்குக் காரணம் இருக்கிறது. திருநெல்வேலி எழுச்சியில் ஈடுபட்ட சாமானியர்களைக் கண்டு காலனி அதிகாரிகள் அச்சம் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகத் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு இவர்களால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சியிருக்கிறார்கள். அந்த அச்சம் காரணமாகப் பதற்றமும் பீதியு ம் அடைந்திருக்கிறார்கள். அந்த அச்சத்தைத் தரவுகள் வாயிலாக நமக்கும் வெளிப்படுத்துகிறார் சலபதி.
மற்றபடி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள், எழுச்சியில் பங்கேற்றவர்கள், கைதானவர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என்று இயன்றவரை எல்லோரையும் ஆராய்கிறார்.
குதிரை வண்டிக்காரர், சிறிய உணவுக்கடை நடத்துபவர், கல்யாணத் தரகர், நாட்டு மருத்துவர், ஆட்டுத் தூதர், கூலித் தொழிலாளர், நகை வணிகர் என்று தண்டனை பெற்றவர்கள் வெவ்வேறு பின்புலத்தைச் சார்ந்தவர்கள். முன்னாள் போலீஸ்காரர்களும்கூட இதில் இணைகின்றனர்.
கைதானவர்களில் வேளாளர், பிராமணர், மறவர், கோனார், நாவிதர், செட்டியார், நாயுடு என்று தொடங்கி பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தூய்மைத் தொழிலாளர், நாவிதர், கசாப்புக் கடைக்காரர், தின்பண்டம் விற்பவர் என்று பலதரப்பட்ட தொழிலாளர்கள் எழுச்சிக்கு முன்பு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
சாதி, சமயம் உள்ளிட்ட வேறுபாடுகள் கடந்து பொது மக்கள் எனும் திணையில் பல்வேறு தரப்பட்டவர்கள் ஒன்று திரண்டு தங்கள் கூட்டு எதிர்ப்பைத் தெரியப்படுத்துகிறார்கள். வேலை நிறுத்தமாக இருந்தாலும் சரி, எழுச்சியாக இருந்தாலும் அரசியல் ரீதியிலான அணிதிரட்டல் நடைபெற்றிருக்கிறது என்பதையே இந்தத் தரவுகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
ஹாப்ஸ்பாம், குஹா, ஃபனான், தாம்ஸன், ரூடே போன்றோரின் ஆய்வுமுறையியலைக் கொண்டு சலபதி திருநெல்வேலி எழுச்சியை ஆராயும்போது நம் பார்வை அகலமாகிறது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தெற்கின் பங்குதான் என்ன என்று கேட்பவர்களுக்கு இதோ என்று பெருமிதத்தோடு எடுத்து நீட்டுவதற்கு ஓர் ஆவணத்தை சலபதி வழங்கியிருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக வ.உ.சியின் வாழ்வோடும் படைப்புகளோடும் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருப்பவர் சலபதி. வ.உ.சியே கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்ட ஆளுமையாக மாறிவிட்ட நிலையில் அவருக்குரிய இடத்தை இந்நூல் வாயிலாகவும் வ.உ.சி தொடர்பான பிற நூல்கள் வாயிலாகவும் மீட்டெடுத்துத் தந்திருக்கிறார் சலபதி.
வ.உ.சியை நினைவுகூர்வதே அசாத்தியமானதாக மாறிவிட்டபோது எங்கோ ஒரு மூலையில் எப்போதோ நடைபெற்ற ஒரு எழுச்சியை மக்கள் தங்கள் நினைவுகளில் தேக்கி வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாதுதான். இனிமேலும் இந்நிலை தொடராமல் இருக்க இந்நூல் உதவும் என்று நம்புகிறேன். 1908 என்பது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும், ஏன் உலக உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்றிலும்கூட இடம்பெறவேண்டிய ஒரு முக்கிய அத்தியாயம் என்பதை சலபதியின் நூல் அழுத்தந்திருத்தமாக நமக்கு உணர்த்துகிறது.
0
(சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறையும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் (எம்ஐடிஎஸ்) இணைந்து நடத்திய ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ நூல் குறித்து நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் – செப்டெம்பர் 5, 2022 – வாசிக்கப்பட்ட எனது உரை).