Skip to content
Home » காந்தி எனும் பெருமரம்

காந்தி எனும் பெருமரம்

காந்தி எனும் பெருமரம்

மண்ணில் செழித்து வந்த பெருமரம் ஒன்று அந்த மண்ணுக்கே மீண்டும் செழிப்பைத் தருவதுதான் காந்தியைக் குறித்து எண்ணுகையில் மனதில் தோன்றும் படிமம்.

எண்ணிலடங்கா கிளைகள் விரித்து, பசிய இலைகள் காற்றில் அசைந்தாடியபடியே இருக்க, பூக்களும் கனிகளுமாய் வானளாவி நிற்கும் மரம். மெதுவாய் ஊர்ந்து ஏறும் சிற்றெறும்பு முதல் வல்லூறுகளுக்கும்கூட இடமளித்த மரம்.

தங்கியிருந்து பாடம் கேட்டுப் பறந்து சென்றன கிளிகள். கூடு கட்டிச் சில காலம் வதிந்து பின் பறந்தன மைனாக்கள். அதன் பொந்துகளில் ஆந்தைகளுக்கும் அணில்களுக்கும் இடம் இருந்தது. ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் ஆசுவாசம் அளித்த மரம் அது. மனிதர்கள் அதன் நிழலில் தங்கியிருக்கும் போதெல்லாம் தம்மை வேறொருவராய் உணர்ந்தனர்.

வில்லாளிகளின் அம்புகள் பாய்ந்து கிளைகளில் தழும்புகள் காய்த்த மரம். கோடரிகள் எத்தனையோ முறை அதன் அடிப்பாகத்தையும் பதம் பார்த்திருக்கின்றன. பெருமழையும் மின்னலும் அம்மரத்திற்கு உரமே சேர்த்தன.

ஆயினும் அம்மரம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் செழித்தே வளர்ந்தது. தொலைதூர நாடுகளின் பறவைகளும் அதனில் தங்கள் கூடுகளைக் கட்டிக் கொள்ள ஆவலுற்று வந்தன. தகுந்தவற்றுக்கெல்லாம் இடம் கிடைத்தது. இடம் பெற்றவை எல்லாம் அதன் புகழ் பாடின. மோனமும் வாழ்வின் அழகும் கூடி நின்ற மரம் அது. செயலே அதன் உயிர்நாடி. மரம் என்பதே உயிர்விசை மிக்க வாழ்வுக்கு உதாரணம்தான்.

காந்தி எனும் பெருமரமும் செயலையே போதித்தது. புத்தர் ஒரு மரத்தடியில் ஞானம் பெற்றதை நாமறிவோம்.

காந்தி எனும் பெருமரத்தின் கீழ் ஞானம் பெற்றவர் ஆயிரமாயிரவர். அது உலகைத் துறக்கும் ஞானமன்று.

மன்பதையை நேசிக்கும் ஞானம். மண்ணில் விண்ணைக் காட்டித் தரும் ஞானம். உயிர்கள் அனைத்தும் ஒன்றே, அனைத்துள்ளும் இறை உண்டு என்பதை எடுத்துரைத்த ஞானம். செயலின் வழியாகவே மானிட உய்வு சாத்தியம் என்பதை விளக்கிய ஞானம்.

வேர் முதல் தன் தளிர் வரை அம்மரம் செயலையே கற்றுத் தந்தது. மரம் என்பதே பெருஞ்செயல் தானே?

பசுவய்யாவின் கவிதை ஒன்று நினைவில் எழுகிறது. விருட்ச மனிதர்கள் என்பது அக்கவிதையின் தலைப்பு.

மரங்கள் போல வாழ்வு என்று கிடைக்கும்
மோனமும் அழகும் அங்கு கூடி நிற்கின்றன
கவலை இல்லை
விபத்தும் நோயும் வறுமையும் உண்டு
கவலை இல்லை

மரங்கள் உன்னதமானவை
கம்பீரமான எளிமை
நிர்மலமான இதயம்
மேலே மேலே என்ற செல்லும் அவா
சூரிய கிரணங்களில் குளிப்பதில் மோகம்
மண்ணை எப்போதும் மறக்காத தன்மை
மௌனம்
மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்.

காந்தியும் ஒரு மகாவிருட்சம்தான். வெட்ட வெட்டத் துளிர்க்கும் விருட்சம். அந்த விருட்சம் முன்னிலும் பிரம்மாண்டமாய்த் தழைக்கும் என்பது அதன் மேல் கோடாரியை வீசி வெட்டிச் சாய்த்தவருக்குத் தெரியாமல் போனது விந்தைதான். அதன் வேர்களின் வீச்சை அவர்கள் உய்த்துணரவில்லை. எந்த அளவு விரிந்து கிளை பரப்பி நின்றதோ அதனினினும் பெரும் பரப்பில் ஆழமாய் வேர் பரவி நின்ற மரம் அது.

மனித மனத்தின் இண்டு இடுக்குகளில்கூட ஊடுறுவி நின்றது அந்த வேர். வேரில் உயிர் இருக்கும்வரை மரமும் தழைக்கும். மானுட அறம் எனும் சிறு துமி ஈரமும் அதற்குப் போதுமானதே.

அம்மரத்தின் கீழ் நின்று சென்ற எவரும் சமூக அநீதிகளைக் கண்டு வாளா இருக்க முடியாது. மனதில் கேள்விகளின் ஊற்றுக் கண்களை அம்மரத்தின் காற்று திறந்துவிடும். பின் நீங்கள் முன்புபோல வாழ்வை எதிர்கொள்வதெவ்வாறு?

சோம்பலின் நிழலோ ஆடம்பரத்தின் கீற்றோகூட உங்களில் படிய அம்மரம் அனுமதிக்காது. காரணம், கூடு கலைந்த தேனீக்களின் கூட்டமாய்க் கேள்விகள் உங்களைச் சுற்றி ரீங்கரிக்கும் போது நீங்கள் விடையளித்துத்தானே ஆகவேண்டும்?

வெறுப்பெனும் நோய்மை உங்களை அண்டவிடாமல் அரவணைக்கும் அம்மரம்.வெறுப்பும் துவேஷமும் தானே மானிடப் பகைகளின் ஆதாரக்கண்ணிகள்.

மனதை விசாலமாக்கி அறிவைத் தெளிவாக்கி மனத்திலே மலர்ச்சி தந்து மானிட வெறுப்பென்னும் நோய்மை நீக்கி குளிர் தருவான மகாவிருட்சம் மகாத்மா காந்தி.

0

பகிர:
சித்ரா பாலசுப்ரமணியன்

சித்ரா பாலசுப்ரமணியன்

காந்திய ஆர்வலர். 'மண்ணில் உப்பானவர்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர். காந்தியின் தீண்டாமை யாத்திரை குறித்தும் காந்தி தொடர்பான பிற செய்திகள் குறித்தும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். வானொலி, பொதிகைத் தொலைக்காட்சியில் பகுதிநேரப் பணியில் உள்ளவர். மேனாள் விரிவுரையாளர். தொடர்புக்கு: chithra.ananya@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *