ஏழாண்டு காலம் நீடிக்கும் அடிப்படைக் கல்வியில் முழு காலகட்டத்துக்குமான கல்வித் திட்டத்தை எங்களுக்குக் கிடைத்த குறுதிய கால அவகாசத்துக்குள் தயாரிக்க முடிந்திருக்கவில்லை. எனினும் புதிதாக உருவாக்க விரும்பும் பள்ளிகள் மற்றும் கல்வித்திட்டம் தொடர்பான இலக்குகளை பல்வேறு பிரிவுகள் சார்ந்து வரையறுத்துவிட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு பிராந்திய கல்வித் துறையிலும் பாடத்திட்டத்தை வரையறுக்க ஒரு நிபுணரை நியமித்தாகவேண்டும். ஏழாண்டுகால அடிப்படைக் கல்வி தொடர்பான முழுமையான பாடத்திட்டத்தை அவர் பொறுப்பில் விட்டுவிடவேண்டும். சிறப்பான வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் கிடைக்கும் அனுபவங்கள், பாடங்களின் அடிப்படையில் தரும் ஆலோசனைகள், தகவல்கள் ஆகியவை பாடத்திட்ட உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமையும். எனினும் நாங்களும் அடிப்படைப் பாடத்திட்டம் தொடர்பாக சில விரிவான வழிகாட்டிக் குறிப்புகளை வழங்குகிறோம்.
ஏழாண்டு கால அடிப்படைக் கல்வியின் முக்கியமான இலக்குகள்
1. அடிப்படையான கைத்தொழில்
பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் வெளி உலகுக்குச் செல்லும் மாணவர்கள் பள்ளியில் தாம் கற்றுக் கொண்ட கைத்தொழிலை அடிப்படையாக வைத்துத் தன் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள முடியும் வகையில் அந்தக் தொழிலில் சிறப்பான பயிற்சி தரப்பட்டிருக்கவேண்டும்.
பள்ளிகளில் கீழ்க்கண்ட கைத் தொழில்களைக் கற்றுத் தரலாம்.
- நூற்பு, நெசவு
- தச்சு வேலை
- விவசாயம்
- காய், கனிகள் வளர்ப்பு
- தோல் தொழில்
- உள்ளூர், பூகோள சூழ்நிலைகளுக்கு ஏற்ற மற்றும் முன்பு சொல்லப்பட்டிருக்கும் கல்வி சார்ந்த இலக்குகளைப் பூர்த்திசெய்யக்கூடிய பிற எந்தவொரு கைத் தொழிலும்.
நூற்பு, நெசவு அல்லது விவசாயம் சாராத கைத்தொழிலை அடிப்படையாகக் கொள்ளும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ராட்டை-தக்ளி நூற்பதிலும் உள்ளூரில் நடக்கும் விவசாயப் பணிகளிலும் அடிப்படைத் திறமையும் அறிவும் பெற்றிருக்க வழிசெய்யவேண்டும்.
2. தாய் மொழிக் கல்வி
அனைத்துவகையான கல்விகளின் அடிப்படை முறையான தாய் மொழிக் கல்வியே. தெளிவாகப் பேசவும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொள்ளாதவரையில் தெளிவாக சிந்திக்க யாராலும் முடியாது. தாய் மொழிக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு அவர்களுடைய முன்னோர்களின் பாரம்பரியமான சிந்தனைகள், உணர்வுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைக் கற்றுத் தரமுடியும். குழந்தைகள் மனதில் தார்மிக, ஒழுக்கவியல் மதிப்பீடுகளை சமூகக் கல்வி என்ற வகையில் பதியவைக்கவும் முடியும். குழந்தைகளின் ரசனை, படைப்பூக்கம், பாராட்டுணர்வு ஆகியவற்றை எளிதில் வெளிப்படுத்த தாய் மொழியே மிகவும் எளிய இயல்பான வழி. முறையான இலக்கியக் கல்வி தரப்பட்டால், மகிழ்ச்சியும் கலை ரசனையும் மேம்படும்.
ஏழாண்டு கால முடிவில் தாய் மொழிக் கல்வி தொடர்பாக கீழ்க்கண்ட இலக்குகளை அடைந்திருக்கவேண்டும்.
- பொருட்கள், நபர்கள், குழந்தைகள் வாழும் பகுதியில் நடக்கும் விஷயங்கள் ஆகியவை பற்றிச் சரளமாக, இயல்பாக, தன்னம்பிக்கையுடன் குழந்தைகள் பேச முடியவேண்டும்.
- அன்றாடத் தேவைகள் சார்ந்த விஷயங்களில் எந்தவொன்றைப் பற்றியும் சரளமாகவும் கோர்வையாகவும், பொருத்தமாகவும் பேச முடியவேண்டும்.
- ஓரளவுக்குக் கடினமாக எழுதப்பட்ட பத்திகளைப் பிழைகளின்றி, வேகமாக வாசிக்க முடியவேண்டும். அன்றாடச் செய்தித் தாள்களை, பத்திரிகைகளை வாசிக்க முடியும் அளவுக்கு இதில் பயிற்சி தரப்படவேண்டும்.
- உரைநடைகள், கவிதைகள் ஆகியவற்றை உரத்த குரலில் தெளிவாக, முறையான ஏற்ற இறக்கங்களுடன் உணர்வுபூர்வமாக, உற்சாகமாகப் படிக்க முடியவேண்டும். வழக்கமாக, உயிர்த்துடிப்பில்லாமல், மந்தமாக எந்திர கதியில் வாசிப்பது கூடாது.
- உள்ளடக்கம், பட்டியல் உருவாக்கம் ஆகியவற்றைத் தயாரிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியவேண்டும். அகராதிகளையும் குறிப்புதவி நூல்களையும் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும். தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் உற்சாகமாகக் கற்றுக் கொள்ளவும் நூலகங்களைப் பயன்படுத்தத்தெரிந்திருக்கவேண்டும்.
- பிழைகளின்றி, தெளிவாக, கணிசமான வேகத்தில் எழுதும் திறமை கைவரப்பெற்றிருக்கவேண்டும்.
- அன்றாட நிகழ்வுகள், கூட்டங்கள் தொடர்பாக எளிய மொழியில் தெளிவாக எழுதத் தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக கூட்டுறவு நோக்கில் உள்ளூரில் நடைபெற்ற கூட்டங்கள் தொடர்பாக அறிக்கை தயாரிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.
- தனிப்பட்ட கடிதங்கள், அலுவல் பூர்வமான கடிதங்கள், வணிகத் தொடர்புகள் சார்ந்த கடிதங்கள் ஆகியவற்றை எழுதத் தெரிந்திருக்கவேண்டும்.
- 9. சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் அல்லது அவற்றில் சில பகுதிகளுடன் பரிச்சயம் ஏற்பட்டிருக்கவேண்டும். சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கவேண்டும்.
3. கணிதம்
எந்தக் கைத்தொழிலின் அடிப்படையில் கல்வி கற்றுத் தரப்படவிருக்கிறதோ அந்தத் தொழில் தொடர்பான கணக்குகள், வீடு மற்றும் சமூகத் தேவைகள் தொடர்பான அடிப்படைக் கணக்குகள், வடிவ இயல் தொடர்பான கணக்குகள் ஆகியவற்றை மாணவர்களுக்குக் கற்றுத் தரவேண்டும் என்பதே இதன் இலக்கு. வணிகம் தொடர்பான கணக்கு வழக்குகள், வரவு செலவு கணக்குப் புத்தகம் எழுதுதல் ஆகியவை பற்றிய அடிப்படை அறிவும் கிடைத்தாகவேண்டும்.
இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால் கீழ்க்கண்ட அடிப்படை விஷயங்களில் நல்ல பரிச்சயம் கிடைத்தாகவேண்டும்.
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் விதிகள், பின்னங்கள், தசமங்கள், குறுக்குப் பெருக்கலுக்கான சுருக்கு முறை (மூன்றின் விதி), ஒற்றை அலகுக் கணக்கீடு, வட்டிக் கணக்கீடு, நீளம்-அகலம்-உயரம் அளவீடு, நடைமுறை வடிவ இயல், வரவு செலவுக் கணக்கீடுகள் ஆகியவற்றில் நல்ல பரிச்சயம் கிடைக்கவேண்டும்.
வெறுமனே எண்கள் மற்றும் வழிமுறைகள் மட்டுமே கற்றுத் தரப்பட்டால் போதாது. கைத் தொழில், அன்றாடத் தேவைகள் ஆகியவற்றுடன் அவை தொடர்புபடுத்தப்பட்டுப் புரிந்துகொள்ளப்படவேண்டும். எண்ணல் அளவு, முகத்தல் அளவு, பிறவகை கணக்குகள் எல்லாம் மாணவர்களின் தர்க்க ரீதியான சிந்தனை வளர்வதற்கு வழிவகுக்கும்
4. சமூகவியல் பாடங்கள்
இதன் இலக்குகள்:
- மனித இனத்தின் முன்னேற்றம், குறிப்பாக இந்தியாவின் நன்மை தொடர்பான அக்கறை இளம் வயதிலேயே மாணவர்களுக்கு ஏற்படவேண்டும்.
- சமூக, பூகோள சுற்றுச்சூழல் பற்றி மாணவர்களுக்கு நல்ல புரிதல் ஏற்படவேண்டும். அவற்றை மேம்படுத்தும் ஆர்வம் மாணவர்கள் மனதில் உருவாகவேண்டும்.
- தாய் நாட்டுப் பற்று, கடந்த காலம் தொடர்பான பெருமித உணர்வு, எதிர்கால வளமான வாழ்க்கை தொடர்பான நம்பிக்கை மாணவர்கள் மனதில் உருவாகவேண்டும். பரஸ்பர அன்பு, சத்தியம், நீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட கூட்டுறவும் ஒற்றுமையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முன்வரவேண்டும்.
- குடிமகன்களின் உரிமைகள், பொறுப்புகள் பற்றி நல்ல புரிதல் ஏற்படவேண்டும்.
- தனி நபர் சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த நற்குணங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுத்து சக குடிமகன்களுடன் நம்பகமான கூட்டுறவு மனப்பான்மை கொண்டவராக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
- உலகில் இருக்கும் அனைத்து மதங்கள் மீதும் அனைவரும் மரியாதை கொண்டு நடந்துகொள்ளவேண்டும்.
வரலாறு, புவியியல், சம கால நிகழ்வுகள், குடிமையியல் தொடர்பான பாடங்களுடன் உலக மதங்கள் அனைத்தும் ஆதார உண்மைகளில் எப்படி ஒத்திசைவுடன் இருக்கின்றன என்ற அடிப்படையிலான பாடமும் கற்றுத் தரப்படவேண்டும். மாணவர்களின் சுற்றுச் சூழல், அதில் இருக்கும் பிரச்னைகள் என்பதில் இருந்து இந்தக் கல்வி ஆரம்பிக்கவேண்டும். மனிதர்கள் தத்தமது தேவைகள், ஆசைகள் ஆகியவற்றை எப்படியெல்லாம் பூர்த்தி செய்துகொள்ளவேண்டும்; என்னென்ன மதிப்பீடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பவற்றைக் கற்றுத் தரவேண்டும். ஆண்கள், பெண்கள் என சுற்றி வாழும் சமூகத்தினரின் வாழ்க்கை, தொழில் பற்றி மாணவர்களுக்குத் தெளிவான புரிதல் உருவாக்கப்படவேண்டும்.
1. இந்திய வரலாறு தொடர்பான எளிய, சுருக்கமான அறிமுகம் தரப்படவேண்டும். மனித குலத்தின் சமூக, கலாசார சாதனைகள் வரிசைக்கிரமமாக எடுத்துரைக்கப்படவேண்டும். மனித இனம் படிப்படியாக கலாசார, அரசியல் ஒற்றுமை நோக்கி நகர்ந்து செல்வதைக் கோடிட்டுக் காட்டவேண்டும். அன்பு, சத்தியம், நீதி, தேச ஒற்றுமை, கூட்டுறவு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும். ஆரம்ப நிலையில் இந்த பாடங்கள் எல்லாம் வாழ்க்கை வரலாறு, கதை வடிவில் இருக்கவேண்டும். மேல் நிலையில் கலாசார, சமூக அம்சங்கள் மிகுந்ததாக இருக்கவேண்டும். கடந்தகாலப் பெருமிதம் என்பது அதீத தேசியப்பற்றாகவும் ஆணவமாகவும் மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மனிதகுலத்தின் மாபெரும் விடுதலைப் போராளிகள், அமைதி வழியிலான அவர்களின் வெற்றி ஆகியவை கற்றுத் தரப்படவேண்டும். சத்தியம், அஹிம்சை ஆகியவற்றின் வெற்றி, உன்னத அம்சங்கள் கற்றுத் தரப்படவேண்டும். ஹிம்சை, ஏமாற்று, ஏய்ப்பு ஆகியவற்றைவிட மேலான நற்குணங்களை வாழ்வின் அனைத்து தளங்களிலும் முன்னிறுத்தவேண்டும். நம் தேசத்தில் தேசிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது. சமூக, அரசியல், மற்றும் பொருளாதாரச் சுதந்தரத்துக்கான போராட்டங்களும் கூடவே நடந்துவருகின்றன. மாணவச் செல்வங்கள் தேசத்தின் இந்த மகத்தான திருப்புமுனைத் தருணத்தில் தம்மளவிலான தியாகங்கள், பங்களிப்புகளை உற்சாகத்துடன் செய்ய முன்வரவேண்டும். தேசியத் திருவிழாக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படவேண்டும். தேசிய வாரம் ஒவ்வொரு பள்ளியிலும் கொண்டாடப்படவேண்டும்.
2. அரசுத் துறைகள், பஞ்சாயத்துகளின் செயல்பாடுகள், கூட்டுறவு இயக்கங்களின் செயல்பாடுகள், பொதுப் பணித்துறைப் பணியாளர்களின் கடமைகள், மாவட்ட அல்லது நகராட்சி நிர்வாக முறைகள் இவை பற்றியெல்லாம் மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும். வாக்குகளின் முக்கியத்துவம், பயன்பாடு பற்றி நன்கு புரிந்துகொள்ளவேண்டும். பிரதிநிதித்துவ சமூக நிறுவனங்கள், அமைப்புகளின் வளர்ச்சி, முக்கியத்துவம் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயங்கள் தொடர்பான பயிற்சிகள் யதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானதாக, நடைமுறை சார்ந்ததாக இருக்கவேண்டும். பள்ளிகளில் சுய நிர்ணய அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும். பள்ளிகளில் குழுக்கள் அமைத்து செய்தித் தாள்கள் வாங்கி அனைவரும் சேர்ந்து அன்றன்றைய உலக, நாட்டு நிகழ்வுகள் பற்றி வாசித்து, அறிவு பூர்வமாகக் கலந்துரையாடவேண்டும்.
3. சமூகவியல் பாடத்தில் உலக பூகோளவியல் தொடர்பாக சுருக்கமான அறிமுகம் இருக்கவேண்டும். நம் தேச நிலவியல் முழுமையாகவும் பிற நாடுகளுடனான தொடர்புகள் விரிவாகவும் இருக்கவேண்டும்.
(அ) நம் நாட்டிலும் உலகில் பிற பகுதிகளிலும் இருக்கும் தாவர வகைகள், விலங்கு வகைகள், மனித உயிர் வாழ்க்கை முதலியவையெல்லாம் பூகோள அமைப்பின் மூலம் எப்படியெல்லாம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதைக் கற்றுத் தரவேண்டும். கதைகள், விளக்கப் படங்கள், படக் கதைகள், நேரடிப் பயிற்சிகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் வாயிலாக இந்தக் கல்வி கற்றுத் தரப்படவேண்டும். இவையெல்லாம் உள்ளூர் பூகோளச் சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுக் கற்றுத் தரப்படவேண்டும்.
(ஆ) தட்பவெப்பநிலை பற்றிய பாடங்கள். சூரியன் தொடர்பான நேரடி ஆய்வுகள். சம பகலிரவு நாள், இரவு கூடுதலாக இருக்கும் காலம், பகல் நேரம் அதிகமாக இருக்கும் காலம், சூரிய கடிகாரம், காற்று அளவிகள், தட்ப வெப்ப மானி, மழை அளவிகள், ஒரு நாளொன்றில் காற்று வீசும் திசைகள், வேகங்கள், ஒவ்வொரு மாதத்திலும் காற்று வீசும் விதம் இவை பெற்றியெல்லாம் கற்றுத் தரவேண்டும்.
(இ) வரைபட உருவாக்கம், வரைபட ஆராய்ச்சிகள் : உலக உருண்டை வரைபடம், உள்ளூர் நிலவியல் வரைபடம், சுற்றுப்புறங்கள் குறித்த வரைபடங்கள், உலக வரைபடங்கள் மற்றும் அவற்றின் முழு விவரங்கள், குறியீடுகள் இவற்றையெல்லாம் கற்றுத் தரவேண்டும்.
(ஈ), போக்குவரத்துகள், தொலை தொடர்புகள் எல்லாம் வாழ்க்கை மற்றும் தொழில் துறைகளுடன் கொண்டிருக்கும் தொடர்புகளின் அடிப்படையில் கற்றுத் தரப்படவேண்டும்.
(எ) உள்ளூர் விவசாயம், தொழிற்சாலைகள் என அனைத்து தொழில்கள் பற்றியும் கற்றுத் தரவேண்டும். வயல்வெளிகள், தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்றும் கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு பிராந்தியங்களின் பொருளாதாரத் தன்னிறைவு, பரஸ்பர சார்பு நிலை பற்றியும் கற்றுத் தரவேண்டும். பூகோளச் சூழ்நிலைகள் என்னென்னவிதமான பயிர்கள், தொழில் துறைகள் வளர உதவுகின்றன என்பவை பற்றியும் நம் தேசத்தில் இருக்கும் பிரதான தொழில் துறைகள், நிறுவனங்கள் பற்றியும் கற்றுத் தரவேண்டும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.