5. பொது அறிவியல்
இதன் இலக்குகள்:
(அ) இயற்கை தொடர்பான அறிவார்ந்த, ரசனை சார்ந்த பார்வையைப் பெறுதல்.
(ஆ) கூர்மையான பார்வை, எதையும் பரிசோதனை மூலம் சோதித்துப் புரிந்துகொள்ளுதல்.
(இ) சுற்றுப்புறங்களில் விஞ்ஞான கோட்பாடுகள் வெளிப்பட்டிருக்கும்விதம், மனித குல நன்மைக்கு விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் திறமையை வளர்த்தல்.
(ஈ) மாபெரும் விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், மனித குல நன்மைக்காக அவர்கள் செய்த தியாகங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பது இளம் மனங்களில் மிகுந்த உத்வேகத்தை உருவாக்கும்.
(எ) விஞ்ஞானப் பாடங்களில் கீழ்க்கண்டவை கட்டாயம் இருக்கவேண்டும்:
இயற்கை அறிவியல்
(அ) தாவரங்கள், பயிர்கள்,விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய அறிவு
(ஆ) பருவ நிலை மாற்றங்கள், பயிர்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் மேல் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள்
(இ) பல்வேறு பருவங்களில் வளரும் பயிர்கள் பற்றிய கல்வி
தாவரவியல்
(அ) தாவரங்களின் பல்வேறு பாகங்கள், செயல்பாடுகள்
(ஆ) பயிர் முளைத்தல், வளர்ச்சி, விதை பரவல்
(இ) பள்ளித்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருக்கும் வயல்கள் ஆகிய இடங்களில் தட்பவெப்பம், ஒளி, காற்றோட்டம் பற்றியும் விதைகளின் தன்மைகள், இயற்கை உரங்களின் வகைகள் பற்றியும் தெரிந்துகொள்ளுதல்.
விலங்கியல்
மனிதர்களுக்கு நன்மை மற்றும் தீமை தரும் கிருமிகள், பூச்சிகள், ஊர்வன, பறவைகள் பற்றிய ஆய்வுகள்
உடல் கூறியல்
மனித உடல், உறுப்புகள், அவற்றில் செயல்பாடுகள் பற்றிய கல்வி
சுகாதாரம்
(அ) தனிப்பட்ட சுகாதாரம், பற்கள் நாக்கு, நகங்கள், கண்கள், தலை முடி, மூக்கு, தோல் உடைகள் ஆகியவற்றின் தூய்மையைப் பராமரித்தல்.
(ஆ) வீட்டிலும் கிராமத்திலும் தூய்மை, சுகாதாரம், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துதல், திறந்த வெளிகளில் மலம் கழிக்காதிருத்தல்
(இ) தூய்மையான குடிநீர், கிராமக் கிணறுகள்
(ஈ) தூய்மையான காற்று, மரங்கள் காற்றை சுத்தப்படுத்தும் விதம், முறையான சுவாசம்
(உ) உணவு, சுகாதாரம், அசுத்தம், சமச்சீர் உணவு
(ஊ) முதலுவிப் பாடம், எளிய சிகிச்சைகள்
(எ) பொதுவான தொற்று நோய்கள், அவற்றில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது தொடர்பான பாடங்கள்
(ஏ) உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் நன்னடத்தை
உடற்பயிற்சி
விளையாட்டுகள், ஓடுதல், பாரம்பரிய விளையாட்டுகள்
வேதியல்
காற்று, நீர், அமிலங்கள், காரங்கள், உப்புகள் பற்றிய பாடங்கள்
நட்சத்திரவியல்
இரவு நேரங்களில் வழிகாட்டும் நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள்
கதைகள்
மாபெரும் விஞ்ஞானிகள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் மனித குல நன்மைக்குச் செய்த பங்களிப்புகள்
6. ஓவியக் கல்வி
அ) வடிவங்கள், நிறங்கள் தொடர்பான கூர்மையான அவதானிப்பை உருவாக்குதல்.
ஆ) உருவங்கள், வடிவங்கள் தொடர்பான நினைவாற்றலை, கற்பனை உணர்வை வளர்த்தெடுத்தல்.
இ) இயற்கையிலும் கலைகளிலும் பாராட்டுணர்வு மற்றும் ரசனை உணர்வை அதிகரித்தல், அவை தொடர்பான ஞானத்தை அதிகரித்தல்.
ஈ) நுட்பமான, ரசனை மிகுந்த வகையில் வரையும் திறமையை வளர்த்தெடுத்தல்.
உ) கைத்தொழில் தொடர்பான ஓவியங்களிலும் நல்ல பயிற்சி பெறுதல்.
இவற்றை அடையக் கீழ்க்கண்ட வழிகளை முன்னெடுக்கவேண்டும்.
(அ) மாணவர்கள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வழி செய்தல்.
ஆ) தாவரங்கள், விலங்குகள், மனித உருவங்கள் தொடர்பான ஓவியங்கள். பொது விஞ்ஞானம், கைத்தொழில் ஆகியவற்றுடன் இவற்றைத் தொடர்புபடுத்திக் கற்றுத் தரவேண்டும்.
இ) வடிவமைப்பு.
ஈ) கட்டட வரைபடங்கள், படங்கள் மூலமான கிராஃப்கள்.
ஓவியப் படிப்பில் முதல் நான்கு ஆண்டுகளுக்கு வகுப்புப் பாடங்கள், தொழில் கல்வி, இயற்கை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி ஓவியங்கள் கற்றுத் தரப்படவேண்டும். கடைசி மூன்று வருடங்களில் வடிவமைப்பு, அலங்கார நுட்பங்கள், எந்திரவியல் ஓவியங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
7. இசை
இனிமையான பாடல்கள் பலவற்றைக் கற்றுத் தரவேண்டும். மென்மையான இசை தொடர்பான ஆர்வத்தை வளர்த்தெடுக்கவேண்டும். தாள கதி தொடர்பான கல்வியைப் பெற குழந்தைகளைக் கைகளால் தாளம் போட்டுப் படிக்கக் கற்றுத் தரவேண்டும்.
தலைசிறந்த மற்றும் உத்வேகமூட்டும் பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்றுத் தரவேண்டும். இசை தொடர்பான கலாபூர்வமான விளக்கங்கள், உயரிய கருப்பொருளை மையமாகக் கொண்ட இசை ஆகியவற்றையும் கற்றுத் தரலாம். கூட்டிசைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும்.
8. ஹிந்துஸ்தானி மொழி
ஹிந்துஸ்தானி மொழியை இந்தக் கல்வித் திட்டத்தில் கட்டாயப் படிப்பாக முன்வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்த தேசியப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேசத்தின் பொது மொழி ஒன்றுடன் நல்ல பரிச்சயம் கிடைக்க அது பெரிதும் உதவும். தேசத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுடனும் நன்கு பேசிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடியவேண்டும். இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலாசார பரிமாற்றங்களின் மிக முக்கியமான விளைவாக இந்த மொழியே இருக்கிறது என்பதை இந்த மொழியைக் கற்றுத் தரும் ஆசிரியர் மாணவர்களுக்கு விரைவில் அழுத்தமாகப் புரியவைக்கவேண்டும். இரு தரப்பினரின் சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்த மொழியில்தான் சேகரமாகியிருக்கின்றன. அந்த மொழியின் வளம், உயிர்த்துடிப்பு குறித்து அவர்கள் பெருமிதம் கொள்ளவேண்டும். மிகுந்த பற்றுடன் அம் மொழியின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவேண்டும்.
ஹிந்துஸ்தானி மொழி பேசப்படும் பகுதிகளில் இது அவர்களின் தாய் மொழியாக இருக்கும். எனினும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஹிந்தியிலும் உருது மொழியிலும் எழுதப்பட்டவற்றைப் படிக்க முடியும் அளவுக்குப் பயிற்சி பெறவேண்டும். ஹிந்துஸ்தானி பேசப்படாத பகுதிகளில் அந்த மக்களின் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்கும். ஐந்து, ஆறாம் வருடங்களில் ஹிந்துஸ்தானியை அவர்கள் கட்டாய மொழிப் பாடமாகப் படித்தாகவேண்டும். ஹிந்தி அல்லது உருது ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இரண்டிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்கவேண்டும். என்ன ஆனாலும், எந்தவொரு அரசுப் பள்ளியாக இருந்தாலும் இரு மொழிகளையும் கற்றுத்தர முடிவதாக இருக்கவேண்டும்.
ஐந்தாம் வகுப்புவரை ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பாடத்திட்டம் ஒன்றாகவே இருக்கவேண்டும். நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் பொது அறிவியல் பாடப் பிரிவில் மனையியல் தொடர்பான பாடங்கள் பெண்களுக்குக் கற்றுத் தரப்படவேண்டும். அடிப்படைக் கைத் தொழில் கல்விக்குப் பதிலாக ஆறாம், ஏழாம் வகுப்பில் பெண் குழந்தைகள் மனையியல் படிப்பில் அடுத்தகட்ட உயர் நிலைக் கல்வியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு தரப்படவேண்டும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.