Skip to content
Home » காந்தியக் கல்வி #9 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 3

காந்தியக் கல்வி #9 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 3

இந்தப் புதிய தொழில் வழிக் கல்வித்திட்டத்துக்கு மிகப் பெரிய அளவிலான நிர்வாகப் பணிகள் தேவைப்படும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் கல்வித் துறை, இந்தத் திட்டத்தை படிப்படியாக எப்படி அமல்படுத்துவது என்பது தொடர்பாக தாமே யோசித்து முடிவெடுத்துக்கொள்ளவேண்டும். இந்த மாபெரும் பொறுப்பை நாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இருந்தும் சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறோம். நம் தேசத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான பல்வேறு வழிமுறைகளை வகுக்க இது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

முதலாவதாக, உடனடியாகச் செய்யவேண்டியதாக நாங்கள் நினைக்கும் விஷயம், குறிப்பிட்ட கிராமப்பகுதிகளில் போதிய ஆசிரியர் பயிற்சி மையங்களை ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் குறைந்தது ஓரிரு மையங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். கைவினைத் தொழில் மற்றும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலமாகக் கற்றுத்தருவது எப்படி என்பதையும் புதிய ஆரம்பப்பள்ளிகளில் எப்படிக் கற்றுத் தரவேண்டும் என்பதையும் ஆசிரியர்கள் இந்த மையங்களில் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு பிராந்தியத்தில் எத்தனை ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரவேண்டும்? எத்தனை அடிப்படைப் பள்ளிகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதெல்லாம் அந்த பிராந்தியத்தின் பரப்பளவு, மக்கள் தொகையைப் பொறுத்து தீர்மானிக்கப்படவேண்டும். பெரிய பிராந்தியமாக உதாரணத்துக்கு ஒரு மாவட்ட அளவில் என்ன தேவை என்று தீர்மானிக்கவேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்தில் இருக்கும் எத்தனை பள்ளிகளில் இந்தப் புதிய தொழில்வழிக் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது என்றும் எத்தனை புதிய பள்ளிகள் இதுபோல் ஆரம்பிக்கப்படவேண்டும்; எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்பதையும் கல்வித்துறையானது ஆய்வு செய்து தீர்மானிக்கவேண்டும்.

ஏற்கெனவே இருக்கும் பயிற்சி மையங்கள் மற்றும் புதியதாகச் சில மையங்கள் திறந்து தேவையான ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க உடனே ஆரம்பிக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தேவையான அளவு ஆரம்பப் பள்ளிகளை ஐந்து ஆண்டுகளுக்குள் ஆரம்பித்துவிடவேண்டும். அதற்குள், ஒரு பிராந்தியத்தில் இருக்கும் பயிற்சி மையங்கள் அனைத்தையும் இந்தப் புதிய தொழில் வழிக் கல்விக்கான பயிற்சி மையங்களாக மாற்றிவிடவேண்டும். அப்போதுதான், புதிய ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தல் மற்றும் ஏற்கெனவே இருப்பவற்றை மாற்றுதல் ஆகிய பணிகளை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கிடைக்கும் வேகத்துக்கு ஏற்ப வேகமாகச் செய்துமுடிக்கமுடியும்.

முதல் சில ஆண்டுகளுக்கு ஒரு வருடப் பயிற்சி மையங்களும் மூன்று வருடப் பயிற்சி மையங்களும் ஆரம்பிக்கவேண்டும். ஏற்கெனவே ஆசிரியராக இருப்பவர்களில் விசேஷமாகத் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருடப் பயிற்சி கொடுத்தாலே போதுமானதாக இருக்கும். அப்போதுதான் அவர்கள் ஒரு வருடம் கழித்துப் புதிய பள்ளிகளில் உடனே தமது புதிய தொழில் வழிக் கல்வியை ஆரம்பிக்க உதவியாக இருக்கும். இவற்றோடு கூடவே, மூன்று ஆண்டுப் பயிற்சி மையங்களையும் ஆரம்பித்து இன்னொரு குழு ஆசிரியர்களுக்கு அந்தப் பயிற்சியைத் தந்துவரவேண்டும்.

இப்போது ஆசிரியர்களாக இருப்பவர்களில் ஒரு ஆண்டு பயிற்சிக்குப் போகமுடியாமல் இருப்பவர்களுக்கு விசேஷமான புத்தாக்கப் பயிற்சி வழங்கி புதிய தொழில்வழிக் கல்வியின் கொள்கைகள், வழிமுறைகளைப் புரிந்துகொள்ளவைக்கவேண்டும். கல்வித் துறையில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தப் பயிற்சியைப் பெற்றுவிட திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தவேண்டும்.

இந்த ஆசிரியர் பயிற்சி மையங்களை கிராமப்புறங்களில் அமைப்பது மிகவும் அவசியம். அவர்கள் பின்னாளில் ஆசிரியராக இருக்கப் போகிற அந்த கிராமப்புறங்கள் தொடர்பான பரிச்சயமும் அனுபவமும் அவர்களுக்கு அப்போதுதான் எளிதில் கிடைக்கும். நகரப்புறங்களில் அவர்கள் அந்தப் பயிற்சியைப் பெற்றால் கிராமப்புறத்துடனான தொடர்பு கிடைக்காமலும் அங்கு பின்னர் பணிபுரியத்தேவையான மனநிலை, குணங்கள் கிடைக்காமலும் போய்விடும்.

முதல் குழு ஆசிரியர்கள் பயிற்சி பெற்று முடித்ததும் தேர்ந்தெடுக்கப்படும் பகுதியில் முடிந்த அளவுக்கு, புதிய கைத்தொழில் வழிக் கல்விக்கான பள்ளிகளை ஆரம்பிக்கவேண்டும். அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பள்ளிகள் எல்லாமே இந்தப் புதிய கல்விக்கு மாறியிருக்கவேண்டும். ஒரே பிராந்தியத்தில் பழையவகை பள்ளிகளும் புதிய கைத் தொழில் வழிக் கல்விப் பள்ளிகளும் இருப்பது நல்லதல்ல. ஏற்கெனவே சில பள்ளிகள் இருக்கும் இடங்களையும் எங்கெல்லாம் பள்ளிகள் மிகவும் அவசியமோ அவற்றையும் தேர்ந்தெடுப்பது நல்லது.

இரண்டாவதாக, இப்படி ஆரம்பிக்கப்படும் பயிற்சி மையங்கள் சார்பில் ஒரு முன் மாதிரிப் பள்ளியை எங்கள் அறிக்கையில் வரையறுத்திருக்கும் பாடத்திட்டங்கள், வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்த ஆரம்பிக்கவேண்டும். ஆசிரியர் பயிற்சி மையங்களைப் போலவே இந்த முன் மாதிரி பள்ளியிலும் இந்தப் புதிய கல்வித் திட்டத்தைப் படிப்படியாக அமல்படுத்தும் திறமையும் நிபுணத்துவமும் மிகுந்த ஆசிரியர்களைப் போதிய அளவுக்கு நியமித்துவிடவேண்டும். இந்தப் பள்ளிகள் இந்தப் பகுதியில் பின்னர் ஆரம்பிக்கப்படவிருக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டியாக இருந்து உத்வேகமாகமூட்டவேண்டும்.

ஒவ்வொரு பிராந்தியமும் தமது கல்வித்தேவைகள் என்ன என்பது தொடர்பான ஆய்வு செய்து தேவையான செயல் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளவேண்டும். எத்தனை மாணவர்களுக்குக் கல்வி தரவேண்டும்? அதற்கு எத்தனை பள்ளிகள், எத்தனை ஆசிரியர்கள் தேவை? எத்தனை ஆசிரியர் பயிற்சி மையங்கள் தேவை? ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆசிரியர்கள் பயிற்சி பெற்று முடிக்கவேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்க உதவும் வகையில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

நிர்வாகக் கோணத்தில், இந்த புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்த ஒரு நேரச் செலவாக எவ்வளவு தொகை தேவைப்படும்? அவ்வப்போது ஏற்படும் தேவைகளுக்கு என்ன செலவாகும்? பள்ளிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படவிருக்கும் பொருட்களை விற்று வருவாய் ஈட்டுவது எப்படி? இவை குறித்தெல்லாம் தீர்மானம் எடுக்க உதவும் வகையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இவையெல்லாம் முக்கியமான, நடைமுறை சார்ந்து உடனே தீர்வு காணவேண்டிய மிகப் பெரிய பிரச்னைகள். இவற்றின் பிரமாண்டத்தைப் பார்த்து தீர்வுகள் சாத்தியமே இல்லை என்று பயந்து ஒதுங்கிவிடக்கூடாது.

இந்தப் புதிய கல்வித்திட்டத்துக்கு நிறைய பணம் தேவைப்படும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் 20-25 வருடங்களுக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய, இலவசக்கல்வி கிடைத்தாகவேண்டும் என்று ஒவ்வொரு பிராந்திய அரசாங்கமும் முடிவு செய்து களம் இறங்கியாகவேண்டும். இதற்கென 20 ஆண்டுத் திட்டம் போல் ஒன்றை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அனைவருக்கும் அடிப்படைக் கல்வியைக் கொடுத்து கல்லாமையை இல்லாமல் ஆக்கவேண்டும். இந்தத் திட்டத்துடன் கூடவே நாட்டில் முதியோர் கல்வியையும் பல்வேறு தனியார் அமைப்புகளின் உதவியுடன் முன்னெடுக்கவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை வைத்து அவற்றை நடத்தலாம். 100 சதவிகித கல்வியறிவு என்ற இலக்கை மிக விரைவிலேயே நம் தேசம் எட்டியாகவேண்டும்.

தேசிய கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிராந்திய அரசுகள் எல்லாம் எங்கள் ஆய்வறிக்கையின் படி அமையவிருக்கும் அனைத்து இந்தியக் கல்வி மையத்தின் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திகொள்ளவேண்டும். ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் பாடத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் புதிய பள்ளிக்குத் தேவையான புத்தகங்களைத் தயாரித்தல் ஆகியவற்றில் இந்த தலைமை மையம் உதவிகள் செய்யும். அந்த அமைப்பிடம் கொண்டு செல்லப்படும் கல்வி தொடர்பான பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் வழங்கும். கல்வி தொடர்பான தரவுகள் பெறுவதற்கான மைய அமைப்பாகவும் செயல்படும். இந்த அமைப்பு தன் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றத் தேவைப்படும் உதவிகள் மற்றும் வசதி வாய்ப்புகளை பிராந்திய அரசு செய்து தரவேண்டும்.

நம் தேசத்தில் ஏராளமான அதிகாரபூர்வமற்ற நிறுவனங்கள், அமைப்புகள் இருக்கின்றன. தேசிய கல்வி அமைப்புகள், அனைத்திந்திய நெசவாளர்கள் மற்றும் கிராமத்தொழில் அமைப்புகள் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன. அவை இந்தப் புதிய கல்வித் திட்டத்தை நல்ல முறையில் நடைமுறைப்படுத்தப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த அமைப்புகளும் கல்வித் துறையும் கை கோர்த்தபடி கூட்டுறவுடன் பணிபுரிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

தேசியக் கல்வி தொடர்பாக இந்தத் திட்டம் மூலம் உருவாக்கும் உத்வேகத்தினால் பல தன்னார்வ அமைப்புகள், பணியாளர்கள் எல்லாம் ஆசிரியர் பயிற்சி மையங்கள் அமைக்கவும் ஆரம்பப் பள்ளிகள் தொடங்கவும் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பிராந்திய அரசுகள் அப்படியான தன்னார்வ அமைப்புகளுக்கு ஆலோசனையும் நிதி உதவியும் தந்து உற்சாகப்படுத்தவேண்டும்.

எங்களுக்கு ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள். பல்வேறு பாடப் பிரிவுகள் தொடர்பான பாடத்திட்டங்களை வரையறுத்துத் தந்திருகிறார்கள். அடிப்படைக் கல்விக்கான பாடத்திட்டத்தை உருவாக்கும்போது அவற்றை நாங்கள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வோம். சில கல்வி நிறுவனங்கள், தனி நபர்கள் வார்தா கல்வி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்கெனவே பள்ளிகளை நடத்திவருவதாகவும் செய்திகள் அனுப்பியிருக்கிறார்கள். அது குறித்து எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறாம்.

கீழ்க்காணும் நபர்களுக்கு விசேஷ நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறோம். அவர்கள் தயாரித்துத் தந்திருக்கும் பல்வேறு பாடத் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

திரு. டி.ஆர்.மஹாரிகர், விவசாயத்துறை துணை இயக்குநர், மத்திய பிராவின்ஸ்
திரு எஸ்.ஆர்.பிசே, ஹக்கிம்ஜி உயர் நிலைப் பள்ளி போர்டி, விவசாயத்துக்கான பாடத்திட்டம்
திரு லக்ஷ்மீஷ்வர் சின்ஹா, விஷ்வ பாரதி (ஸ்ரீ நிகேதன்) பலகை, தச்சுவேலை, உலோக வேலை ஆகியவற்றுக்கான பாடத்திட்டம்,
திரு ராமநாராயணன் மிஷ்ரா, எடிட்டர், போகுல் (அலஹாபாத்), புவியியல் பாடத்திட்டம்
திரு தாஜ்மஹல் ஹுசேன் (அலிகர், பயிற்சிக் கல்லூரி) கணிதப் பாடத்திட்டம், அலிகரில் கடைசியாக நடந்த கூட்டத்தில் மிகுந்த உதவிகரமாகச் செயல்பட்டார்.
திரு டபிள்யு.ஹெச்.சித்திக், திரு பி.ஹெச்.ஸூப்ரி (அலிகர், பயிற்சிப் பள்ளி) பொது அறிவியல் தொடர்பான பாடத்திட்டம்.
திரு அப்துல் கஃபார் திரு ஹெச்.ரஹ்மான் (அலிகர், பயிற்சிப் பள்ளி) சமூகவியல் பாடத்திட்டம்.
திரு நந்த லால் போஸ் (விசார் பாரதி, சாந்தி நிகேதன்) ஓவியப் பாடத்திட்டம்.

வார்தா, நவ பரத் வித்யாலயாவின் மிஸ் கே.எம்.ஹெய்லிமன் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் மிஸ் கெர்டா ஃபிலிப்ஸ்போர்ன் இருவருக்கும் இந்த செயற்குழுவின் தட்டச்சுப் பணிகளைச் செய்து கொடுத்தமைக்கு நன்றிகள்.

மஹாத்மாஜி, இந்தப் பாடத்திட்டங்களை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். இந்திய தேசத்தின் மேதமைக்கும் தேவைகளுக்கும் பொருந்தும்படியான அடிப்படைக் கல்வித் திட்டத்துக்கான அஸ்திவாரமாக இந்தப் பாடத்திட்டம் அமையும் என்று நம்புகிறோம். இதற்கான உங்கள் சம்மதம் கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.

கையொப்பம்
ஜாஹிர் ஹுசேன்
கே.குலாம் சையதீன்
கே.டி.ஷா
வினோபா பாவே
காகா கலேல்கர்
கிஷோர்லால் மஷ்ருவாலா
ஜே.சி.குமரப்பா
ஸ்ரீ கிருஷ்ணதாஸ் ஜாஜு
ஸ்ரீமதி ஆஷா தேவி
ஏ.டபிள்யூ.ஆர்யநாயகம்

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *