வகுப்புகள் ஆறு-ஏழு
நெசவு
1.நெசவுத்தொழில் மிகவும் விரிவானது. இரண்டு வருடங்களுக்குள் மாணவர்களுக்கு இது தொடர்பாக முழுப் பயிற்சி கொடுத்துவிட முடியாது. இரண்டு மாற்று கைத்தொழில்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இரண்டு வாய்ப்புகளையும் பள்ளிகள் கொடுக்கவேண்டும். எப்படியும் இரண்டு வருடப் பயிற்சி என்பது அறிமுக நிலைப் பயிற்சி மட்டுமே. எனவே குறிப்பிட்ட கைத்தொழிலில் ஒரு மாணவர் முழு பயிற்சி பெற விரும்பினால் இந்தக் காலகட்டம் முடிந்த பின்னர் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கோள்ளவேண்டும்.
2.இந்த வகுப்புக்கு வரும் மாணவருக்கு 13-14 வயதுதான் ஆகியிருக்கும். எனவே இங்கு பரிந்துரைக்கப்படும் பாடம் அடிப்படை அறிவு சம்பந்தப்பட்டது மட்டுமே.
3. ஐந்து வருட முடிவில் மாணவருக்கு நூற்பு நன்கு தெரிந்திருக்கவேண்டும். எனவே அது இந்த வகுப்புக்கான கால அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை. எனினும் மாணவர்கள் வீட்டில் தொடர்ந்து நூற்று, பயிற்சியைத் தொடரவேண்டும். அவர்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் நூலுக்கு பணமாகவோ துணியாகவோ கிடைக்க பள்ளி தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
ஐந்தாம் வகுப்பு – முதல் வருடம்
1.நெசவை அடிப்படைக் கைத் தொழிலாக்கக் கொண்டு கற்றுத்தரும் இந்த பாடத்திட்டத்தில் இரண்டு ஆறுமாதப் பருவங்களாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால், மாணவர்களின் நெசவுத்திறமைக்கு ஏற்ப இரண்டு பருவங்களாகப் பிரித்திருக்கிறோம்.
2. கீழே இடம்பெற்றிருப்பவை மாணவர்களுக்கு முதல் வருடத்தில் கற்றுக் கொடுக்கப்படவேண்டும்.
அ) நூல் சுருள வைத்தல்
ஆ) நூல் சுற்றுதல்
இ) நூல் பிரித்தல்
ஈ) சுற்றும் சட்டகத்தில் நூலைச் சுற்றுதல்
உ) 1. நூலைப் பரப்பிவைத்தல், பிரித்தல்
2. அளவிடுதல்
ஊ) இரட்டை மடிப்பு நெசவு (தறியில்)
3. வருட முடிவில் மேலே சொல்லப்பட்ட விஷயங்களுக்கான வேகம் கீழ்க்கண்ட அளவுக்கு இருக்கவேண்டும்.
சுருள வைத்தல் : ஒருமணி நேரத்துக்கு 5 கண்டுகள்
சுற்றி வைத்தல் : ஒரு மணி நேரத்துக்கு 3 கண்டுகள்
பிரித்து வைத்தல் : ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை பொதிகள். (ஒரு ரீடுக்கு 60 ஹோல்)
நெடுக்கு வச நூல் : ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை பொதிகள்
நூலைப் பரப்புதல், பிரித்தல்
அளவு பிரித்தல் மூன்று மணி நேரத்துக்குள்
நெசவு (பாபின்கள் பயன்படுத்தி) 3 மணி நேரத்துக்கு இரண்டு யார்ட்கள் (கெஜம்)
4. ஒரு வருட முடிவில் ஒரு மாணவரால் நெய்யப்படும் நூலின் மொத்த நீளம் 108 கெஜங்களாக இருக்கவேண்டும்.
5. கூலி பத்து கெஜம் கொண்ட ஒரு அலகுக்கு 0-12-6 என்ற கணக்கில் 8-7-0 ஆக இருக்கும்.
ஐந்தாம் வகுப்பு – இரண்டாம் வருடம்
1.இந்த வருடத்தில் மாணவர்கள் இரட்டை மடி நெசவுப் பயிற்சியைத் தொடரவேண்டும். அதே நேரம் அலங்கார நெசவு, சாயமூட்டுதல், பூ துண்டுகள் நெய்தல் ஆகியவையும் கற்றுத் தரப்படவேண்டும்.
2. இந்த வருடத்தில் வேஷ்டி நெய்வதற்குத் தேவைப்படும் குறிப்பிட்ட வகை நூல் அளவு, நூல் எடை அளவு, கோட்பாட்டு விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும்.
3. நெசவு வேகம் இந்த வருட முடிவில் மூன்று மணி நேரத்துக்கு மூன்றரை கெஜம் நெய்ய முடியவேண்டும்.
4. இந்த வருடத்தில் நெய்யப்படும் துணியின் அளவு ஒவ்வொரு மாணவருக்கும் 216 கெஜம் இருக்கவேண்டும். கெஜத்துக்குக் கூலி 0-1-3 என்ற வகையில் 16-14-0 என்பதாக இருக்கும்.
இரண்டு ஆண்டு முடிவில் ஒரு மாணவருக்கு வருமானம்:
ரூபாய் மதிப்பில்
முதல் வருடம் 8-7-0
2-ம் வருடம் 16-14-0
மொத்தம் 25-5-0.
இரண்டு வருடங்களில் எதிர்பாராத நிகழ்வுகளினால் உற்பத்தியில் 25% குறையலாம் என்று வைத்துக்கொண்டால் ஒரு மணவர் மூலமான வருமானம் 18-15-9 ஆக இருக்கவேண்டும்.
நாடா மற்றும் மேஜை விரிப்பு நெசவு
முதல் வருடம்
1. இந்தப் பிரிவில் மாணவர்களுக்கு கீழ்க்கண்ட விஷயங்களைக் கற்றுத் தரவேண்டும்.
நூலை முறுக்குதல்
கயிறு திரித்தல்
நீள வாட்டு நூல் சுற்றுதல்
குறுக்கு நூல் தயாரித்தல்
பட்டை நாடா, மேஜை விரிப்பு, ஆசன விரிப்பு, பல்வேறு வடிவம் கொண்ட படுக்கை விரிப்பு நெய்தல்
2. முதல் வருடத்தில் மாணவர்களுக்கு வெள்ளை மற்றும் வண்ண நாடா, கயிறு, வெள்ளை மற்றும் வண்ண ஆசன விரிப்பு நெய்யக் கற்றுத் தரவேண்டும்.
3. நாடாக்கள், விரிப்புகள் ஆகியவற்றுக்கான கூலி வெவ்வேறாக இருக்கும். சாதாரண துணி நெய்வதற்கும் மெல்லிய மென்மையான துணி நெய்வதற்கும் கூலி வேறாக இருக்கும். எனினும் இந்த ஆண்டு நெசவுக்கான கூலி சுமார் ரூ8-7-0 ஆக இருக்கவேண்டும்.
இரண்டாம் வருடம்
1. இந்த வருடத்தில் வண்ண விரிப்புகள், கம்பளம் நெய்யக் கற்றுத் தரவேண்டும். இந்த முழுவருடமும் பல்வேறுவிதமான விரிப்புகள், கம்பளங்கள் செய்யக் கற்றுத் தரவேண்டும்.
2. இந்த ஆண்டு மாணவருக்கு கூலி சாதாரண நெசவுக்கு ரூ 16-14-0 ஆகும்.
நூற்பு மற்றும் நெசவு தொடர்பான கேள்விகள்
1. நெம்புகோல் கோட்பாடு – பல்வேறு விதமான நெம்புகோல்களின் பயன்பாடு, தறிகளில் பயன்படுத்தப்படும் நெம்புகோல்களின் மூலம் விளக்கிச் சொல்லவேண்டும்.
2. ஆப்பு, திருகு சுழல், சக்கரம் ஆகியவற்றின் கோட்பாடுகள் ஜின்னிங் எந்திரத்தின் மூலம் நேரடியாக கற்றுத் தரப்படவேண்டும்.
3. இரும்புத் தக்ளிக்கு பதிலாக மர தக்ளியில் நூற்றால் நூல் சுற்றும் வேகம் என்னவாகும். கெஜம் கவுண்டை அது எப்படிப் பாதிக்கும்?
4. தக்ளியின் வட்டு கனமாக அல்லது மெலிதாக இருந்தால் வேகம் என்ன பாதிப்புக்குள்ளாகும்?
5. சுழன்று நூலைத் திருக்கும் தண்டுக்கும் (ஸ்பிண்டிலுக்கும்) வட்டுக்கும் அளவு, விகிதம் மற்றும் நீள வகைகளில் என்ன விதமான தொடர்புகள் இருக்கின்றன?
6. தக்ளியில் வட்டு எங்கு இருக்கவேண்டும்?
7. ’யு’ மற்றும் ’வி’ வடிவ கப்பிகளின் சாதக பாதகங்கள்.
8. மரப் பரப்பை வளவளப்பாக்குவதால் ஏற்படும் விளைவு என்ன?
9. மெகன் ராட்டை மூலமாக சுழலின் கோட்பாடு
பொதுவான தொழில் நுட்பங்கள்
1. சுழல் எந்திரத்தின் மேல் சக்கரத்தை மைய ஊசியில் பொருத்துவதன் சாதக அம்சங்கள். கீழ் சக்கரத்தின் மீதான அழுத்தத்தை ஒரு நெம்புகோல் கொண்டு அதிகரித்தல், குறைத்தல்.
2. கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் கப்பியும் ஒருவகை நெம்புகோல் தான்.
3. பார பிடிமான துண்டு (கேண்டிலிவர்), கிடைமட்ட, மற்றும் சாய்வு தூண்களின் வலிமையில் உள்ள வித்தியாசம்
4. கடிகாரத்தின் ஊசல்.
5. முறுக்கு விசை செய்முறைப் பயிற்சி மூலம் கற்றுத்தரப்படவேண்டும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.