Skip to content
Home » காந்தியக் கல்வி #25 – விரிவான பாடத்திட்டம் – 16

காந்தியக் கல்வி #25 – விரிவான பாடத்திட்டம் – 16

காந்தியக் கல்வி

அடிப்படைத் தொழில்கல்வியாக நெசவு மற்றும் நூற்பு கொண்ட பாடத்திட்டத்தில் பிற பாடங்களுடன் தொடர்புபடுத்தவேண்டிய அம்சங்கள்

நாங்கள் இங்கு வரையறுத்துத் தந்திருக்கும் பாடத்திட்டத்தில் ஒவ்வொரு பாடத்துடனும் நெருக்கமான இணைப்பையும் தொடர்பையும் கொண்டுவந்திருக்கிறோம். அந்தப் பாடங்களையெல்லாம் மாணவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்க்கைச் சூழலுடன் தொடர்புபடுத்தவும் செய்திருக்கிறோம். கைத்தொழில் ஒன்றை, பள்ளிக் கல்வியின் அடிப்படை அம்சமாக வடிவமைத்திருக்கிறோம். இதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வியாக இருந்துவிடாமல் செய்முறைப் பயிற்சிமுலமாக தெளிவாக வலுவாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் சூழலையும் உருவாக்கியிருக்கிறோம். மாணவர்களின் சமூகச் சுற்றுச்சூழல், அவர்களுடைய பெளதிக (தொட்டடுத்த) சுற்றுச்சூழல், இரண்டையும் இணைக்கக்கூடிய கைத்தொழில் ஆகிய மூன்றையும் அடிப்படையகக் கொண்டு இந்தக் கல்வித் திட்டத்தை வடிவமைத்திருக்கிறோம்.

ஒவ்வொரு வகுப்பிலுமான பாடங்களின் பல்வேறு அம்சங்களை அடிப்படைக் கைதொழிலுடன் தொடர்புபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இங்கு பட்டியலிடுகிறோம். ஏட்டுக் கல்வியின் கணிசமான விஷயங்களைக் கைத்தொழில் கல்வியுடன் தொடர்புபடுத்தமுடியும் என்பதை எடுத்துக்காட்டவிரும்புகிறோம்.

பின்வரும் பக்கங்களில் அடைப்புகுறிக்குள் இடம்பெற்றிருக்கும் எண்கள் பல்வேறு வகுப்புகளின் அடிப்படைப் பாடங்களுடன் தொடர்புடையவை.

மாணவர்களின் சமூகச் சூழல், தொட்டடுத்த சுற்றுச்சூழல் ஆகியவற்றுடனான தொடர்புகள் பற்றி சமூகவியல் மற்றும் பொது அறிவியல் பாடங்களில் ஏற்கெனவே விரிவாகத் தரப்பட்டுள்ளன.

வகுப்பு : 1

கணிதம்

கை ராட்டையில் நூற்ற நூலை நூல் கண்டில் சுற்றும்போது எத்தனை சுற்றுகள் என்பதை எண்ணிக் கொள்ளவேண்டும். நூற்புக்குத் தரப்பட்டிருக்கும் பஞ்சு இழைகளை எண்ணிக்கொள்ளவேண்டும். தக்ளிகள், நூல்கண்டுகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை எண்ணிக் கற்றுக்கொள்ளவேண்டும்.

கை விரல்களைக் கொண்டு எண்களை எண்ணிக்கொண்டு, தசம எண் முறையைப் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளைக் கற்றுத் தரவேண்டும். தக்ளிகள், நூல் கண்டுகள், பருத்தி பொதிகள், இவற்றை பத்தின் மடங்காகக் கற்றுத் தரவேண்டும். பயிற்சியின்போது மாணவர்களை, பத்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து நூற்புக்கான பருத்தி, பஞ்சு பொதிகளை, பத்தின் மடங்காகக் கொடுக்கவேண்டும்.

நூற்பு தொடர்பான போட்டிகளில் பெறும் மதிப்பெண்கள், பல்வேறு பொருட்கள் ஆகியவற்றைக்கொண்டு கூட்டல் அட்டவணைகள் உருவாக்கிக் கொள்ளலாம். அவற்றைப் பல்வேறு எண்ணிகையிலான பொதிகளாக அடுக்கி வைத்து கூட்டல் பாடங்களைக் கற்றுத் தரலாம்.

நூற்புக்குக் கொடுத்த பஞ்சு இழைகளின் எண்ணிக்கையை நூற்று முடித்தபின் எஞ்சியிருக்கும் இழைகளில் இருந்து கழித்து, கழித்தல் பாடம் கற்றுத் தரவேண்டும்.

பஞ்சு, நூல், பொதிகள் ஆகியவற்றின் எடை, நீளம் போன்ற அலகுகளைக் அளந்து கற்றுத் தரவேண்டும்.

குறிப்பு: 160 சுற்றுகள் கொண்டது ஒரு லட்டி. 16 சுற்றுகள் கொண்டது ஒரு கலி. தார் என்பது நான்கு அடி கொண்ட ஒரு சுற்று. எனவே 160 வரையிலான எண்களை முதல் வகுப்பில் கற்றுக் கொள்ளலாம்.

சமூகவியல் பாடம்

இலைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் ஆகியவற்றாலான ஆதி கால ஆண் பெண்களின் உடைகள். காலப்போக்கில் மர உரி, பருத்தி, பட்டு என மாறி வந்த விதம். அரபு நாடுகள், ஐரோப்பா, எஸ்கிமோக்கள், ஆஃப்ரிக்க பிக்மி-குள்ள மனிதர்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் வாழும் ஆண்கள், பெண்களின் உடைகள். குளிர் மற்றும் வெப்ப பிரதேச உடைகளின் வேறுபாடுகள். ஆடைகளின் தூய்மையின் அவசியம்.

பொது அறிவியல்

பருத்திச் செடியின் பல்வேறு பாகங்கள், பருவ நிலைக்கு ஏற்ப உடைகளில் ஏற்படும் மாற்றங்கள். வெப்பம் மற்றும் குளிரில் இருந்து உடைகள் எப்படி நம்மைப் பாதுகாக்கின்றன? பஞ்சு சுத்தம் செய்தல், நூற்றல் ஆகியவற்றின் மீது சுற்றுப்புற ஈரப்பதம், வெப்பம், குளிர் ஆகையவை செலுத்தும் தாக்கம். பருத்தியைச் செடியில் இருந்து பறிக்க உகந்த நேரம் (காலை). பருத்தி விதை முளைத்து வளர்வது பற்றிய பரிசோதனை.

ஓவியம்

பருத்திச் செடி, விதை, பூ, பருத்தி காய் ஆகியவற்றின் படம்.

தாய்மொழி

கைத்தொழில் கருவிகள், பருத்திக் காயில் இருந்து பஞ்சு பிரித்தெடுத்தல், தூசி தும்புகளை அகற்றுதல், தக்ளியில் நூல் நூற்றல் ஆகியவற்றின் பெயர்களைக் கற்றுக் கொள்ளுதல். நூற்பு, நெசவுத் தொழில், பருத்தி நடவு, அறுவடை ஆகியவற்றுடன் தொடர்புடைய நாட்டுப்புறப்பாடல்களைக் கற்றுக் கொள்ளுதல்.

வகுப்பு : 2

கணிதம்

நூல் பொதியில் அடுத்த பெரிய அலகு 640 சுற்றுகள் கொண்டது. எனவே, அடுத்தகட்டமாக 640 வரையிலான எண்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
நூல் நூற்பு, கண்டு சுற்றுதல் மற்றும் பஞ்சு இழை தயாரிப்பு தொடர்பான பயிற்சிகளில் கூட்டல், கழித்தல் அட்டவணைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
நூல் நூற்பு, நூல் கண்டு சுற்றுதல் ஆகியவற்றின் மூலம் எளிய கணக்குப் பாடங்களைப் பயிற்சி செய்து பார்க்கலாம்.
அடிப்படைக் கைத்தொழிலில் மேற்கொள்ளப்படும் நீள அகலம், எடை தொடர்பான அளவீடுகளை ஒன்றாம் வகுப்பில் படித்தவற்றைத் தாண்டி அடுத்தகட்டப் பாடங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும். உள்ளூரில் என்னவிதமான அளவீடுகளைப் பயன்படுத்துகிறர்களோ அவற்றை முதலில் கற்றுக்கொள்ளவேண்டும்.
பெருக்கல் வாய்ப்பாடுகளை பத்து, ஐந்து, இரண்டின் மடங்குகளாகக் கொண்டு கற்றுக் கொள்ளவேண்டும்.

சமூகவியல் பாடங்கள்

பழங்குடி மனிதர்களின் இன்றைய உடைகள், பழங்குடி கால உடைகள், தூர தேசங்களில் அணியும் உடைகள், கிராமத்தில் பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் அணியும் உடைகள், அணியும் பாணிகள் (எளிய குறைவான உடை – அதிகப்படியான உடை; சுதேசி உடை – அந்நிய உடை)

பொது விஞ்ஞானம்

பருத்திச் செடியின் வடிவம், அளவு. செடியின் தண்டு, மரப்பட்டை; பருத்தியின் இலையின் வடிவம். பூவின் நிறம், அளவு, வடிவம்.; விதைக்கும் பருவம், அறுவடை செய்யும் பருவம். தூசி படியாமல் தடுக்கும் பருத்தி பிளக்குகள்.

ஓவியம்

பருத்திச் செடி, பருத்திப் பூ, காய்.

தாய் மொழி

கைத்தொழிலில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை வாய்மொழியில் விவரித்தல். சமூகவியல், பொது அறிவியல் போன்ற பாடங்களில் இடம்பெற்றிருக்கும் விஷயங்களை வாசித்துப் பழக தனி புத்தகங்கள் கொடுக்கவேண்டும்.
கைத்தொழிலில் பயன்படுத்தும் கருவிகளின் பெயர்கள், செயல்முறைகள் ஆகியவற்றை எழுதிப் பழகவும். அவை பற்றி சிறிய வாக்கியங்களும் எழுதிப் பழகவும்.

வகுப்பு : 3

கணிதம்

கிராமங்கள், மாவட்டம், பிராந்தியம், தேசம் ஆகிய பகுதிகளில் பருத்தி உற்பத்தி பற்றிய புள்ளிவிவரங்கள், பருத்தி உடைகளின் ஏற்றுமதி இறக்குமதி பற்றிய விவரங்கள். கிராமம், மாவட்டம், பிராந்தியம், தேசம் ஆகியவற்றின் மக்கள் தொகை, கைத்தொழிலில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை. விவசாயம் நடக்கும் பகுதிகள்: பருத்தி, கோதுமை முதலானவை
இவை பற்றிய எண்கள், புள்ளிவிவரங்கள், அதை எழுதும் விதம். (பெரிய எண்களின் கூட்டல், கழித்தலுக்கான எண்களை இவற்றில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்).

பெருக்கல், வகுத்தல் கணக்குகளை எளிய வழியில் செய்ய உதவும் வகையில் அதே எண்களைக் கொண்டு கூட்டல், கழித்தல் செய்து பார்த்துக் கற்றுத்தரவேண்டும். தக்ளிகள், பஞ்சு இழைகள், மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட பஞ்சு பொதிகள், நூல் கண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் இந்தக் கணக்குகளைச் செய்து பார்க்கலாம்.

எடை, நீள அகலம் முதலான அளவீடுகளின் அட்டவணைகளை கைத்தொழில் தொடர்பான நேரடிப் பயிற்சிகளில் இருந்து கற்றுக்கொள்ள்ளவேண்டும். உருளை, கூம்பு, கோளம் போன்ற திட பொருள்களின் வடிவங்களை ராட்டை தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புரியவைக்கவேண்டும். பஞ்சு, பருத்தி விதைகளின் குவியல் இவற்றைக் கொண்டு கால், அரை, முக்கால் என அளவுகளைக் கற்றுத் தரவேண்டும். வகுப்புவாரியாக நூல் நூற்றுக் கொடுக்கும் மாணவர்களுக்கான சம்பளம், நூற்றுக் கிடைக்கும் நூலின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஏறுவரிசை, இறங்குவரிசை ஆகியவற்றைக் கற்றூத் தரவேண்டும்.

சமூகப் பாடங்கள்
பெளத்த இந்தியாவில் உடைகள் – புத்த பிக்குகளின் உடை. பழங்கால பாரசீகம், கிரேக்கம். பழங்காலத்தில் இருந்த உடைகளின் அழகு மற்றும் எளிமை. உடைகளின் முக்கியத்துவம், விவரணைகள் ( பணி நேர உடை, ஓய்வு நேர உடை, தூக்க நேர உடை). கிராமங்களில் உற்பத்தியாகும் உடையின் அளவு. ஒரு நபருக்கு எவ்வளவு என்ற கணக்கு. இறக்குமதியாகும் உடையின் அளவு.

பொது அறிவியல்

பருத்தி விதையில் இருந்து முளைத்து வருவது மற்றும் பலவகையான பரிசோதனைகள். பருத்தி விதைகள் பரவும் விதம். மனிதர்கள் எந்த அளவுக்கு, பருத்தியைச் சார்ந்திருக்கிறார்கள். ஆடைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? கிராமங்களில் கிடைக்கும் சலவைப் பொருட்களைப் பயன்படுத்தி துணிகளைத் துவைக்கும் விதம்.

ஓவியம்

பழங்குடி மக்களின் ஆடைகளின் ஓவியங்கள்.

தாய் மொழி

கைத்தொழிலில் பல்வேறு செயல்பாடுகள் பற்றிய வாய் மொழி விளக்கம்; கைத்தொழில் தொடர்பான விதிமுறைகளை மெளனமாக வாசித்துப் புரிந்துகொள்ளுதல். பிற பாடங்களில் இருக்கும் தொடர்புடைய பகுதிகளை மொழிப் பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல். அன்றாடம் மேற்கொள்ளும் கைத்தொழில் தொடர்பான ஆவணங்களைப் பராமரித்தல்.

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *