Skip to content
Home » காஸா போர்: வீழ்கிறதா இஸ்ரேல்?

காஸா போர்: வீழ்கிறதா இஸ்ரேல்?

காஸா மீதான இஸ்ரேலின் போர் கிட்டத்தட்ட 9 மாதங்களைக் கடந்துவிட்டது. ஹமாஸ் வேட்டை என்று இஸ்ரேல் தொடங்கிய இந்தப் போர் இன்று இனப்படுகொலை என உலகம் வெளிப்படையாகக் கண்டிக்கும் வகையில் குரூரமடைந்துள்ளது. பாலஸ்தீனர்களைப் பொறுத்தவரை இந்தப் போர் இஸ்ரேலுக்கு எதிரானது மட்டுமல்ல, அந்நாட்டைக் கொம்பு சீவிவிடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளுக்கும், சக அரேபியர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று லாப நோக்கத்திற்காக அமைதி காக்கும் அரபு நாடுகளுக்கும் எதிரானதும்கூட.

காஸா போரில் தினம் தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து வரும் நிலையில், போராளிகள் ஒழியப் போகிறார்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் மார்தட்டிக்கொண்டிருந்த வேளையில் திடீரென இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு முன்வந்திருக்கிறது. போர் உக்கிரமடைந்த நாளிலிருந்து பல்வேறு அமைப்புகள் அந்நாட்டைப் போர்நிறுத்தம் செய்யச்சொல்லி வலியுறுத்தி வந்தனர். அப்போதெல்லாம் விடாப்பிடியாக மறுத்து வந்த இஸ்ரேல், இன்றைக்கு கத்தார் நாட்டுப் பிரதமரைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க விரும்புகிறது.

ஏன் இந்தத் திடீர் மாற்றம்? எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் எதற்காக இந்தப் பின்வாங்கல்?

காரணம், இந்தப் போர் பாலஸ்தீனர்களை வெளியில் எந்த அளவுக்கு அழித்துக் கொண்டிருக்கிறதோ, அதே அளவு இஸ்ரேலையும் உள்ளே இருந்து அழித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. குறிப்பாக இந்தப் போர் இஸ்ரேலின்/சியோனிசத்தின் வீழ்ச்சியை உறுதி செய்வதாக அந்நாட்டின் வரலாற்றாசிரியர் இலான் பப்பே கூறுகிறார்.

இஸ்ரேலின் ஆன்மா

இஸ்ரேல் எனும் தேசம் அமைந்ததற்கும், அது தொடர்ந்து இனவெறிகொண்ட நாடாக இயங்குவதற்கும் அடிப்படையாக இருப்பது சியோனிசம்தான். சியோனிசம் என்பது யூத தேசத்தை நிறுவுவதற்காகத் தீவிர யூதர்களால் முன்னெடுக்கப்பட்ட தேசியவாத கொள்கை. புதிய நாட்டினை நிர்மாணிக்கப் பாலஸ்தீனர்களின் நிலங்களை அபகரித்தும், அம்மக்களை வெளியேற்றுவதும்கூட தவறில்லை என்றது அந்தக் கொள்கை.

பாலஸ்தீன மண்ணில் யூதர்களைக் குடியேற்ற வேண்டும் என்பதற்காகத் தொடக்கத்தில் இருந்தே பொய்ப் பிரசாரங்களையும், பயங்கரவாத செயல்களையும் முன்னெடுத்து வரும் அந்த இயக்கம்தான் இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு நாட்டின் ஆன்மா.

உலகம் முழுவதிலும் இருந்து இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டுவதும், நிதி திரட்டுவதும், இஸ்ரேலின் கொள்கைகளை லாபிக்கள் மூலம் செயல்படுத்திக் காட்டுவதும் சியோனிச இயக்கத்தினர்தான். இதற்காக இவர்கள் திரையின் பின்னால் இருந்து இயங்கும் ரகசிய அமைப்பினர் என்றெல்லாம் சதிக்கோட்பாட்டுச் சாயம் பூச வேண்டியதில்லை. வெளிப்படையாகவே இவர்கள் இஸ்ரேலிய நலன் கொள்கையைக் கொண்டவர்கள். அவ்வளவுதான்.

அதற்காக எல்லா யூதர்களும் சியோனிசவாதிகள் கிடையாது. முதன்முதலில் அப்படியொரு இயக்கம் உருவானபோதே எதிர்த்த யூதர்கள் இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள்.

கிட்டதட்ட 120 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இன்றைக்கு வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்தச் சியோனிச இயக்கம், ஹமாஸ் தொடங்கி வைத்த போரினால் உடைந்துபோகத் தொடங்கியுள்ளது என்பதுதான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இந்த வீழ்ச்சி மேலும் வீரியமடையும்போது, இனவெறி நாடான இஸ்ரேல், தன் சொந்த நாட்டு மக்களிடமே அடக்குமுறையை அவிழ்த்துவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

சரி, எதை வைத்து இஸ்ரேல் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது எனச் சொல்கிறார்கள்? இதற்கு இலான் பப்பே சில காரணிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

இஸ்ரேல் vs யூதேயா

முதலாவது யூதர்களிடம் ஏற்பட்டிருக்கும் பிளவு. இஸ்ரேல், பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசித்து வரும் யூதர்கள் ஏற்கெனவே இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளனர். இதில் முதல் பிரிவினர் இஸ்ரேல் தேசத்தில் வசிப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மதச் சார்ப்பற்றவர்கள். லிபரல் கொள்கை உடையவர்கள். இஸ்ரேல் உருவானபோது ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த யூத வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மதச்சார்ப்பவற்றவர்கள் என்பதால் பாலஸ்தீன நல விரும்பிகள் என்று கருதிவிடக்கூடாது. இவர்கள் பேசும் ஜனநாயகம், சமத்துவம் எல்லாம் யூதர்களுக்கு இடையேதான். பாலஸ்தீனர்களுக்குக் கிடையாது. இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்கள் மீது நிகழ்த்தி வரும் ஒடுக்குமுறையையும், ஆக்கிரமிப்பையும் ஆதரிக்கும் இவர்கள், யூத மக்கள் எந்தச் சண்டை சச்சரவும் இன்றி ஜனநாயகத்தன்மையுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இன்னொரு பிரிவு யூதேயா தேசத்து யூதர்கள். அது என்ன யூதேயா தேசம்? உண்மையில் யூதேயா தேசம் என்ற ஒன்று கிடையாது. ஆனால் யூதர்களின் ஒரு பிரிவினர் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை, காஸா பகுதிகளில் குடியேற்றப்படுகிறார்கள் அல்லவா? இவர்கள்தான் தம்மை யூதேயா யூதர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இந்துத்துவவாதிகள், இன்றைய இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லைகளை உள்ளடக்கிய அகண்ட பாரதமே நமது தேசம் என்று எப்படிச் சொல்லிக்கொள்கிறார்களோ, அதேபோல பாலஸ்தீனம் முழுவதையும் அபகரித்த பண்டைய யூதேயா என்ற நிலப்பகுதியே உண்மையான இஸ்ரேல் என்று இந்தப் பிரிவு நம்பிக்கொண்டிருக்கிறது.

இவர்கள் தீவிர வலதுசாரி கொள்கை உடையவர்கள். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் வெறித்தனமான ஆதரவாளர்கள். அவரை ஒவ்வொருமுறையும் தேர்தலில் தப்ப வைக்கும் வாக்காளர்கள். இன்றைக்கு இஸ்ரேலிய ராணுவத்திலும், பாதுகாப்புத் துறைகளிலும் முக்கிய அதிகாரிகளாக இருப்பதும் இவர்கள்தாம். இந்தப் பிரிவு இஸ்ரேலை மத அடிப்படைவாத நாடாக மாற்ற விரும்புகிறது. இதற்காகப் பாலஸ்தீன நிலங்களை அபகரித்து, அதற்குத் தடையாக இருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்ற முனைகிறது. எஞ்சியிருக்கும் பாலஸ்தீனர்களை அடித்து விரட்டிவிட்டு அல்-அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் யூதர்களின் மூன்றாவது ஆலயத்தை நிர்மாணித்துவிட்டால் மீண்டும் பொற்காலம் தொடங்கிவிடும் என்பது இவர்களது நம்பிக்கை. இந்த உயரிய நோக்கத்திற்கு இணைய விரும்பாத, நாம் மேலே பார்த்த லிபரல் யூதர்களும் இவர்களுக்கு விரோதிகள்தான்.

இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையேயான விரிசல் பல ஆண்டுகளாகவே பெரிதடைந்து வந்தது. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் இந்த இரு தரப்பினருக்கும் இடையே தற்காலிக சமரசத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இப்போது விரிசல் முன்பைவிட பெரிதாகி இருக்கிறது என்கிறார் பாப்பே. இருபிரிவினரும் பொது இடங்களில் அடித்துக்கொள்வது இன்றைக்கு இஸ்ரேலிய வீதிகளில் நடைபெறும் வாடிக்கையான சம்பவம்.

போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் வசித்து வந்த லிபரல் யூதர்களில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக இலான் பப்பே சொல்கிறார். இந்தச் சூழலில் இஸ்ரேலியப் பகுதிகளிலும் யூதேயா யூதர்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர். இது ஏற்கெனவே அங்கு வசித்து வரும் லிபரல் யூதர்களை உசுப்பேற்றியுள்ளது. இது தொடருமானால் மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் என்பதுதான் உண்மை.

பொருளாதாரச் சீரழிவு

இரண்டாவது பொருளாதார பிரச்னை. இடைவிடாத யுத்தத்திற்கு மத்தியில் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு எந்தத் திட்டமும் அரசிடம் இருப்பதுபோல தெரியவில்லை. அமெரிக்காவின் பொருளாதார உதவியையே இஸ்ரேல் நம்பி இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் இஸ்ரேலின் பொருளாதாரம் 20% வீழ்ச்சி அடைந்தது. இதைச் சரி செய்ய அமெரிக்கா 14 பில்லியன் டாலர்களைத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் வீழ்ந்து வரும் பொருளாதாரத்தைச் சீர் செய்ய எந்தத் திட்டமும் இஸ்ரேலிடம் இல்லை.

இதுபோன்ற ஒரு நிலையில்தான் இஸ்ரேல் ஹமாஸுடன் போரிட்டு வருகிறது. அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு எதிராகவும், மேற்குக் கரையின் சில பகுதிகளிலும்கூட ராணுவ நகர்வை மேற்கொண்டு வருகிறது. இது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பெரும் சுமையாக மாற வாய்ப்பிருக்கிறதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதைத்தவிர துருக்கி, கொலம்பியா போன்ற நாடுகள் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்பு காட்டி வருகின்றன. இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சோ இஸ்ரேலின் நிதியை எல்லாம் மேற்குக் கரையில் அமைந்துள்ள யூத குடியேற்றங்களிலேயே செலவிட்டு வருகிறார் என்று இஸ்ரேலிய யூதர்கள் கொந்தளிக்கின்றனர்.

இஸ்ரேல் – யூதேயா மோதல், ஹமாஸ் தாக்குதல், ஹிஸ்புல்லா தாக்குதல், தவறான பொருளாதாரத் திட்டங்கள் என்று எல்லாம் சேர்ந்துகொள்ள, இஸ்ரேலியச் செல்வந்தர்கள் தங்கள் முதலீடுகளை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லத் தொடங்கிவிட்டனர். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவிகித வரி, 20 சதவிகிதத்தினரிடம் இருந்தே வசூலிக்கப்படுகிறது. அந்த 20 சதவிகித மக்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் இடம்பெறும் செல்வந்தர்கள் தங்கள் முதலீடுகளை நகர்த்தத் தொடங்கியிருப்பது இஸ்ரேலை உலுக்கியிருக்கிறது.

சர்வதேச அழுத்தம்

இஸ்ரேல் சந்திக்கும் மூன்றாவது பிரச்னை சர்வதேச அழுத்தம். குறிப்பாகச் சர்வதேச நீதிமன்றமும் (International Court of Justice), சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் (International Criminal Court) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இஸ்ரேலுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. உலகமெங்கிலும் உள்ள பாலஸ்தீன ஆதரவு இயக்கங்கள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிரான புறக்கணிப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி வந்தாலும், பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலுக்கு அளித்து வந்த அரசியல், பொருளாதார ஆதரவுகளில் கொஞ்சம்கூட சுணக்கம் காட்டவில்லை.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சர்வதேச நீதிமன்றமும், குற்றவியல் நீதிமன்றமும் ரஃபா பகுதியில் இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலை இனப்படுகொலை, போர்க்குற்றம் என்ற அடிப்படையில் விசாரிக்க உத்தரவிட்டிருப்பது மிகப்பெரிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு உத்தரவு இதுவரை வரலாற்றில் காணப்படாத ஒன்று. இந்த உத்தரவு இஸ்ரேலின் கொடூரங்களை நிறுத்திவிடும் என்று சொல்லமுடியாவிட்டாலும், சர்வதேசப் பார்வையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தூண்டுகோலாக அமைகிறது.

யூதர்களின் மாற்றம்

ஒன்பது மாதங்களாக நடந்து வரும் பேரழிவு பல்வேறு நாடுகளில் வசித்து வரும் யூதர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக யூத சமூகம் இஸ்ரேல், சியோனியத்திற்கு வழங்கி வந்த கண்மூடித்தனமான ஆதரவை விளக்கிக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இவர்கள் பாலஸ்தீன ஒற்றுமை இயக்கங்களுடன் இணைந்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதும் நம்பிக்கை அளிக்கிறது.

ஏற்கெனவே பார்த்ததுபோல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வந்த சியோனிச அமைப்புகள்தான் இஸ்ரேலை அரண்போலக் காத்து வந்த காவல் தெய்வங்களாக இருந்தன. இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க மக்களிடம் ஏற்படும் மாற்றங்களை நீர்த்துப்போகச் செய்வதும் இவர்கள்தாம். இப்போது யூதர்கள் இத்தகைய சியோனிய அமைப்புகளிலிருந்து வெளியேறி வருவது இஸ்ரேலுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே அமெரிக்காவிலும் பாலஸ்தீன ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

குறிப்பாக AIPAC (American Israel Public Affairs Committee) எனும் இயக்கம் அரசியல், பொருளாதாரம், சமூக செயற்பாடுகள் எனப் பரந்துபட்ட அளவில் இஸ்ரேல் – அமெரிக்க உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்த இயக்கம். அமெரிக்காவின் இஸ்ரேல் லாபி என்று வெளிப்படையாகவே அழைக்கப்பட்டு வந்த இந்த இயக்கத்திலிருந்தும் பலர் விலகியிருக்கின்றனர். இது இஸ்ரேல் லாபி வலுவிழந்து வருவதைக் குறிக்கிறது.

ராணுவ பலவீனம்

இஸ்ரேல் ராணுவம் நவீன ஆயுதங்கள் தாங்கிய அதிசக்தி வாய்ந்த அமைப்பு என்கிற மாய பிம்பம் ஹாமஸ் இயக்கத்தினர் நடத்திய முதல் தாக்குதலின்போதே உடைந்துவிட்டது. இப்போது அமெரிக்க ஆயுதங்கள் மட்டுமே இஸ்ரேல் ராணுவத்தைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. இந்தச் சூழலில் ஹமாஸுடன் இணைந்து ஹிஸ்புல்லாவும் முழு மூச்சிலான போரைத் தொடங்கினால் கெரில்லாக்களை ராணுவத்தால் சமாளிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

இஸ்ரேல் உதயமானதிலிருந்து பாலஸ்தீன நிலங்களில் யூத குடியேற்றங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குடியேறிய இந்த யூதர்களைப் பாதுகாக்கவே ராணுவத்தின் பெரும்பான்மையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலில் வசிக்கும் யூதர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

உண்மையில் இஸ்ரேலிய அரசுக்கும், இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையிலான பூசலும் பெருமளவில் வெடித்துள்ளது. இஸ்ரேலின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் காஸாவில் போர் நிறுத்தம் விரும்புகின்றனர். இந்தப் போர் நிறுத்தம் ஹமாஸ் உயிருடன் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிக்கச் சிறந்த வழியாக அமையும் என்று நம்புகின்றனர். மேலும் ஹமாஸுடனான போர் நிறுத்தம் ஹிஸ்புல்லாவின் தலையீட்டையும் தவிர்க்கும் என்றும் ராணுவம் நினைக்கிறது. ஆனால் நேதன்யாகுவோ ஹமாஸைத் தப்பவிடக்கூடாது என்று விடாப்பிடியாக இருக்கிறார். இது இரு தரப்புக்கும் இடையே பிளவை உண்டு செய்திருக்கிறது.

பாலஸ்தீனர்களின் புத்துயிர்ப்பு

இறுதியாக, இளம் தலைமுறை பாலஸ்தீனர்களிடையே போராட்ட உணர்வு புத்துயிர்ப்பு பெற்றிருப்பதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஒருபக்கம் ஹமாஸின் தெளிவற்ற வன்முறை, மறுபக்கம் பி.எல்.ஓவின் சமரசப் போக்கு எனச் சரியான தலைமை இல்லாமல் பாலஸ்தீன மக்கள் இழந்தது அதிகம். இந்த நிலையில் பாலஸ்தீன இளைஞர்கள் மீண்டும் ஒற்றிணைந்து, தெளிவான இலக்குடன் இயக்கங்களைக் கட்டமைக்கத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. இன்றைக்கு உலகிலேயே அதிக இளைஞர்கள் வாழும் பகுதியாக காஸாவும், மேற்குக் கரையும் இருக்கின்றன. இவர்கள் ஒற்றிணைந்து புதிய இயக்கங்களைத் தொடங்குவது பற்றியும், பி.எல்.ஓவுக்குப் புதிய ரத்தம் பாய்ச்சுவது பற்றியும் சிந்தித்து வருவதாகப் பாலஸ்தீன ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த இளைஞர்கள் தனிநாடு கோஷத்தை மறுப்பதும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. முந்தைய தலைமுறை பாலஸ்தீனப் போராளிகள் முன்வைத்த தனிநாடு தீர்வையும், அமெரிக்கா முன்வைக்கும் இருநாடுகள் தீர்வையும் ஓரங்கட்டிவிட்டு, ஒருநாடு தீர்வு (One state Solution) என்பதை இவர்கள் முன்மொழிகின்றனர். ஒருநாடு என்பது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இரண்டும் இணைந்த ஒரு நாடு. இரு தரப்பு மக்களுக்கும் சமமான அரசியல்சாசனம். இதுதான் இவர்கள் கோருவது. தனி பாலஸ்தீனம் என்பது இவர்கள் விருப்பமாக இருந்தாலும் அது யதார்த்தத்தில் சாத்தியமில்லை என்பதே இவர்கள் கருத்தாக இருக்கிறது.

இந்த ஒருநாடு தீர்வை முன்வைக்கும் பாலஸ்தீனர்கள், ஸ்விஸ் கூட்டமைப்பையோ, பெல்ஜிய மாதிரி அரசையோ முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மதச்சார்பற்ற, இரு சமூகத்தினர் ஒரே எல்லையில் அமைதியுடன் வாழும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்கிறார் இலான் பப்பே. இந்தத் தீர்வை ஏற்பதைத் தவிர இஸ்ரேலியர்களுக்கும் வேறு வாய்ப்பில்லை என்கிறார்.

காஸா போரினால் இஸ்ரேல் பலவீனம் அடைந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது. இனி பேச்சுவார்த்தை ஒன்று மட்டுமே வழி. அதனால்தான் இஸ்ரேல் திடீரென அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வருகிறது. போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ இல்லையோ, இஸ்ரேல் எனும் தேசம் வீழ்வது உறுதி. அப்போது ஏற்படும் இடைவெளியைப் பாலஸ்தீனர்கள் தங்கள் நிபந்தனைகளால் நிரப்ப வேண்டும்.

இதுவரை அமெரிக்கா எனும் நாட்டாமையைக் கூட்டி வந்து நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் மனநிலையில்தான் இஸ்ரேல் இருந்தது. ஆனால் வரும் காலங்களில் இந்தக் காலனிய மனநிலை வீழ்ந்து, பாலஸ்தீனர்கள் அங்கு தீர்மானிக்கும் சக்தியாக மாறுவார்கள். அதற்கேற்ற வலுவான இயக்கத்தைக் கட்டமைப்பது மட்டுமே பாலஸ்தீனர்களின் தேவையாக இருக்கிறது என்பதுதான் வரலாற்றாய்வாளர்களின் கருத்து.

0

________
உதவிய கட்டுரைகள் 


https://newleftreview.org/sidecar/posts/the-collapse-of-zionism
https://marxistleftreview.org/articles/editorial-amidst-a-genocide-solidarity-with-palestine-grows/
https://jacobin.com/2024/05/isreal-lobby-western-strategic-interests

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *