Skip to content
Home » குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்

குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்

சமுத்திரகுப்தர்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னன் என்றெல்லாம் அரசர்களைப் பற்றி அடைமொழிகள் சொல்கிறார்கள் அல்லவா, அதற்கு முற்றிலும் பொருத்தமானவர் சமுத்திரகுப்தர். பாரதம் கண்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர். குப்தர்களின் அரசை மகோன்னதமான நிலைக்கு இட்டுச் சென்று இந்திய வரலாற்றின் பொற்காலத்தைக் காணச் செய்தவர் அவர். வீரத்திலும் விவேகத்திலும் மட்டுமல்லாமல் இன்னும் பல துறைகளிலும் சிறந்தவராக விளங்கியவர் சமுத்திரகுப்தர்.

முதலாம் சந்திரகுப்தருக்கும் லிச்சாவி அரசகுமாரியான குமாரதேவிக்கும் பிறந்தவரான சமுத்திரகுப்தர், இரு அரசுகளையும் இணைத்து ஆளப்போகிறவர் என்பது அவர் பிறப்பின்போதே ஊர்ஜிதமாகிவிட்டது. தகுந்த வயதை எட்டியவுடன் ‘வா மகனே, இந்த உலகைக் காப்பாயாக’ என்று அழைத்து அவரது தகப்பனாரான சந்திரகுப்தரும் தனது அடுத்த வாரிசு சமுத்திரகுப்தர் என்பதை உறுதி செய்தும் விட்டார்.

சமுத்திரகுப்தர் பெரும் வீரனாக இருந்ததும் அவர் குப்தர்களின் அரசனாவது லிச்சாவிகளின் அரசை இணைக்க எளிதாக வழி செய்யும் என்பதாலும் முதலாம் சந்திரகுப்தர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். இருந்தாலும் சமுத்திரகுப்தர் ஆட்சிக்கட்டில் ஏறுவது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை. பிரயாகைக் கல்வெட்டு அவரது தந்தை சமுத்திரகுப்தரை வாரிசாக நியமித்தது ‘அரசுக்கு உரிமையான மற்றவர்களின் கண்களில் வருத்தத்தை வரவழைத்தது’ என்று கூறுகிறது. இங்கே அரசுக்கு உரிமையான மற்றவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் சந்திரகுப்தருக்கு மற்ற அரசிகளின் மூலமாகப் பிறந்தவர்களாகவே இருக்கவேண்டும். அப்படிப் போட்டியிட்ட வாரிசுகளில் ஒருவன் காசகுப்தன்.

காசன்

குப்தர்களுக்கும் மகதத்தை ஆண்ட லிச்சாவிகளுக்கும் அடிப்படையில் இருந்த பல வேறுபாடுகளை ஏற்கனவே பார்த்தோம். அந்தக் காரணங்களால் குப்தர்கள் அரசவையில் இருந்த பலருக்கு மரபுவழி நெறிமுறைகளைப் பின்பற்றும் தங்கள் அரசு பல்வேறு சமயம், மொழிகளின் கலவையாக இருந்த லிச்சாவிகளோடு இணைவது பிடிக்கவில்லை. அந்த இணைப்பால் ஏற்படும் பொருளாதார அனுகூலங்களைக் கூட அவர்கள் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர்.

இந்தக் குழப்பத்தை அறிந்த சந்திரகுப்தர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக திட்டவட்டமாக அறிவித்தார். அதை ‘இன்பப் பெருமூச்சு விட்டு’ சபையினரில் பலர் வரவேற்றனர். ஆனால் இன்னும் சிலர் சமுத்திரகுப்தரை வாரிசாக நியமிப்பதற்கு எதிராக இருந்தனர். மேட்டுக்குடியைச் சேர்ந்த அரசிகள் ஒருவருக்குப் பிறந்த காசன், அவர்களுக்குத் தோதான ஆளாக அமைந்தான். ஆகவே சந்திரகுப்தரின் மறைவிற்குப் பிறகு அரசவைப் பிரமுகர்கள் சிலர் காசனோடு இணைந்து புரட்சி செய்தனர். தங்களது காலஞ்சென்ற மன்னரின் விருப்பத்திற்கு எதிராக காசனை அரசனாக அறிவித்தும் விட்டனர். தற்காலத்தில் மரபு சார்ந்து செயல்படுவோருக்கும் நவீனத்தை விரும்புபவர்களுக்குமான மோதலைப் போன்றதே இது.

மேற்சொன்ன தகவல்களுக்கு நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். குப்தர்களின் அதிகாரபூர்வ ஆவணங்களில் காசனைப் பற்றிய குறிப்புகள் இல்லை. சமுத்திரகுப்தருக்கு உரிமையான அரசை அபகரித்துக்கொண்டவன் என்பதனாலோ அரசுக்கு நேரடியான வாரிசாக இல்லாதவன் என்பதன் காரணமாகவோ குப்தர்களின் வம்சாவளியில் காசன் இடம்பெறவில்லை எனலாம்.

அப்படியென்றால் காசனைப் பற்றித் தெரிவிக்கும் தரவுகள் என்ன? முதலில் வருவது காசன் வெளியிட்ட நாணயங்கள். கிட்டத்தட்ட 115 கிரேயின் (100 கிரேயின் = 6.47 கிராம்) எடையில் ‘காசன்’ என்ற பெயரோடு வெளியிடப்பட்ட அவனுடைய பொன் நாணயங்களில் அவன் உலகை வென்றவனாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறான். பல அரசர்களை அழித்தவனாகவும் அவனைப் பற்றி அந்த நாணயங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நாணயங்கள் பெரும்பாலும் குப்தர்கள் முதலில் ஆட்சி செய்த கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளில் கிடைக்கின்றன.

காசனின் நாணயங்கள்

காசனின் நாணயங்கள்

சில ஆய்வாளர்கள் இந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு காசனும் சமுத்திரகுப்தரும் ஒருவரே என்று வாதிடுகின்றனர். சமுத்திரகுப்தர் என்பது முடிசூடும்போது வைத்த அபிஷேகப் பெயராக இருக்கக்கூடும். அவரது இயற்பெயர் காசனாக இருக்கலாம் என்கின்றனர். ஆனால், அப்படி சமுத்திரகுப்தர் என்பது அபிஷேகப் பெயராக இருக்கும் போது காசன் என்ற பெயரிலும் நாணயங்கள் வெளியிடவேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வி எழுகின்றது. மேலும் சமுத்திரகுப்தரின் நாணயங்களின் எடை தோராயமாக 121 கிரேயினாக இருக்கிறது. ஆகவே அவருடைய நாணயங்களும் காசனுடைய நாணயங்களும் வேறு விதமானவை என்றும் தெரிகிறது.

இதைத்தவிர வேறு பல வேறுபாடுகளும் இந்த நாணயங்களுக்கிடையில் உள்ளன. காசனுடைய நாணயங்கள் முழுக்க குஷாணர்களின் பாணியைப் பின்பற்றி உள்ளது. சமுத்திரகுப்தரின் நாணயங்களில் இந்தியப் பாணி அதிகம் காணப்படுகிறது. காசனுடைய நாணயங்களில் உள்ள பெண் உருவம் மேலாடை அணிந்துள்ளது. ஆனால் சமுத்திரகுப்தரின் நாணயங்களில் உள்ள பெண் உருவம் மேலாடை எதுவும் இல்லாமல் கச்சை அணிந்து மட்டுமே காணப்படுகிறது. சமுத்திரகுப்தரின் நாணயங்களில் மற்ற அரசர்களை அழித்தவன் என்ற சொற்கள் காணப்படவில்லை. ஆகவே சமுத்திரகுப்தரும் காசனும் வேறு வேறு ஆட்கள் என்பது தெளிவு.

இன்னும் சில ஆய்வாளர்கள் காசன் வெளியிலிருந்து வந்து குப்தர்களின் ஆட்சியைப் பிடித்துக்கொண்டவன் என்று கூறுகின்றனர். அப்படி இருந்தால் குப்தர்களின் ஆவணங்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடத் தயங்குவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஆக்கிரமிப்பாளன் ஒருவனை அழித்ததாக குப்தர்களின் ஆவணங்கள் சொல்வதில் கௌரவக் குறைவு ஏதும் ஏற்படாது. தவிர, காசனின் நாணயங்கள் சந்திரகுப்தரின் நாணயங்கள் கிடைக்கும் பகுதியில்தான் கிடைத்துள்ளன. ஆகவே அவன் வெளியிலிருந்து வந்தவன் என்ற வாதமும் அடிப்பட்டுப் போகிறது.

ஆமமூக

குப்தர்களின் காலத்திற்குச் சற்றே பின்னால் எழுதப்பட்ட ஆர்ய மஞ்சுஶ்ரீ மூல கல்பம் (ஆ.ம.மூ.க) என்ற பௌத்தமத நூல் பஸ்மன் என்ற அரசனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த நூல் பௌத்த மதத்தின் வரலாற்றைத் தொட்டுச் செல்லும் பௌத்த தாந்தரீக நூல். பௌத்த மதம் சந்தித்த பிரச்சனைகள் பல அந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த மதத்திற்குப் பிரச்சனை அளித்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, வேறு ஒரு பெயரால் அவர்களை அழைக்கும் வழக்கத்தை அது பின்பற்றியிருக்கிறது.

உதாரணமாக வங்காள அரசன் சசாங்கனை சோமன் என்றும், சுங்க வம்சத்தின் புஷ்யமித்திரனை கோமி என்றும் ஹூணன் மிகிரகுலனை கிரக என்றும் அந்த நூல் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் போலிப்பெயர்கள் எல்லாம் உண்மைப் பெயருக்கு உள்ள அர்த்தத்தின் இன்னொரு பெயர்ச்சொல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உதாரணமாக சசாங்கன் என்பதற்கு சந்திரன் என்பது பொருள். அதை சோமன் என்ற பெயரில் இந்த நூல் குறிப்பிடுகிறது. போலவே காச என்பதற்கான பொருள் சாம்பல் என்பது. அதன் வேறு ஒரு பெயரான பஸ்மன் என்ற பெயரில் ஆ.ம.மூ.க குறிப்பிடுவது குப்த அரசனான காசனையே என்பது பலரின் கருத்து.

அப்படி காசனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘துராத்மா’, ‘துர்மதி’ என்றெல்லாம் கடுமையாக அந்த நூல் அவனை விமரிசிக்கிறது. காசன் பௌத்தர்களுக்குப் பல துன்பங்களை இழைத்ததாலேயே இந்த வசைகள் அவன் மேல் பாடப்பட்டது என்பது தெளிவு. அவனை இதயமில்லாதவன் என்றும் பெரும் பாவங்களைச் செய்தவன் என்றும் ஆமமூக குறிப்பிடுகிறது. அவனுடைய சபையில் தர்க்க நிபுணர்கள் பலரும் ‘மோசமான’ பிராமணர்கள் பலரும் இருந்தனர் என்றும் அந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.

சீன யாத்திரிகரான சுவான் சங்கும் அப்படிப்பட்ட ஒரு அரசனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஸ்ராவஸ்தியில் இருந்து ஆட்சி செய்த ஒரு அரசன் பௌத்த குருவான மனோரதருக்கு எதிராக 100 பேர் கொண்ட ஒரு குழுவை வாதம் செய்ய அனுப்பியதாகவும் அதில் 99 பேரை மனோரதர் தோற்கடிக்க, கடைசி ஆள் மனோரதரைத் தந்திரத்தினால் வென்றதாகவும் அதன் காரணமாக மனோரதர் தன் நாக்கைத் துண்டித்துக் கொண்டு இறந்ததாகவும் அவர் கூறுகிறார். (தர்க்கவாதிகள் இங்கும் கண்டிக்கப்படுவதால் பௌத்தத்திற்கும் தர்க்க சாஸ்திரிகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் மோதல் இருந்தது தெரிகிறது) அதன்பின் வசுபந்து என்ற பௌத்த குரு பொறுப்பேற்றதாகவும், அந்நேரத்தில் அந்த அரசன் இறந்து பட்டதாகவும் அவனுக்குப் பின்வந்த அரசன் வசுபந்துவை ஆதரித்ததாகவும் சுவான் சங் குறித்திருக்கிறார்.

சமுத்திரகுப்தர் வசுபந்து என்ற பௌத்த குருவை ஆதரித்ததாகப் பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே சுவான் சங் குறிப்பிட்ட ‘ஸ்ராவஸ்தியின்’ அரசன் காசனே என்று பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சமுத்திரகுப்தர் வைதீக மரபைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களிடம் சமயப் பொறையைக் கையாண்டவர். காசனிடம் அந்தக் குணம் இல்லை என்பதை ஆ.ம.மூ.க நூலும் சுவான் சங்கின் குறிப்புகளும் தெளிவாக்குகின்றன. பௌத்த மதம் செல்வாக்குப் பெற்றிருந்த மகதத்தை ஆண்ட சமுத்திரகுப்தர் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களை எதிர்க்க விரும்பாததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

காசன் மூன்று ஆண்டுகளே ஆட்சி செய்து மறைந்துவிட்டான் என்று ஆ.ம.மூ.க குறிப்பிடுவதிலிருந்து சமுத்திரகுப்தர் விரைவில் தன்னுடைய வாளின் வலிமையினாலும் தாய்வீடான மகதத்தின் துணை கொண்டும், தனக்கு ஆதரவாக இருந்த அரசவைப் பிரமுகர்களின் உதவியினாலும் அரசைக் கைப்பற்றிக்கொண்டுவிட்டார் என்பது தெளிவாகிறது.

சமுத்திரகுப்தரின் கல்வெட்டுகள் அவரது ஆட்சியாண்டைப் பற்றி மட்டுமே குறிப்பிடுவதால் அவர் எந்த வருடம் அரியணை ஏறினார் என்பது பற்றிப் பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. பொயு 309ம் ஆண்டு சந்திரகுப்தரின் திருமணம் நடந்தது, பொயு 319ல் குப்தர்களின் அரசராகப் பொறுப்பேற்றார் என்ற குறிப்புகளை வைத்து பொயு 335ம் ஆண்டு வாக்கில் சமுத்திரகுப்தர் ஆட்சி செய்யத் தொடங்கியதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த ஆண்டையே அவரது ஆட்சித் தொடக்கமாகக் கொள்ளலாம்.

முதலாம் சந்திரகுப்தர் சமுத்திரகுப்தருக்கு விட்டுச் சென்றது கிழக்கு கங்கைச் சமவெளியின் பெரும்பகுதி (கிழக்கு உத்தரப் பிரதேசம்/ பீகார் அடங்கிய பகுதி) அடங்கிய அரசை. ஆனால் அதை மட்டும் கொண்டு ஆட்சி செய்ய விரும்பாத சமுத்திரகுப்தர் அரசை விரிவாக்க விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது அஸ்வமேத யாகம் என்ற வழியை.

அஸ்வமேத யாகம் ஒன்றை சமுத்திரகுப்தர் செய்ய விரும்பியதற்கு முக்கியமான காரணம், குப்தர்களின் அவையில் மரபுவழியைப் பின்பற்றியவர்களின் ஆதரவை அவர் விரும்பியதே ஆகும் எனலாம். அரசர்களின் முக்கியமான வைதீக கடமைகளில் ஒன்றாக அஸ்வமேத யாகம் கருதப்பட்டது. அந்த யாகத்தைச் செய்வதன் மூலம், தான் வைதீகத்திற்கு எதிரானவன் அல்ல என்பதைக் காட்ட அவர் விரும்பியிருக்கலாம். தவிர, அவர்களது அண்டை அரசான பாரசிவர்கள் பத்து அஸ்வமேத யாகம் செய்ததாகக் கூறிக்கொண்டதால், அவர்களுக்கு இணையானவர்களாகக் குப்தர்களைக் காண்பிக்கவும் அந்த யாகத்தைச் செய்ய அவர் முடிவெடுத்திருக்கலாம்.

அஸ்வமேத யாகத்தின் முக்கியமான பகுதி யாகக் குதிரை ஒன்றை முன்னே செலுத்தி அதன்பின் அரசன் பல்வேறு அரசுகளுக்குத் திக்விஜயமாகச் சென்று அவர்களை வென்று வருவதாகும். அதன்படி சமுத்திரகுப்தர் பாரத நாடெங்கும் திக்விஜயம் செய்து அரசுகளை வெல்லத் திட்டமிட்டார். அவர் சென்றது எங்கேயெல்லாம் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

1 thought on “குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *