அக்கால வழக்கப்படி சமுத்திரகுப்தருக்குப் பல மனைவிகள் இருந்தாலும் அவர்களுள் பட்டதரசியாகச் சிறப்பிக்கப்பட்டவர் தத்த தேவி என்ற அரசி. சமுத்திரகுப்தருக்கும் தத்த தேவிக்கும் பிறந்த மகனுக்கு சந்திரகுப்தன் என்று பெயர். குப்தர்கள் காலத்தைய பல கல்வெட்டுகளின் அடிப்படையில் இரண்டாம் சந்திரகுப்தர் என்ற ஆட்சிப் பெயருடன் சமுத்திரகுப்தருக்குப் பிறகு அரசாட்சியை ஏற்றவர் இவரே. அப்படியானால் ராமகுப்தர் என்பவர் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதைப் பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.
குப்தர்களுக்குப் பின் வந்த வர்த்தனர்களின் வம்சத்தின் அரசரான ஹர்ஷவர்தனரின் அரசவைப் புலவராக இருந்தவர் பாணபட்டர் (பொயு 620). அவர் எழுதிய ஹர்ஷசரிதம் என்ற நூலில் ‘ஒரு பெண்ணைப் போன்ற வேடமணிந்து சந்திரகுப்தர் சாகர்களின் அரசனை வீழ்த்தினார். காமத்தால் அடுத்தவன் மனைவியை அபகரித்த அந்த அரசனை அவனுடைய ஊரிலேயே கொன்றார்’ என்று எழுதியிருக்கிறார். இதுதான் ராமகுப்தரைப் பற்றிய கதைகளுக்கு அடிப்படை
அதற்குப் பின் வந்த காலத்தில் ராமச்சந்திரா, குணசந்திரா என்ற சகோதரர்கள் எழுதிய நாட்யதர்ப்பணம் என்ற நூலில் தேவிசந்திரகுப்தம் என்ற நாடகத்தின் சில பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நாடகத்தில்தான் ராமகுப்தர் முதன் முதலில் அறிமுகமாகிறார். நாடகத்தில் அவரைப் பற்றிய கதை விரிவாகத் தரப்பட்டுள்ளது.
‘சமுத்திரகுப்தருக்குப் பிறகு அரியணை ஏறியவர் அவருடைய மூத்த மகனும் சந்திரகுப்தனின் அண்ணனுமான ராமகுப்தன். அவன் ஒரு கோழை. ஆனாலும் அவனுக்கு தன் தந்தை சமுத்திரகுப்தரைப் போல புகழ் அடைய வேண்டுமென்ற ஆசை மட்டும் இருந்தது. அதனால் சாகர்கள் ஆட்சிக்கு உட்பட்ட மாளவத்தின் மீது அசட்டுத் துணிச்சலோடு படையெடுத்தான். (இந்தோ ஸித்தியர்களான இந்தக் குலத்தினர் பாரதத்தின் மேற்குப் பகுதியை ஆட்சி செய்து வந்தார்கள் என்றும் க்ஷத்திரபர்கள் / சாகர்கள் என்று இவர்கள் அழைக்கப்பட்டனர் என்றும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்). சாகர்களின் அரசனாக அப்போது இருந்தவன் மூன்றாம் ருத்ரசேனன் என்று அறியப்படுகிறான். வீரனான அவன் ராமகுப்தனைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல் குப்தர்களின் தலைநகர் வரை அவனைத் துரத்தி வந்து அதை முற்றுகையிட்டான். முற்றுகையை நீண்டநாள் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்த ராமகுப்தன், சாக அரசனோடு சமாதானம் செய்துகொள்ளத் தீர்மானித்தான். அதற்கு ஒரு நிபந்தனையை விதித்தான் ருத்ரசேனன். ராமகுப்தனின் மனைவியான அரசி துருவதேவி பேரழகி. அவளைத் தன்னோடு அனுப்பினால் முற்றுகையைக் கைவிட்டுத் தான் திரும்பிவிடுவதாக வாக்களித்தான் சாகர்களின் அரசன். இந்த விபரீத யோசனையைக் கேட்டு ராமகுப்தன் திடுக்கிட்டாலும் வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக்கொள்வது என்று தீர்மானித்தான். அவனுடைய அமைச்சர்களும் இதற்குச் சம்மதித்தனர்.
ஆனால் துருவதேவி இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தாள். அந்நிய ஆடவன் ஒருவனோடு தன்னை அனுப்ப ஒப்புக்கொண்ட கணவனைக் கோழை என்றும் பேடி என்றும் சபித்தாள். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் தன் மைத்துனனான சந்திரகுப்தனுக்கு அவள் தூதனுப்பினாள். குப்தர்களின் மானத்தை எப்படியாவது காக்குமாறு சந்திரகுப்தனை அவள் கேட்டுக்கொண்டாள். இந்தக் கோரிக்கையை ஏற்ற சந்திரகுப்தன், தான் ஒரு சாம்ராஜ்யத்தின் அரசி என்றும் அதனால் தன்னோடு பல தோழிகளும் அழகிகளும் வருவார்கள், அவர்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ருத்ரசேனனுக்கு எழுதுமாறு அவளிடம் சொன்னான். அப்படி ஒரு கடிதத்தை ருத்ரசேனனுக்கு அனுப்பினாள் துருவதேவி. கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்ற நினைப்பில் அதை ஏற்றுக்கொண்டான் ருத்ரசேனன்.
ராமகுப்தன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி துருவதேவியை சாக அரசனிடம் அனுப்பாமல் தானே துருவதேவியைப் போல பெண்வேடமிட்டு ஒரு பல்லக்கில் ஏறிச் சென்றான் சந்திரகுப்தன். அவனோடு தோழிகள் என்ற போர்வையில் அவனுக்கு விசுவாசமான 500 வீரர்கள் பெண் வேடமிட்டுச் சென்றனர். அவர்களை அடிமைகள் போர்வையில் இருந்த 2000 வீரர்கள் பல்லக்குகளில் தூக்கிச் சென்றனர்.
காமுகனான ருத்ரசேனன், துருவதேவி தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி குப்தர்களின் நாட்டை விட்டு மாளவத்தை நோக்கித் திரும்பச் சென்றான். போகும் வழியில் கூடாரம் எடுத்துத் தங்கிய அவன், துருவதேவியை தன் இருப்பிடத்திற்கு அழைத்தான். மாறுவேடத்தில் இருந்த சந்திரகுப்தன் அவனுடைய கூடாரத்திற்குச் சென்று அவனைக் கொன்றான். அதே சமயம் அவனோடு வந்திருந்த வீரர்கள் சாகர்களுடைய படைகளோடு மோதி அவர்களை வீழ்த்தினர். இப்படியாகக் குப்தர்களின் மானத்தை மீட்ட சந்திரகுப்தன் தலைநகர் திரும்பினான்.’
தேவிசந்திரகுப்த நாடகத்தில் வரும் இந்த நிகழ்வைத்தான் பாணபட்டரின் ஹர்ஷசரிதம் குறிப்பிடுகிறது. அதற்கு உரை எழுதிய சங்கர ஆர்யா என்பவர் இதை மேலும் தெளிவுபடுத்தி ‘தனிமையில் இருந்த சாகபதி தன்னுடைய சகோதரனின் மனைவிபோல வேடமிட்டிருந்த சந்திரகுப்தனால் கொல்லப்பட்டான்’ என்று குறிப்பிடுகிறார். அவனைச் சுற்றி பெண்வேடத்தில் வீரர்கள் இருந்ததாகவும் என்றும் அவர் கூறுகிறார்.
தேவிசந்திரகுப்தத்தில் வரும் கதை இத்தோடு முடிந்துவிடவில்லை. ‘வெற்றியோடு நாடு திரும்பிய சந்திரகுப்தனுக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாகர்களை வென்றதால் சாகாரி என்று அவன் புகழப்பட்டான். குறிப்பாக தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிய சந்திரகுப்தனை துருவதேவி வெளிப்படையாகவே பாராட்டினாள். இவையெல்லாம் ராமகுப்தனுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. அதன் காரணமாக சகோதரர் இருவருக்கும் இடையே பிணக்கு மூண்டது. பிரச்சனை பெரிதாகியதால் அரசவையை விட்டு விலகிய சந்திரகுப்தன் உஜ்ஜயினி சென்று அங்கே சில ஆண்டுகள் காலம் கழித்தான். அதன்பின் ஒரு நாள் தலைநகர் திரும்பிய அவன், காவலர்கள் யாருமில்லாத சமயத்தின் ராமகுப்தனின் அரண்மனைக்குள் புகுந்து அவனைக் கொன்றான். அதன்மூலம் அரசையும் கைப்பற்றிக்கொண்டு, அண்ணியான துருவதேவியையும் மணம் செய்துகொண்டான்’ என்று முடிகிறது அந்த நாடகம்.
இந்த நாடகத்தை எழுதியவர் பெயர் விசாகதத்தர். மௌரியர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு ‘முத்ராராக்ஷஸம்’ என்ற காவியத்தையும் இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. பொயு 6-7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர். இது போன்ற ‘வரலாற்றுப் புனைவு’ நாடகங்களைச் சரித்திரமாகக் கருதக்கூடாது என்று சுட்டிக்காட்டும் பல வரலாற்றறிஞர்கள், இவர் எழுதிய முத்ராராக்ஷஸம் என்ற நூலுக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றனர். அந்த நாடகத்தைப் போலவே, தேவிசந்திரகுப்தமும் ஒரு புனைவே தவிர வரலாற்று ஆதாரம் எதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு பல கல்வெட்டுகள் பிற்காலத்தில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ராஷ்ட்ரகூட அரசரான முதலாம் அமோகவர்ஷரின் சஞ்சன் செப்பேடுகளில் ‘இந்தத் தானத்தைச் செய்தவர் கலியுகத்தில் அரசாட்சி செய்த குப்த அரசர். அவர் தனது சகோதரரைக் கொண்டு அரசையும் அவரது மனைவியையும் கைப்பற்றிக்கொண்டார் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் சாகர்களின் அரசன் குப்தர்களின் மனைவியை அபகரித்த செய்தியோ அவனை சந்திரகுப்தன் கொன்ற நிகழ்வோ இதில் காணப்படவில்லை.
போலவே, பொயு 930இல் காம்பேயிலும் பொயு 933இல் சங்லியிலும் வெளியிடப்பட்ட ராஷ்ட்ரகூட அரசனான நான்காம் கோவிந்தனின் செப்பேடுகளில் சசாங்கன் என்ற அரசன் தன்னுடைய அண்ணனைக் கொன்று அவனுடைய மனைவியை அபகரித்த செய்தி காணப்படுகிறது. இந்த சசாங்கன் என்பது சந்திரகுப்தனைக் குறிப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.
பொயு 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முஜ்முலு-த்வாரிக் என்ற அரேபியக் கதையிலும் இதே போன்ற நிகழ்வு ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாரசீக மொழியில் அப்துல் ஹாசன் அலி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதையில் வரும் அரசனின் பெயர் ராவல் (ராமகுப்தன்). அவனுடைய தம்பியின் பெயர் பர்கமரிஸ். ஷிவாலிக் மலைப் பகுதியில் இருந்த சில அரசர்கள் கிளர்ச்சியில் இறங்கியதால் அவர்களை அடக்கப் புறப்படுகிறான் ராவல். அதில் ஒரு அரசனோடு போர் புரியும்போது அவனுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. தோல்வியடைந்த ராவல் தப்பி ஓடுகிறான். எதிரிப்படைகள் துரத்தி வரும்போது மலைக்கோட்டை ஒன்றின் உள்ளே தன்னுடைய பரிவாரங்களோடு புகுந்து தஞ்சமடைகின்றான் அவன்.
கோட்டையை எதிரி அரசனின் படை முற்றுகையிடுகிறது. சரணடைவதைத் தவிர வேறு வழியில்லாத ராவலுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க, எதிரி நாட்டரசன் ஒரு நிபந்தனை விதிக்கிறான். ராவலுடைய அரசியையும் அரண்மனைப் பெண்டிரையும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொள்ளத் தீர்மானிக்கிறான் ராவல். இந்தத் தருணத்தில் அங்கே தோன்றிய அவனுடைய தம்பியான பர்கமரிஸ், தான் அவர்களைக் காப்பாற்றுவதாகக் கூறி அதற்கான யோசனை ஒன்றைத் தெரிவிக்கிறான். அதன்படி அரசியின் வேடத்தில் எதிரி முகாமிற்குள் புகுந்த பர்கமரிஸ் அவர்களை வெட்டி வீழ்த்துகிறான். தலைவனை இழந்த எதிரிப்படை சிதறி ஓடுகிறது. இதன் காரணமாக உயிரோடு ராவல் தலைநகர் மீள்கிறான்.
ஆனால் தோல்வியடைந்து தம்பியால் மானம் காப்பாற்றப்பட்டுத் திரும்பிய ராவலின் செல்வாக்கு நாட்டில் வீழ்கிறது. அவனுடைய தம்பியான பர்கமரிஸின் புகழ் ஓங்குகிறது. ஒருநாள் தம்பி அண்ணனின் அரண்மனைக்குச் செல்கிறான். அங்கே ராவலும் அவன் மனைவியும் கரும்பை வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். தம்பியிடமும் ஒரு கரும்பைக் கொடுத்து அதை வெட்டித்தின்ன ஒரு கத்தியையும் அளிக்கிறான் ராவல். அதுவே தகுந்த சமயம் என்று கருதிய பர்கமரிஸ் அந்தக் கத்தியால் அண்ணனைக் கொல்கிறான். கணவனின் தம்பியின் வீரத்தைக் கண்டு ஏற்கனவே மனம் பறிகொடுத்திருந்த அரசி அதைக் கண்டுகொள்ளவில்லை. கோழையான அரசனின் மரணத்தை மக்களும் வரவேற்று பர்கமரிஸுக்கு அரசை அளிக்கின்றன. இப்படி அந்த அரபிக் கதை சொல்கிறது. இந்தக் கதையை எழுதியவர் தேவிசந்திரகுப்த நாடகத்தின் பாதிப்பில் அதை எழுதியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் ராம குப்தன் என்ற பாத்திரம் குப்தர்களின் வரலாற்றில் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. பல ஆய்வாளர்கள் இதைப் பற்றி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். பண்டார்கர் என்பவர் ராமகுப்தன் என்ற பெயரே காச குப்தன் என்பதற்குப் பதிலாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அவர் சமுத்திரகுப்தரின் போட்டியாளர் என்று கூறுகிறார். ஜயஸ்வாலோ ராமகுப்தனும் காச குப்தனும் ஒருவரே, அவருக்கு இரண்டு பெயர்கள். அவர் இரண்டாம் சந்திரகுப்தரின் சமகாலத்தவர் என்கிறார். இன்னும் சிலர் ராமகுப்தன்தான் சமுத்திரகுப்தர் என்று ஒரே போடாகப் போடுகின்றனர். எல்லா இடங்களிலும் கோழையாகவே சித்தரிக்கப்படும் ராமகுப்தன் எப்படி வீரனாகக் கருதப்படும் காச குப்தனாகவோ சமுத்திரகுப்தனாகவோ இருக்க முடியும் என்பதை இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது ஆச்சரியம்.
அல்டேக்கர் என்ற ஆய்வாளர் ராமகுப்தன் போர் புரிந்தது சாகர்களோடு அல்ல, வடமேற்கில் ஆட்சி செய்த கிடார குஷாணர்களோடுதான் என்று குறிப்பிடுகிறார். தன்னுடைய தந்தையைப் போல சாகசங்கள் புரியவேண்டி ராமகுப்தன் மேற்கு பஞ்சாபை நோக்கிப் படையெடுத்ததாகவும், அங்கே கிடார குஷாணர்களால் தோற்கடிக்கப்பட்டு இமயமலைப் பகுதியில் உள்ள கோட்டை ஒன்றில் தஞ்சம் புகுந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். அங்கேதான் சரணடையும் வைபவம் நடந்தது என்றும் தன்னுடைய அரசியை ஈடாகக் கொடுக்க ராமகுப்தன் ஒப்புக்கொண்டான் என்றும் அவர் சொல்கிறார். ஆனால் இந்த வாதத்திலும் சாரம் இல்லை என்பதை நாம் காண்கிறோம். சந்திரகுப்தரைப் போன்ற பெருவீரரைக் கொண்ட படை எப்படி சாகர்களிடமோ அல்லது குஷாணர்களிடமோ முதலில் தோற்றிருக்க முடியும் என்ற வினா எழுகிறது.
மேற்சொன்ன விவரங்களைத் தொகுத்துப் பார்த்தால், தேவிசந்திரகுப்தம் என்ற நாடகத்தின் அடிப்படையிலேதான் ராமகுப்தனைப் பற்றிய கதை கட்டமைக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. குப்தர்களின் ஆட்சிக்காலத்தின் போது கிடைக்கும் சமகால ஆவணங்களில் ராமகுப்தனைப் பற்றிய குறிப்புகளே இல்லை. காச குப்தனுக்காவது அவன் அச்சிட்ட நாணயங்கள் ஆதாரங்களாக இருந்தன. ஆனால் ராமகுப்தனுக்கு அப்படிப்பட்ட ஆதாரங்கள் ஏதுமில்லை.
போலவே அரசியான துருவதேவி ராமகுப்தனின் மனைவி என்பதற்கான எந்தவிதக் குறிப்பும் குப்தர்களின் ஆவணங்களில் இல்லை. அவள் சந்திரகுப்தனை இரண்டாவதாக மணந்துகொண்டார் என்பதும் அவற்றில் இல்லை. அவர் சந்திரகுப்தனின் பட்டமகிஷி என்று மட்டுமே குப்தர்களின் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
எல்லாவற்றையும் விட, கோழை என்றே குறிப்பிடப்படும் ஒருவனைத் தனது வாரிசாக சமுத்திரகுப்தர் எப்படித் தேர்ந்தெடுப்பார் என்ற முக்கியமான கேள்வியையும் ஆய்வாளர்கள் எழுப்புகின்றனர். ராமகுப்தனின் சரித்திரத்தைக் கூறும் தேவிசந்திரகுப்தத்தில் துருவதேவிக்கும் ராமகுப்தனுக்கும் இடையே நீண்ட தொரு உரையாடல் இடம்பெறுகிறது. அதில்கூட ராமகுப்தன் சமுத்திரகுப்தனின் மகன் என்பதோ அவனே அரியணையில் அமரத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற விவரங்களோ இல்லை.
ஆகவே தேவி சந்திரகுப்தம் என்ற வரலாற்றுப் புனைவின் அடிப்படையில் புகுத்தப்பட்டதே ராமகுப்தன் என்ற பாத்திரம் என்று தெளிவாகத் தெரிகிறது. இதில் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம், அக்காலத்திலும் புனைவை வரலாறு என்று நம்பும் பலர் இருந்தனர் என்பதே. மற்றபடி குப்தர்களின் வரலாற்றுக்கும் ராமகுப்தனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் குப்தர்களின் உண்மையான வரலாற்றைத் தொடர்வோம்.
(தொடரும்)
அருமையான பதிவு.
நன்றி ஐயா.