குப்தர்களின் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது ஏன் என்ற கேள்விக்கு சென்ற அத்தியாயங்கள் ஓரளவு விடையளித்திருக்கும். போர்த்திறன், படைபலம், நிர்வாகம், சமயப்பொறை, கலை, இலக்கியம் இப்படிப் பல துறைகளில் குப்தர்களின் அரசு தங்களுடைய முத்திரையைத் தெளிவாகப் பதித்திருந்தாலும் ஓர் அரசின் காலம் பொற்காலம் என்று கருதப்படுவது அந்த நாட்டு மக்களின் வாழ்வியல் எப்படி இருந்தது என்பதைப் பொருத்தே அமைகிறது. அந்த வகையில் மேற்கண்ட துறைகளில் குப்தர்கள் உச்சத்தைத் தொட்டிருந்தாலும் அதைச் செய்ய முற்பட்டபோது பொது வாழ்க்கைக்கு எந்தவிதக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். எப்படி ஒரு சிறிய பகுதியில் அரசாட்சி செய்த குப்தர்கள் அரசு பேரரசாக விரிவடைந்துகொண்டே வந்ததோ, அதே போல மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுக்கொண்டே வந்ததைப் பார்க்கமுடிகிறது.
பொது யுகத்தின் ஆரம்பத்தில் பல்வேறு அரசுகளால் சிதறிக்கிடந்த பாரதத்தின் வாழ்வியல் முறை பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்தே இருந்தது. ஆனால் குப்தர்களின் அரசு தோன்றிய பிறகு பெரு நகரங்களை மாதிரியாகக் கொண்டு பல சிறு நகர்கள் உருவாகத் தொடங்கின. நகரமயமாக்கல் என்று தற்போதைய சமூக அறிவியல் படிப்புகளில் குறிப்பிடப்படும் இந்த மாற்றம் பெருமளவில் குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை முறை நவீனமயமாகத் தொடங்கியது.
தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் அதன் காரணமாக இங்கே வந்து குடியேறிய வெளிநாட்டவர்களின் கலாசாரம், சமயம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு ஒரு குழப்பமான நிலையில் இருந்த சமுதாயத்தை மீட்டெடுத்து இந்தியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் நிலைநிறுத்திய குப்தர்களை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். தங்களது மண்ணின் பெருமையை பெரிதும் மதித்த மக்களின் மத்தியில் குப்தர்களின் செல்வாக்கு உயர்ந்தது. அதே சமயத்தில் வேதகாலத்தில் பின்பற்றப்பட்ட அனைத்துக் கோட்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கவனித்த குப்தர்கள், தற்கால சமூகத்திற்கேற்ப சட்டங்களை மாற்றியமைத்தனர்.
அதாவது அக்கால வாழ்வியலுக்கு ஒத்துப்போகும் ஸ்ம்ருதிகளைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றினர். விதவைகள் திருமணம் செய்துகொள்வது குற்றமாகக் கருதப்படவில்லை. சந்திரகுப்த விக்கிரமாதித்தரே விதவையான துருவதேவியை மணம் செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது. போலவே கணவனை இழந்தவர்கள் உடன்கட்டை ஏறியதற்கான சான்றேதும் குப்தர்களின் ஆட்சியில் இல்லை. குற்றம் செய்தவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களைத் திருத்தி மீண்டும் சமூகத்தில் சாதாரண வாழ்க்கையைப் பின்பற்றச் செய்யும் தண்டனைகளையே அளித்தனர்.
கிரேக்கர்கள், சாகர்கள், யவனர்கள், பஹ்லவர்கள், சசானியர்கள் என்று தொடர்ந்து இங்கே குடியேறிய வெளிநாட்டவர்கள் தங்களுக்குள் ஆதிக்கச்சண்டையில் இறங்கி தொடர்ந்து அமைதியற்ற நிலையை வடக்கு வடமேற்குப் பகுதியில் சிருஷ்டித்துக்கொண்டிருந்தனர். ஆனால் குப்தர்கள் அவர்களை அடக்கி ஒடுக்கியதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து நடந்த போர்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தனர். சமுத்திரகுப்தரின் திக்விஜயத்திற்கும் ஸ்கந்தகுப்தரின் ஹூணர்களுக்கு எதிரான போர்களுக்கும் இடையில் குப்தர்களின் ஆட்சிப்பகுதியில் போர் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இப்படி அமைதியான ஓர் ஆட்சியில் வாழ்ந்த மக்கள் அந்த ஆட்சியைக் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை அல்லவா?
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. சிறு சிறு அரசுகளாகப் பிரிந்து கிடந்த பாரதம் மூலப் பொருட்கள், அவற்றை உற்பத்தி செய்யும் இடங்கள், உற்பத்தி செய்யத் தேவையான திறமை கொண்ட தொழிலாளர்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்க முடியாமல் திணறிய காலகட்டம் அது. ஆனால் ஒரு பேரரசால் இந்த ஒன்றிணைப்பைச் சாத்தியமாக்க முடிந்தது. அப்படி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வணிகம் செய்ய தேவையான சந்தைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொண்டு சென்று விற்பனை செய்யத் தேவையான கட்டமைப்புகளை குப்தர்கள் உருவாக்கினர். குப்தர்களின் பொருளாதாரம் மிகச் சிறந்த நிலைகளில் இருந்ததற்கான சான்று அவர்கள் அச்சடித்த பல்வேறு வகையான, பல்வேறு தரத்தாலான நாணயங்கள். ஸ்கந்தகுப்தரின் ஆட்சி வரை அவர்களின் நாணயங்களின் மாற்றுக் குறையவேயில்லை. இப்படிப்பட்ட சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் தரமும் சிறந்தே இருந்தது.
வாழ்க்கைத் தரம் மேம்பட்டதால் மக்கள் அரசை எதிர்பாராமல், தாங்களே பல்வேறு அறச்செயல்களில் ஈடுபட்டனர். சீன யாத்திரிகரான பாஹியான் கூறியது போல ‘மக்கள் தங்களது இல்லத்திற்கு வந்த விருந்தினர்களை நன்கு உபசரித்தது மட்டுமல்லாமல், எந்த வேளையாக இருந்தாலும் அவர்களுக்கு உணவளித்தனர். தங்களது வீட்டிலேயே அவர்களுக்கு அறை ஒதுக்கி வசதிக்குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர். இலவச மருத்துவமனைகள், அன்னசத்திரங்கள் ஆகியவற்றையும் பொதுமக்கள் ஏற்படுத்தியிருந்தனர். மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த மருந்துகள் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கேயே தங்கவைக்கப்பட்டனர். குணமடைந்த பின்னரே அவர்கள் வீடு திரும்பினர்.’
குப்தர்களின் ஆட்சியில் பெண்களுக்கு உயரிய இடம் அளிக்கப்பட்டிருந்தது. பாஹியானின் குறிப்புகள் அஜந்தாவில் உள்ள ஓவியங்கள் அக்காலத்தைய இலக்கியங்கள் போன்றவை இதைச் சரியாக எடுத்துக்காட்டுகின்றன. காளிதாசனின் காவியங்கள் திருமணத்திற்கு முன்னும் பின்னும், வயதான பிறகு என்று பல்வேறு காலகட்டங்களில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று சித்தரிக்கின்றன. பெண்களுக்கும் ஆண்களுக்குச் சமமாக கல்வி அளிக்கப்பட்டது என்று தண்டி குறிப்பிடுகிறார்.
வயது அதிகமான பின்பு திருமணம் செய்து கொண்ட அக்கால நடைமுறைகளுக்கு மாறாக சிறுவயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் முறை குப்தர்கள் காலத்தில்தான் அதிகரித்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அக்கால குடும்ப அமைப்பின் அடிநாதமாக பெண்களே இருந்தனர். குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பெண்களுக்குச் சட்டப்பாதுகாப்பும் இருந்தது. ஒரு நல்ல மனைவிக்குத் துரோகம் செய்யும் கணவனுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் என்று குப்தர்கள் பின்பற்றிய நாரத ஸ்ம்ருதி கூறுகிறது. மனைவிக்குச் சம உரிமை அளிக்காத யாகங்களோ தீர்த்த யாத்திரைகளோ பயனற்றவை என்று குப்தர்கள் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் கூறுகின்றன. இதைக் குறிக்கவே குப்தர்களின் யாகம் தொடர்பான நாணயங்களில் அரசிகளின் உருவமும் இடம்பெற்றது.
குப்தர்களுடைய நாணயங்கள் பலவற்றில் அவர்களது அரசிகளும் இடம்பெற்று சமூகத்தில் பெண்களுக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட்டிருந்ததை உறுதிசெய்கின்றனர். வர்ணாஸ்ரம முறை சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும் க்ருஹஸ்தாஸ்ரமம் என்று கூறப்படும் திருமண உறவுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. திருமணங்கள் கடுமையான சட்டங்கள்மூலம் காக்கப்பட்டன. உயர் குடிகளில் பெண்களே மணவாளனைத் தேர்வு செய்யும் சுயம்வர முறை பின்பற்றப்பட்டது. கலப்புத் திருமணங்கள் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டன.
காளிதாசன் போன்ற இலக்கியக் கர்த்தாக்களின் காவியங்களிலிருந்தும் பாஹியான் போன்ற வெளிநாட்டு யாத்திரிகர்களின் குறிப்புகளிலிருந்தும் குப்தர்களின் சாசனங்களிலிருந்தும் நாம் அறிந்துகொள்வது பொதுவாக நாட்டு மக்கள் ஒரு மேம்பட்ட, நிலையான வாழ்வு முறையைப் பின்பற்றினர் என்பதையே. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட அக்காலகட்டத்தைச் சேர்ந்த இடங்கள் உணர்த்துவதும் இதைத்தான்.
வீடுகள் எல்லா வசதிகளோடும் கட்டப்பட்டிருந்தன. மரச்சாமான்கள், நகைகள், தினசரி வாழ்க்கைக்குத் தேவையானவை அனைத்தும் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. பூனைகள், நாய்கள், கிளிகள், மைனாக்கள் போன்ற பிராணிகளும் வீடுகளில் வளர்க்கப்பட்டன. வண்டிப்பந்தயங்கள், சேவல் சண்டைகள், வேட்டை, நடனம் ஆகியவை அக்காலத்தில் இருந்த பொழுதுபோக்கு அம்சங்கள். நாட்டில் மதுவிலக்கு இருந்ததாக பாஹியான் கூறுகிறார். ஆனால் தனிப்பட்ட முறையில் மது விற்கப்பட்டது இலக்கியங்கள்மூலம் தெரியவருகிறது. அரசின் அனுமதி பெற்ற சிலரே மதுவை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட பாரத நாட்டில், எத்தனையோ அரசுகளும் பேரரசுகளும் தோன்றி மறைந்திருக்கின்றன. ஏதோ வீரத்தால் பல அரசுகளை வெற்றி கொண்டோம், அவற்றின்மீது ஆதிக்கம் செலுத்தினோம் என்று மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிலும் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி எல்லா வகையிலும் சிறந்ததொரு ஆட்சியை அளித்ததன் காரணமாகவே குப்தர்களின் அரசு குறிப்பிடத்தக்க இடத்தை இந்திய வரலாற்றில் பெற்றிருக்கிறது. இன்றைக்கும் அவர்களிடமிருந்து தேவையான விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் குப்தர்களின் வரலாறு நமக்கு அளிக்கும் பாடமாகும்.
(முடிந்தது)
Fantastic sir. Nicely elaborated with evidences.