Skip to content
Home » ஹெலன் கெல்லர் #5 – ஒரு புதிய மொழி

ஹெலன் கெல்லர் #5 – ஒரு புதிய மொழி

இருளும் மௌனமும் நிறைந்திருந்த தனது தனிமை உலகிலிருந்து வெளிவர ஹெலன் துடித்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய உலகில் நிலவிய கனத்த அமைதி நிலையை மாற்ற வெறும் சைகை மொழிகளும் பிரெய்லி எழுத்துகளும் அவளுக்குப் போதுமானதாக இல்லை. பிற மனிதர்கள் பேசுவதை நேரடியாக உணரவேண்டும் என்கிற தீராத தாகம் ஹெலனுக்கு இருந்தது. 1890ஆம் ஆண்டில் ஹெலனுக்குப் பத்து வயது இருந்தபோது, காது கேளாதவளாகவும் பார்வை அற்றவளாகவும் இருந்த ராகன்ஹில்ட் காட்டா என்கிற சிறுமி பேசக் கற்றுக்கொண்ட செய்தியைக் கேள்விப்பட்டாள்.

இந்த விஷயம் ஹெலனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பத்து வயது சிறுமியின் மனதில் ‘நானும் பேசவேண்டும்’ என்கிற ஆசை இதனால் துளிர்விட்டது. சில நாட்களில் அதுவே தீராத தாகமாக மாறியது. அறிவியல் பூர்வமாக ஹெலனால் நிச்சயமாக ஒலியைக் கேட்க முடியாது. ஆனால் ஓசைகளைக் கேட்கவேண்டும் என்ற ஆசை அவளை நிலைகொள்ள அனுமதிக்கவில்லை. பலவாறாக யோசித்து, பலரிடமும் ஹெலன் கலந்தாலோசித்தாள். ஒரு சிலர் அவளைக் கேலி செய்தார்கள். ஒரு சிலர் அவள் மீது பரிதாபப்பட்டார்கள். ஆனால் சற்றும் மனம் தளராத ஹெலன், ஓர் உத்தியைக் கண்டறிந்தாள். அதுதான் ‘தடோமா (Tadoma)’ என்று அழைக்கப்படும் விசித்திரமான மற்றும் கடினமான, தொடு உணர்வு முறை. பிறர் பேசுவதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்த உத்தியின் கீழ் மிகக் கடுமையாகப் பயிற்சி செய்யவேண்டும்.

இந்த உத்தியின்படி, பேசும் ஒரு நபரின் முகத்தில் தனது கையை வைத்துக்கொண்டு அவரது பேச்சை உணரும் முயற்சியில் ஹெலன் ஈடுபட்டாள். மேலோட்டமாகப் பார்க்கும் பட்சத்தில் இது வெறுமனே முகத்தைத் தொடும் செயலாகத் தோன்றலாம்; ஆனால் உண்மையில் தொடுவதன் மூலமாக ஒரு மொழியை அதன் ஆதி வடிவத்தில் உணரும் முயற்சி இதுவாகும். ஹெலன் தனது கட்டைவிரலைப் பேசுபவரின் உதடுகளின் மீதும், ஆட்காட்டி விரலை அவரது மூக்குக்கு அருகிலும், நடுவிரலை அவருடைய தொண்டை மீதும் வைத்துக்கொள்வாள். அந்த வகையில் இது ஒரு முக்கோண வடிவப் புரிதல் முறையாகும்.

இத்தகைய செயல் மூலமாக ஒருவர் பேசும்போது அவருடைய உதடுகள் எவ்வாறு அசைகின்றன, காற்று எத்தகைய அழுத்தத்தில் வெளியேறுகிறது, தொண்டையில் ஏற்படும் அதிர்வின் வீரியம் போன்றவற்றையெல்லாம் தனது விரல்களின் மூலமாக அவள் கணக்கிட்டாள். உதடுகளின் விரிசல் குறிப்பிட்ட எழுத்தின் வடிவத்தைச் சொல்ல, மூக்கின் வழியாக வரும் காற்று அந்த ஒலியின் மென்மையை வெளிப்படுத்த, தொண்டையின் அதிர்வு அந்த எழுத்தின் ஆழத்தைப் புரியவைக்கும்.

ஒவ்வொரு சொல்லும், ஒரு குறிப்பிட்ட அசைவையும் ஒரு குறிப்பிட்ட அதிர்வையும் கொண்டிருந்ததை ஹெலன் கண்டுணர்ந்தாள். உதாரணமாக, ‘M’ என்கிற ஆங்கில எழுத்தை உச்சரிக்கும்போது உதடுகள் மூடிக்கொள்வதையும், ‘P’ என்கிற எழுத்தைச் சொல்லும்போது காற்று ஒரு சிறு வெடிப்பைப்போல் வாயிலிருந்து வெளியேறுவதையும் அவள் உணர்ந்துகொண்டாள். 10 வயது சிறுமி என்கிற நிலையில், ஹெலனால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சாதனை இதுவாகும். எழுத்துகளைக் கற்றுணர்ந்துகொண்ட பிறகு அவள் வார்த்தைகளைக் கற்கத் தொடங்கினாள்.

ஹெலனின் இந்த முயற்சியில் ஆனி சல்லிவன் ஆகச்சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். ஹெலனின் விரல்கள் பேசும் ஒருவரின் உதடுகளையும் தொண்டையையும் தடவிக்கொண்டிருந்தபோது, அந்த அதிர்வுகள் எதைக் குறிக்கின்றன என்பதை அவளுடைய கையில் எழுதி ஆனி விளக்கினார். அந்த வகையில், ஓர் ஆசிரியர் தன்னுடைய மாணவருக்குப் பாடம் நடத்துவதைவிடவும் ஒரு படி மேலாக ஆனி செயல்பட்டார். அதாவது, உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். உதாரணமாக, ஒருவரது உதடுகள், மூக்கு, தொண்டை மீது தன்னுடைய ஒரு கையை வைத்து குறிப்பிட்ட வார்த்தையை உணரும் முயற்சியில் ஹெலன் ஈடுபட்டிருந்தபோது, அதே வார்த்தையை ஹெலனின் மற்றொரு கையில் சைகை மொழி (Manual Alphabet) மூலமாக ஆனி அழுத்தமாக எழுதினார்.

ஒரு வார்த்தையை உச்சரிக்கும்போது நாக்கு எங்கே மடங்குகிறது, தொண்டை எப்போது அதிர்கிறது என்பதையெல்லாம் ஹெலன் உள்வாங்கிக்கொண்டே இருக்கும் அதே நேரத்தில், அந்த வார்த்தையின் பொருளைச் சைகை மொழியில் கையில் பதிக்கும் முறை வெகுவாகப் பலனளித்தது. இந்த இரட்டைப் பயிற்சி முறைதான், அதிர்வுகளுக்கும் அர்த்தங்களுக்கும் இடையிலான ஒரு பாலத்தை ஹெலனுக்கு உருவாக்கி கொடுத்தது.

மேலும், ஆனியும் வார்த்தைகளை உச்சரித்து ஹெலனுக்கு அவற்றைப் புரிய வைப்பார். தொடு உணர்வு வழியாக ஒரு வார்த்தையின் ஒலியை ஹெலன் சரியாகப் புரிந்துகொள்ளும் வரை, அதற்காக ஆயிரக்கணக்கான முறைகூட ஆனி அந்த வார்த்தையை உச்சரித்தார். குறிப்பாக, ஹெலனின் விரல்கள் தனது முகத்தின் மீது இருந்தபோது, மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் வார்த்தைகளை அவர் உச்சரித்தார். இதன் மூலமாக, ‘இத்தகைய அதிர்வு குறிப்பிட்ட இந்த வார்த்தையைக் குறிக்கிறது’ என்ற புரிதலை ஹெலன் மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டாள். ஆனி சல்லிவனின் அபாரமான பொறுமையும் ஹெலனின் விடா முயற்சியும் இணைந்து அதுவரை சாத்தியமில்லாத ஒன்றைச் சாத்தியமாக்கியது.

பள்ளிக்காலத்தில் ஹெலன் மேற்கொண்ட இந்த முயற்சி, ஒரு பயிற்சி என்பதைத் தாண்டி, கிட்டத்தட்ட ஒரு தவம்போல் இருந்தது. பிறர் பேசுவதை உணர்ந்துகொள்ள அவள் பயன்படுத்திய இந்த வழிமுறையால், வெளி உலகத்தோடு நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான அவளது விருப்பம் பூர்த்தி அடைந்தது.

பற்கள் மீதான உதடுகளின் அழுத்தத்தை வைத்து ‘F’ மற்றும் ‘V’ போன்ற ஏறத்தாழ ஒரே மாதிரியாக உச்சரிக்கப்படும் எழுத்துகளின் ஒலிகளை ஹெலன் பிரித்தறிந்தாள். தொண்டையில் குரல் நாண்கள் அதிரும்போது பிறக்கும் ஒலிகளுக்கும், மூச்சுக் காற்று மூலமாக பிறக்கும் ஒலிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவள் உணர்ந்த விதம் பிரமிக்கத்தக்கது. ஒவ்வொரு வார்த்தையையும் ஆனி சல்லிவன் உச்சரித்தபோது, அவருடைய முகத்தில் தன்னுடைய கைகளை வைத்துக்கொண்டு அதன் தசைகளில் ஏற்படும் மாற்றங்களையும் ஹெலன் உள்வாங்கினாள். இந்த அதிதீவிரமான பயிற்சியால், உச்சரிப்பின் வேகத்தையும் அதன் பின்னால் இருக்கும் கோபம், மகிழ்ச்சி, ஆச்சரியம் போன்ற உணர்ச்சிகளையும் ஹெலன் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினாள்.

ஒருவர் பேசுவதை உணர்ந்துகொள்ள இத்தகைய உத்தியைப் பயிற்சி செய்ததன் மூலமாக, தன்னுடைய ஊனத்தை எதிர்கொண்டு ஹெலன் கெல்லர் அடைந்த வெற்றி, ஒரு மாபெரும் புரட்சிக்கு ஒப்பாகும். பத்து வயதில் அவர் காட்டிய உறுதியும் அந்த விடாமுயற்சி, ஓர் ஊனமுற்ற சிறுமியால் சாதாரண மனிதர்களைப்போல் உரையாடல்களைக் கவனிக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தது.

ஹெலனின் குறைகளைக் களைவதைவிட, அவளிடம் இருந்த திறமைகளைக் கூர்மைப்படுத்துவதில் ஆனி சல்லிவன் கவனம் செலுத்தினார். பெர்கின்ஸ் பள்ளியில் ஹெலன் பயிற்சி செய்யப் பயன்படுத்திய இந்த ‘உதடு மற்றும் தொண்டை அதிர்வு’ உணரும் முறைதான், பிற்காலத்தில் ஒரு சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அவள் உருவெடுக்க அடித்தளமாக அமைந்தது. எந்நேரமும் இருளில் இருந்த ஒரு சிறுமி, தன்னுடைய ஆசிரியரின் துணையோடு ஒலிகளின் உலகத்திற்குத் தன் விரல் நுனிகளால் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொண்டாள்.

தன்னுடைய விரல் நுனிகளால் ஒலிகளின் உலகத்தைத் தரிசிப்பதற்காகத் தொடங்கிய ஹெலன் கெல்லரின் இப்பயணம், ஒரு சாதாரண முயற்சியாக இருக்கவில்லை; அது மனித ஆற்றலின் எல்லையைச் சோதித்த ஒரு மாபெரும் முன்னெடுப்பாக இருந்தது. ஹெலனின் இந்த முன்னெடுப்பில் ஆனி சல்லிவலின் பங்களிப்பு அபாரமானது. பத்து வயது சிறுமியாக இருந்தபோதே, பிறர்போல் தன்னாலும் பேச முடியும் என்கிற நம்பிக்கையை ஹெலன் வளர்த்துக்கொண்டாள். அதற்கான முதல் படியாக மற்றவர்கள் பேசுவதை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற அவளது ஆசைக்கும் விடாமுயற்சிக்கும் ஆனி சல்லிவன் உருவம் கொடுத்தார். ஹெலனின் கைகள் தன்னுடைய முகத்தின் மீது இருந்தபோது, ஒவ்வொரு சொல்லையும் பலமுறை உச்சரித்து ஆனி காட்டிய அந்தப் பொறுமைதான், இருளில் கிடந்த அந்தச் சிறுமிக்கு ஒலிகளின் ஓவியத்தை வரைந்து காட்டியது.

ஒரு கட்டத்தில், ‘நான் இப்போது ஊமை இல்லை’ (I am not dumb now) என்று ஹெலன் பேசிய தருணத்தில் (உச்சரிப்பு மட்டுமே, ஒலி இருக்காது), ஆனி சல்லிவனின் பொறுமைக்கும் உழைப்புக்குமான வெற்றி கிடைத்தது. பத்து வயது சிறுமியின் விடாமுயற்சியும் ஓர் ஆசிரியரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் இணைந்து, அறிவின் உதவியால் ஊனத்தை வென்று காட்டின. உதடுகளின் அசைவையும் தொண்டையின் அதிர்வையும் மொழியாக மாற்றிய ஹெலனின் இந்த முயற்சி, அவர் ஓர் உலகளாவிய ஆளுமையாகப் பின்னாளில் உருவெடுக்க மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *