ஹெலன் கெல்லரின் வாழ்க்கைப் பயணம் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஹெலன் கெல்லரின் பெயர் உலகெங்கும் எதிரொலித்தது. அவரது கல்வி சாதனையையும் எழுத்துத் திறனையும் பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதின. அந்தப் புகழும் அங்கீகாரமும் அவரது விடாமுயற்சிக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசுகளாகும்.
1903ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லரின் ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்’ என்னும் சுயசரிதை நூல் வெளியானது. இந்நூல் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணின் பார்வையில் உலகம் எப்படித் தெரிகிறது என்பதை உலகுக்கு உரக்கச் சொன்ன ஒரு பிரகடனம். 11 வயதில் ‘தி ஃபிராஸ்ட் கிங்’ சர்ச்சையால் எழுத அஞ்சிய அதே பேனா, 23வது வயதில் உலகமே வியந்து படிக்கும் ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்கியிருந்தது. இது ஹெலனுக்கான பெரும் புகழையும் அவரது கல்லூரிப் படிப்புக்கான பொருளாதார உதவிகளையும் தேடித் தந்தது.
அந்நூலை எழுதும்போது ஹெலன் சந்தித்த சவால்கள் சாதாரணமானவை அல்ல. கண்பார்வை மற்றும் செவிப்புலன் இல்லாத ஒரு பெண்ணால் ஒரு சாதாரண வாசகனுக்குப் புரியும் வகையில் காட்சிகளையும் உணர்வுகளையும் எப்படி வர்ணிக்க முடியும் என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒரு மலரின் வாசனையையோ, காற்றின் குளிர்ச்சியையோ அல்லது ஒரு மரத்தின் மீதுள்ள பட்டையின் சொரசொரப்பையோ விவரிப்பதற்காகத் தன் உணர்வுகளை மட்டுமே அவர் நம்பியிருந்தார். அத்தகைய அனுபவங்களை வெறும் வார்த்தைகளாக மட்டும் பதிவு செய்யாமல், அதைப் படிக்கும் வாசகர்களுக்கு அவற்றை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது அவருக்குப் பெரும் சவாலான காரியமாக இருந்தது. பிரெய்லி எழுத்து முறையில் ஒவ்வொரு வரியையும் அவர் எழுதியபோதும், அர்ப்பணிப்புடன் கூடிய ஆனி சல்லிவனின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. ‘அறிவு என்பது ஒளியின் மறுபெயர்’ என்று ஹெலன் குறிப்பிட்டார். அத்தகைய ஒளியைத் தேடி அவர் மேற்கொண்ட பயணத்தில், அவர் எங்கே சென்றாலும் ஆனி சல்லிவனின் துணை அவரை நிழலாகப் பின்தொடர்ந்தது.
‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்’ நூலுக்காகச் சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும் வாக்கியங்களை அமைப்பதிலும் ஹெலன் கெல்லர் காட்டிய முதிர்ச்சி, அந்தக் காலத்துப் பெரும் எழுத்தாளர்களையே வியக்க வைத்தது. அந்நூலின் மூலமாக, மனிதர்களுக்கிடையேயான தொடர்பையும், மொழியின் மகத்துவத்தையும், அன்பின் ஆழத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
அந்நூலின் வெற்றி, அவரை உலகளவில் ஓர் எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஒரு மாபெரும் அடையாளமாகவும் மாற்றியது. குறிப்பாக, புத்தக வாசிப்பாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் வரிசையில் அந்நூல் இடம்பிடித்தது. இது வெறுமனே ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான ஒரு முக்கிய பாடமாக அமைந்தது. நூலின் வெற்றி, மேலும் சவால்கள் நிறைந்த பாதையை நோக்கி அவரை அழைத்துச் சென்றது என்பதே உண்மை.
பார்வையற்ற மற்றும் செவித்திறனற்ற பெண்ணாக இருந்து நூலை எழுதி முடித்த சாதனை ஒருபுறம் என்றால், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்த சாதனை மறுபுறம் இருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண், சாதாரண மாணவர்களோடு இணைந்து கல்வி பயில்வது கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. என்னதான் அவரால் செய்துவிட முடியும் என்று பேராசிரியர்கள், சக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஒவ்வொரு நாளும் ஹெலன் கெல்லரை வியப்புடன் பார்த்தனர்.
ராட்கிளிஃப் கல்லூரியில் அவர் கற்ற பாடங்கள் வெறும் புத்தக அறிவை மட்டும் அளிக்காமல், அவருக்கான வாழ்க்கை அனுபவங்களை வழங்குவதாகவும் இருந்தன. ஒரு பாடப் புத்தகத்தின் சாராம்சத்தை, விரல் நுனிகளின் வழியாக ஆனி சல்லிவன் உணர்த்த, அதைத் தன் மூளையில் ஏற்றிக்கொண்டு, அதன் மூலமாகத் தேர்வுகளை எதிர்கொள்வது என்பது அசாதாரணமான செயல். பல மணிநேரம் பிரெய்லி புத்தகங்களைப் படித்து, தன் அறிவை வளர்த்துக்கொண்டார் ஹெலன்.
ராட்க்ளிஃப் கல்லூரியில் இணைந்த பிறகு, அவருக்கு இருந்த மிகப்பெரிய சவால் தகவல்களைத் திரட்டுவதல்ல, அந்தத் தகவல்களைத் தன் சூழலுக்கு ஏற்ப உருமாற்றிக் கொண்டு தீர்க்கமாக உள்வாங்குவதே. எனினும் தத்துவம், இலக்கியம், வரலாறு எனப் பல துறைகளில் அவர் ஆழ்ந்த ஞானத்தைப் பெற்றார். ராட்க்ளிஃப் கல்லூரியில் அவர் பட்டம் பெற்ற அந்தத் தருணம், நவீன வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாளாகும். பட்டமளிப்பு விழாவில் சக மாணவர்களுடன் இணைந்து ஹெலன் கெல்லர் பட்டம் பெற்றபோது, அந்த அரங்கில் இருந்த ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் இருந்தது.
ஹெலனின் கல்விப் பயணம், வெறும் தனிநபர் சாதனையாக மட்டும் நின்றுவிடாமல், அது ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அவர் பட்டம் பெற்ற நிகழ்வு, உலகம் மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கும் கோணத்தையே மாற்றியது. அவரது வெற்றி வெறுமனே ஒரு தனி நபரின் அங்கீகாரம் சார்ந்த விஷயமாக இருக்கவில்லை. அது சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பிய ஓர் அரிய நிகழ்வு. அன்று ஹார்வர்ட் வளாகத்தில் அவர் பெற்ற பட்டம், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் கனவுகளுக்கு வித்திட்டது.
கல்வித் துறையில் அவர் காட்டிய ஆர்வமும் அவரது விடாமுயற்சியும் அந்தக் காலகட்டத்து அறிஞர்களை வியக்க வைத்தன. ஒரு சராசரி மனிதரைப்போல் தானும் தகுதியானவர் என்பதையும், எந்தத் தடையையும் மீறி தன்னால் அறிவுப் பயணத்தைத் தொடர முடியும் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டினார்.
அந்தப் பட்டம் அவருக்கென ஒரு தனிப்பட்ட அடையாளத்தைத் தந்ததோடு, அவரை ஒரு சமூகப் பொறுப்பாளராகவும் மாற்றியது. ஒரு சராசரி மனிதரைப்போல் மட்டும் வாழ்ந்து விடாமல், உலகெங்கிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காகவும் அவர்களின் நலன்களுக்காகவும் தன் குரலை ஒலிக்கத் தொடங்கினார். கல்வி என்பது அறிவை வளர்ப்பதற்கான கருவி மட்டுமல்ல, அது அதிகாரத்தை எதிர்ப்பதற்கான ஆயுதம் என்பதையும் ஹெலன் உணர்ந்திருந்தார். அந்த வகையில் கல்லூரி பட்டப்படிப்பு அவருக்குத் தன்னம்பிக்கையைத் தந்தது. அந்த நம்பிக்கையை வைத்துத்தான் சமூகப் பணிகளில் அவர் ஈடுபடத் தொடங்கினார். அவரால் எழுதப்பட்ட ஒவ்வொரு கட்டுரையும், அதன் மூலம் அவர் வெளிப்படுத்திய ஒவ்வொரு கருத்தும் சமூகப் பார்வையைக் கொண்டிருந்தன.
அந்த நூலின் வெற்றிக்கும் படித்துப் பெற்ற பட்டத்திற்கும் பின்னால் இருந்த ஹெலனின் உழைப்பு ஒரு கடலை நீந்திக் கடப்பதற்குச் சமமானது. அவரது எழுத்துப் பயணமும் கல்விப் பயணமும் அவருடைய ஆன்மாவில் நீக்கமற நிறைந்திருந்த தீராத தாகத்தின் வெளிப்பாடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது, ஹெலன் கெல்லர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு சகாப்தம் என்பது புரியும். தடைகள், கேலிகள், இயலாமை என்று முத்திரை குத்தப்பட்ட தருணங்கள் போன்ற அனைத்தையும் கடந்து சென்றே, தனக்கான பாதையை அவர் வகுத்துக்கொண்டார்.
அயராத உழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தியதுடன், அவற்றின் மூலமாகத் தன்னை ஒரு சமூக ஆர்வலராக மாற்றுவதற்கான அடித்தளத்தையும் அமைத்துக்கொண்டார். அந்த அடித்தளம் வலுவாக இருந்ததால்தான், பின்னாளில் அவர் உலகத்தையே தனது அறிவால் கட்டிப்போட முடிந்தது. இதனால்தான் ஹெலன் கெல்லரின் வாழ்க்கை, காலம் கடந்தும் பேசப்படும் ஒரு வரலாறாகத் திகழ்கிறது. உலகத்தில் எவரெல்லாம் முன்னேற்றத்துக்கான தடைகளைச் சந்திக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அது ஒரு பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்’ நூலில் எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு வரியிலும், தன் மீதான நம்பிக்கையுடன் உலகின்மீதான பேரன்பும் கலந்திருந்தது. இன்றும்கூட, அந்த நூலை வாசித்தால் ஹெலன் கெல்லரின் குரல் நமக்குள் ஒலிப்பதை உணரலாம். அவர் எதையும் கண்களால் பார்க்கவில்லை, ஆனால் அவரது ஆன்மா அனைத்தையும் உணர்ந்திருந்தது. அந்த உணர்தல்தான் அவரது வெற்றிக்கான ரகசியம்.
ஹெலனின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். உழைப்பும் விடாமுயற்சியும் அன்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதைத் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஹெலன் கெல்லர் நிரூபித்துக்கொண்டே இருந்தார். மன உறுதியைத் துணையாக வைத்துக்கொண்டு எவ்வாறு ஒரு தனி மனிதர், தனிப்பட்ட பின்னடைவுகளையும் சமூகம் ஏற்படுத்திய தடைகளையும் தகர்த்தெறிந்து, அறிவின் பேரொளியைப் பரப்ப முடியும் என்பதை ஹெலன் கெல்லரின் வாழ்க்கை மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம். அவருடைய வாழ்க்கையை மனிதப் பண்பின் பரிணாம வளர்ச்சியாகவே நாம் பார்க்க வேண்டும்.
ஹெலன் கெல்லரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அத்தியாயம் முற்றுப்பெற்றது. புதிய சவால்களை எதிர்கொள்ள அவர் தயாரானார். ராட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெற்ற நிகழ்வுக்குப் பிறகு, அவரது சமூகப் பணி தொடங்கியது. அங்கீகாரமும் வெற்றியும் கிடைத்திருந்தாலும் அவர் சந்திக்கவேண்டியிருந்த போர்க்களங்கள் ஏராளமாக இருந்தன.
(தொடரும்)

