20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த அதே சமயத்தில் அமெரிக்காவில் ஒரு மாபெரும் தொழிற்புரட்சி சத்தமின்றி நடைபெற்றது. அதன் பலனாக அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியைக் கண்டாலும், அந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமானதாக இருந்தது. பணம் படைத்தவர்கள் மேலும் பணம் சம்பாதித்தனர். ஆனால் ஏழ்மை சூழலில் இருந்தவர்களின் நிலையோ எந்த மாற்றமும் இல்லாமல் பரிதாபகரமாக இருந்தது. குறிப்பாக பெண்களின் நிலை இருளால் சூழப்பட்டு இருந்தது. ஏனென்றால், அன்றைய அமெரிக்கச் சமூகம் முற்றிலும் ஆணாதிக்கத்தின் இரும்புப் பிடியில் சிக்கியிருந்தது.
ஒரு பெண்ணின் உலகம் என்பது சமையலறை மற்றும் குழந்தை வளர்ப்பு ஆகியவை மட்டுமே என வரையறுக்கப்பட்டிருந்தது. கல்வி அறிவைப் பெற்று, சமூகத்தில் ஒரு பங்களிப்பாளராக மாற விரும்பிய பெண்கள் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்களது கருத்துகளுக்கும் உரிமைகளுக்கும் எந்தவிதமான வரவேற்பும் அங்கு இல்லை. ஒரு பெண் பொதுவாழ்வில் ஈடுபடுவது என்பது அவளது குடும்ப கௌரவத்திற்கு இழுக்காகக் கருதப்பட்டது. அதிலும், ஒரு பெண் அரசியல் குறித்துப் பேசுவது என்பது அன்றைய அமெரிக்கச் சமூகத்தின் பார்வையில் அத்துமீறலாகவே பார்க்கப்பட்டது. இத்தகைய அடக்குமுறையான சூழலில்தான், ஹெலன் கெல்லர் தன் குரலை ஓங்கி உயர்த்தினார். கல்வியின் வழியாகப் பெற்ற அறிவை, வெறுமனே தன்னுடைய தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், சமூக மாற்றத்திற்கான ஒரு பேராயுதமாக மாற்ற முடிவு செய்தார்.
1788-1789 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல் முதல்முறையாக நடைபெற்றது. அப்போது தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி வரை அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. அது பற்றிப் பேசக்கூட யாரும் தயாராக இல்லை. இது ஒரு மாபெரும் சமூக அநீதி என்பதைப் பொதுவெளியில் எவரும் உடைத்துப் பேசவில்லை. தங்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் சட்டங்களை உருவாக்குவதில் பெண்களுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது என்று கருதிய அந்த ஆணாதிக்கக் கட்டமைப்பு, ஜனநாயகத்தின் அடிப்படை ஆன்மாவையே கேலிக்குரியதாக்கியது. கல்வி கற்றிருந்தாலும் சரி, அரசுக்கு வரி செலுத்தினாலும் சரி, ஒரு பெண்ணால் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கவோ, சட்டம் இயற்றும் இடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யவோ முடியாது என்கிற நிலைதான் அப்போது அமெரிக்காவில் நிலவி வந்தது.
தனது கல்லூரிக் காலத்திலேயே இந்த அவலத்தை ஹெலன் கெல்லர் உணர்ந்திருந்தார். தாங்கள் வாழும் சமூகத்தின் விதிமுறைகளை உருவாக்குவதற்குத் தகுதியற்றவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு பிரிவினர் ஒதுக்கப்படுவது, அவர்களின் உரிமை மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் கண்ணியத்தையுமே சிதைக்கும் செயல் என்பதை அவர் ஆழமாக உணர்ந்திருந்தார். இந்தப் பிரச்னை குறித்து ஹெலன் கெல்லர் பேசத் தொடங்கியபோது, மேட்டுக்குடியினரும் அரசியல்வாதிகளும் அவரை ஒரு ‘விசித்திரப் பெண்’ என்று முத்திரை குத்தினர். கண்பார்வை மற்றும் செவிப்புலன் இல்லாத ஒரு பெண், அரசியல் பேசுவது அவர்களுக்கு ஒரு கேலிக்கூத்தான செயலாகத் தெரிந்தது. ஆனால், ஹெலன் கெல்லர் தளர்ந்துவிடவில்லை.
’ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்; அதில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படாதவரை, அந்த ஜனநாயகம் முழுமையடையாது’ என்று அவர் உரக்க முழங்கினார். ஹெலனின் இந்த முழக்கம் ஆணாதிக்கக் கோட்டையில் விழுந்த முதல் அடியாக அமைந்தது. அதிலும் அவர் வெறும் பேச்சாளராக மட்டும் இருக்கவில்லை; மாறாக, பெண்களின் உரிமைக்காகப் போராடிய அமைப்புகளில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு களத்தில் இறங்கினார். அவர் முன்னெடுத்த ஓட்டுரிமைப் போராட்டம் என்பது வெறும் வாக்குச் சீட்டுக்கானது மட்டுமல்ல, அது ஒவ்வொரு பெண்ணின் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான மகத்தான போராட்டமாகும். ஒரு பெண் தனது தேசத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூட உரிமையற்றவளாக இருப்பது, மனித உரிமைகளின் மிகப்பெரிய மீறல் என்பதைத் தன் உரைகளில் மிகவும் ஆழமாக ஹெலன் வலியுறுத்தினார்.
அந்த நாட்களில் அவர் நடத்திய ஒவ்வொரு போராட்டமும், அவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் அமெரிக்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்தன. வீதி ஊர்வலங்களில் அவர் கலந்துகொண்டபோது, அங்கிருந்த காவலர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் அவரை மிரட்டினார்கள். ஆனால், ஒரு மெழுகுவர்த்தி மாபெரும் இருளைக் கண்டு பயப்படாமல் எரிவதுபோல், தனது கொள்கையில் ஹெலன் மிகவும் உறுதியாக இருந்தார்.
மேலும், அன்றைய அமெரிக்கச் சமூகத்தில், வறுமை என்பது பெரும் சாபமாக இருந்தது. தொழிலாளர்களின் உழைப்பு மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டது. அதிலும், ஒரு பெண்ணின் ஊதியம், ஆண்களைவிட மிகவும் குறைவாக இருந்தது. இந்தப் பொருளாதாரச் சமமின்மைக்கு எதிராகவும் ஹெலன் குரல் கொடுத்தார். சமூக நீதி குறித்த அவரது பார்வை, சோசலிச சிந்தனைகளோடு இணைந்து பயணிக்கத் தொடங்கியது. தொழிலாளர்கள் மற்றும் வறுமையால் வாடும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாத எந்தவொரு அரசும், அந்த நாட்டிற்குத் தலைமையேற்கத் தகுதியற்றது என்று அவர் வாதிட்டார்.
செல்வந்தர்கள் மற்றும் அரசியல் அதிகார மையங்கள் ஹெலனைப் புறக்கணிக்கப் பார்த்தாலும், தொழிலாளர் வர்க்கத்தினர் அவரைத் தங்களது குரலாகப் பார்த்தனர். தனது உரைகளில், ’பசியால் வாடும் ஒரு மனிதனுக்குச் சுதந்திரம் என்பது வெறும் காகிதம்தான், அவனுக்கு முதலில் தேவை உணவும் வேலையும் கண்ணியமும்தான்’ என்று அவர் கூறினார். இந்த முற்போக்கான கருத்துகளால் அவர் பல எதிர்ப்புகளைச் சம்பாதித்துக்கொண்டார். ஆனாலும், உண்மைக்காகப் போராடுவதில் அவர் காட்டிய துணிச்சல், அவரை மற்ற சமூக ஆர்வலர்களிடமிருந்து தனித்துக் காட்டியது.
பெண்களுக்கான ஓட்டுரிமை இயக்கத்தின் வீச்சு, ஹெலன் களத்தில் இறங்கிய பிறகு மேலும் தீவிரமடைந்தது. அவர் சோர்வின்றி அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் பயணம் செய்து உரையாற்றினார். அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவது எவ்வளவு பெரிய அநீதி என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு அவர் எடுத்துரைத்தார். பிரெய்லி முறையைப் பயன்படுத்தி தனது விரல் நுனிகளால் உரைகளைத் தயாரித்து, அவர் மேடைகளில் முழங்கினார்.
அந்தக் காட்சியைப் பார்த்து, சம்பந்தப்பட்ட இடத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மெய்மறந்து நின்றனர். காது கேட்காத, பார்வையற்ற ஒரு பெண், ஒட்டுமொத்த பெண்களின் உரிமைகளுக்காக இவ்வளவு ஆழமாகப் பேசுகிறாரே என்றெல்லாம் எண்ணி அவர்கள் வியந்தனர். அந்த வியப்பு, பின்னர் அவர்களுக்கான உந்துசக்தியாக மாறியது. இல்லங்களில் முடங்கிக் கிடந்த பெண்கள் பலரும், ஹெலனின் துணிச்சலைப் பார்த்து வெளியே வரத் தொடங்கினர். அரசியல் மேடைகளில் பெண்களின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு பெண் சுயமாகச் செயல்பட வேண்டும், தனது திறமையை உலகுக்குக் காட்ட வேண்டும் என்கிற கருத்தில் உறுதியாக இருந்தார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் அதையே லட்சியமாகக் கொண்டிருந்தார்.
தன்னுடைய போராட்டங்கள் மூலமாக அமெரிக்கச் சமூகத்தில் ஒரு புதிய அலையை ஹெலன் கெல்லர் உருவாக்கினார். அவர் வெறும் பெண்ணுரிமைக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை; ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர் அனைவருக்குமான நீதிக்காகப் போராடினார். அவருடைய கட்டுரைகளும் உரைகளும் பத்திரிகைகளில் வெளியானபோது, அவை அமெரிக்கப் பெண்களிடம் பெரும் நம்பிக்கையை விதைத்தன. ஒரு பெண் கல்வி கற்று, அதைச் சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்துவது என்பது ஒரு பெரும் புரட்சி என்பதை ஹெலன் கெல்லர் நிரூபித்துக் காட்டியிருந்தார்.
சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் மீது அவர் காட்டிய பேரன்பு, அவரை ஒரு சாதாரண மனிதர் என்கிற நிலையிலிருந்து உயர்த்தி, மக்களுக்கான தலைவராக மாற்றியது. ஹெலனின் போராட்டமயமான வாழ்க்கை, சமூக நீதிக்கான அவருடைய குரல் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை இன்றளவும் உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றன. சமூகத்தால் உருவாக்கப்பட்ட அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து, சுதந்திரமான பெண்ணுக்கான அடையாளமாக அவர் திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தின் இருண்ட சூழலில், ஒரு மெழுகுவர்த்தியாக இருந்து அவர் ஏற்றிய அந்த உரிமைச் சுடர், இன்று பல கோடிப் பெண்களின் சுதந்திரத்திற்கான ஒளியாக மாறியிருக்கிறது.
அவரது அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகள் அனைத்தும் மக்களின் இதயங்களை மாற்றின. 1920ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்த வெற்றிக்குக் காரணமான ஆயிரக்கணக்கான போராளிகளில் ஹெலன் கெல்லரும் ஒருவர் என்பதை வரலாறு நினைவுகூர்கிறது. சமூகத்தின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், தனிநபர்களின் முன்னேற்றத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்பதை அவர் ஆழமாக நம்பினார். அவர் ஒவ்வொரு முறை மேடையேறியபோதும், பெண்களுக்காக மட்டுமல்லாமல் உரிமைகள் மறுக்கப்பட்ட அனைத்து மனிதர்களுக்காகவும் பேசினார்.
அவருடைய போராட்டங்களும் கருத்துகளும், பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எவரெல்லாம் தடைகளைச் சந்திக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுக்கத் தொடங்கின. பெண்களின் உரிமை மற்றும் சமூக நீதிக்கான போராட்டங்களின் ஓர் அழியாத சின்னமாக அவர் விளங்கத் தொடங்கினார்.
(தொடரும்)

