Skip to content
Home » ஹெலன் கெல்லர் #12 – விமர்சனங்களுக்குச் சாட்டையடி

ஹெலன் கெல்லர் #12 – விமர்சனங்களுக்குச் சாட்டையடி

மாற்றுத் திறனாளிப் பெண் என்றதுமே, அமைதியான தன்மையில் கவிதைகளையும் கதைகளையும் புனையும் ஒரு மென்மையான பெண்ணாக ஹெலன் கெல்லர் இருப்பார் என்று எதிர்பார்த்தது அமெரிக்கச் சமூகம். ஆனால் தனது அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளை அவர் பதிவு செய்யத் தொடங்கியபோது, இந்த ‘அமைதியான புனிதவதி’ என்கிற பிம்பம் சுக்குநூறாக நொறுங்கியது.

ஒரு பெண்ணாகத் தன்னுடைய உரிமைகளுக்காகவும், தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்திற்காகவும் ஹெலன் கெல்லர் குரல் கொடுத்தபோது, முன்பு அவருக்கு அங்கீகாரத்தையும் புகழையும் கொடுத்த அதே சமூகம், திடீரென அவரைத் தாக்கத் தொடங்கியது.

சோசலிசம் மற்றும் தொழிலாளர் நலன் குறித்தெல்லாம் ஹெலன் பேசத் தொடங்கியதும், அதுவரை அவருக்கு ஆதரவாக இருந்த ஊடகங்கள் அனைத்தும் அவருக்கு எதிராகத் திரும்பின. அவருடைய பேச்சில் இருந்த முதிர்ச்சியையும், சமூக அநீதி குறித்த அவரது ஆழமான பார்வையும் அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவரின் வாதங்களுக்கான சரியான பதில் அவர்களிடம் இல்லாத காரணத்தால், ஹெலனின் மாற்றுத்திறனையே தங்களுக்கான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்தினார்கள்.

’அவளுக்கு என்ன தெரியும்? அவளால் உலகத்தைப் பார்க்க முடியாது, எதையும் கேட்க முடியாது. பிறகு எப்படி அவள் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பற்றியெல்லாம் பேச முடியும்?’ என்று மிகவும் கீழ்த்தரமான முறையில் அவருடைய குறைபாடுகள் கேலி செய்யப்பட்டன. ஒரு பெண், அரசியல் குறித்துப் பேசுவதே அந்தப் பிற்போக்கான சமூகத்திற்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தபோது, ஹெலனின் இத்தகைய செயல்பாடுகள் சமூக ஒழுங்கிற்கு எதிரானதாகக் கருதப்பட்டன.

இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அதுவரையில் அனைத்துக்கும் ஆதரவாகவும், துணையாகவும், உற்ற தோழியாகவும் இருந்த ஆனி சல்லிவனைக்கூட ஹெலனின் அரசியல் கருத்துகளால் அதிர்ச்சிக்குள்ளாக்கின. முதலில் அவரால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அவர் தன் மாணவிக்குத் துணை நின்றார். பல ஊடகங்கள், ’ஹெலன் கெல்லர் தனது சொந்தக் கருத்துக்களைக் கூறவில்லை. அவர் யாரோ ஒருவரின் பிடியில் இருக்கும் கைப்பாவை’ என்றெல்லாம் குறிப்பிட்டு அவமானப்படுத்தின.

ஒரு பத்திரிகை ஒருபடி மேலே சென்று, ‘தனது சிந்தனைகள் என்று ஹெலன் கெல்லர் சொல்பவை அனைத்துமே ஆனி சல்லிவன் அல்லது அவரது அரசியல் தோழர்களின் சிந்தனைகள்தான். எனவே அவருடைய கருத்துகளுக்கு நாம் எந்தவிதமான தார்மீக மதிப்பும் கொடுக்க வேண்டியதில்லை’ என்று எழுதியது. ஹெலனின் அறிவுத்திறனையும் அவரது தனித்துவத்தையும் இழிவுபடுத்தும் விதமாகவே இது அமைந்திருந்தது.

ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணால் சுயமாகக் கருத்துகளைத் தெரிவிக்க முடியாது என்று நினைத்த அந்தச் சமூகத்தின் குறுகிய மனப்பான்மைக்கு, ஹெலனின் சிந்தனைகளும் செயல்களும் பெரும் சவாலை அளிப்பதாக இருந்தன. இதனாலேயே அவர் மீது சேறு வாரியிறைக்கப்பட்டது. ஆனால், தான் எதிர்கொண்ட கேலிப் பேச்சுகள் மற்றும் அவமானங்கள் குறித்து ஹெலன் கெல்லர் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மாறாக, தனது கருத்துகளை இன்னும் உறுதியாக அவர் முன்வைத்தார்.

வறுமை, பசி, ஒடுக்குமுறை ஆகியவை கண்களால் காணும் விஷயங்கள் மட்டுமல்ல, அவை இதயத்தால் உணரும் விஷயங்கள் என்று அவர் வாதிட்டார். தன் மீதான விமர்சனங்கள் அதிகமாக அதிகமாக, மேலும் தீவிரமாகச் சமூக மாற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் ஹெலன். அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் ஆற்றிய உரைகள் அனைத்தும் அந்தப் பிற்போக்குச் சமூகத்தின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாகவே இருந்தன.

ஒருமுறை ஒரு மேடையில், அவருடைய குறைபாட்டை முன்வைத்து சிலர் விமர்சித்தார்கள். அதே மேடையில் ஹெலன் பேசுவதற்கான முறை வந்தது. அவர், ‘என்னால் பார்க்க முடியாது, கேட்க முடியாது என்று கேலி செய்கிறீர்கள். ஆனால் உங்களால் பார்க்க முடியும். உங்களின் கண்களால் இந்த உலகின் அநீதியைப் பார்க்கிறீர்கள். உங்களால் கேட்க முடியும், உங்களது காதுகளால் ஒடுக்கப்படுபவர்களின் அலறலைக் கேட்கிறீர்கள். அப்படி இருந்தும், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் என்றால், ஒருவேளை என்னைப்போல் நீங்களும் பார்வையற்றவர்களாகவும் காது கேட்காதவர்களாகவும் ஆகிவிட்டீர்கள் போலும். அப்படித்தான் உங்களுடைய அமைதியை நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில் ஆரோக்கியமான கண்களும் காதுகளும் இருந்தும் நீங்கள் மௌனமாக இருப்பதுதான் உண்மையான ஊனம்!’ என்று மேடையில் முழங்கினார்.

அந்தச் சமயம், மெத்தப் படித்த அறிஞர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டவர்களை ஹெலனின் பேச்சு அதிர்ச்சியில் உறைய வைத்தது. அவருடைய இந்த அதிரடிப் பதில், அவரை அவமானப்படுத்தியவர்களின் வாயை அடைத்தது.

அன்றைய ஊடகங்களும் சமூகமும், உண்மையில் ஹெலனை ஓர் ‘அருங்காட்சியகப் பொருளாகவே’ பார்க்க விரும்பின. ஒரு மேசை அல்லது நாற்காலிபோல் ஒரு மூலையில் அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அவரோ ஓர் உயிருள்ள, துடிப்புள்ள மனிதராகச் செயல்பட்டு சமூகத்தின் அநீதிகளை எதிர்த்தார். இதுவே அந்தச் சமூகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

குறிப்பாக, பெண்களின் ஓட்டுரிமைக்காக ஹெலன் போராடியபோது, இத்தகைய விமர்சனங்கள் உச்சத்தைத் தொட்டன. ஒரு பெண் தனிப்பட்ட முறையில் பொதுவெளிக்கு வருவது தவறானதாகக் கருதப்பட்ட அந்தச் சூழலில், ஹெலன் கெல்லர் வீதி ஊர்வலங்களில் கலந்துகொண்டார். அவருடைய அந்தத் துணிச்சலைப் பார்த்த பல ஊடகங்கள், அவரை ஒரு ‘ஆபத்தான பெண்’ என்று முத்திரை குத்தின. ஆனால், ஹெலன் கெல்லர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தான் முன்னெடுத்துள்ள இந்த மாற்றம் ஒரு தனிப்பட்ட நபரின் செயல்பாடு சார்ந்தது அல்ல, அது ஒட்டுமொத்தப் பெண்களின் உரிமைக்கான போராட்டம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். வாழ்நாள் முழுவதிலும், இத்தகைய அவமானங்களையும் விமர்சனங்களையும் தனக்கான ஒரு கவசத்தைப் போலவே அவர் கருதினார்.

ஒரு கட்டத்தில் ஹெலன் கெல்லர் சோசலிச இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் பேசத் தொடங்கினார். அப்போதும் அவர் மீது விமர்சனங்களே முன்வைக்கப்பட்டன. ஹெலனின் மாற்றுத்திறனைக் கேலி செய்யும் விதமான தலையங்கங்களைப் பத்திரிகைகள் எழுதின. ஒரு மாற்றுத்திறனாளிப் பெண் அரசியல் பேசியபோது, அது அறிவு சார்ந்த விவாதமாக அணுகப்படாமல், அவரது உடல் சார்ந்த குறையே பெரிதாக்கப்பட்டது.

’ஹெலனுக்குப் பார்வை இல்லை, கேட்கும் திறனும் இல்லை. அப்படி இருக்க அவளால் எப்படி உலகைப் புரிந்துகொள்ள முடியும்? இவை அனைத்துமே கற்பனை!’ என்று எழுதியது ஒரு பத்திரிக்கை. இது ஹெலனின் அறிவுத்திறனை விமர்சிக்கும் செயலாக மட்டுமல்லாமல், அவருடைய தனிமனித உரிமையை மறுக்கும் செயலாக அமைந்தது. இவை அனைத்துமே ஒரு பெண் அதுவும் மாற்றுத் திறனாளி, சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த போராட்டக் களத்திற்கு வரக்கூடாது என்று விடுக்கப்பட்ட மறைமுகமான மிரட்டல்கள்.

அவருடைய சமூகக் கருத்துகளில், பெண்களின் ஓட்டுரிமை குறித்த நிலைப்பாடு, பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ‘பெண்களுக்கு அரசியல் வேண்டாம். அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும்’ என்று முழங்கியவர்கள், ஹெலனை வீதி ஊர்வலங்களில் பார்த்தபோது கடும் கோபமடைந்தனர். தனது கைகளில் பிரெய்லி பலகையை ஏந்திக்கொண்டு, வீதி வீதியாகச் சென்று பெண்களின் வாக்குரிமைக்காக அவர் உரையாற்றினார்.

இதனால் அவருக்கு எதிராகத் தனிப்பட்ட தாக்குதல்கள்கூட நடந்தேறின. ஆனி சல்லிவனுடன் அவருக்கு இருந்த நெருங்கிய உறவைக்கூட, அவருடைய அரசியல் கருத்துகளோடு இணைத்து தவறான முறையில் விமர்சிக்க ஊடகங்கள் முயற்சி செய்தன. அவரது உடல் சார்ந்த குறைகளை அவை மிகைப்படுத்திச் சித்தரித்தன. ஆனால், ஹெலன் கெல்லர் அதற்கெல்லாம் அஞ்சவில்லை.

விமர்சனங்கள் அதிகமானபோது, அவருடைய போராட்டக் குணம் மேலும் வீரியமானது. சொல்லப்போனால், அந்த விமர்சனங்கள்தான் அவரைப் பட்டை தீட்டின. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாகவே நான் இன்று நிற்கிறேன் என்கிற புரிதல் அவருக்கு இருந்தது. சமூகத்தின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், தனிநபர்களின் முன்னேற்றத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்கிற கருத்தின் மீது அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. அதற்காகவே ஒவ்வொரு முறை மேடையில் ஏறியபோதும், உரிமைகள் மறுக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் அவர் பேசினார்.

அவருடைய அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகள் வெறும் காகிதத்திலான கோரிக்கைகளாக அல்லாமல், மக்களின் இதயங்களில் உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தின. இவ்வாறு சமூக மாற்றத்துக்காகக் குரல் கொடுத்து, எதற்கும் அஞ்சாமல் போராட்டக் களத்தில் முன்னின்று செயலாற்றிய ஹெலன் கெல்லருக்கும் ஒரு மென்மையான பக்கம் இருந்தது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் வருகை தந்த ஒருவரால் அது வெளிப்பட்டது!

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *