Skip to content
Home » ஹெலன் கெல்லர் #13 – ஒரு போராளியின் கட்டமைப்பு

ஹெலன் கெல்லர் #13 – ஒரு போராளியின் கட்டமைப்பு

தனிப்பட்ட முறையில் உடல் ரீதியாகவும் சொந்த வாழ்விலும் பல இன்னல்களைக் கடந்து, ஓயாமல் உழைத்து, தனக்கான புகழைப் பெற்ற போதிலும், அதோடு நின்றுவிடாமல் மனித குலத்தின் சுதந்திரத்துக்காகவும் சமூகச் சமத்துவத்துக்காகவும் தன்னுடைய வாழ்நாளை ஹெலன் கெல்லர் எவ்வாறு அர்ப்பணித்தார் என்பதன் மிகச்சிறந்த சாட்சியாக அமைந்தது அவருடைய அடுத்தகட்டப் பயணம்.

பலரும் ஹெலன் கெல்லரை ஒரு கருணைமிக்கப் பேச்சாளராகவும், அமைதியான தொண்டுள்ளம் கொண்டவராகவுமே பார்க்க விரும்பினர். ஆனால் அவரோ அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக, சமூகத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் புரட்சிகரமான கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினார்.

யாராக இருந்தாலும், ஒருவருடைய பின்புலம் எதுவாக இருந்தாலும், பேச்சுரிமையும், இதர அடிப்படை உரிமைகளும் அனைவருக்கும் முற்றிலும் சமமாக இருக்க வேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார் ஹெலன் கெல்லர். அந்த உயர்ந்த மனிதநேய எண்ணத்தின் மிக முக்கியமான வெளிப்பாடுதான், எளிய மக்களின் குரல்வளையை நெரித்த அதிகார வர்க்கத்திற்கு எதிராக அவர் எடுத்த அந்த விஸ்வரூபம்.

ஹெலன் கெல்லர் வாழ்ந்த காலக்கட்டத்தில், குறிப்பாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்கச் சமூகம் பெரும் மாற்றங்களையும் கொந்தளிப்புகளையும் வரலாற்றுத் திருப்புமுனைகளையும் சந்தித்துக் கொண்டிருந்தது. தொழிற்புரட்சியின் விளைவுகள் ஒருபுறம் இருக்க, உலகளாவிய அரசியல் குழப்பங்களும் போர்ச் சூழல்களும் அம்மக்களை அழுத்திக் கொண்டிருந்தன. முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்ட அமெரிக்காவில் பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை அந்நாட்டு அரசு மிகக் கடுமையான முறையில் ஒடுக்கியது.

அமெரிக்க அரசாங்கத்தின் போக்கையும் போர்வெறி பிடித்த கொள்கைகளையும் எதிர்த்துப் பேசுபவர்கள் தேசத்துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். முதலாம் உலகப் போரில் அந்நாட்டின் பங்கெடுப்பைக் கண்டித்துப் பேசியவர்கள்மீதும், அமைதியின் பாதையை வலியுறுத்தியவர்கள்மீதும் கடுமையான அடக்குமுறைகள் ஏவப்பட்டன. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் நியாயமான கூலி கோரியும் குரல் கொடுத்த தொழிற்சங்கத் தலைவர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் எவ்விதத் தயவுமின்றிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சூழலில்தான், ஒருவரின் கருத்துகள் எத்தகையவையாக இருந்தாலும், அவரது அடிப்படை உரிமைகளை அரசின் அதிகாரத்தால் எக்காரணம் கொண்டும் பறிக்கக் கூடாது என்ற உன்னத நோக்குடன் செயல்படும் ஒரு வலுவான, சுதந்திரமான அமைப்பின் தேவை காலத்தின் கட்டாயமாக மாறியது.

அமெரிக்க அரசின் எதேச்சதிகார அடக்குமுறைகளுக்கு எதிராகவும், குடிமக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒத்த கருத்துடைய சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்தனர். இதன் விளைவாக, சமூகச் சீர்திருத்தவாதிகளாகவும் மனித உரிமைப் போராளிகளுமாகவும் அறியப்பட்ட ரோஜர் பால்ட்வின், ஜேன் ஆடம்ஸ் மற்றும் பலருடன் இணைந்து, 1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க உரிமைகள் பாதுகாப்புச் சங்கம் எனப்படும் ஏ.சி.எல்.யூ. அமைப்பைத் தோற்றுவித்த நபர்களில் ஒருவரானார் ஹெலன் கெல்லர். அந்த அமைப்பின் உருவாக்கத்தில் ஹெலன் கெல்லரின் பங்கு மிக ஆழமானதாகவும் உறுதியானதாகவும் இருந்தது. பார்வையற்றோருக்கு உதவிகளை அளிப்பதோடு மட்டுமே நின்றுவிடாமல், ஒட்டுமொத்தச் சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும் அவர் குரல் கொடுக்கத் தொடங்கியதன் நேரடி வெளிப்பாடே இத்தகைய செயல்பாடு. அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக் கண்டு மௌனமாக இருக்க மறுத்த அவர், கருத்துரிமை என்பது இப்பூமியில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது என்கிற கருத்துக்காக ஆணித்தரமாக வாதிட்டார்.

வெறுமனே பார்வையற்றோருக்கு உதவும் ஊன்றுகோலாகவோ அல்லது ஒரு செயல்பாட்டாளராகவோ மட்டும் ஹெலன் கெல்லர் இயங்கவில்லை; அவர் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தனது ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்டார். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை அவர் எந்தச் சமரசமுமின்றி வன்மையாகக் கண்டித்தார். மாற்றுக்கருத்துகளின் குரல்வளை நெரித்துக் கொல்லும் எந்தவொரு சட்டமும் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது என்பதை அவர் வாதிட்டார். கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையும், இதர சட்டப்பூர்வ உரிமைகளும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதை இந்த அமைப்பு மூலமாக ஹெலன் கெல்லர் தீவிரமாக வலியுறுத்தினார்.

ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அவர், எளிய மனிதர்களின் கருத்துரிமை பாதுகாக்கப்படுவதே உண்மையான ஜனநாயகத்தின் மிகச்சிறந்த அடையாளம் என நம்பினார். தொழிலாளர்களின் வியர்வையில்தான் தேசங்கள் கட்டமைக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து, அவர்களின் உரிமைக்காகச் சமரசமின்றி அவர் குரல் கொடுத்தார்.

ஹெலன் கெல்லர் இணைந்தெழுப்பிய இந்த ஏ.சி.எல்.யூ அமைப்பு, பிற்காலத்தில் அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய மனித உரிமைப் போராட்டங்களுக்கும், இனப் பாகுபாடு மற்றும் கருத்துரிமை தொடர்பான சட்டப் போராட்டங்களுக்கும் ஒரு பெரும் தூணாக விளங்கியது. தனிப்பட்ட முறையில் பல இன்னல்களைக் கடந்த போதிலும், மனிதகுலத்தின் சுதந்திரத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் அவர் ஆற்றிய இந்த வரலாற்றுப் பங்களிப்பு என்றென்றும் போற்றத்தக்கது. அவர் விதைத்துச் சென்ற கருத்துச் சுதந்திர விதிகள் பிற்காலத்தில் பல நாடுகளிலும் மனித உரிமைப் போராட்டங்களுக்கு ஊன்றுகோலாக அமைந்தன. பெண்களின் வாக்குரிமைக்காக ஹெலன் முன்னெடுத்த போராட்டமும் மனித உரிமை சார்ந்ததுதான்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்கூட அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாததையும், அதற்காக ஹெலன் கெல்லர் முன்னெடுத்த போராட்டம் குறித்தும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். இந்தப் பிற்போக்கான நடைமுறையைக் கடுமையாக எதிர்த்தார் ஹெலன். ‘மனித உரிமைகள் என்றால் அது இருபாலருக்கும் பொதுவானதுதான், ஓட்டுரிமை பெண்களுக்கு வேண்டும்’ என்று மேடைகளில் முழக்கமிட்டார்.

ஆனால் பல பெண்களே, ‘இந்த ஊனமுற்றவளுக்கு இது தேவையில்லாத வேலை’ என்றெல்லாம் அவரைக் கடுமையாக விமர்சித்தார்கள். பத்திரிகையாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பலதரப்பட்டவர்களும், ‘இது மிகவும் கண்டிக்கத்தக்கப் பேச்சு, இதுபோன்ற சிந்தனைகள் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும்’ என்று எழுதினர், பேசினர். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. ‘பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டும், இல்லையென்றால் அது ஜனநாயகம் அல்ல. மக்கள்தொகையில் சரிபாதி இருக்கும் பெண்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தல் நடத்தி ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவித்தால் அது எப்படி ஜனநாயக முறை ஆகும்?’ என்று தீர்க்கமாகத் தன் வாதத்தை முன்வைத்தார் ஹெலன்.

பெண்களுக்கும் ஓட்டுரிமை தேவை என்பதை அதிகார வர்க்கத்தினரின் காதுகளில் உரக்க விழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் பெண்களின் மாபெரும் நடைப்பயணம் ஒன்று திட்டமிடப்பட்டது. ஆலிஸ் பால் போன்ற சீர்திருத்தவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் முக்கியப் பேச்சாளராகவும், அந்த நடைப்பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் நபராகவும் ஹெலன் கெல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1913 மார்ச் 4 அன்று 28வது அமெரிக்க அதிபராக உட்ரோ வில்சன் பதவியேற்கவிருந்தார். அந்நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பாக நடைப்பயணப் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.

யூ.எஸ். கேபிட்டல் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து வெள்ளை மாளிகைக்கு அருகே இருக்கும் செண்டினரி ஹால் என்கிற கட்டடம் வரை முதலில் பெண்கள் நடைப்பயணம் மேற்கொள்வது, அதன்பிறகு செண்டினரி ஹாலில் வைத்துப் பேசுவது என முடிவாகியிருந்தது. கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட அந்த நடைப்பயணத்தைச் சுமார் 25,000 நபர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். காவல்துறை பாதுகாப்பும் பலமாக இருந்தது.

ஆனால் அந்த நிகழ்வின்போது ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட பார்வையாளர்கள் மிகவும் மோசமாக நடந்துகொண்டார்கள். நடைப்பயணம் மேற்கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு முன்னே சென்று அவர்கள் மேல் காரி உமிழ்ந்தும், எரிந்துகொண்டிருக்கும் சிகரெட்டுகளை மேலே எறிந்தும் தரந்தாழ்ந்து நடந்துகொண்டார்கள். அத்தகைய நடத்தைகளை அங்கிருந்த காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. மேலும், பலர் அக்கூட்டத்தில் நுழைந்து பெரும் கூச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார்கள். இதனால் பல பெண்கள் கீழே விழுந்து மிதியடிக்கு ஆளாகினர். அதில் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. ஆனாலும் ஹெலனும் அவருடைய தோழர்களும் செண்டினரி ஹாலை நோக்கி நடந்தபடியே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் அந்தக் கூட்டத்தில் கடுமையான முறையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினரால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவானதும் அமெரிக்க ராணுவம் உதவிக்காக அழைக்கப்பட்டது. வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் அதற்குள் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு உடல் காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடல்ரீதியாகப் பல பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருந்தனர். அதில் பலரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி அங்கேயே பலர் மயங்கி விழுந்தார்கள்.

இந்த நிகழ்வால் ஹெலன் கெல்லர் பெரிதும் பாதிக்கப்பட்டார். உடனிருந்த ஆனி சல்லிவன் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் பாதுகாத்தார் என்றாலும், ஆண்களின் வக்கிரமான மனப்போக்கால் மற்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அவருடைய மனம் கொதித்தது. இத்தகைய களேபரத்தால் ஹெலனுக்குக் கடுமையான களைப்பும் ஆயாசமும் ஏற்பட்டதாலும், அமெரிக்க ராணுவம் தலையிட்ட காரணத்தாலும், திட்டமிட்டபடி அன்று அவரால் பேசவே முடியவில்லை.

ஒருவழியாக 1920ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனைப் பெண்களின் சாதனைகளுக்கான முதல் அடியாகவும், நாட்டின் பொருளாதார மேம்பாடு, மற்றும் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு மிகவும் சாதகமான நிகழ்வாகவும் கருதி அகமகிழ்ந்தார் ஹெலன் கெல்லர்.

இவ்வாறு சமூக மாற்றத்துக்காகக் குரல் கொடுத்து, எதற்கும் அஞ்சாமல் போராட்டக் களத்தில் முன்னின்று செயலாற்றிய ஹெலன் கெல்லருக்கும் ஒரு மென்மையான பக்கம் இருந்தது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் வருகை தந்த ஒருவரால் அது வெளிப்பட்டது!

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *