Skip to content
Home » இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

Shelly

மிருக உணர்ச்சிகொண்டவர்களை மனிதர்களாக்கவும் ஏற்கனவே நல்ல பண்புள்ள மனிதர்களாக இருப்பவர்களை தெய்விகமானவர்களாக மாற்றவும் ஒருவழி உள்ளது. அது இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதுதான். வாழ்வின் அழகுகளை அள்ளித்தருவது இலக்கியம். வாழ்வின் அர்த்தங்களை உணர்த்தவல்லது இலக்கியம். நல்ல இலக்கியத்தை விரும்பிப் படிக்கும் ஓர் அயோக்கியனை, ஒரு போக்கிரியைப் பார்க்க முடியாது. அப்படி ஒருவன் இலக்கியத்தை ஆழ்ந்து படித்துவிட்டால் அவனுடைய போக்கிரித்தனம் மாறும் அல்லது குறையும் என்பது நிச்சயம். எதிரிநாட்டு வீரர்கள் சிறையில் இருந்தபோது ஆப்ரஹாம் லிங்கன் அவர்களை சிறையில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். சாப்பிட்டீர்களா என்றெல்லாம் கேட்டார். ‘ஐயா, அவர்கள் நம் எதிரிகள்’ என்று சொன்னபோது லிங்கன், ‘இப்போது அவர்களை நான் நண்பர்களாக்கிவிட்டேனல்லவா?’ என்றாராம். அவர் செய்த வேலையைத்தான் நல்ல இலக்கியமும் செய்கிறது. அதைப்பற்றிய ஒரு தொடர்தான் இது.

000

18-ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து 19-ம் நூற்றாண்டின் முதல் கால்வாசியில் காலமான ஆங்கிலக் கவிஞர் அவர். காலத்தால் அழிக்கமுடியாத வரிகளைக் கொடுத்தவரை மஹாகவி என்று நாம் நிச்சயம் சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு மஹாகவிதான் இக்கட்டுரை நாயகர். ஆங்கில இலக்கியத்தில் நீங்கா இடம்பெற்ற அவர் ஒரு Romantic கவிஞர் என்று அறியப்படுகிறார். காதலை ‘ரொமான்ஸ்’ என்று நாம் சொல்வோமல்லவா? அந்த ’ரொமான்ஸ்’ பற்றிய கவிதைகளை மட்டும் எழுதிய கவிஞரல்ல.

தன்னைப்பற்றிய சிந்தனை, இயற்கை அழகை ரசித்தல், கற்பனையை அதிகம் பயன்படுத்துதல் போன்ற சமாசாரங்கள் அதிகமாக இருக்கும் கவிதைகளை Romantic poetry என்று ஆங்கில இலக்கியம் சொல்லும். அப்படிப்பட்ட ஒரு கவிஞராக இருந்தவர்தான் அவர். அதுவும் சாதாரண ‘ரொமாண்டிக்’ கவிஞராக அறியப்பட்டவரல்ல. ரொமாண்டிக் கவிதை எழுதிய ‘பெரிசு’களில் ஒருவர்! ‘பெரிசு’ என்பது வயதால் அல்ல. கருத்தால். கவிதையால். ஆனால் காலத்தால் அழியாத வரிகளைக்கொடுத்த மஹாகவிகளை எந்த வரையறைக்குள்ளும் சிக்கவைக்க முடியாது.

இவரது அப்பா இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அம்மா ஒரு கசாப்புக்காரரின் மகள். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசக்கூடியவராக இருந்திருக்கலாம். கவிஞருக்கு நான்கு தங்கைகள், ஒரு தம்பி. அதுமட்டுமல்ல, இவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்தது. அதனால் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார். ஆனால் அது பரவாயில்லை. நம்மில் பலபேர் நடக்கும்போதே எதையாவது களவு கொடுக்கும்படித் தூங்கிவிடுகிறோம்.

இவர் வாழும் காலத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. வள்ளுவர்கூட பின்னாளில் அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டவர்தானே. ராபர்ட் ப்ரௌனிங், யேட்ஸ், தாமஸ் ஹார்டி போன்ற கவிஞர்கள் மற்றும் நாவலாசிரியர்கள்மீது அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கவிஞர் இவர்.

நாம் முன்னாலும் பின்னாலும் பார்த்துக்கொள்கிறோம்
எது இல்லையோ அதற்காக வருந்துகிறோம்
நமது நேர்மையான சிரிப்புகள் யாவும்
வேதனையோடு கலந்ததுதான்
நமது இனிமையான பாடல்கள் யாவும்
சோகமான எண்ணங்களையே சொல்கின்றன

என்று ஒரு கவிதையில் எழுதினார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! முக்கியமாக

Our sweetest songs are those that tell
Of saddest thought.

என்ற அந்த கடைசி இரண்டு வரிகள் இலக்கியம் தொட்ட உச்சங்களில் ஒன்று. இலக்கியம் என்பது கற்பனையின் அழகான வடிவம் மட்டுமல்ல. அது நம் துன்பத்தை, துயரத்தை, ஏமாற்றத்தை, ஏக்கத்தை, அன்பை, ஆறுதலை என எல்லா உணர்ச்சிகளையும் அழுத்தமாக, அழகாகச் சொல்பவை. அவற்றுக்கு உயிரூட்டுபவை.

சரி, புகழ்பெற்ற கவிதை வரிகளை மேற்கோள் காட்டிவிட்டதால் கவிஞர் யார் என்பதை யூகித்திருப்பீர்கள். ஆமாம். ஷெல்லிதான்.

மேலே உள்ள ஷெல்லியின் பாடல் வரிகள் சொல்லும் சத்தியத்தை நான் பலமுறை அனுபவித்துள்ளேன். ‘மன்னவனே அழலாமா’ என்ற பாடல் பிடிக்காத தமிழன் உண்டா? ஆனால் அந்தப் பாடல் ஒரு சோகப்பாடல் அல்லவா? ஆனால் அந்த சோகம்தான் எவ்வளவு இனிமையாக உள்ளது!

Rose leaves, when the rose is dead,
Are heap’d for the beloved’s bed

என்று ஒரு கவிதையில் கூறுகிறார். காதலியின் படுக்கை ரோஜா இதழ்களால் நிரப்பப் படுகிறது. ஆனால் அந்த இதழ்கள் யாவும் இறந்துபோன ரோஜாவின் இதழ்கள்தானே. கவிஞன் இயற்கையைக்கூட உயிரும் உணர்ச்சியும் உள்ளதாகவே பார்க்கிறான்.

பறித்துவிட்டால் ரோஜாவைச் சாகடித்துவிட்டதாகத்தானே அர்த்தம். அதே போல நீ போன பிறகு உன்னைப்பற்றிய எண்ணங்கள் இருக்கும் என்று கூறுகிறார். இப்படியெல்லாம் சிந்திக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும்.

அவருடைய கவிதைகளில் ‘Ozymandias’ (1818), ‘Ode to the West Wind’ (1819), ‘To a Skylark’ (1820) போன்றவை மிகவும் புகழ்பெற்ற கவிதைகள்.

‘Ode to the West Wind’ என்ற கவிதையில், ‘காற்றே, என்னையும் உன் யாழாக மாற்றிவிடு’ என்று கூறுகிறார்.

‘If Winter comes, can Spring be far behind?’ என்ற கவிதையின் கடைசிவரி ஒரு காவியமே இயற்றுகிறது. துன்பம் வந்தால் நிச்சயம் இன்பம் அதன் பின்னாலேயே வரும் என்பதைத்தான் இந்த வரியில் மிக அழகாக, ’குளிர்காலம் வந்தால், அதையடுத்து வசந்தகாலம் விரைவில் வராமல் போய்விடுமோ’ என்று கேட்கிறார்.

ஆனால் அது கேள்வியல்ல. பதில்தான். இருக்காது என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார். குளிர்காலம் என்பது துன்பத்தையும் வசந்தகாலம் இன்பத்தையும் குறிக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இருட்டு அதிகமானால் விடியப்போகிறது என்றுதானே அர்த்தம்?

ஆங்கில இலக்கியம் தரும் மிக அழகான, மிக முக்கியமான செய்திகளில் இது ஒன்று. இலக்கியமானது மனிதனுக்கு சந்தோஷம் தரவேண்டும். அல்லது ஆறுதலையாவது தரவேண்டும். அது ஒரு புதினத்தில் இருக்கலாம், ஒரு நாடகத்தில் இருக்கலாம், ஒரு கவிதையில் இருக்கலாம். ஒரேயொரு வரியில் இருக்கலாம்.

‘Ode to the West Wind’ கவிதையின் இறுதி வரியும் அப்படிப்பட்டதுதான். துன்பப்படும் எல்லா மனிதர்களையும் அது தேற்றுகிறது. வெறும் வார்த்தைகளினால் மட்டுமல்ல. ஓர் அழகிய உதாரணத்தின் மூலமாக. குளிர்காலம் என்று ஒன்று வந்தால் அதையடுத்து வசந்த காலம் நிச்சயம் வரும் என்ற உதாரணத்தின் மூலமாக.

ஒரு கவிஞர் கவிதை எழுதும்போது வேறு உலகத்துக்குப் போய்விடுகிறார். அன்றாட வாழ்வில் அவர் சாத்தானாக இருந்தாலும் கவிதை எழுதும்போது தேவதையாகிவிடுகிறார். இது எல்லா இலக்கிய படைப்பாளிகளுக்கும் பொருந்தும். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை படு கேவலமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் படைக்கும் இலக்கியம் உன்னதமானதாக இருக்கும்.

ஷெல்லியின் வாழ்வு கேவலமானதல்ல. ஆனால் பல கேள்விகளுக்குரியதுதான். ஒருவேளை ஈட்டன் என்ற கல்லூரியில் அவர் படிக்கும்போது ‘சீனியர்’களால் அவர் பட்ட அவஸ்தைகள் அவரை அப்படி ஆக்கியிருக்கலாம். மூத்த மாணவர்களுக்கு ஊழியம் பார்க்க வேண்டும். அதை ஆங்கிலத்தில் fagging என்று சொல்வார்கள். ஷெல்லி இந்த fagging-னால் மிகவும் பாதிக்கப்பட்டார்.

ஹாரியட் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஷெல்லி. காதலுக்குப்பின் கவிதை எழுதுபவர்கள் உண்டு. ஆனால் இவர் கவிதை எழுதி, பின்னர் காதல் செய்தவர்.

ஹாரியட் சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்த பெண் என்பதால் கடுப்பான ஷெல்லியின் அப்பா ஷெல்லிக்கு அனுப்பிக்கொண்டிருந்த உதவிப்பணத்தை நிறுத்தினார். காதலுக்கு அவமரியாதை.

ஆனால் எலிஸபத் என்ற இன்னோரு திருமணமாகாத பள்ளி ஆசிரியை ஒருவரோடும், திருமதி ஹாரியட் என்ற பெண்ணோடும் ஷெல்லி ‘காவியக்காதல்’ கொண்டிருந்தார். அதுவும் போதாதென்று மேரி என்ற பெண்ணோடு ஒரு கட்டத்தில் ஓடிப்போனார். கொஞ்ச காலம் கழித்து அவரைத் திருமணமும் செய்துகொண்டார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் காவியத்தில் மட்டுமே சாத்தியம். ஒருவனுக்கு ஒரு நேரத்தில் ஒருத்தி என்பதே நிஜத்தில் பெரும்பாலான மனிதர்களின் வாழ்முறையாக உள்ளது.

1822-ம் ஆண்டு ஷெல்லியும் ஒரு நண்பரும் ஷெல்லியின் ‘டான் ஜுவன்’ என்ற படகில் சென்றனர். ஆனால் அது ஒரு புயலில் சிக்கி அமிழ்ந்து போனது. பத்து நாள் கழித்து மிகவும் அழுகிப்போன ஷெல்லியின் உடல் கரையில் ஒதுங்கியது. அடையாளமே தெரியவில்லை. ஆனால் அவரது கோட்டின் ஜேபியில் கீட்ஸின் கவிதை ஒன்று இருந்ததை வைத்து அடையாளம் கண்டுபிடித்தார்கள். கவிஞனின் அடையாளம் கவிதைதானே.

ஷெல்லியின் உடலை எரித்தபோது அவரது இதயம் மட்டும் எரிய மறுத்தது. அது ஹண்ட் என்பவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதை மதுவில் போட்டு வைத்திருந்தார். இதயத்தை உருக்கும் கவிதைகளை எழுதியவரின் இதயம் மதுவில்!

கவிதை மட்டுமின்றி, நாவல், நாடகம் ஆகியவற்றையும் ஷெல்லி எழுதியுள்ளார். ஆனால் கவிதைகளுக்காகவே நினைவுகூறப்படுகிறார், கொண்டாடப்படுகிறார். கொண்டாடப்படுவார். ஏனெனில் அவரது எழுத்தின் ஆன்மா அவரது கவிதைகளில்தான் உள்ளது. அவர் இறந்தபோது அவருக்கு வயது 29தான்!

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *