Skip to content
Home » இலக்கியம் தரும் பாடம் #2 – அழகே சத்தியம்; சத்தியமே அழகு

இலக்கியம் தரும் பாடம் #2 – அழகே சத்தியம்; சத்தியமே அழகு

Keats

கவிஞர் ஷெல்லி இறந்தபோது அவரது கோட் ஜேபியில் ஒரு கவிதை இருந்தது. அந்தக் கவிதை ஜான் கீட்ஸ் எழுதியது. ஷெல்லி தன் 29வது வயதில் நீரில் மூழ்கி இறந்து போனார். ஆனால் ஜான் கீட்ஸ் தன் 25வது வயதிலேயே கடுமையான காச நோயினால் இறந்துவிட்டார். இந்தக் காலமாக இருந்திருந்தால் ஒரு ஊசி போட்டு அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அவர் வாழ்ந்ததோ 1800களின் தொடக்கம்.

படைப்பாளிகள் என்றுமே இறப்பதில்லை என்பதுதான் சத்தியம். நம் உறவினர்கள் யாராவது இறந்துபோனால் நாம் சில நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிப்போம். கொஞ்ச காலம் கழித்து அவர்களை மறந்துவிடுவோம். அல்லது எப்போதாவது நினைவுகூர்வோம்.

ஆனால் கவிஞர்கள், இலக்கியவாதிகளின் நிலை அப்படிப்பட்டதல்ல. அவர்கள் என்றும் வாழ்கின்ற நித்தியர்கள். உடலுடன் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கட்டத்தில் முடிந்துவிட்டாலும் அவர்கள் தன் எழுத்தால் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். உறவினர்களால் மட்டுமல்ல, உலகத்தாரால் அவர்கள் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கு இன்னொரு உதாரணம்தான் ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸின் வாழ்க்கை.

ஷெல்லி வாழ்ந்த காலத்தில், 1800களில் வாழ்ந்தவர் ஜான் கீட்ஸ். அவருடைய Ode to a Nightingale (வானம்பாடிக்கான வாழ்த்துப்பாடல்) என்ற கவிதைக்காக அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். என்றும் நினைவுகூரப்படுவார்.

‘வாழ்த்துப் பா’ என்று தமிழில் சொல்லப்படும் ஆறு கவிதைகளுக்காக (Six Great Odes) அவர் கொண்டாடப்படுகிறார். காலம் முழுவதும் கொண்டாடப்படுவார். அதில் ஒன்றுதான் அந்த ‘Ode on a Grecian Urn’ என்ற கவிதை. அந்தக் கவிதையின் கடைசி வரிக்காகத்தான் இந்தக் கட்டுரையே எழுதப்பட்டிருக்கிறது. அப்படி என்ன உள்ளது அந்தக் கடைசி வரியில்?

Urn என்றால் ஜாடி என்று பொருள். அது ஒரு கிரேக்க ஜாடி. அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த கிரேக்க ஜாடியை கீட்ஸ் பார்க்கிறார். அதன் அழகால் தூண்டப்பட்டு, அதைப்பற்றி ஒரு கவிதையை எழுதினார். அது காலத்தை வெல்லப்போகும் கவிதை என்று அவருக்கு அப்போது தெரியாது. அவருக்குத் தோன்றியபடி அதை அப்போது எழுதினார்.

அவர் இறந்துபோவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய கவிதை அது. இப்படிப்பட்ட ‘ஓட்’ எனப்பட்ட ஆறு வாழ்த்துப் பாக்களை அவர் எழுதினார். அவை:

1. Ode on a Grecian Urn
2. Ode on Indolence
3. Ode on Melancholy
4. Ode to a Nightingale
5. Ode to Psyche
6. To Autumn

இதில் முதல் கவிதையைப்பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் பேசுகிறோம். அதிலும் குறிப்பாக அதன் இறுதியில் வரும் ஒரு வரியைப்பற்றி. அவ்வரி ஒரு வரையறையைக் கொடுக்கிறது. அந்த வரையறை காவிய வரையறை என்று சொல்லவேண்டும். ஒரு ஒட்டுமொத்த காவியத்தில்கூட முழுமையாகச் சொல்லிவிட முடியாத ஒரு விஷயத்தை ஒரே வரியில் கீட்ஸ் சொல்லிவிடுகிறார் என்பதுதான் அக்கவிதையின் சிறப்பு. இந்தக் கவிதை 1819-ல் எழுதப்பட்டது.

ஒரு ஜாடியைப் பார்க்கிறார். அழகான கிரேக்க ஜாடி. உடனே அதைப்பற்றி, அதன் அழகு பற்றி, அதில் வரையப்பட்டுள்ள அல்லது செதுக்கப்பட்டுள்ள ஓவியக்காட்சியைப்பற்றியெல்லாம் எழுதத் தொடங்கிவிடுகிறார். அதன் முடிவில் அந்த முடிவுக்கு அவர் வருகிறார்.

அந்த ஜாடியில் ஆண்களும் பெண்களும் வாத்தியக்கருவிகளும் வரையப்பட்டுள்ளன. அவர்கள் துரத்தப்படுவதாகவும், ஓடித் தப்பிக்க முயற்சி செய்வதுபோலவும் அவ்வோவியங்கள் உள்ளன. அந்த வாத்தியக்கருவிகளைப் பார்த்தவுடன் அதனால் உந்தப்பட்டு சாகா வரம்பெற்ற சில வரிகளை எழுதுகிறார்:

Heard melodies are sweet,
But those unheard are sweeter!

அடடா, எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! கேட்ட இசையைவிட கேட்காத இசையே மிகவும் இனிமையானது. ஏனெனில் கேட்ட இசை முடிவுக்கு வந்த ஒன்று. கேட்காத இசை முடிவற்றது. உண்மைதானே.

இப்படியே போகும் அக்கவிதை ஐந்து பத்திகளைக்கொண்டது. ஒவ்வொரு பத்தியிலும் பத்து வரிகள். இறுதிப்பத்தியில்தான் கவிஞர் தன் தத்துவத்தைச் சொல்கிறார். அந்த கிரேக்க ஜாடியின் அழகு அந்த தத்துவத்தை நோக்கி அவரை நகர்த்துகிறது.

‘ஓ அமைதியான, கற்பிழக்காத மணமகளே’ என்று அக்கவிதை தொடங்குகிறது. ஒரு ஜாடியை அவர் கன்னி கழியாத மணபெண்ணாகக் கற்பனை செய்கிறார்.

அவர் இக்கவிதையை எழுதியபோது அது அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. பாராட்டப் படவில்லை. ஆனால் இன்று அது வெகுவாகப் பாராட்டப்படுகிறது. ஆழமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

அந்த ஜாடியில் வரையப்பட்ட ஓவியத்தில் உள்ள இரண்டு காட்சிகளின்மீது அவரது கவனம் குவிகிறது. தன் காதலியைத் துரத்திக்கொண்டு செல்லும் காதலன், கிராமத்து மக்களும் ஒரு பூசாரியும் ஒரு யாகம் செய்யக் கூடியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அந்த ஜாடி மனிதர்களைப் பார்த்து, ‘சத்தியமே அழகு; அழகே சத்தியம். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்’ என்று சொல்கிறது.

அந்தக்கடைசி வரிதான் நித்தியத்தன்மை கொண்டது. ஒரு ஜாடியை வைத்து ஒரு பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது.

அழகை நாம் வேறெங்கும் தேடவேண்டியதில்லை. இயற்கையிலோ பெண்ணிலோ பொருளிலோ அது இல்லை. ஏனெனில் நமது மனநிலையைப் பொறுத்து ஒரு கட்டத்தில் அழகாகத் தோன்றுவது இன்னொரு கட்டத்தில் அசிங்கமாகத் தோன்றலாம். அழகுக்காக மணமுடிக்கப்பட்ட பெண்ணோடு அடிதடி சண்டை போடும் கணவர்களை நாம் பார்க்கத்தானே செய்கிறோம். ஏன், பல காதல் திருமணங்கள் கொலையில்கூட முடிந்துள்ளதே.

Beauty is truth, truth beauty, that is all
Ye know on earth, and all ye need to know.

என்று முடிகிறது கவிதை. எது அழகோ அதுதான் சத்தியம். எது சத்தியமோ அதுதான் அழகு என்று முடிக்கிறார் கீட்ஸ்.

கவிதையின் செய்தியும் இதுதான். அழகைத்தேடி நாம் எங்கும் அலையவேண்டியதில்லை. அது நிச்சயமாக உடலில் இல்லை. ஏனெனில் நம் மனநிலைக்குத் தக்கபடி அழகு பற்றிய நம் கருத்தும் மாறிக்கொண்டே இருக்கும்.

உண்மையாக இருப்பதுதான் அழகு என்ற பெரும் தத்துவத்தை இக்கவிதை அதன் முடிவில் கூறுகிறது.

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *