Skip to content
Home » இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

கவிஞர்கள் அனைவரையும் மஹாகவி என்று நாம் சொல்லுவதில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. அப்படியானால் மஹாகவிக்கான வரையறைகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு இதுதான், இப்படித்தான் என்று பதில் சொல்லிவிடவும் முடியாது. வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை மஹாகவி என்றும் சொல்லிவிடக்கூடாது.

அப்படி வர்ணிக்கப்படும் ஒரு கவிஞரை உலகமே அப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அவர் எந்த மொழியில் எழுதினாரோ அம்மொழி பேசும் மக்களாவது அவர் ஒரு மஹாகவிதான் என்பதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்ச் சமுதாயமும் உலகமும் மஹாகவிதான் என்று ஏற்றுக்கொண்ட ஒருவர்தான் நம் பாரதியார். ஆனால் அவர் ஏன் அப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார்? தமிழைப் புகழ்ந்து பாடியதாலா? குடும்பத்தைவிட கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாலா? சுதந்திர தாகத்தைக் கவிதைகளில் காட்டியதாலா? கடவுளைப் புகழ்ந்து காவியங்கள் எழுதியதாலா?

ஒருவர் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு, இலக்கிய இலக்கணங்களைப் பின்பற்றி, அவற்றைக் கசடறக்கற்று, பின்னர் அதில் பாண்டித்தியம் பெற்று எழுதலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களும் மஹாகவி ஆகிவிடுவதில்லை. அப்படியானால் யார்தான் மஹாகவி?

இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன். மஹா கவிகள் என்று சொல்லப்பட்ட சிலரின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தேன். திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. ஆனால், பாரதியின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறு குறிப்பு கிடைத்தது. அதைப் பகிர்ந்துகொள்ளும் முகமாகத்தான் இந்தக் கட்டுரை.

இந்தக்கேள்விக்கு நான் கண்டு பிடித்த பதில் இதுதான். யாருடைய ரத்தத்தில், அணுக்களிலெல்லாம் கவிதை ஓடுகிறதோ அவரே மஹாகவி. அவர் எதையும் கற்றுக்கொண்ட பின்னர் எழுதுவதில்லை. அவர் எழுதுவார். அவரிடமிருந்து நாம்தான் கற்றுக்கொள்வோம்! அப்படிப்பட்டவர்தான் மஹாகவி. இதுதான் எனது அனுபவக் கண்டுபிடிப்பு.

மழை அதுவாகத்தான் பெய்யும். நாம் அதை வரவழைக்க முடியாது. அப்படி வரவழைக்கப்பட்ட செயற்கை மழையில் இயற்கை மழையின் அழகோ பயனோ முற்றிலுமாக இருக்காது.

மஹாகவிகளும் அப்படித்தான். அவர்கள் மழையைப் போன்றவர்கள். அவர்கள் கற்றுக்கொண்டும் எழுதுவார்கள். முறையான கற்றுக்கொள்ளல் எதுவும் இல்லாமலும் எழுதுவார்கள். கம்பனைப்போல, வள்ளுவனைப்போல, மில்டனைப்போல, ஷேக்ஸ்பியரைப் போல, நான்கு காப்பியங்கள் எழுதிய வண்ணக்களஞ்சியப் புலவரைப்போல. அப்படியொரு கவிஞரைத்தான் நம் பார்க்க இருக்கிறோம்.

அவர் நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த கவிஞர். நம் இதயத்தோடு ஒன்றியவர். நம் மரியாதைக்கு உரியவர். குடும்பத்தின் பசி போக்க, சோறு சமைக்க அரிசி வாங்கி வந்து, வழியில் அதையெல்லாம் குருவிகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு, ‘காக்கைக்குருவி எங்கள் ஜாதி’ என்று பாடியவர்.

ஆன்மிகத்தின் உச்சியை அனுபவத்தில் தொட்டவர். எல்லாவற்றிலும் இறைவனைப் பார்த்தவர். ‘தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்று பாடிய ஞானி.

ஆமாம். இப்படி எழுதியவர் நிச்சயம் ஒரு ஞானியாகத்தான் இருக்கவேண்டும். எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதே ஆன்மிகத்தின் உச்சம் என்று சொல்லவேண்டும். இந்த உச்சத்தை சூஃபிகள் ‘வஹ்தத்துல் வுஜூத்’ என்று சொன்னார்கள். அந்த உச்சத்தைத் தொட்டவர் பாரதி.

அவர் கொஞ்சம் சின்ன வயதில் இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதைப்பற்றித்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன். அவர் ஒரு மஹாகவி என்பதைக் காட்டிய நிகழ்ச்சி அது.

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்று ஒரு தமிழ்ப் புலவர் இருந்தார். பாரதியை விட வயதில் மூத்தவர். ஒருநாள் மன்னர் அவையில் இருந்தபோது பாரதியின் புலமையைச் சோதிப்பதற்காக அவருக்கு ஈற்றடி கொடுத்து வெண்பா ஒன்றை பாடச் சொன்னார்கள்.

காந்திமதிநாதன் என்ற மூத்த கவிஞர் பாரதியின் வயதைப்பார்த்து அவர்மீது கொஞ்சம் பொறாமை கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும் அரசவையில் தனக்குக் கிடைக்கும் மரியாதையைப்போல சின்னப்பையனான பாரதிக்கும் கிடைக்கிறதே என்ற பொறாமைதான்.

மன்னர் வைத்த போட்டிக்காக, காந்திமதிநாதன் என்ற அந்த மூத்த கவிஞர் வேண்டுமென்றே “பாரதி சின்னப் பயல்,” என்று ஈற்றடி கொடுத்து பாரதியை கவிதை பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்ததைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் மஹாகவிகளுக்கு கால அவகாசமோ முன் தயாரிப்போ எப்போதுமே தேவைப்பட்டதில்லை. பாரதி உடனேயே, ஆமாம் உடனேயே,

“ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கி கழ்ந்தென்னை ஏளனம்செய் மாண்பற்ற‌
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்”

என்று பாடினார்.

அவை அதிர்ந்தது. அதைக் கேட்டு சபையோர் பரிகசிக்க குறுகிப்போனார் காந்திமதிநாதன். ஏனெனில் ‘காந்திமதி நாதனைப் பார், அதி சின்னப்பயல்’ என்று காந்திமதி நாதன் மீதே விமர்சனமாக அக்கவிதை திரும்பியிருந்தது!

வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடியும் பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

“ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரதி சின்னப் பயல்”

வயதில் இளையோன் என்று அன்போடு மழைபோல் என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர். இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14தான்.

மஹாகவிகள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை.

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *