காட்டின் மத்தியில் அமைந்திருந்த மிகப் பழமையான குகை அது. தெற்கில் மலை உச்சியின் மேல் இருந்த அந்தக் குகையின் நுழைவாயில் அரைச்சந்திரன் வடிவில் இருக்கும். உள்ளேறிச் சென்றால் அகன்று ஒடுங்கி நீளும் அக்குகையின் முடிவில் ஒரு மனிதன் நுழையக்கூடிய அளவு துவாரமொன்று அமைந்திருக்கும். அதற்கு அடியில் எந்நேரமும் சலசலத்து ஓடும் சிறு ஓடை. மிகவும் ரம்மியமான அந்தக் குகைக்குள் சில ஆதிவாசிக் குடும்பங்கள் வசித்து வந்தன.
ஒரே குகைக்குள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு என எல்லைகள் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குடும்பமும் தங்களது எல்லைகளைத் தாண்டாது ஒற்றுமையாக வாழ்ந்தனர். பெண்களும் குழந்தைகளும் குகைக்குள் இருக்க, ஆண்கள் காட்டுக்குள் சென்று வேட்டையாடி, தங்களது குடும்பத்துக்குத் தேவையான இறைச்சிகளைச் சேகரித்து வந்தனர்.
அந்த வேடர் குழுவில் சமன் என்கிற ஆதிவாசியொருவனும் இருந்தான். அவனுக்குக் குவேனி என்கிற அழகிய மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் இருந்தனர். பழங்குடிகள் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெறுவதை வரமாக நினைத்தனர். அதனால் அங்கிருந்த ஒவ்வொரு பழங்குடிக் குடும்பத்திலும் பத்து, பதினைந்து குடும்ப உறுப்பினர்களாவது இருந்தனர்.
தனது ஐந்து குழந்தைகளுக்கும், மனைவிக்கும், வயது முதிர்ந்த பெற்றோருக்கும் வேண்டிய இறைச்சியைத் கவர்ந்து வரும் மிகப்பெரிய பொறுப்பு சமனுக்கு இருந்தது. குகைக்குள் வசித்த பழங்குடி ஆண்கள், வேட்டையாடுவதற்கு ஒரே பகுதிக்குள் குவியாது வெவ்வேறு திசையில் செல்வர். அன்றும் வழக்கம்போல் குகையிலிருந்து வெளியேறிய ஆண்கள் வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றனர்.
சமன் காட்டின் கிழக்குப் பக்கமாகச் சென்றான். கிழக்குதான் அவன் வழக்கமாகச் செல்லும் பகுதி. மரை, உடும்பு, பன்றி, பறவைகளென ஏதோ ஒன்று அவனுக்குக் கிடைத்துவிடும். அவனது மனைவி குவேனியும் தாயாரும் குகைக்கு அருகிலேயே உள்ள சிறிய காட்டில் கிழங்குகளைச் சேகரிப்பதற்காகச் செல்வர்.
வேட்டையாடிவிட்டு மாலையில் குகைக்குத் திரும்பும் அவர்கள், கூட்டமாக அமர்ந்து, தீ மூட்டி, காட்டுக் கிழங்குகளையும் இறைச்சிகளையும் அதில் வாட்டி, உற்சாகமாகப் பாடல்கள் பாடி, நடனமாடி உணவைப் பகிர்ந்து உண்பர். உணவின் ஒரு பகுதியை உறவுப் பேய்களுக்குப் படைத்தபின் விருந்து நடைபெறும்.
வேட்டைக்குச் செல்கிற பழங்குடி ஆண்களின் மகிழ்ச்சியை அன்று அவர்களுக்குக் கிடைக்கிற வேட்டைதான் தீர்மானிக்கும். வேட்டை அகப்படவில்லை என்றால் குடும்பம் பட்டினியாகும் என்ற கவலை அவர்களை வாட்டும். அன்று வேட்டைக்குச் சென்ற சமனுக்கு ஒரு மிருகமும் பிடிபடவில்லை. அது கோடை காலம் வேறு. வெயில் சுட்டெரித்தது. நீரோடைகள் எல்லாம் வற்றி தண்ணீர் ஓடிய தடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன.
நீண்ட நேரம் தேடிய அவனுக்கு ஒரு மிருகமும் கண்ணில் படவில்லை. எப்போதும் ஏதாவது சிக்கிவிடும். ஆனால் இன்று ஒன்றும் அகப்படவில்லையே? அவனுக்கே அது குழப்பமாகத்தான் இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைத் தளரவிடாத அவன், உணவைத் தேடி காட்டின் நடு எல்லையையும் தாண்டிச் சென்றான்.
இடையில் இரண்டு மான்களும் ஒர் உடும்பும் எதிர்பட்டன. ஆனால் கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை. சமன், ஓடியோடிக் களைத்துவிட்டான். சிறிது ஓய்வெடுக்க எண்ணினான். ஆனால் அது யானைகள் நடமாடும் பகுதி. படுப்பது பாதுகாப்பில்லை. என்ன செய்வது என்று யோசித்த அவனுக்குப் பெரிய பாறைக் குன்றொன்று கண்ணில் பட்டது. அதில் பெரிய மரமொன்று வளர்ந்து, கிளைகள் பரப்பி, நிழல் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்த மரத்தின் அடியில் சிறிது உறங்கலாம் என்று முடிவெடுத்தான்.
தாகம் வேறு அவனை வாட்டியது. விலங்குகள் வேறு சிக்கவில்லை. இன்று குடும்பத்தின் பசியை எப்படிப் போக்குவது என்ற கவலையிலேயே மரத்தின் விழுதுகளைப் பிடித்துப் பாறையின் மேல் ஏறினான். அங்கே அவனுக்குக் கடவுளைக் கண்டது போன்ற காட்சி ஒன்று காணக் கிடைத்தது.
ஆம், இரு பாறைகள் சேரும் இடத்தில் சிறிய நீர்த் தேக்கம் ஒன்று இருந்தது. அதி்ல் ஆயிரக்கணக்கில் இலைகள், காட்டுக் கனிகள், சிறிய பூச்சிகள் விழுந்திருந்தன. முதலில் சமனுக்குத் தயக்கம். இந்த நீரைக் குடிக்கலாமா? வேறு வழியில்லை. தாகம் தீர்வதற்குக் குடித்துத்தான் ஆக வேண்டும்.
அருகே சென்ற அவனுக்கு அந்த நீரின் காய்ந்து உதிர்ந்து, பல ஆண்டுகளாக ஊறிப்போன சருகின் நிறமும், நல்ல மணமும், குளிர்ச்சியும் ஏதோ செய்தது. சமன் அந்த நீரை அடியில் படிந்திருந்த இலைகள் கலைந்து மேலெழாத வண்ணம் நிதானமாகப் பருகத் தொடங்கினான்.
குடிக்கக் குடிக்க அவனது உடல் இழந்திருந்த புத்துணர்ச்சியை மீண்டும் பெற்றது. சோர்வு நீங்கி உற்சாகம் தலைக்கேறியது. வேட்டையில் இறைச்சி கிடைக்கவில்லையே என்ற கவலையும் மறந்துபோனது. வழமைக்கு மாறாக மட்டற்ற மகிழ்ச்சியில் அவன் இருந்தான். அதே குதூகலத்தில் குகைக்குத் திரும்பினான்.
இறைச்சிக்காகக் காத்திருந்த அவனது மனைவியும், பிள்ளைகளும் சமன் வெறும் கையுடன் வருவதைப் பார்த்து கவலை கொண்டனர். ஆனால் அவனோ அதைப்பற்றி துளியும் வருத்தமில்லாமல் உற்சாகமாக இருந்தான். இது ஏனைய குகை வாசிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஒருநாள் தொடங்கிய இந்தக் கதை பின்பு தொடர் கதையானது. சமன் வேட்டை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியாகவே இருந்தான். இது மற்ற பழங்குடியினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒரு பழங்குடியால் வேட்டையற்ற நாளை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கவே முடியாது. ஆனால் இவன் மட்டும் கவலையே இல்லாமல் இருக்கிறானே. அவனது எல்லையற்ற மகிழ்ச்சிக்கு என்ன காரணமாக இருக்கும்? மற்ற ஆண்கள் அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டனர். சமன் வேட்டைக்குச் செல்கிற கிழக்குக் காட்டுக்கு தாங்களும் செல்ல முடிவெடுத்தனர்.
சமன் வேட்டைக்குக் கிளம்பினான். ஏனைய ஆண்களும் அவனைப் பின் தொடர்ந்தனர். சமன் வழக்கம்போல காட்டின் நடு எல்லையைக் கடந்து பாறை மலையை அடைந்தான். பாறைக் குன்றின் மீது ஏறினான். அங்குத் தேங்கியிருந்த நீரை ஆசை தீர அள்ளிப் பருகினான். அங்கு அவன் ஒரு குழந்தையைப்போல மாறி மகிழ்வுற்றதை மறைவில் இருந்த பழங்குடிகள் கவனித்தனர்.
சமனின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அந்த நீரில்தான் ஏதோ அற்புதமிருக்கிறது என்று அவர்களுக்குத் தோன்றியது. அவர்களும் அந்த நீரைப் பருகத் தொடங்கினர். அன்றிலிருந்து அந்தப் போதை நீரின் பெருமை பழங்குடி ஆண்களிடையே பரவத் தொடங்கியது.
ஆம் உலகின் முதல் மதுபானத்தைக் கண்டுபிடித்தவர்கள், குடித்தவர்கள் எல்லாம் இந்தப் பழங்குடிகள்தான். ஆனால் அந்த மது மனிதன் உருவாக்கியதல்ல. இயற்கையாக உருவாகியது. பாறைகளின் இடுக்கில் பல ஆண்டுகள் தேங்கி, காட்டின் இலைகளும், கனிகளும், சிறு நுண்ணங்கிகளும் கலந்த அந்த நீர் உலகிலேயே அதிகூடிய போதையைத் தருகிற பானமாக இருந்தது. அதைத்தான் பழங்குடி ஆண்கள் மதுபானமாகக் காட்டில் குடித்தனர்.
இலங்கைப் பழங்குடி ஆண்களின் மதுபானம் இதுதான். இப்போது ஏனைய மக்களைப்போல பிற குடிவகைகளும் அவர்களுக்கிடையே புழங்க ஆரம்பித்திருந்தாலும். ஆதியில், ஏன் இன்றும் பழங்குடிகளுக்குப் பிடித்தமான மதுவகை இதுவாகத்தான் இருக்கிறது. காட்டுக்குச் செல்கிற பழங்குடிகள் இந்த மதுநீரைச் சுவை பார்க்காமல் வரமாட்டார்கள்.
இயற்கையால் பாறையிடுக்கில் படைக்கப்பட்ட அந்தப் பானம் அவர்களுக்கு அபரீதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
(தொடரும்)