சங்ககால சோழ மன்னர்களில் முக்கியமானவர் கரிகாலன். குறுநில சோழ அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை இவரையே சேரும். இவருக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான் உள்ளிட்ட வேறு பெயர்களும் இருக்கின்றன.
வெண்ணியில் தனது தலைமையில் நடைபெற்ற முதல் போரிலேயே சேரமான் பெருஞ்சேரலாதனை தோற்கடித்தார் கரிகாலன். அதன்பிறகு அவரை நேருக்கு நேராக எதிர்க்கும் துணிவு யாருக்கும் வரவில்லை. வடக்கே இமயமலை வரை சென்று போர் தொடுத்து வெற்றிபெற்ற கரிகாலன், அங்கிருந்து கல் எடுத்துவந்து கண்ணகிக்கு சிலை வடித்தார். மேலும், கல்லணையைக் கட்டி வரலாற்றில் அழியாப் புகழைப் பெற்றார்.
அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சோழ நாட்டில் நடைபெறும் ‘புனலாட்டு விழா’ மிகவும் பிரசித்தி பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் புதுவெள்ளத்தைக் காவிரித்தாய் அள்ளிக்கொண்டுவரும் வேளையில், இவ்விழா மூலமாகப் பொதுமக்கள் ஆடியும் பாடியும் அத்தாய்க்கு நன்றி கூறுவார்கள். இதுவே பின்னாளில் ஆடிப்பெருக்கு எனப் பெயர் மாற்றங்கண்டது.
ஒரு முறை புனலாட்டு விழா நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், வழக்கம்போல் கரிகாலன் அரசவைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அச்சமயம் அரசவைக்குள் வந்த ஒரு காவலாளி, ஆடல் கலைஞன் ஒருவன் அவரைச் சந்திக்க ஆர்வத்துடன் வெளியே காத்திருப்பதாகத் தகவல் தெரிவித்தான். உடனடியாக அந்தக் கலைஞனை உள்ளே அனுப்புமாறு கரிகாலன் அந்தக் காவலாளியிடம் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக அரசவைக்கு வந்த அழகான தோற்றமுடைய அந்த இளைஞனிடம், ‘நீ யார் இளைஞனே? என்னைச் சந்திக்க நீ மிகுந்த ஆர்வமும் தீவிரமும் காட்டியதாக வாயில் காவலன் கூறினான்’ எனக் கம்பீரமான குரலில் கேட்டார் கரிகாலன்.
கரிகாலனுக்கு தலைவணங்கிய அந்த இளைஞன், ‘என்னுடைய பெயர் அத்தி. ஓடும் நீரில் ஆடக்கூடிய திறமை என்னிடம் உள்ளது. அதைத் தங்களிடம் காண்பித்துப் பரிசு பெற்றுச்செல்ல வந்திருக்கிறேன் அரசே’ என்று பணிவுடன் கூறினான்.
புனலாட்டு விழா நடைபெற இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தக் கலைஞனின் ஆடல் நிகழ்ச்சி இருக்கட்டும் எனக் கரிகாலன் முடிவு செய்தார். இதனால் மறுநாள் காவிரி ஆற்றில் ஆடல் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என அவனிடம் கூறினார்.
முன்பின் அறிமுகமில்லை என்றாலும் கலைஞன் என்கிற ஒரே வார்த்தைக்காகத் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்ததற்காக அரசர் கரிகாலனுக்கு நன்றி தெரிவித்த அத்தி, அவரை வணங்கிவிட்டு அரசவையிலிருந்து விடைபெற்றான்.
மறுநாள், கரிகாலன் அவரது மனைவி வேண்மாள் மற்றும் அன்பு மகள் ஆதிமந்தி ஆகியோர் பிரதான இருக்கைகளில் அமர்ந்திருக்க, சோழ நாட்டின் முக்கிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அத்தியின் ஆடல் நிகழ்ச்சி தொடங்கியது.
காவிரி ஆற்றில் அத்தியின் ஆடல் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து, கரிகாலன் மகள் ஆதிமந்தியின் கண்களும் மனமும் கனிந்த பலாச்சுளைகளை மொய்க்கும் ஈக்களாக அவனையே சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தன. ஓடும் நீரில் வளைந்து நெளிந்து அபரிமிதமான ஆடல் திறமையை அத்தி வெளிப்படுத்தியதைக் கண்டு மயங்கிய சோழ இளவரசி, அக்கணமே அவன் மீது காதல் கொண்டாள். இளவரசி மட்டுமல்லாமல் அங்கு கூடியிருந்த சோழ மக்களும் அதிகாரிகளும் அவனது ஆட்டத்தை வியந்து மெச்சினார்கள். அத்தியின் ஆட்டத்தைக் கரிகாலனும் வேண்மாளும் பார்த்துக்கொண்டிருந்தாலும், தங்கள் மகளின் செவ்வரி ஓடிய முகத்தையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.
ஓடும் ஆற்று நீரில் சிறப்பாக ஆடிய அத்தியின் கலைத் திறமையை மெச்சிய கரிகாலன், ‘அத்தி… உனது ஆட்டம் பார்வையாளர்களான எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை இப்படி ஓர் ஆட்டத்தை நான் கண்டதில்லை. உனது ஆட்டத்தின் சிறப்பை மனதில்கொண்டு உனக்கு ஆட்டன் என்கிற பட்டத்தை அளிக்கிறேன். இன்று முதல் நீ அத்தி இல்லை, ஆட்டனத்தி. கேள்… உனக்கு என்ன பரிசு வேண்டும்?’ என்று கேட்டார்.
கரிகாலனின் பாராட்டில் மகிழ்ச்சியடைந்த அத்தி, சோழ நாட்டின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தினான். அத்தி வேறு யாருமல்ல, கரிகாலனால் தோற்கடிக்கப்பட்டு வடக்கிலிருந்து உயிர் நீத்த சேரமான் பெருஞ்சேரலாதனின் மகன். அதாவது சேர இளவரசன்.
தனக்கு முன்பாக நிற்கும் இளைஞன் சோழ நாட்டின் பழைய எதிரிகளில் ஒருவரான பெருஞ்சேரலாதனின் மகன் என்பதை அறிந்தும் சிறிதும் கோபம் கொள்ளாத கரிகாலன், இளவரசன் என்கிற வகையில் அத்தியை முறைப்படி வரவேற்று மகிழ்ந்தார்.
அதற்கு, ‘நான் இங்கு சேர இளவரசனாக வரவில்லை அரசே! எனது ஆடல் திறமையைக் காட்டவே வந்தேன்’ எனக் கூறிய ஆட்டனத்தியின் பணிவு கரிகாலனை வெகுவாகக் கவர்ந்தது.
அதன்பிறகு உனக்கு என்ன பரிசுவேண்டும் எனக் கேட்ட கரிகாலனிடம், சோழ இளவரசி ஆதிமந்தியை பரிசாகக் கேட்டான் ஆட்டனத்தி. அவனது விருப்பத்தைக் கேட்டதும் வெட்கத்தில் தலை கவிழ்ந்து தனது சம்மதத்தைக் குறிப்பால் உணர்த்தினாள் ஆதிமந்தி.
கடந்த புனலாட்டு விழாவில் இளவரசி ஆதிமந்தியின் ஆட்டத்தைக் கண்ட பிறகே ஆடல் கலையில் நாட்டம்கொண்டு அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாக ஆட்டனத்தி கூறினான். இதைக் கேட்டதும், அவன் கோரிய பரிசை அளிக்கக் கரிகாலன் சம்மதம் தெரிவித்தார். தந்தை சம்மதம் தெரிவித்ததும் காதலுடன் ஆதிமந்தி ஆட்டனத்தியை பார்க்க, அவன் அன்புடன் அவளைப் பார்த்திருந்தான். காவிரிக்கு முன்பாக இருவரது காதலும் மலரத் தொடங்கியது.
ஆட்டனத்திக்கும் ஆதிமந்திக்கும் வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. குறையாத காதலுடன் இருவரும் வாழ்ந்தனர். இந்நிலையில், புனலாட்டு விழாவுக்குக் கரிகாலனிடம் இருந்து இருவருக்கும் அழைப்பு வந்தது. மகிழ்ச்சி ததும்ப இருவரும் அதில் கலந்துகொண்டனர். காதல் மனைவியின் விருப்பத்துக்காகப் புதுவெள்ளம் பாய்ந்தோடும் காவிரியில் தனது புனலாட்டத்தைத் தொடங்கினான் ஆட்டனத்தி. அதைப் பார்த்து அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் மெய்மறந்து நின்றிருக்க, எதிர்பாராவிதமாகத் திடீரென காவிரியில் தோன்றிய ஆக்ரோஷ வெள்ளத்தில் ஆட்டனத்தி அடித்துச் செல்லப்பட்டான்.
காதல் பார்வை வீசியபடி ஆடிக்கொண்டிருந்த கணவனை நொடிப்பொழுதில் தன் கண்முன்னே காவிரி அடித்துச் சென்றதைக் கண்டு ஆதிமந்தி அழுது புரண்டாள். காவிரிக்கு முன்பாக அழகாக மலர்ந்த அவர்களது காதலைக் காவிரியே பிரித்துவைத்தது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவன் இனி மீண்டு வரமாட்டான் எனப் பலரும் ஆதிமந்திக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால் அவர்களின் கூற்றைப் பொய்யென நிராகரித்த ஆதிமந்தி, தன்னுடைய கணவனைத் தேடி காவிரியைப் பின் தொடர்ந்து சென்றாள். ‘காவிரித்தாயே! எனது கணவனைத் திருப்பிக்கொடு!’ என்று கெஞ்சியபடி அழுதுகொண்டே நாட்கணக்கில் காவிரி பாய்ந்த தடத்தை ஒட்டிப் பயணித்தாள்.
மறுபுறம் ஆட்டனத்தி காவிரிப்பூம்பட்டிணத்தில் கரை சேர்ந்தான். எதார்த்தமாக அந்தப் பக்கமாக வந்த மருதி என்ற அழகிய இளம்பெண்ணின் கண்களில், மயங்கிய நிலையில் இருந்த ஆட்டனத்தி தென்பட்டான். அவன் யார் என்பதை அறியாமலேயே, ஒரு தோழியின் உதவியுடன் ஆட்டனத்தியை தன்னுடைய வீட்டுக்கு மருதி அழைத்துச்சென்றாள்.
ஆட்டனத்திக்கு மயக்கம் தெளிவித்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகளை மிகுந்த விருப்பத்துடன் செய்தாள் மருதி. அவளது அழகிலும் பணிவிடையிலும் மயங்கிய ஆட்டனத்தி, எங்கே அவள் பக்கம் தன் மனம் சாய்ந்துவிடுமோ என்ற பயத்தில் தன்னைப் பற்றிய உண்மையைக் கூறாமல் மறைத்தான். மருதியின் கனிவாலும் பணிவிடைகளாலும் தன் மனைவி ஆதிமந்தியின் நினைவு வரவே ஆட்டனத்தி மனதுக்குள் புழுங்கினான்.
ஆட்டனத்தி குறித்து எதுவும் தெரியாமல் அவன் மீது காதல்கொண்ட மருதி, தன் காதலை வாய்விட்டுக் கூறத் தைரியமில்லாமல், விழி வழியாகவும் செயல் வழியாகவும் அதை அவனிடம் உணர்த்திக்கொண்டிருந்தாள்.
காவிரியைப் பின் தொடர்ந்து கணவனைத் தேடும் பயணத்தை ஆரம்பித்திருந்த ஆதிமந்தி ஒரு கட்டத்தில் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தாள். தலைவிரி கோலமாகக் கண்ணீர் வழிந்தோடும் கண்களுடனும் மெலிந்த தேகத்துடனும், ‘காவிரித்தாயே! என் கணவனைத் திருப்பிக் கொடு’ என்கிற வாசகத்தை மீண்டும் மீண்டும் கூறியபடி காவிரிபூம்பட்டினத்தில் அலைந்து திரிந்தாள். ஆதிமந்தியை கண்டு இரக்கம்கொண்ட மருதி, அவளருகில் சென்று பரிவுடன் விசாரித்தாள்.
ஆடல் கலையில் வல்லவனான தன் கணவன் ஆட்டனத்தி குறித்து மருதியிடம் விளக்கிய ஆதிமந்தி, புலனாட்டு விழாவின்போது அவனை வெள்ளம் அடித்துச்சென்ற விசயத்தைக் கூறினாள். அதன்பிறகு ‘அவரை எங்காவது பார்த்தீர்களா?’ என்று கேட்டபடி அழுது புலம்பினாள். அவற்றைக் கேட்டதும், அதுநாள் வரை காதலனாகத் தன் மனதின் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்திருப்பவன்தான் தனக்கு முன்பாக நிற்கும் பெண்ணின் கணவன் ஆட்டனத்தி என்பதை உணர்ந்த மருதி, இதயம் உடைந்து நின்றாள்.
எனினும் காதலனை விட்டுத்தர மனமில்லாத மருதி, ஆதிமந்திக்கு எந்தப் பதிலும் கூறாமல் அங்கிருந்து நகர முயன்றாள். மருதியை தடுத்த ஆதிமந்தி, தாங்கள் இருவரும் காதலுடன் வாழ்ந்த கதையை உள்ளம் உருக எடுத்துக்கூறி, ‘அவரை எங்காவது பார்த்தீர்களா?’ என மீண்டும் கேட்டாள்.
ஆதிமந்தியின் அப்பழுக்கற்ற மனதையும் அவளது காதலையும் உணர்ந்துகொண்ட மருதி, ‘இன்னொரு பெண்ணின் கணவனையா இதுநாள் வரை என் மனதில் நினைத்திருந்தேன்? இப்பத்தினியை மனைவியாக அடைந்ததால்தான் அவரது கண்ணில் தெரிந்த காதலை இதுநாள் வரை என்னிடம் சொல்லாமல் இருந்தாரோ? இன்னொரு பெண்ணின் கணவன் மீது ஆசை கொண்டுவிட்டேனே!’ என்றெல்லாம் எண்ணி வெட்கித் தலைகுனிந்தாள். அதன்பிறகு மேலும் தாமதிக்காமல், ஆட்டனத்தி அச்சமயம் இருந்த தன்னுடைய வீட்டுக்கு வழி கூறி ஆதிமந்தியை அங்கு அனுப்பிவைத்தாள் மருதி.
மருதியின் வீட்டுக்குச் சென்ற ஆதிமந்தி, அங்கு தன் கணவன் இருந்ததைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள். தன்னைத் தேடி வந்த மனைவியைக் கண்டு ஆட்டனத்தியும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். காவிரி பிரித்த காதல், காவிரி கடலில் சேருமிடத்தில் சேர்ந்தது.
தான் இங்கிருக்கும் தகவல் எவ்வாறு தெரியும் என ஆட்டனத்தி தன் மனைவியிடம் கேட்கவே, அவள் மருதி குறித்து அவனிடம் கூறினாள். ஆதிமந்தியை மருதி அனுப்பிவைத்திருப்பதை அறிந்ததும், அவளுடன் சேர்ந்து மருதியை தேடிச் சென்றான் ஆட்டனத்தி.
ஆனால், தன் காதல் கைகூடாததையும் மற்றொரு பெண்ணின் கணவன் மீது விரும்பம்கொண்டதையும் எண்ணி மனம் வெதும்பிய மருதி, அவர்கள் இருவரும் வருவதற்குள் காவிரித்தாயை அணைத்திருந்தாள். இரு கரம் நீட்டி மருதியை ஏற்றுக்கொண்ட காவிரி, அவளது காதலைத் தன்னுடனேயே புதைத்துக்கொண்டாள். மருதி இறந்துவிட்ட செய்தியைக் கேட்டு ஆட்டனத்தி பெரும் துயரம் கொண்டான்.
சங்க இலக்கியத்தில் ஆதிமந்தி ஆட்டனத்தியின் காதல் புகழ்ந்து பேசப்படுகிறது. கரிகாலனின் மகள் ஆதிமந்தி ஒரு பெண்பாற் புலவர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ‘மள்ளர் குழீஇய விழவி னானும்’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை ஆதிமந்தி பாடியுள்ளாள்.
வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஆட்டனத்தி, ஆரம்பத்திலேயே தான் இன்னொரு பெண்ணின் கணவன் என்கிற உண்மையை மருதியிடம் கூறியிருந்தால், அந்த அப்பாவிப் பெண் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையை அடைந்திருக்கமாட்டாள். ஆட்டனத்தி மீது காதல்கொண்டதைத் தவிர வேறெந்த பிழையையும் மருதி செய்யவில்லை. தன்னுடைய மனசஞ்சலத்துக்குச் செவிசாய்த்த ஆட்டனத்தி, உண்மையை வாய் திறந்து கூறாமல் இருந்ததன் விளைவாகவே இவ்வுலகைவிட்டு மருதி மறைந்தாள்.
ஆனால் ஆட்டனத்தியோ சங்ககாலத்து அழியாக் காதலனாக இன்றும் வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். பொய் சொல்வதைவிட உண்மையை உரிய நேரத்தில் உரைக்காமல் மௌனமாக இருப்பது அழிவையே ஏற்படுத்தும்.
0

