பன்முகத்தன்மைகொண்ட நம் நாட்டில் பல்வேறு பழங்குடி இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள், நம்பிக்கைகள் உள்ளிட்டவை தொன்மையான பின்னணியைக் கொண்டுள்ளன. அவை அனைத்தும் காலங்காலமாகக் கதைகளாகவும் ஓவியங்களாகவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, தங்களது கலாசாரக் கூறுகளைத் தலைமுறைகள் தாண்டிக் கடத்துவதில் ‘முண்டா’க்கள் விற்பன்னர்கள்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஜார்க்கண்ட், பீஹார், ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பெரும்பான்மையான முண்டா பழங்குடியினர் (Munda Tribes) வசித்து வருகின்றனர். ஆஸ்திரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ‘முண்டாரி’ மொழி பேசும் இம்மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதோடு தேயிலைத் தோட்ட வேலைகளையும் செய்துவருகின்றனர்.
பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்காலத்தின்போது தங்களுக்காகப் போராடிய பிர்சா முண்டாவை அம்மக்கள், ‘மண்ணின் தந்தை’ என இன்றளவும் போற்றுகின்றனர். அதிலும், இந்தியக் கனிமவளங்களின் இதயப்பகுதி என்று அழைக்கப்படும் சோட்டா நாக்பூர் பீடபூமியில் வசித்துவரும் முண்டா பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக, இந்திய விடுதலை இயக்கம் துளிர்விட்டுக்கொண்டிருந்த 19ஆம் நூற்றாண்டிலேயே ‘உல்குலான்’ (பெரும் கிளர்ச்சி) என்கிற இயக்கத்தை பிர்சா முண்டா முன்னெடுத்தார்.
இதனாலேயே பிரிட்டிஷ் காலனி அரசிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் என்கிற பெருமை பிர்சா முண்டாவுக்கு உண்டு. அந்த வகையில் வரலாற்று ரீதியாகவும் தொன்மை ரீதியாகவும் முக்கியமான இந்தியப் பழங்குடியினரில் முண்டாக்கள் முதன்மையானவர்கள்.
முண்டா மக்களுக்குச் சிலை வழிபாட்டில் நம்பிக்கை கிடையாது. மாறாக மரங்கள், மலை, சூரியன் உள்ளிட்ட இயற்கையின் அடையாளங்களை வணங்கும் ‘சார்னா’ வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிறார்கள். ‘சிங்போங்கா’ (Singbonga – சூரியன்) முண்டா இன மக்களின் முதன்மைக் கடவுளாகத் திகழ்கிறார். குறிப்பாக, இயற்கையோடு இணைந்து கொண்டாடப்படும் இம்மக்களின் பல திருவிழாக்கள், இயற்கைக்கு இவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன. இயற்கை மீதான முண்டாக்களின் இந்தப் பிணைப்பை உணர்த்தும்விதமாகக் கூறப்படும் ஏழு சூரியன்கள் என்கிற நாட்டுப்புறக் கதை மிகவும் பிரபலமானது.
வெகு காலத்திற்கு முன்பு வானத்தில் இருந்தபடி ஏழு சூரியன்கள் பூமிக்கு வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்துக்கொண்டிருந்தன. ஆனால் அவற்றின் அதீதமான வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பூமியில் உள்ள உயிர்கள் பலவும் பாதிக்கப்பட்டன. இந்த ஏழு சூரியன்களின் வெப்பத்தால் மனிதர்களும் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார்கள். இதனால் முண்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழு சகோதரர்கள், அந்த ஏழு சூரியன்களையும் அழித்தொழிக்க முடிவு செய்தார்கள். இதற்காக அவர்கள் சூரியன்களை நோக்கி அம்புகளை எய்தார்கள். இதில் ஆறு சூரியன்கள் அழிக்கப்பட்டன.
முண்டா சகோதரர்களின் இச்செயலால் பயந்துபோன ஏழாவது சூரியன், வானத்திலிருந்து தப்பிச்சென்று ஒரு மலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டது. இதனால், அதுவரை சூரியன்களின் வெப்பத்தால் தகித்துக்கொண்டிருந்த பூமி, திடீரென குளிர்ந்த நிலைக்குச் சென்றது. தங்களின் இயக்கத்துக்கு முக்கியக் காரணமாக விளங்கிய சூரியனின் வெப்பமும் ஒளியும் இல்லாததால் பல்வேறு உயிரினங்கள் துன்பத்தை அனுபவித்தன.
பூமியில் எங்கும் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது. மான்களால் புலியைக் கண்டறிய முடியவில்லை. மரங்கள் மீதும் பாறைகள் மீதும் முட்டிக்கொண்டு யானைகள் துன்பப்பட்டன. முயல்கள் பலவும் சிங்கங்களின் முதுகில் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தன.
இதனால் திரும்பிய பக்கமெல்லாம் கூச்சலும் குழப்பமும் மட்டுமே நிறைந்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்தக் குழப்பத்துக்கான தீர்வைக் கண்டறிய விலங்குகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி தங்களுக்குள் விவாதத்தில் ஈடுபட்டன.
மீண்டும் சூரியனை அழைத்து வந்தால் மட்டுமே இக்குழப்பம் நீங்கி அனைத்தும் சீராகும் என்கிற முடிவை விலங்குகள் ஒருமனதாக எடுத்தன. ஆனால் இதில் ஒரு பிரச்னை இருந்தது. சூரியன் எங்கு ஒளிந்துள்ளது என்பது விலங்குகளுக்குத் தெரியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவை தடுமாறி நின்றன. விலங்குகளின் கூட்டத்தில் இருந்த சிறிய முயல் ஒன்று, அந்த ஏழாவது சூரியன் எங்குள்ளது என்பதை அச்சமயம் ஒற்றறிந்து தகவல் கொண்டு வந்தது.
அந்த ஏழாவது சூரியன் ஒளிந்திருந்த மலையைப் பற்றி அம்முயல் குட்டி கூறியதும், அனைத்து விலங்குகளும் அந்த மலையை நோக்கி சென்றன. ஆனால், பயத்தில் ஒளிந்திருக்கும் சூரியனை யார் திரும்ப அழைத்து வருவது என்பது தெரியாமல் விலங்குகள் அனைத்தும் தங்களுள் பேசியவாறு அங்கேயே நின்றிருந்தன.
‘காட்டிற்கு ராஜாவான நானே சூரியனை அழைத்து வருகிறேன்’ என அவ்விலங்குகளிடம் கூறிய சிங்கம், ‘சூரியனே… சூரியனே… எங்கே சென்றுவிட்டாய் நீ? மீண்டும் வந்து எங்களுக்கு வெளிச்சத்தைக் கொடு…’ எனக் கம்பீரமாகக் கூறியது. ஆனால் சிங்கம் கூறியதைக் கேட்டு, மலைக்குப் பின்னால் இருந்த சூரியன் வெளியே வரவில்லை.
அதைப் பார்த்த யானை ஒன்று, ‘தயவுசெய்து திரும்ப வந்துவிடு சூரியனே! நீ எங்களுக்குத் தேவை…’ எனக் கூறி தனது தும்பிக்கையால் பயங்கர சத்தமாகப் பிளிறியது. ஆனால் யானையின் பிளிறல் சத்தம் கேட்டும் சூரியன் வெளியே வரவில்லை.
சிங்கமும் யானையும் அழைத்தும் சூரியன் வெளியே வராததைக் கண்டு, அங்கிருந்த விலங்குகள் கலக்கமடைந்தன. அப்போது கூட்டத்தில் இருந்த மயில் ஒன்று, ‘திரும்பி வந்துவிடு சூரியனே… தயவுசெய்து திரும்பி வந்துவிடு…’ எனக் கெஞ்சியவாறு தனது தோகையை விரித்து நடனமாடியது. ஆனால் அதைக் கேட்டும் சூரியன் வெளியே வரவில்லை. அதன்பிறகு அங்கிருந்த விலங்குகள் பலவும் ஒன்றன் பின் ஒன்றாகச் சூரியனை அழைத்தன. ஆனால் எதற்கும் செவி சாய்க்காத சூரியன், தான் ஒளிந்திருந்த இடத்தைவிட்டு வெளியே வரவில்லை. சூரியனின் செயலால் அங்கிருந்த விலங்குகள் மேலும் வருத்தத்தில் ஆழ்ந்தன.
அதுவரை அங்கு நடந்துகொண்டிருந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சேவல் ஒன்று, கூட்டத்திலிருந்து முன்னே வந்து, ‘நான் ஒருமுறை சூரியனை அழைத்துப் பார்க்கவா?’ எனத் தயக்கத்துடன் கேட்டது.
அவ்வாறு கேட்ட சேவலைக் கண்டு அங்கிருந்த சில விலங்குகள் கேலி செய்து சிரித்தன. இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிங்கம், ‘நாம் அனைவரும் சூரியனை அழைத்துப் பார்த்தாகிவிட்டது. அதேபோல் சேவலும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கட்டும். அனைவரும் அமைதியாக இருங்கள்’ என்று அவற்றை அதட்டியது.
‘நீ சூரியனை அழைத்துப் பார். ஒரு வேளை உன்னுடைய குரலுக்குச் சூரியன் செவிசாய்த்தாலும் சாய்க்கலாம்’ எனச் சேவலிடம் சிங்கம் கூறியது. இதைத் தொடர்ந்து மிகவும் மெலிதான குரலில், ‘கொக்கரக்கொ’ எனச் சேவல் கூவியது. அதைக் கேட்ட சூரியன் தன்னுடைய சூரியக் கதிர்களை மலைக்கு மறுபுறம் இருந்து மெலிதாக வெளியே பாய்ச்சியது. அவற்றைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த விலங்குகள், மேலும் சத்தமாகக் கூவும்படி சேவலிடம் கூறின.
முன்புவிட மேலும் சத்தமாக, ‘கொக்கரக்கொ’ எனச் சேவல் கூவியது. இதன் தொடர்ச்சியாக மலைக்குப் பின்னால் இருந்து சிறிது எட்டிப்பார்த்தது சூரியன். ஒரு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் மெலிதாக வெளியே தெரிவதைக் கண்ட விலங்குகள் அனைத்தும் மகிழ்ச்சியில் சேவலை உற்சாகப்படுத்தின. அந்த உற்சாகத்தால் ‘கொக்கரக்கோ’ எனச் சேவல் மேலும் சத்தமாகக் கூவியது.
அதைக் கேட்டதும் மலைக்குப் பின்னால் இருந்து சூரியன் முழுமையாக வெளியே வந்தது. சூரியனின் ஒளிக்கதிர்களால் பூமியெங்கும் உள்ள உயிர்கள் அனைத்தும் சமநிலைக்குத் திரும்பின. மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு விலங்குகளும் திரும்பின. சூரியன் இருந்தால்தான் பூமி சமநிலையில் இருக்கும், இயற்கையும் பாதுகாக்கப்படும் என்பதை முண்டா சகோதரர்கள் உணர்ந்தார்கள். தங்களது தவறுக்காகச் சூரியனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, அன்றிலிருந்து அதை அவர்கள் வணங்கத் தொடங்கினார்கள்.
சேவலின் ‘கொக்கரக்கோ’ என்கிற ஒலியைக் கேட்டபிறகே சூரியன் வெளியே வருவதாக முண்டா இன மக்களிடையே இன்றுவரை நம்பிக்கை உள்ளது. நாம் வாழும் இப்பூமியில் உள்ள உயிர்களுக்கான ஆதாரமாகச் சூரியன் திகழ்வதையும் இயற்கை சமநிலையின் முக்கியத்துவத்தையும் இக்கதை உணர்த்துகிறது.
0

