பாரதத்தின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், மனித குலத்துக்குத் தேவையான பல்வேறு அறநெறிக் கருத்துகளை வழங்கியுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அதில் கூறப்பட்டுள்ளவை இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாகவே உள்ளன.
இந்த மாபெரும் இதிகாசத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான நபர்களில் ஒருவர் அஸ்தினாபுரத்தின் அரசர் பாண்டு. விசித்திர வீரியனின் மகனான பாண்டுவுக்கு இரு மனைவியர்கள். முதல் மனைவி குந்தி தேவி, இரண்டாவது மனைவி மாத்ரி. பாண்டுவுக்கும் மாத்ரிக்கும் வேட்டையாடுவதன் மீது அலாதி பிரியம் இருந்தது. அவ்வாறு ஒரு முறை வேட்டைக்குச் சென்றபோது ஜோடி மான்கள் இரண்டின் மீது பாண்டு அம்பெய்தினார். தன்னுடைய அபாரமான திறமையால், ஒரே அம்பை வைத்து இரு மான்களையும் அவர் வீழ்த்தினார். அவற்றில் பெண் மான் உடனடியாக இறந்துவிட, ஆண் மான் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.
உண்மையில் அம்மான்கள் இரண்டும் கிந்தம முனிவரும் அவரது மனைவியும் ஆவர். தன்னுடைய மனைவி கண்முன் இறந்ததைக் கண்ட கிந்தம முனிவர், ‘உன் மனைவியை ஆசையுடன் நீ எப்பொழுது தொட்டாலும் உன் தலை சுக்கு நூறாக உடைந்து மரணமடைவாய்’ எனப் பாண்டுவுக்கு சாபம் அளித்துவிட்டு மரணித்தார்.
கிந்தம முனிவரின் இச்சாபத்தால் பாண்டுவுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனது. இதனால், வசிஷ்ட முனிவர் தனக்குச் சிறுவயதில் உபதேசித்த மந்திரத்தைப் பயன்படுத்தி தேவர்களிடம் வேண்டிக்கொண்ட குந்திதேவி, அடுத்தடுத்து தர்மன், பீமன், அர்ஜுனன் என மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதன்பிறகு குந்திதேவியிடம் அம்மந்திரத்தைக் கற்றுக்கொண்ட மாத்ரி, தேவர்களிடம் வேண்டிக்கொண்டு, நகுலன், சகாதேவன் என இரு குழந்தைகளைப் பெற்றார். இந்த ஐவரும் பஞ்ச பாண்டவர்கள் என அழைக்கப்பட்டார்கள்.
ஒருநாள் சூரிய ஒளியில் மாத்ரியைக் கண்ட பாண்டு, தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் முனிவரின் சாபத்தை மறந்து அவளைத் தீண்டினார். ஆனால் இச்செயலால் தன்னுடைய இறப்பு நிகழப்போவதை மறுநொடியே உணர்ந்துகொண்ட பாண்டு, தனது மகன்கள் ஐவரையும் அழைத்தார்.
‘நான் இறந்தபிறகு என் உடம்பைத் தகனம் செய்யாமல் நீங்கள் ஐவரும் அதை உண்ணுங்கள். வனத்தில் வாசமிருந்தபோது நான் செய்த தவத்தின் பலனாகவும் இதுவரை நான் கடைபிடித்து வந்த பிரம்மச்சரிய விரதத்தின் மூலமாகவும் எனக்கு அற்புதமான சக்திகள் கிடைத்துள்ளன. என் உடலை நீங்கள் உண்பதன் மூலம் அச்சக்திகளும் முக்காலத்தையும் அறியும் ஆற்றலும் உங்களுக்குக் கிடைக்கும். இதுவே என் இறுதி ஆசை’ என அவர்களிடம் கூறிவிட்டு பாண்டு உயிரிழந்தார்.
தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றப் பாண்டவர்கள் ஆயத்தமானார்கள். ஆனால் பாண்டுவின் உடலைப் பாண்டவர்கள் உண்ணும் பட்சத்தில் அவர்களுக்கு முக்காலத்தையும் அறியும் ஆற்றல் கிடைத்துவிடும் என்பதால், அதைத் தடுப்பதற்காக அவர்களிடம் தன்னுடைய லீலையை நிகழ்த்தினார் கிருஷ்ணர்.
‘இறக்கும் தறுவாயில் உங்கள் தந்தைதான் ஏதோ உளறியிருக்கிறார் என்றால், நீங்களும் அதை நிறைவேற்ற நினைக்கிறீர்களே! எந்த மனிதனாவது மற்றொரு மனிதனின் உடலை உண்ண நினைப்பானா? அதுவும் தந்தையின் உடலை மகன்கள் உண்பது நியாயமான செயலாகுமா?’ என்றெல்லாம் அவர்களிடம் கூறிய கிருஷ்ணர், பாண்டுவின் உடலைத் தகனம் செய்ய தேவைப்படும் விறகுக் கட்டைகளை எடுத்து வருவதற்காக அவர்களை அழைத்தார்.
கிருஷ்ணர் கூறியதை ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள், தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றும் முடிவைக் கைவிட்டார்கள். பாண்டுவின் உடலுக்கு அருகே சகாதேவனை காவலுக்கு நிறுத்திவிட்டு, மற்ற நால்வருடன் இணைந்து விறகுக் கட்டைகளை எடுக்கச் சென்றார் கிருஷ்ணர். வெளியே கிருஷ்ணரிடம் ஒப்புக்கொண்டுவிட்டாலும், தன் தந்தையின் சொல்லைத் தட்ட சகாதேவன் விரும்பவில்லை. இதனால், அவர்கள் சென்றதும், பாண்டுவின் சுண்டுவிரலை வெட்டியெடுத்து சகாதேவன் உண்டார். அவ்வாறு செய்ததால் அவருக்கு முக்காலமும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் வேறு சில சக்திகளும் கிடைத்தன.
விறகுக் கட்டைகளை எடுக்கச் சென்றவர்கள் சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்கள். அப்போது, தலையில் விறகுக் கட்டைகளைச் சுமந்தபடி தன்னுடைய சகோதரர்கள் நடந்து வந்த நிலையில், கிருஷ்ணரின் தலை மீது அல்லாமல் அதற்கு மேலே காற்றில் மிதந்தபடி விறகுக் கட்டைகள் பறந்து வந்ததைச் சகாதேவன் கவனித்தார். ஆனால் உண்மையில் சகாதேவன் தவிர்த்து அங்கிருந்த பிறருக்கு, கிருஷ்ணர் தன் தலையில் விறகுக் கட்டைகளைச் சுமந்து வருவதாகவே தெரிந்தது.
இதன் தொடர்ச்சியாகக் கிருஷ்ணரை தனியாக அழைத்து, விறகுக் கட்டைகள் காற்றில் மிதந்து வந்தது குறித்து சகாதேவன் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியை வைத்து, பாண்டுவின் உடல் பாகத்தை உண்டு முக்காலத்தை அறியும் ஆற்றலையும் பிற சக்திகளையும் சகாதேவன் பெற்றுவிட்டதைக் கிருஷ்ணர் உணர்ந்துகொண்டார். உடனே அவரிடம், ‘இத்தகைய சக்திகள் உனக்குக் கிடைத்திருப்பது குறித்து நீ யாரிடமும் கூறக்கூடாது. யாராவது தானாக முன்வந்து அடுத்து என்ன நடக்கும் எனக் கேட்டால் மட்டுமே, அவர்களுக்கு நீ பதிலளிக்கவேண்டும்’ எனக் கூறி, கிருஷ்ணர் சத்தியம் பெற்றுக்கொண்டார்.
அச்சத்தியத்துக்குக் கைமாறாக, ‘என்றைக்கும் பாண்டவர்களான எங்கள் ஐவரையும் காத்தருள வேண்டும்’ என்கிற வாக்குறுதியைச் சகாதேவன் கிருஷ்ணரிடம் கேட்டார். புன்னகைத்தபடி சகாதேவனுக்கு கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
இதே கதை வேறு விதமாகவும் கூறப்படுகிறது. தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற எண்ணிய சகாதேவன், பாண்டுவின் மூளையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடியுள்ளார். அவரைத் துரத்தியபடி பின்னாலேயே கிருஷ்ணர் சென்றுள்ளார். ஆனால் கிருஷ்ணர் தன்னைப் பிடிப்பதற்குள் பாண்டுவின் மூளையில் முதல் கடியைக் கடித்த சகாதேவனுக்கு கடந்தகாலத்தை அறியும் ஞானம் கிடைத்துள்ளது. இரண்டாவது கடியில் நிகழ்காலத்தை அறியும் ஞானமும், மூன்றாவது கடியில் எதிர்காலம் குறித்த ஞானமும் கிடைத்துள்ளது. இதனால்தான் அவர் திரிகால ஞானியாக அறியப்படுகிறார் எனக் கூறப்படுகிறது.
தந்தை மூலமாகக் கிடைத்த ஆற்றலால் சோதிடக் கலையில் சகாதேவன் சிறந்து விளங்கினார். சோதிடக் கலைக்கு உண்மையாக இருந்து நேர்மையுடன் நடந்துகொண்டார். அதனால்தான், மகாபாரதப் போரில் வெற்றிகொள்ள எந்நேரத்தில் போரைத் தொடங்கினால் சரியாக இருக்கும் எனத் துரியோதனன் கேட்டபோது, சற்றும் தயங்காமல் சகாதேவன் நேரம் குறித்துக்கொடுத்தார்.
இதை அறிந்த கிருஷ்ணர், ‘துரியோதனன் போரில் வெல்வதற்கு எவ்வாறு நீ நேரம் குறித்துக் கொடுக்கலாம்? இதில் ஏதும் கள்ளத்தனம் செய்தாயா?’ எனக் குறும்புடன் சகாதேவனிடம் கேட்டார்.
‘சோதிடக் கலையில் பொய்யுரைப்பது பாவம். அதை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். அமாவாசை திதியில் போர் தொடங்கினால் துரியோதனன் வெற்றி பெறுவான். நாங்கள் தோற்போம். வேறு திதியில் தொடங்கினால் நிலைமை மாறும். கள்ளத்தனம் செய்வது உன் வேலை. நீயே அதைப் பார்த்துக்கொள்…’ என்றார் சகாதேவன். அவர் கூறியதைப்போல் துரியோதனனை குழப்பி, வேறொரு நாளில் பாண்டவர்களுக்குச் சாதகமான திதியில் மகாபாரதப் போரைத் தொடங்கச் செய்தார் கிருஷ்ணர்.
மேலும், போர் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பாக, ‘போர் வேண்டாம் என்பதை வலியுறுத்த நாளை அஸ்தினாபுரத்துக்கு தூது செல்கிறேன். இந்தப் போரை நிறுத்த வழி ஏதாவது இருக்கிறதா என உன் சோதிட சாஸ்திரத்தில் பார்த்துக் கூறு சகாதேவா’ என விளையாட்டாகக் கேட்டார் கிருஷ்ணர்.
போரை நிறுத்த முயற்சிக்காமல், அதை நடத்தவே கிருஷ்ணர் அஸ்தினாபுரம் செல்வதைத் தன்னுடைய ஆற்றலால் அறிந்துகொண்ட சகாதேவன், சற்றும் தயங்காமல், ‘அண்ணன் அர்ஜுனனின் காண்டீபத்தை முறித்து, அண்ணன் பீமனின் கதையை உடைத்து, கர்ணனுக்கு முடி சூட்டவேண்டும். இதற்கு மேலாக நாளை தூது செல்லவிருக்கும் உன்னைக் கட்டிப் போட்டால் கண்டிப்பாக இந்தப் போர் நிகழாது கிருஷ்ணா…’ என்றார்.
அதற்குக் கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, ‘என்னையா கட்டிப்போடப் போகிறாயா? எங்கே என்னைக் கட்டிப்போடு பார்க்கலாம்…’ என்றபடி பல்லாயிரக்கணக்கான உருவங்களாக வடிவெடுத்து நின்றார். கிருஷ்ணரின் அந்த மாயையைக் கண்டு சிறிதும் அசராத சகாதேவன், தன்னுடைய மனதை ஒருநிலைப்படுத்தி, பக்தியின் வழியாக அன்பால் கிருஷ்ணரை கட்டிப்போட்டார்.
சகாதேவனின் அன்பு பிடியிலிருந்து வெளிவர முடியாமல் திணறிய கிருஷ்ணர், ஒரு கட்டத்தில், ‘உனது அன்பு பிடியிலிருந்து என்னை விடுவி சகாதேவா’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்பிறகே தன்னுடைய பிடியை விலக்கினார் சகாதேவன்.
மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முந்தைய நாள் தர்மருக்கு மனக் கலக்கம் அதிகரித்தது. இதனால் சகாதேவனை சந்தித்து, ‘போரின் முடிவு எவ்வாறு இருக்கும்?’ எனக் கேட்டார். ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் கூற சகாதேவன் மறுத்துவிட்டார். ஆனாலும் தருமர் விடுவதாக இல்லை. அவர் மிகவும் வற்புறுத்திக் கேட்டதால், ‘நம் குலம் நாசமடையும்’ என்று மட்டும் சகாதேவன் கூறினார்.
போரில் பாண்டவ வம்சத்தின் தளிர்கள் அனைவரும் இறந்துவிட, முன்பு சகாதேவனுக்கு அளித்த வாக்குறுதிக்காகப் பாண்டவர்கள் ஐவரின் உயிரையும் கிருஷ்ணர் காத்தருளினார்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்கிற வாக்கியத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்த பரசுராமரைப்போல், தந்தையின் வார்த்தைக்குச் சகாதேவனும் மதிப்பளித்தார். அதனால்தான் அவருக்குப் பல சக்திகள் கிடைத்தன. இருந்தாலும் அந்தச் சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தாமல் சத்தியத்தின்படி இறுதிவரை நேர்மையாக நடந்துகொண்டார். சகாதேவனின் வாழ்க்கை நம் அனைவருக்குமான பாடம்.
0

