Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் #8 – பாலைவனச் சந்தனமரம்

இந்தியத் தொன்மக் கதைகள் #8 – பாலைவனச் சந்தனமரம்

வெகு காலத்திற்கு முன்பு ராஜஸ்தானில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கத்தால் ஆன நீண்ட கூந்தலைக்கொண்ட சோனல் பாய் என்கிற அழகிய சிறுமி இருந்தாள். அவள் தினமும் ஆற்றில் நீராடி மகிழ்ந்து வீட்டுக்குத் திரும்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை ஆற்றுக்குச் செல்லும் முன்பும், சோனலின் தாயார் அவளது கூந்தல் இழைகள் ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்த்து அனுப்பி வைப்பார். அதேபோல் சோனல் வீடு திரும்பியதும், அவளது கூந்தல் இழைகளின் எண்ணிக்கையை அவர் சரிபார்ப்பார்.

வழக்கம்போல் ஒருநாள் ஆற்றிலிருந்து சோனல் திரும்பி வந்தாள். சோனலின் கூந்தல் இழைகளை எண்ணிப் பார்த்த அவளது தாய், ஒரு கூந்தல் இழை காணாமல் போயிருப்பதைக் கண்டறிந்து மிகவும் கோபம்கொண்டார். ஒரு தங்க கூந்தல் இழையைத் தொலைத்ததற்காக சோனலை கடுமையாகச் சாடினார்.

‘நீ இப்பொழுதும் உன்னைச் சிறுமி என்றே எண்ணிக்கொண்டிருக்கிறாயா? உடல் வளர்ந்திருந்தாலும் உன் சிறுபிள்ளைத்தனம் இன்னும் போகவில்லை. பொறுப்பில்லாமல் ஒரு தங்கக் கூந்தல் இழையைத் தொலைத்துவிட்டு வந்திருக்கிறாய். சீக்கிரமாக உன்னை நீ மாற்றிக் கொள்ளவேண்டும்’ எனக் கோபத்துடன் அதட்டினார். மென்மையான மனம்கொண்ட சோனல், கோபத்துடன் தாயார் பேசியதைக் கேட்டதும் அழுதுகொண்டே வீட்டைவிட்டு வெளியேறினாள்.

வீட்டைவிட்டு வெளியேறிய சோனலின் முன்னே ஒரு சந்தன மரம் தெரிந்தது. உடனே அதன் மீதேறி கிளை ஒன்றில் அவள் அமர்ந்துகொண்டாள். வலி நிறைந்த இதயத்துடன் ‘ஏறு ஏறு… மேலே ஏறு சந்தன மரமே…’ என்றபடி அந்தக் கிளை மீது முகத்தை வைத்துக்கொண்டு சோனல் கண்ணீர் சிந்தினாள். அவளது கண்ணீர்த் துளிகள் கிளையில் பட்டுத் தெறித்ததும், சந்தன மரம் சற்று உயரமாக வளர்ந்தது.

வெகுநேரமாக சோனலை காணாததால், அவளுடைய பெற்றோர் அவளைத் தேடத் தொடங்கினார்கள். அவளுடைய உறவினர்களும் அவர்களுடன் இணைந்து கிராமம் முழுவதும் தேடினார்கள். எங்கு தேடியும் அவர்களால் சோனலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோனல் அமர்ந்திருந்த சந்தன மரத்தருகே அவர்கள் வந்தார்கள். அம்மரத்தின் மீது சோகத்துடன் அமர்ந்திருந்த சோனலை பார்த்துவிட்ட அவளது தாயார், கீழே இறங்கி வருமாறு அவளிடம் கெஞ்சினார். தாயைப் பார்த்ததும், ‘ஏறு ஏறு.. மேலே ஏறு சந்தன மரமே…’ எனக் கூறினாள் சோனல். அவளுடைய பேச்சைக் கேட்டு, மேலும் சற்று உயரமாக சந்தன மரம் வளர்ந்தது.

சோனலின் தோழிகள் அனைவரும் அந்த மரத்தடியில் கூமர் நடனம் ஆடியவாறு, ‘ஓஓ சோனல் பாய்… கீழே இறங்கி வா சோனல் பாய்…’ என அழைத்தனர். தோழிகளின் அழைப்புக்கும் செவிமடுக்காத சோனல், கோபத்துடன், ‘ஏறு ஏறு… மேலே ஏறு சந்தன மரமே…’ எனக் கூறினாள். அந்தச் சந்தன மரம் மேலும் சற்று உயரமாக வளர்ந்தது.

இதேபோல் ஒவ்வொருவராக முன்னே வந்து சோனலை மகிழ்விப்பதாக நினைத்து, கூமர் நடனம் ஆடியபடி அவளைக் கீழே இறங்குமாறு கூறினார்கள். ஆனால் எவருடைய நடனத்துக்கும் மனமிறங்காத சோனல், மரத்திடம் கூறி மேலே மேலே சென்று கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் மரத்தடியில் நிற்பவர்களுக்கு, மரத்தின் மீது இருக்கும் சோனல் ஒரு புள்ளியாகத் தெரிந்தாள்.

இருள் கவிழத் தொடங்கியதும் சோனலின் பெற்றோரைப் பயம் சூழ்ந்தது. இறுதியாக, சோனலின் அண்ணன் குழந்தையான அவளுடைய மருமகன் முன்னே வந்து, ‘கீழே இறங்கி வா சோனல் அத்தை… நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது’ என்றபடி அழத் தொடங்கினான்.

மருமகன் மீதிருந்த பாசத்தால், தன்னை கீழே இறக்கிவிடுமாறு சந்தன மரத்திடம் கூறினாள் சோனல். உடனே அச்சந்தன மரமும் சோனல் அமர்ந்திருந்த கிளையை மட்டும் தரையை நோக்கி வளைத்தது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கிளையில் இருந்தவாறே தனது மருமகனைத் தூக்கிக்கொண்டு அவள் மீண்டும் உயரே சென்றுவிட்டாள். குடும்பம் மன்றாடி அழைத்தும் மரத்திலிருந்து அவள் கீழே வரவில்லை. வேறு வழியின்றி அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

மறுநாளிலிருந்து தினமும் வேளா வேளைக்குச் சோனலின் அண்ணி, தன்னுடைய குழந்தைக்காகவும் நாத்தனாருக்காகவும் அந்தச் சந்தன மரத்தடியில் உணவு வைக்கத் தொடங்கினார். அவர் உணவை வைத்துவிட்டுச் சென்றதும், சந்தன மரத்திடம் கூறி கிளையைத் தரையை நோக்கி வளைத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் உணவை எடுத்துக்கொண்டு மீண்டும் மேலே சென்றுவிடுவாள் சோனல். அவளும் அவளுடைய மருமகனும் அச்சந்தன மரத்திலேயே வாழத் தொடங்கினார்கள்.

ஒருநாள் அவ்வழியே சென்ற ஒரு புதுமணத் தம்பதியும் அவர்களது உறவினர்களும், அந்த சந்தன மரத்தடியில் அமர்ந்து சிறிதுநேரம் இளைப்பாறினார்கள். மரத்தின் மேல் இருந்து அவர்களைக் கண்ட சோனல் மிகவும் மகிழ்ச்சி கொண்டாள். அவர்களின் களைப்பைப் போக்கும் வகையில், தன்னிடம் இருந்த ரொட்டியில் ஒரு துண்டைப் பிய்த்து அவள் கீழே போட்டாள். உடனே அந்த ரொட்டித் துண்டு அங்கிருந்த அனைவரின் பசியையும் தீர்க்கும் அளவுக்குப் பெரிதாக உருமாறியது. அந்த ரொட்டியைக் கண்டு மகிழ்ந்த அவர்கள், அதை உண்டு பசியாறினார்கள். அதன்பிறகு அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக, தன்னிடம் இருந்த தண்ணீரில் ஒரு துளியை எடுத்துத் தெளித்தாள் சோனல். தரையில் விழுந்த அந்த ஒரு துளி நீர், ஒரு குட்டையாக மாறி அவர்களின் தாகத்தையும் தணித்தது. பசியாறி களைப்பைப் போக்கிக்கொண்டதால், அங்கிருந்த பலரும் மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றார்கள்.

அந்தக் கூட்டத்தில் தன்னுடைய பரிவாரங்களுடன் இருந்த ஒரு ராஜகுமாரனுக்கு, அங்கு திடீரென ரொட்டி கிடைத்ததும் குட்டை உருவானதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது படை வீரர்களிடம் அந்த மரத்தின் மீது ஏறி பார்க்குமாறு அவன் ஆணையிட்டான். சந்தன மரத்தின் மீதேறிய படைவீரர்களின் கண்களுக்கு யாரும் தென்படவில்லை. இதனால் ராஜகுமாரனே அந்த மரத்தின் மேலேறி ஆராய்ந்தான். மரத்தின் ஒரு கிளையில் தங்கக் கூந்தலுடன் அமர்ந்திருந்த சோனலை கண்ட ராஜகுமாரன், அவளுடைய அழகில் மயங்கினான். சோனலை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அவளிடம் தன்னுடைய முடிவைக் கூறினான். அவனை சோனலுக்கு பிடித்திருந்தது.

‘என் மருமகனை என்னால் பிரிய முடியாது. அவனும் என்னுடன் வருவதற்குச் சம்மதம் தெரிவித்தால் திருமணத்துக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன்’ என்றாள். ராஜகுமாரன் அதற்கு ஒப்புக்கொள்ளவே, தனது மருமகனுடன் சோனல் சந்தன மரத்திலிருந்து கீழிறங்கினாள். பல்லக்கில் அமர்ந்து ராஜகுமாரனின் பரிவாரங்களுடன் கடுமையான தட்பவெப்ப சூழலைக்கொண்டிருந்த பாலைவனத்தின் வழியாக அவனது ராஜ்யத்திற்கு அவள் பயணித்தாள்.

பாலைவனத்தின் வெம்மை தாளாமல் சோனலின் மருமகனுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. வழியில் தெரிந்த ஒரு குட்டையில் இருந்து நீர் எடுத்து வருமாறு பணிப்பெண்களுக்குச் சோனல் ஆணையிட்டாள். ஆனால் அவர்களோ, ‘இக்குட்டையின் நீரை யார் பருகினாலும் அவர்கள் உடனே காகமாக மாறிவிடுவார்கள். இருப்பினும் நீங்கள் ஆணையிட்டால் நீர் எடுத்துவருகிறோம்’ என்றார்கள். தனது அன்புக்குரிய மருமகன் காகமாக மாறுவதை விரும்பாத சோனல் தொடர்ந்து பயணிக்குமாறு அவர்களிடம் கூறினாள்.

சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு குட்டை தென்பட, அதிலிருந்து வேகமாக நீர் எடுத்து வருமாறு பணிப்பெண்களுக்குச் சோனல் ஆணையிட்டாள். ஆனால் அவர்களோ தயங்கியவாறே, ‘இக்குட்டையின் நீரை யார் பருகினாலும் அவர்கள் உடனே நாயாக மாறிவிடுவார்கள். இருப்பினும் நீங்கள் ஆணையிட்டால் நீர் எடுத்துவருகிறோம்’ என்றார்கள். தாகத்தால் தொண்டை வறண்டு பாதி மயங்கிய நிலையில் இருந்த தன் மருமகனை வேதனையுடன் பார்த்தாள் சோனல். ஆனால் அவன் நாயாக மாறுவதை விரும்பாமல் பல்லக்கை வேகமாகக் கொண்டு செல்லும்படி கூறினாள்.

தாகம் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் சோனலின் மருமகன் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது. அச்சமயம் வழியில் தென்பட்ட மற்றொரு குட்டையில் இருந்து விரைவாக நீர் எடுத்து வருமாறு சோனல் ஆணையிட்டாள்.

பணிப்பெண்கள் அதற்கு, ‘அக்குட்டையின் நீரைப் பருகுபவர்கள் மயிலாக மாறிவிடுவார்கள்’ எனத் தயங்கித் தயங்கிக் கூறினார்கள். மயிலாக மாறினாலும் சரி, தன் மருமகன் உயிர் பிழைத்தால்போதும் என எண்ணிய சோனல், அக்குட்டை நீரை உடனடியாக எடுத்து வருமாறு கூறினாள். விரைந்து சென்று அவர்கள் எடுத்து வந்த நீரைத் தன் மருமகனுக்குக் கொடுத்து, அவனுடைய உயிரைச் சோனல் காப்பாற்றினாள்.

ஆனால் சிறிது நேரத்திலேயே சோனலின் கண்முன் அவளது மருமகன் ஒரு மயிலாக மாறினான். அதைக் கண்டு துக்கம் தாளாமல் அவள் கதறி அழுதாள். அவளைச் சமாதானம் செய்து, தன்னுடன் புறப்படுமாறு ராஜகுமாரன் கூறினான்.

‘மயிலாக மாறிய என் மருமகனுக்கு, தினமும் இங்கு வந்து உணவும் நீரும் அளிக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து புறப்படுவேன்’ எனச் சோனல் அவனிடம் கூறினாள். ராஜகுமாரனும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவே, தன் மருமகனை ஆரத் தழுவி, மற்ற மயில்களுடன் அவனை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினாள் சோனல். அதன்பிறகு அப்பகுதிக்குத் தினமும் உணவும் நீரும் எடுத்துச் சென்று தன் மருமகனை அவள் அன்புடன் கவனித்துக்கொண்டாள்.

அழகு ததும்பும் பதுமையாக இருந்த சோனல் மீது ராஜகுமாரனின் முதல் மனைவிக்குப் பொறாமை ஏற்பட்டது. இதனால் சோனலை பழிவாங்க அவள் திட்டமிட்டாள். வஞ்சக எண்ணத்துடன் அன்பாகப் பேசி, அவளுடைய மயில் மருமகன் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு, அவனுக்கு மறுநாள் தான் உணவு எடுத்துச் செல்வதாகக் கூறினாள். அதற்கு சோனல் சம்மதித்தாள். மறுநாள் உணவுடன் அங்கு சென்ற ராஜகுமாரனின் முதல் மனைவி, சோனலின் மீதிருந்த கோபத்தில் அவளது மயில் மருமகனின் கழுத்தை நெரித்துக்கொன்றாள். பின் ஏதும் அறியாதவள்போல் அரண்மனைக்குத் திரும்பி, மயில் மருமகன் உணவு உண்டுவிட்டதாக சோனலிடம் கூறினாள்.

மருமகனைக் காணும் ஆவலுடன் மறுநாள் உணவுடன் சென்ற சோனல், அங்கு இறந்து கிடந்த மயிலைக் கண்டு துக்கம் தாளாமல் வெடித்து அழுதாள். அங்கிருந்த மற்ற மயில்கள் அவளுடன் இணைந்து துக்கம் அனுசரித்தன. அவற்றின் மூலமாகத் தன் மருமகனுக்கு நேர்ந்த அநீதி குறித்து சோனல் அறிந்துகொண்டாள். இனியும் இந்த வஞ்சக உலகில் வாழவேண்டாம் என முடிவெடுத்த சோனல், மருமகனின் உடல் மீது படுத்தவாறு தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அவர்கள் இருவரும் உயிர் நீத்த இடத்தில் மறுநாள் இரு சந்தன மரங்கள் செழித்து ஓங்கி வளர்ந்திருந்தன.

பெண்கள் பூப்படைவதை இக்கதையில் வரும் சோனலின் ஒரு தங்கக் கூந்தல் இழை காணாமல் போகும் நிகழ்வு குறிக்கிறது. சோனல் அறியாமல் அவளது கூந்தல் இழை தொலைவதுபோல், ஒரு பெண் பூப்படைந்ததும் அவளது குழந்தைத்தனம் தொலைந்து போகிறது. ஒரு பெண் பூப்படையும்போது அவளுடைய தாயாரிடம் இருந்து வரும் முதல் வாக்கியம், ‘இனி நீ சிறுமி அல்ல. சிறுமிபோல் இனிமேல் நீ வெளியே எங்கும் செல்லக்கூடாது’. தாயின் கட்டுப்பாட்டால் தன் அழகிய குழந்தைத்தனத்தைத் தொலைத்து அச்சிறுமி மனதளவில் ஏக்கம் கொள்வாள். சோனலின் அத்தகைய ஏக்கம்தான் அவளைச் சந்தன மரத்துடன் தோழமை பாராட்ட வைத்தது.

மதிப்புமிக்க சந்தன மரம் தரும் பயன்கள் அதிகம். ஆனால் ஒரு சந்தன மரம் வளர்ந்து பயன் தர சிறிது காலம் ஆகும். அந்தக் காலகட்டம் வந்ததும் சந்தன மரத்தை வெட்டி அதன் உரிமையாளர்கள் விற்றுவிடுவார்கள். அதேபோல்தான் பெண்களும். பெண் என்பவள் மதிப்புமிக்கவள். ஒரு பெண் வளர்ந்து பருவமடைந்ததும் வேறொரு ஆணிடம் அவளைப் பெற்றோர் ஒப்படைத்துவிடுகிறார்கள்.

சோனலுக்கு கிடைத்த சந்தனமரத்தைப்போல் பெண்களுக்கு சில அன்பான உறவுகள் கிடைக்கின்றன. ஆனால் ஓர் ஆண் அவளுடைய வாழ்வில் நுழைந்ததும், அந்த அன்புக்குரிய உறவுகளைவிட்டு அவள் பிரிய நேர்கிறது. ராஜகுமாரனை விரும்பிய சோனல், தன் அன்புக்குரிய மருமகனோடு இணைந்து அவனுடைய ராஜ்யத்துக்கு செல்வதுபோல், ஒரு பெண் தனக்குப் பிடித்த (பெற்றோர் முடிவு செய்த) ஆணுடன் தன்னுடைய ஆசை மற்றும் கனவுகளோடு அவனுடைய வீட்டுக்குச் செல்கிறாள். வஞ்சகத்தால் மருமகன் கொலை செய்யப்படுவதால், சோனல் மனமுடைந்து தனக்கு அடைக்கலம் கொடுத்த சந்தன மரமாகவே மாறுவதுபோல், மணமாகிச் சென்ற இடத்தில் ஒரு பெண்ணின் கனவுகள் கொல்லப்படும் பட்சத்தில், அவள் தன் உணர்வுகளைக் கொன்று மரமாக மாறிவிடுகிறாள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வாய்மொழியாகக் கூறப்படும் பிரபலமான இப்பழங்கதை ஒரு பெண்ணின் வாழ்வு முறை குறித்து மறைமுகமாகப் பேசுகிறது.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *