மனிதர்கள் அன்றாடம் உபயோகிக்கும் வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை சாதாரணமாகத் தோன்றியது கிடையாது. தற்போது எளிதாகக் கிடைக்கும் இவை மூன்றும் இலகுவாக உருவாகிவிடவில்லை. மூவரின் தியாகத்தால் வெற்றிலையும் பாக்கும் புகையிலையும் உருவானதாக வட இந்தியாவில் கூறப்படும் ஒரு தொன்மக் கதை கூறுகிறது.
வெகு காலத்திற்கு முன்பு வட இந்திய மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ‘யூ ரிவ்பா’ மற்றும் ‘யூ படுக்’ என அழைக்கப்பட்ட இரு சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்து ஆழமான நட்புறவைக் கொண்டிருந்தனர். அக்கிராமத்தில் இருந்த செல்வந்தரின் மகனாவான் யூ ரிவ்பா. இதற்கு நேரெதிராக அவனது நண்பன் யூ படுக், எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் அவர்களுக்கு இடையே இருக்கும் சமூக வேறுபாட்டை மறந்து எவரும் பிரிக்க முடியாத அளவுக்கு இருவரும் நட்புடன் இருந்தார்கள்.
நண்பர்கள் இருவரும் ஒரே மாதிரியான பொழுதுபோக்கில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஒன்றாக நீச்சல் கற்று, வயல்வெளிகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்து விளையாடி மகிழ்ந்தார்கள். ஆனால் வளர வளர அவர்களுக்கான தனிப்பட்ட பொறுப்புகள் அதிகரித்ததால் இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுவது ஒரு கட்டத்தில் வெகுவாகக் குறைந்துபோனது.
தன்னுடைய தந்தையின் சொத்துக்களைக் கவனித்துக்கொள்வதற்காக, யூ ரிவ்பா பல நாட்கள் கிராமத்துக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது. அதேநேரம், வயதான தந்தைக்கு ஓய்வு கொடுக்கும் விதமாகத் தங்களுடைய வயலில் யூ படுக் கடுமையாக உழைக்க நேர்ந்தது. இருவரும் வெவ்வேறு திசைகளில் இருந்தாலும் அவர்களது நட்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அது எப்போதும்போல் உறுதியாகவே இருந்தது. நண்பர்கள் இருவரும் ஒருவருக்கொருவரை முழுமையாக நம்பினார்கள். அவர்களுக்கு இடையே எவ்வித ரகசியமும் இல்லாமல் இருந்ததே அவர்களது நட்புக்கு ஆழமான அடித்தளமாக அமைந்தது.
காலப்போக்கில் நண்பர்கள் இருவரும் தங்களுக்குப் பிடித்த பெண்களை மணந்துகொண்டு, இல்லற வாழ்க்கையில் நுழைந்து பொறுப்பான குடும்பத்தலைவர்களானார்கள். யூ ரிவ்பாவைப்போல் அவனது மனைவியும், செல்வந்தர் ஒருவரின் மகளாவாள். இதனால் யூ ரிவ்பாவின் செல்வாக்கு அக்கிராமத்தில் மேலும் உயர்ந்தது. இத்திருமணத்தால் அவன் மேலும் செழிப்பானவனாக மாறிப்போனான்.
மறுபுறம் தன்னைப்போல் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்துகொண்ட யூ படுக், தொலைதூர கிராமம் ஒன்றில் குடியேறினான். தன்னுடைய நண்பனைப்போல் செல்வமோ செல்வாக்கோ அவனிடம் இல்லையென்றாலும், தன்னிடம் இருப்பதைக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். யூ படுக்கின் மனைவி, எளிமையானவளாகவும் எந்நிலையிலும் குடும்பத்தைத் திறம்பட நிர்வகிக்கும் திறமைசாலியாகவும் இருந்தாள். நேரம் காலம் பாராமல் கணவனுடன் இணைந்து வயலில் கடுமையாக உழைத்து வந்தாள்.
இவ்வாறு ஓய்வின்றி உழைப்பதிலும் தத்தமது குடும்பங்களைக் கவனிப்பதிலும் இரு நண்பர்களும் கவனம் செலுத்திவந்தார்கள். சந்தர்ப்ப சூழல் இருவரையும் பிரித்ததால், அவர்கள் அரிதாகவே சந்தித்துக்கொண்டார்கள். இருப்பினும் அவர்களது நட்பும் பரஸ்பர பாசமும் சிறிதளவும் குறையவில்லை. மாறாக அவை மேலும் வலுப்பெற்றது. ஆண்டுகள் செல்லச் செல்ல நண்பர்களுக்கு இடையிலான பிணைப்பு அதிகரித்தது.
தன் நண்பனைச் சந்திக்கவும் ஊர் மக்களைக் காணவும், எப்பொழுதாவது யூ படுக் பிறந்த ஊருக்குச் சென்று வருவான். அச்சமயங்களில், அவனைத் தன் வீட்டிலேயே தங்க வைத்து அருமையாக விருந்தளித்து யூ ரிவ்பா கவனித்துக்கொள்வார். அந்நேரங்களில் நண்பர்கள் இருவரும் தங்களது சிறு வயது கதைகளைப் பேசி மகிழ்வார்கள். அவ்வப்போது நிகழும் இத்தகைய சந்திப்புகள் மூலமாகத் தங்களது நட்புறவை இருவரும் புதுப்பித்துக்கொண்டார்கள்.
ஒருமுறை அவ்வாறு தன்னுடைய நண்பனைச் சந்தித்துவிட்டு, யூ படுக் வீடு திரும்பினான். அப்போது, அவனுடைய நட்புறவு குறித்து அண்டை வீட்டார் கேலிபேசுவதாக அவனது மனைவி கூறினாள். யூ படுக்குக்கு அப்படி ஒரு வசதி படைத்த நண்பன் இல்லையென்றும், வெறுமனே ஊருக்கு மட்டுமே அவன் சென்று வருவதாகவும் அவர்கள் கேலி செய்திருந்தார்கள். ‘அவ்வாறு செல்வச் செழிப்புள்ள ஒரு நண்பன் இருந்திருந்தால் அதுநாள் வரை எதனால் அவன் யூ படுக்கை சந்திக்க இங்கு வரவில்லை? உண்மையில் யூ படுக் பாசாங்குதான் செய்கிறான். அவனது நட்பு என்பது போலியானது’ என்றெல்லாம் பேசி, யூ படுக்கின் நட்பை அண்டை வீட்டார் சந்தேகித்திருந்தார்கள்.
தன்னுடைய நட்பைச் சந்தேகித்துக் கேலி செய்திருந்ததால் யூ படுக்குக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. இதனால் நண்பன் யூ ரிவ்பாவை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து, அவனை அண்டை வீட்டாருக்கு அறிமுகம் செய்துவைக்க யூ படுக் முடிவு செய்தான். மீண்டும் தன்னுடைய கிராமத்துக்குச் சென்று நண்பனைச் சந்தித்து, விருந்துக்கு ஒருநாள் தன் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தான்.
ஆனால் யூ ரிவ்பா விருந்துக்கு வரும் நாளன்று, யூ படுக்கின் வீட்டில் உண்பதற்கு எதுவும் இருக்கவில்லை. இதனால் யூ படுக் செய்வதறியாமல் திகைத்தான். ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு அவன் தன் மனைவியிடம், ‘என் ஆருயிர் நண்பன் வீட்டிற்கு வருகையில் அவனுக்கு உணவளிக்க எதுவுமில்லாமல் இருப்பது மிகவும் கொடுமையானது. நமது அண்டை வீட்டாரிடம் இதுவரை நாம் எந்த உதவியும் கேட்டதில்லை. இந்தத் துயர நிலையில் அவர்களைவிட்டால் நமக்கு வேறு வழி கிடையாது. எனவே நீ சென்று அவர்களிடம் சிறிது அரிசியும் மீனும் கடன் வாங்கி வா. விருந்தினருக்கு உபசரிக்க வீட்டில் எதுவும் இல்லாமல் இருந்தால் நமக்குப் பெருத்த அவமானமாகிவிடும். இந்தச் சூழலில் கண்டிப்பாக அண்டை வீட்டார் நமக்கு உதவுவார்கள்’ என்றான்.
யூ படுக் கூறியபடி அரிசியும் மீனும் கடன் வாங்க அவனுடைய மனைவி வெளியே சென்றாள். ஆனால் கிராமம் முழுவதும் கேட்டும், அவளுக்கு அரிசியோ மீனோ கொடுக்க யாரும் முன்வரவில்லை. சோகத்துடன் வீடு திரும்பிய அவள், தன் கணவனிடம் நடந்ததைக் கூறினாள். அதைக் கேட்டதும் யூ படுக் கலக்கமடைந்தான்.
‘அய்யோ… ஒரு நண்பனுக்கு உணவளிக்க மறுத்த இந்த உலகத்தில் நான் வாழ்வதைவிட இறப்பதே மேல்…’ எனக் கூறியவாறு ஒரு கத்தியை எடுத்து தன்னைத் தானே குத்திக்கொண்டு இறந்துபோனான் யூ படுக். கண்முன் கணவன் இறந்ததைப் பார்த்த அவனுடைய மனைவி, ‘என் கணவன் இல்லாத உலகத்தில் எனக்கென்ன வேலை…’ என்றபடி அழுதவாறு கீழே கிடந்த கத்தியை எடுத்து தன்னைக் குத்திக்கொண்டு இறந்துபோனாள்.
ஆருயிர் நண்பனின் அழைப்புக்கு இணங்கி அவனுடைய வீட்டுக்கு வந்த யூ ரிவ்பா, நண்பன் மற்றும் அவனுடைய மனைவியின் சடலங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். விருந்துக்கு அழைக்கப்பட்ட வீட்டில் எவ்வித உணவுப் பொருளும் இல்லாததைக் கண்டு என்ன நடந்திருக்கும் என்பதை அவன் ஒருவாறு ஊகித்தான். தன் நண்பன் மற்றும் அவனது மனைவியின் இறப்புக்குத் தானே காரணமாகிவிட்டதை எண்ணி யூ ரிவ்பா கண்ணீர் வடித்தான். மிகுதியான துயரத்துடன் நண்பனின் உடல் மீது விழுந்து உயிரைவிட்டான்.
மறுநாள் யூ படுக்கின் வீடு அமைதியாக இருப்பதைக் கண்டு சந்தேகம்கொண்ட அண்டை வீட்டார், அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தார்கள். அங்கு யூ படுக், அவனது மனைவி மற்றும் யூ ரிவ்பாவின் சடலங்களுக்கு மேல் புதிதாக மூன்று விதமான தாவரங்கள் வளர்ந்திருந்தன. அதைப் பார்த்து ஆச்சரியமடைந்தாலும், கிராம மக்களைச் சோகம் ஆட்கொண்டது. இந்தத் துயர சம்பவத்துக்குத் தாங்களே காரணம் என்பதை உணர்ந்து வருத்தமடைந்தார்கள்.
தங்கள் தவறுக்குப் பிராயச்சித்தமாக, அப்பழுக்கற்ற நட்புறவைக்கொண்டிருந்த நண்பர்கள் இருவரின் நினைவாகவும் அன்புள்ளம்கொண்ட யூ படுக் மனைவியின் நினைவாகவும், அவர்கள் உடல் மீது வளர்ந்த தாவரங்களில் விளைந்திருந்த வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலையைத் தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு அளித்து அக்கிராம மக்கள் உபசரிக்கத் தொடங்கினார்கள்.
அந்தக் கிராம மக்களின் அப்பழக்கம் காலப்போக்கில் நம் நாடு முழுவதிலும் பரவி வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை கொடுக்கும் வழக்கம் உருவானது. தென்னிந்தியாவில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் உறவினர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்துக்கொடுப்பது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. அதிலும் வட இந்தியாவின் பல பகுதிகளில் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு வெற்றிலையும் புகையிலையும் அளிப்பது கட்டாய வழக்கமானது. அவ்வாறு விருந்தினர்களை உபசரிக்கையில் அவை உருவாகக் காரணமான இரு நண்பர்களின் கதையை அவர்கள் கூறுகிறார்கள்.
0

