Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் #10 – கர்ப்பம் தரித்த அரசன்

இந்தியத் தொன்மக் கதைகள் #10 – கர்ப்பம் தரித்த அரசன்

கிருத, திரேதா, துவாபர மற்றும் கலி என மொத்தம் 4 யுகங்கள் உள்ளதாக இந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவதான கிருத யுகம் உண்மையின் காலம் என அறியப்படுகிறது. இந்த யுகத்தில் சூர்ய வம்சம், அதாவது இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த யுவநாஷ்வா என்கிற அரசர் அயோத்தியைச் சீறும் சிறப்புமாக ஆட்சி செய்துவந்தார்.

நேர்மையாகவும் சிறப்பாகவும் ஆட்சிசெய்த யுவநாஷ்வாவுக்குப் பெரும் கவலை ஒன்று இருந்தது. ஆட்சி, அதிகாரம், செல்வம், புகழ் என அனைத்தும் இருந்தும் தனக்கு ஒரு குழந்தை இல்லை என்கிற குறை அவரது மனதை வாட்டி வதைத்தது. ஒரு கட்டத்தில் அயோத்தியின் அரசாட்சியைத் தன்னுடைய அமைச்சர் வசம் அளித்துவிட்டு, மனைவியுடன் கானகம் சென்றார் யுவநாஷ்வா. அங்கு முனிவர்களுடன் தங்கி அவர் உண்ணா நோன்பைக் கடைபிடிக்கத் தொடங்கினார்.

நேர்மையான அரசாட்சியால் யுவநாஷ்வாமீது நல்லெண்ணம் வைத்திருந்த முனிவர்கள், அவரது மன வருத்தத்தைப் போக்க முடிவு செய்தார்கள். அவருக்குக் குழந்தை பிறக்க வேண்டி, பிருகு முனிவரின் தலைமையில் அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தினர். அதன் முடிவில், மந்திர உச்சாடனம் செய்து அற்புதச் சக்தியைக்கொண்ட நீரை யாகத்தின் பயனாக அவர்கள் பெற்றார்கள்.

அச்சமயம் இரவு நேரமாக இருந்ததால், மந்திர நீர் அடங்கிய குடுவையை ஓர் இடத்தில் வைத்துவிட்டு, நாள் முழுவதும் யாகத்தில் ஈடுபட்ட களைப்பில் முனிவர்கள் அனைவரும் உறங்கினார்கள். முனிவர்களின் குடிலுக்கு அருகே தங்கியிருந்த யுவநாஷ்வாவுக்கு, திடீரென நள்ளிரவு வேளையில் கடுமையான தாகம் ஏற்பட்டது. ஆனால் அவர் வசம் அப்போது தண்ணீர் இல்லை.

எங்கு தேடியும் கிடைக்காததால், தண்ணீருக்காகப் பிருகு முனிவரின் குடிலுக்குள் நுழைந்தார் யுவநாஷ்வா. கடுமையாக உண்ணா நோன்பை மேற்கொண்டிருந்த காரணத்தால் அவரது குரல் குருவி கத்துவதைப்போல் இருந்தது. அசதியில் உறங்கிக்கொண்டிருந்த முனிவர்களின் காதில் அவரது கீச்சுக்குரல் விழவே இல்லை.

தாகத்தின் மிகுதியில் மயங்கிக் கீழே விழ இருந்த யுவநாஷ்வாவின் கண்களில், யாகத்தின் பயனாகப் பெற்ற மந்திர நீர் அடங்கிய குடுவை தென்பட்டது. குடுவையை எடுத்து, சிறிதும் தாமதிக்காமல் அதில் இருந்த நீரைத் தன் தாகம் தீரும் வரை குடித்தார். அம்மந்திர நீர் யுவநாஷ்வாவின் தண்ணீர் தாகத்தை மட்டுமல்லாமல், அவரது மனதில் இருந்த தாகத்தையும் தணித்தது.

இதன் காரணமாக அவருடைய உடலில் ஒருவிதமான சிலிர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எதுவும் புரியாமல் தாகம் தணிந்த திருப்தியில் யுவநாஷ்வா நிம்மதியாக உறங்கச் சென்றார். குடுவையில் இருந்த மந்திர நீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதை மறுநாள் காலையில் பார்த்துவிட்டு, பிருகு முனிவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

‘குடுவையில் இருந்த மந்திர நீர் எங்கே?’ என்று கோபத்துடன் அங்கிருந்த பிற முனிவர்களிடம் அவர் கேட்டார். ஆனால் மந்திர நீரின் அளவு எப்படிக் குறைந்தது என்பது தெரியாததால், அவர்கள் குழம்பி நின்றனர். அது குறித்து தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினார்கள்.

அச்சமயம் முனிவர்களின் குடிலுக்கு வந்த யுவநாஷ்வா, குடுவையில் நீர் குறைந்துபோன விஷயம் குறித்து அங்கு விசாரணை நடப்பதைத் தெரிந்துகொண்டார். உடனே பிருகு முனிவரிடம் சென்று, முந்தைய நாள் இரவில் அந்தக் குடுவையில் இருந்த நீரை அருந்திவிட்டதாகக் கூறி மன்னிப்பு கோரினார். அதைக் கேட்டதும் பிருகு முனிவர் வருத்தமடைந்தார்.

‘அரசே அது சாதாரண நீர் அல்ல. முனிவர்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து குழந்தை இல்லாததால் உனக்கு ஏற்பட்ட மனக்குறையைப் போக்குவதற்காக யாகத்தில் ஈடுபட்டு பெற்ற மந்திர நீர். அதை உன் மனைவி அருந்தியிருந்தால் தேவர்களுக்கு ஒப்பான மகன் உனக்குப் பிறந்திருப்பான். பெரும் ஆற்றல் பெற்ற அந்நீரைத்தான் நீ அருந்தியிருக்கிறாய்’ என்று அவர் யுவநாஷ்வாவிடம் விளக்கினார்.

அதற்கு, ‘அந்நீரை நான் அருந்திவிட்டதால் என்ன நடக்கும் முனிவரே?’ என்று கலக்கத்துடன் யுவநாஷ்வா கேட்டார்.

‘அம்மந்திர நீரை அருந்துபவர் கர்ப்பம் தரித்து தேவர்களுக்கு ஒப்பான மகனைப் பெற்றெடுப்பார். இந்த விதியை யாராலும் மாற்ற முடியாது. அறியாமல் நீ அதை அருந்தியிருந்தாலும் நீதான் கர்ப்பம் தரித்து உன் குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டும். பயம் கொள்ளாதே. பிரசவ நேரத்தில் உனக்கு வலி எதுவும் இல்லாமல் இருப்பதற்காக நான் ஒரு யாகத்தை நடத்துகிறேன். நீ குழந்தையைச் சுமக்கப் போவதால் உன்னுடைய வீரமும் அறிவும் அப்படியே அதற்கும் இருக்கும்’ என்றார் பிருகு முனிவர்.

முனிவர் கூறியதைப்போல் அரசர் யுவநாஷ்வா கர்ப்பம் தரித்தார். நாட்கள் செல்லச் செல்ல அவரது வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்தது. ஏறத்தாழ 100 வருடங்கள் தன் வயிற்றில் கருவைச் சுமந்தார் யுவநாஷ்வா. பேறு காலத்தின்போது அவருக்குப் பிரசவ வலியோ அல்லது வேறு எந்தப் பிரச்னையோ ஏற்படாமல் இருப்பதற்காகப் பிருகு முனிவர் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். பிரசவ காலம் நெருங்கியதும், யுவநாஷ்வாவின் வயிற்றின் இடப்பக்கத்தைக் கிழித்து ஆயிரம் சூரியனுக்கு நிகரான ஒளியைக்கொண்டிருந்த குழந்தையை அவர் வெளியில் எடுத்தார். பிருகு முனிவர் செய்த யாகத்தின் பயனாகப் பிரசவத்தின்போதோ அல்லது அதற்குப் பிறகோ யுவநாஷ்வாவுக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்படவில்லை. நல்லவிதமாகக் குழந்தை பிறந்ததும், அதற்கு யார் பாலூட்டுவது என்கிற குழப்பம் உண்டானது.

ஓர் ஆணால் பிரசவிக்கப்பட்ட அந்த அதிசயக் குழந்தையைக் காண்பதற்காக விண்ணுலகிலிருந்து தேவர்கள் அனைவரும் வந்திருந்தனர். தேவர்களுடன் வந்திருந்த அவர்களின் அரசனான இந்திரனிடம், ‘இந்தக் குழந்தை எதைப் பருகுவான்?’ என ஒரு முனிவர் கேட்டார்.

அதற்கு, ‘என்னையே பருகுவான்…’ என்று புன்னகையுடன் கூறிய இந்திரன், தன்னுடைய வலதுகை சுட்டுவிரலைக் குழந்தையின் வாய்க்கு அருகே நீட்டினார். அந்தச் சுட்டுவிரலில் இருந்து வெளிவந்த பாலை யுவநாஷ்வாவின் மகன் அருந்தினான். இந்த அற்புதத்தைக் கண்ட தேவர்கள், ‘இதை நினைவூட்டும் வகையில், இனி இவ்வுலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் தங்களது விரலைச் சூப்புவார்கள்’ என்றனர். தேவர்கள் அவ்வாறு கூறியதன் காரணமாகவே குழந்தைகள் அனைவரும் விரலைச் சூப்புவதாகக் கூறப்படுகிறது.

யுவநாஷ்வாவின் குழந்தை பசியாறி முடித்ததும், அக்குழந்தைக்குப் பெயர் சூட்டுவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர். இந்திரன் கூறிய, ‘என்னையே பருகுவான்…’ என்பதன் பொருளைக்கொண்ட ’மாந்தாதா’ என்னும் பெயரை முனிவர்கள் அக்குழந்தைக்குச் சூட்டினார்கள்.

இந்திரனிடம் பால் அருந்திய மாந்தாதா, பெரும் ஞானத்தையும், பலத்தையும், புகழையும் பெற்றார். தனது தந்தைக்குப் பிறகு அயோத்தியின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று, எவருக்கும் ஒப்பில்லாத சிறந்த அரசராக உருவானார். தந்தையைப்போலவே வீரத்துடனும் நல்லெண்ணத்துடனும் திகழ்ந்தார். அவரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகொள்ள எந்தவொரு அரசராலும் முடியவில்லை. மேலும், பெண்களால் அதாவது புலன்சார் இன்பங்களால் மாந்தாதா தீண்டப்படாதவராக இருந்தார்.

மாந்தாதாவின் ஆட்சித் திறமையைக் கண்ட இந்திரன், தேவலோகத்தில் பாதியை அவருக்கு அளித்து, அதை ஆட்சிசெய்யுமாறு கூறினார். தனக்குக் கிடைத்த பாதி தேவலோகத்தை மிகச் சிறப்பாக மாந்தாதா ஆட்சி செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில், ‘நான் மிகவும் சிறப்பு வாய்ந்தவனாக இருப்பதால்தான் இந்திரனே அழைத்து எனக்குப் பாதி தேவலோகத்தை அளித்திருக்கிறான். திறமைசாலியான எனக்கு, எதற்காகத் தேவலோகத்தில் பாதியை மட்டுமே அளித்தான்? முழுத் தேவலோகத்தையும் ஆள்வதற்குத்தான் எனக்குத் தகுதி இருக்கிறதே. ஒருவேளை, தேவலோகத்தில் பாதியை மட்டும் அளித்து இந்திரன் என்னை ஏமாற்றிவிட்டானோ?’ என்றெல்லாம் மாந்தாதா யோசிக்கத் தொடங்கினார். இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே மாந்தாதாவின் மனதில் ஆணவம் குடிகொண்டது.

மாந்தாதாவை ஆணவம் ஆட்கொண்டதும், அவர் தேவலோகத்தை ஆட்சிசெய்யும் உரிமையை இழந்து, தளர்ந்துபோன முதியவராகப் பூமிக்குத் திரும்பினார். பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்த அரசராக இருந்தும், ‘நான்தான்’ என்கிற ஆணவம் உருவானதும், அனைத்தையும் இழந்து உச்சநிலையில் இருந்து கீழே வந்தார்.

தன்னுடைய வீழ்ச்சிக்கும் இத்தகைய நிலைக்கும் என்ன காரணம் என்பதை முதலில் மாந்தாதா உணரவில்லை. ஆழ்ந்து யோசித்த பிறகே, தன்னுடைய ஆணவமே இத்தகைய நிலைக்குக் காரணம் என்கிற உண்மையை அவர் உணர்ந்துகொண்டார். அதன்பிறகு மாந்தாதாவை மரணம் தழுவிக்கொண்டது.

புராணத்தில் கூறப்பட்டுள்ள இக்கதை மாந்தாதாவை ஓர் அதிசயப் பிறவியாகக் குறிப்பிடுகிறது. தன்னலம் இன்றி மக்கள் சேவையில் ஈடுபடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தவரையில் பெயரும், புகழும், உயர்ந்த நிலையும் மாந்தாதாவைத் தேடி வந்தன. ஆனால் அதிசயப் பிறவியாகவே இருந்தாலும், தன்னைப் பற்றிய தலைக்கணம் உருவானதும், அதுவரை பெற்றிருந்த அனைத்துச் சிறப்புகளையும் இழந்து மரணிக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *