Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் #11 – பிறவிக் குணம்

இந்தியத் தொன்மக் கதைகள் #11 – பிறவிக் குணம்

முன்பொரு காலத்தில், கங்கை நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து முனிவர் ஒருவர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அம்மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு பருந்து, தான் உண்பதற்காகப் பிடித்து வந்திருந்த ஓர் எலியை எதிர்பாராவிதமாகக் கீழே தவறவிட்டது. பருந்து தவறவிட்ட அந்த எலி, மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்த முனிவரின் கையில் விழுந்தது. இதனால் அந்த முனிவரின் தியானம் கலைந்தது.

கண் விழித்த அவர், முதலில் எலியையும் அதன்பிறகு மரத்தின்மீது இருந்த பருந்தையும் பார்த்தார். எலியின்மீது அந்த முனிவருக்கு இரக்கம் ஏற்பட்டது. தன் கையில் இருந்த எலியை அந்தப் பருந்திடம் இருந்து அவர் காப்பாற்ற எண்ணினார். உடனே மந்திரம் ஜபித்து அந்த எலியை ஓர் அழகான மனிதப் பெண் குழந்தையாக மாற்றினார். அப்பெண் குழந்தையைத் தன்னுடைய மனைவியிடம் காண்பிப்பதற்காகத் தன் வீட்டிற்குப் புறப்பட்டார் முனிவர்.

கணவர் தூக்கி வந்த பெண் குழந்தையைக் கண்ட முனிவரின் மனைவி, குழந்தை இல்லாத குறையைப் போக்கிக்கொள்வதற்காக, அப்பெண் குழந்தையைத் தன்னுடைய மகளாக வளர்க்க ஆசைப்பட்டார். முனிவர் மகிழ்ச்சியுடன் தன் மனைவியின் விருப்பத்திற்கு அனுமதியளித்தார். அப்பெண் குழந்தை முனிவரின் மகளாக அவரது வீட்டில் வளர்ந்தது.

அப்பெண் குழந்தை வளர்ந்து பெரியவளானதும், அவளுக்கு மணமுடிக்கச் சிறந்த மணமகனைத் தேடினார் முனிவர். தன்னுடைய தவ வலிமையால் உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியனை அழைத்தார் முனிவர். தன் மகளைத் திருமணம் செய்யுமாறு சூரியனிடம் கூறினார். சூரியன் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவே, முனிவர் தன் மகளிடம் அது குறித்துப் பேசினார்.

‘சூரியனைத் திருமணம் செய்துகொள்ள உனக்குச் சம்மதமா?’ என்று அவர் கேட்டார்.

அகிலம் முழுவதும் ஒளி தரும் சூரியன் தன்னைச் சுட்டெரிப்பதாகக் கூறி, சூரியனைத் திருமணம் செய்துகொள்வதற்கு அவள் மறுப்பு தெரிவித்தாள்.

அதைக் கேட்ட முனிவர், ‘சூரியனைவிட வலிமையில் சிறந்த மணவாளன் யாராவது இவ்வுலகில் இருக்கிறாரா?’ எனத் தன் மகளிடம் கேட்டார்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சூரியன், ‘உலகுக்கே ஒளி தந்தாலும் என்னையே ஒரு சில நேரங்களில் மேகவர்ணன் மறைத்துவிடுகிறான். அதனால் என்னைவிட பலசாலி மேகவர்ணன்தான். நீங்கள் அவனையே உங்களது மகளுக்கு மணமுடிக்கலாம்’ எனக் கூறியது.

இந்த ஆலோசனை முனிவருக்குச் சரியானதாகத் தோன்றியது. உடனே அவர் தன் தவ வலிமையால் மேகத்தை அழைத்தார். தன்னுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அதனிடம் கூறினார். அதற்கு மேகம் சம்மதம் கூற, முனிவர் தன் மகளை அழைத்து, ‘மேகத்தைத் திருமணம் செய்துகொள்ள உனக்குச் சம்மதமா?’ என்று கேட்டார்.

அதற்கு அவள், கருப்பாகவும் பஞ்சு போன்று லேசாகவும் இருப்பதாகக் கூறி மேகத்தைத் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்தாள்.

அதைக் கேட்ட முனிவர், ‘மேகத்தைவிட வலிமையான மணவாளனை நான் எங்கு சென்று தேடுவேன்?’ எனக் கூறி, தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அவரது வருத்தத்தைக் கண்ட மேகம், ‘நான் சூரியனின் ஒளியை மறைத்தாலும், வாயு என்னை ஊதித் தள்ளிவிடுவான். என்னைவிட அவனே வலிமையானவன். நீங்கள் அவனை உங்களது மகளுக்கு மணமுடிக்கலாம்’ என்றது.

உடனே, முனிவர் தன் தவ வலிமையால் காற்றை அழைத்து, தன்னுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார். அதற்குக் காற்று சம்மதம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, ‘காற்றைத் திருமணம் செய்துகொள்ள உனக்குச் சம்மதமா?’ என்று மகளிடம் கேட்டார் முனிவர்.

அதற்கு அவள், ‘காற்றை ஓரிடத்தில் நிறுத்தி வைக்க முடியாது. அது அங்கும் இங்கும் செல்லக் கூடியது. அதனால் எனக்குக் காற்றைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை’ என்றாள்.

‘காற்றைவிட வலிமையான மணவாளன் யாராவது இருக்கிறாரா?’ என்றபடி முனிவர் கவலைகொண்டார்.

முனிவர் கவலைகொள்வதைக் கண்ட காற்று, ‘நான் எங்கு செல்ல விரும்பினாலும், மலை என்னைத் தடுத்து விடுகிறது. நீங்கள் மலையிடம் செல்லுங்கள் முனிவரே’ என்றது.

மலையிடம் சென்ற முனிவர், ‘அழகு நிறைந்த என் மகளைத் திருமணம் செய்துகொள்ள சம்மதமா?’ என்று கேட்டார். அதைக் கேட்டதும், மகிழ்வுடன் அது சம்மதம் தெரிவித்தது.

முனிவர் தன் மகளை அழைத்து, மலையைத் திருமணம் செய்துகொள்ளும்படி கூறினார். அதற்கு அவள், ‘மலை மிகவும் வலிமையானதாக இருந்தாலும், மிகவும் கரடு முரடானது. அதனால் மலை எனக்கு வேண்டாம்’ என்று மறுப்பு தெரிவித்தாள்.

‘மலையைவிட வலிமையான சிறந்த மணவாளனாக யார் இருப்பார்?’ எனத் தீவிர யோசனையில் ஆழ்ந்தார் முனிவர்.

அவரது யோசிப்பதைக் கண்ட மலை, ‘முனிவரே… நான் மிகவும் உறுதியானவனாக இருந்தாலும் என் மீது நிறையத் துளைகளை இட்டு என்னைப் பலவீனமாக்கக்கூடிய ஒருவன் இருக்கிறான். அவனிடம் சென்று உங்கள் பெண்ணை மணமுடிக்கக் கேளுங்கள்’ என்றது.

மலை கூறியதைக் கேட்டு ஆச்சரியமடைந்த முனிவர், ‘உறுதியான உன் மீதே துளையிட்டு உன்னைப் பலவீனப்படுத்தக்கூடியது யார்?’ எனக் கேட்டார்.

அதற்கு, ‘எலிகளின் அரசன்தான் என்னைப் பலவீனப்படுத்தக்கூடியவன்’ என்று பதிலளித்தது மலை. உடனே எலிகளின் அரசனைத் தேடிச் சென்றார் முனிவர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு எலிகளின் அரசனைச் சந்தித்த முனிவர், தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். எலிகளின் அரசன் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, எலிகளின் அரசனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் முனிவர். எலிகளின் அரசனைக் கண்ட முனிவர் மகளின் உள்ளம் சிலிர்த்தது. தன்னையும் அறியாமல் அவன்மீது அவள் காதலில் விழுந்தாள்.

தன்னுடைய தந்தை கேட்பதற்கு முன்பாகவே, ‘எனக்கு எலிகளின் அரசனை மிகவும் பிடித்திருக்கிறது. நான் இவரையே திருமணம் செய்துகொள்கிறேன் தந்தையே’ என்றாள்.

மகளின் விருப்பத்தைக் கேட்ட முனிவர் அகமகிழ்ந்தார். மகளைத் தன்னுடைய தவ வலிமையால் மீண்டும் எலியாக உருமாற்றி, அவளை எலிகளின் அரசனுக்குத் திருமணம் செய்துவைத்தார்.

0

மிகவும் பிரபலமான ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ நூலில் கூறப்பட்டுள்ள பல கதைகளில் இது ஒன்றாகும்.

பழங்கால இந்தியாவில் விஷ்ணு சர்மா என்கிற முனிவரால் விலங்குகளைக் கொண்டு மனிதர்களுக்கு நீதி கூறும் வகையில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அற்புதமான கதைகளைக்கொண்ட தொகுப்பே இந்தப் பஞ்சதந்திரக் கதைகள் நூலாகும். ‘பஞ்சம்’ என்றால் ஐந்து. ‘தந்திரம்’ என்றால் சூழ்ச்சி அல்லது வழிமுறை. பஞ்சதந்திரத்தில் மொத்தம் 5 தந்திரங்கள் சார்ந்த கதைகள் உள்ளன. மித்ர பேதம், மித்ர லாபம், காகோலூக்கியம், லப்த பிரணாசம் மற்றும் அபரீட்சித் காரகம் ஆகியவைதான் அந்தத் தந்திரங்கள்.

முதலாவது தந்திரமான மித்ர பேதம் சார்ந்த கதைகள், நண்பர்களுக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து வழிகாட்டுகின்றன. இரண்டாவது தந்திரமான மித்ர லாபம் சார்ந்த கதைகள், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் குறித்தும், நட்பின் சிறப்பை உணர்த்துவது குறித்தும் வழிகாட்டுகின்றன.

மூன்றாவது தந்திரமான காகோலூக்கியம் சார்ந்த கதைகள், பகையை எவ்வாறு வெற்றி கொள்வது? சாதுர்யமாக எவ்வாறு செயல்படுவது? ஆகியவை குறித்த ஆலோசனைகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. நான்காவது தந்திரமான லப்த பிரணாசம் சார்ந்த கதைகள், இழந்த பொருட்கள் அல்லது பதவிகளை எவ்வாறு சாதுர்யமாக மீண்டும் அடைவது என்பதை விளக்குகின்றன. இறுதி தந்திரமான அபரீட்சித காரகம் சார்ந்த கதைகள், ஆராயாமல் செய்யப்படும் செயல்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரிக்கின்றன.

மேலே கூறப்பட்டுள்ள கதை, மூன்றாவது தந்திரமான காகோலூக்கியத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது. ஒருவரது பிறவி இயல்பை என்ன செய்தாலும், எவராலும் மாற்ற முடியாது என்கிற உட்கருத்தை இக்கதை நமக்குக் கூறுகிறது. மேலும், ஒருவர் எவ்வளவு வலிமைமிக்கவராகத் தோன்றினாலும் அவரைவிடவும் வலிமையானவர் இவ்வுலகில் உண்டு என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *