பண்டைய இந்தியாவில் வேதங்களைப் பயிற்றுவித்த ஆகச்சிறந்த முனிவர்களில் ஒருவர் உத்தாலக ஆருணி. தன்னுடைய சீடர்களில் ஒருவரான கஹோடகர்மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பால், தன் மகள் சுஜாதாவை அவருக்குத் திருமணம் செய்துவைத்தார் உத்தாலகர். இனிமையான இல்லறத்தின் விளைவாக ஒரு குழந்தையைச் சுமக்கும் பேறு பெற்றார் சுஜாதா.
அவரது வயிற்றில் இருந்த அந்தக் குழந்தை, தன்னுடைய தந்தை கஹோடகர் பயிற்சி செய்யும் வேதங்களையும் மந்திரங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வளர்ந்தது. ஒருமுறை வேதங்களை உச்சரிக்கும்போது கஹோடகர் செய்த தவறை, வயிற்றில் இருந்தபடியே அக்குழந்தை திருத்தியது. கருவில் இருந்த குழந்தை வேதங்களைச் சரியாக உச்சரிப்பதைக் கேட்டு அவர் ஆச்சரியமடைந்தார். அதேநேரம், ‘இன்னும் உலகத்தையே பார்க்காத, கருவில் இருக்கும் குழந்தை என்னைத் திருத்துவதா?’ எனக் கோபம்கொண்டார் கஹோடகர்.
இதனால், ‘8 வளைவுகளுடன் பிறப்பாயாக’ எனத் தன் குழந்தைக்கே அவர் சாபமளித்தார்.
கஹோடகர் சாபத்தின்படி, சுஜாதாவின் கருவில் இருந்த குழந்தை 8 இடங்களில் வளைந்திருந்த உடலுடன் பிறந்தது. இதனால் அக்குழந்தைக்கு ‘அஷ்டவக்கிரர்’ என்னும் பெயர் உருவானது. சமஸ்கிருதத்தில் ‘அஷ்டம்’ என்றால் ‘எட்டு’ என்பதும், ‘வக்கிரம்’ என்றால் ‘வளைவு’ என்பதும் பொருளாகும். அஷ்டவக்கிரர் பிறப்பதற்கு முன்பே குடும்பம் நடத்துவதற்குப் பொருளீட்ட மிதிலை மகாராஜா ஜனகரின் அரண்மனைக்குச் சென்றார் கஹோடகர். அச்சமயம் அங்கு நடைபெற்ற விவாதத்தில், வந்தி என்கிற பண்டிதரிடம் தோற்றதால், அவர் கடலில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி கிடைத்தது.
தன்னுடைய தந்தை கொல்லப்பட்ட விஷயம் அறியாமலேயே அஷ்டவக்கிரர் வளர்ந்தார். மேலும், உத்தாலகரை தனது தந்தையாகவும் உத்தாலகரின் மகனான சுவேதகேதுவை தனது சகோதரனாகவும் அவர் கருதினார். தன்னுடைய 12வது வயதில்தான், சுவேதகேது மூலமாகத் தன் தந்தை கஹோடகர் குறித்த உண்மை அஷ்டவக்கிரருக்கு தெரியவந்தது. தந்தை கொல்லப்பட்ட விஷயத்தைத் தாய் சுஜாதாவிடம் கேட்டு உறுதிசெய்துகொண்டார். இதன் தொடர்ச்சியாகத் தந்தையின் இறப்புக்குப் பழி வாங்குவதாகச் சபதமேற்றுவிட்டு, ஜனகரின் அரண்மனைக்குப் புறப்பட்டார் அஷ்டவக்கிரர்.
சரியாக அதே நேரத்தில் ஜனக மகாராஜாவுக்கு ஒரு வித்தியாசமான கனவு வந்தது. அதாவது, தான் பிச்சைக்காரனாக இருந்து துன்பப்படுவதுபோல் உறக்கத்தின்போது உணர்ந்திருக்கிறார். உடனே உறக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்ததும் மகாராஜாவாக அரண்மனையில் இருப்பதைக் கண்டார். அந்தக் கனவு ஜனகரை குழம்பித் தவிக்க வைத்தது.
தன்னுடைய கனவுக்கான உண்மையான அர்த்தத்தைக் கூறுமாறு நாட்டின் அனைத்துப் பண்டிதர்களையும் தன் அரசவைக்கு வரவழைத்தார் ஜனகர். அதே சமயத்தில் அஷ்டவக்கிரரும் ஜனகரின் அரண்மனைக்குச் வந்திருந்தார். அஷ்டவக்கிரரின் தோற்றத்தைக் கண்ட வாயிற் காப்பாளன், சிறுவன் என்பதால் அவரை உள்ளே அனுப்ப மறுத்தான்.
அதற்கு அஷ்டவக்கிரர், ‘நரைத்த தலைமுடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ, நரைத்த முடியோ, உடனிருக்கும் தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ, ஒருவரைப் பெரிய மனிதனாக்குவதில்லை. ஞானத்தில் யார் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்’ என அவனுடன் வாதிட்டு, பிடிவாதத்துடன் அரண்மனைக்குள் நுழைந்தார்.
அரசவைக்கு வந்த அஷ்டவக்கிரரைக் கண்ட ஜனகர், ‘இது குழந்தைகளுக்கான அவை அல்ல’ எனக் குறிப்பிட்டு அவரை வெளியே செல்லுமாறு கூறினார்.
முன்பு வாயிற் காப்பளனுக்குக் கூறிய அதே விளக்கத்தை அங்கு ஜனகரிடம் எடுத்துக்கூறிய அஷ்டவக்கிரர், ‘தங்களின் குழப்பத்திற்கான தீர்வை நான் கூறுகிறேன்’ என்றார்.
அதைக் கேட்டதும், அப்போது அரசவையில் இருந்த அனைவரும் அஷ்டவக்கிரரின் கருமையான வளைந்த உடலுடன் கூடிய தோற்றத்தைக் குறிப்பிட்டுக் கேலி செய்து நகைத்தனர்.
அவர்கள் எள்ளி நகைப்பதைக் கண்டு கோபமடையாத அஷ்டவக்கிரர், மிகவும் அமைதியான குரலில் ‘இந்தக் கசாப்புக் கடைக்காரர்களையும் தோல் வியாபாரிகளையும் அவையிலிருந்து வெளியே அனுப்பினால் தங்களின் குழப்பத்திற்கான தீர்வை நான் கூறுகிறேன். வெளிப்புறத் தோற்றத்தை வைத்து ஒருவரின் அறிவையும் ஞானத்தையும் முடிவு செய்வது தவறு’ என்ற அங்குள்ளவர்களைப் பார்த்தவாறு ஜனகரிடம் கூறினார்.
அஷ்டவக்கிரர் அவ்வாறு கூறியதைக் கேட்டதும், அங்கிருந்த பண்டிதர்களுக்குக் கோபம் ஏற்பட்டது. அவையில் இருந்த பண்டிதர்களுடன், கஹோடகரை விவாதத்தில் தோற்கடித்த வந்தி என்ற பண்டிதரும் இருந்தார். தான் கொண்டிருந்த அறிவின் மீதிருந்த செருக்கினால், கோபத்துடன் அஷ்டவக்கிரரை விவாதத்திற்கு அழைத்தார் வந்தி. இருவருக்கும் நடந்த விவாதத்தில் அஷ்டவக்கிரர் வந்தியைத் தோற்கடித்தார். அதுநாள் வரை விவாதத்தில் தோற்ற அனைவரையும் கடலில் மூழ்கடித்து கொல்லப்பட்டதைப் போன்று தன்னிடம் தோற்ற வந்தியையும் கொல்ல விரும்புவதாக ஜனகரிடம் கூறினார் அஷ்டவக்கிரர்.
அதைக் கேட்டு பயந்த வந்தி, தான் வருணனின் மகனென்றும், தான் கஹோடகரைக் கொல்லவில்லை என்றும் கூறினார். நாட்டின் சிறந்த பண்டிதர்களைச் சொர்க்கத்தில் நடக்கும் ஒரு யாகத்திற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவராக கஹோடகரையும் அனுப்பியுள்ளதாகக் கூறினார். அதே நேரத்தில், சொர்க்கத்தில் நடைபெற்ற யாகம் முடிவடைந்து, வந்தியுடன் விவாதத்தில் தோற்றதால் கடலில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட அனைத்துப் பண்டிதர்களும் ஜனகரின் அரண்மனைக்குத் திரும்பினர். அவர்களுடன் அஷ்டவக்கிரரின் தந்தை கஹோடகரும் இருந்தார். தன்னுடைய தந்தையைக் கண்டதும் அஷ்டவக்கிரர் பெரு மகிழ்ச்சியடைந்தார்.
அஷ்டவக்கிரருக்கும் வந்திக்கும் நடந்து முடிந்திருந்த விவாதத்தில் இருந்து அஷ்டவக்கிரரின் ஞானச்செறிவினை உணர்ந்துகொண்ட ஜனகர், பணிவுடன் அஷடவக்கிரரை வணங்கி தன்னுடைய குழப்பத்திற்கான தீர்வைக் கூறுமாறு வேண்டினார்.
‘தூங்கும்போது நீ கண்டதும் கனவுதான். இப்போது நீ வாழும் வாழ்வும் கனவுதான். ராஜ வாழ்வும் சரி, பிச்சைக்கார வாழ்வும் சரி, இரண்டும் உண்மையில்லை. ராஜாவாக இருக்கும்பொழுது சந்தோஷப்படாதே, உறங்கும்போது அந்தச் சந்தோஷம் அகன்றுவிடும். பிச்சைக்காரனாக இருக்கும்போது வருத்தப்படாதே, கண் விழித்தால் அந்த வருத்தம் மறைந்துவிடும். இரண்டு நிலையிலும் ஒரே விதமாக இருக்கக் கற்றுக்கொள். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை’ என்றார்.
அஷ்டவக்கிரரின் ஞானச்செறிவைக் கண்டு வியந்த ஜனகர், தனக்கு மேலும் ஞானத்தைப் போதிக்குமாறு வேண்டினார். ஜனகரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குக் கூறிய போதனைகளின் தொகுப்பே ‘அஷ்டவக்கிர கீதை’ என்றழைக்கப்படுகிறது. உடலின் தோற்றம் நிலையானது அல்ல, ஆன்மாவே நிலையானது என்னும் மையக்கருத்தை அது வலியுறுத்துகிறது.
ஜனக மகாராஜாவுக்கான போதனையை நிறைவு செய்த பிறகு அரண்மனையிலிருந்து கிளம்பி, அஷ்டவக்கிரரும் கஹோடகரும், தங்களது இல்லத்துக்குச் சென்றனர். அதன்பிறகு தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து வேதங்களை ஓதும் பணியில் அவர் ஈடுபட்டார்.
சிறிது காலத்திற்குப் பிறகு, வத்சிய முனிவரின் மகள் சுப்ரபாவை மணக்க அஷ்டவக்கிரர் விருப்பம் கொண்டார். அவருடைய விருப்பத்தைக் கேட்ட வத்சியர், அவரது அன்பையும் மன உறுதியையும் சோதிக்க நினைத்தார். இதனால், இமயமலைக்குப் பயணம் செய்துவிட்டு திரும்பி வரும்படியும் அதன்பிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவரிடம் கூறினார். அதற்குச் சம்மதம் தெரிவித்து, இமயமலை நோக்கிப் பயணமானார் அஷ்டவக்கிரர்.
இமயமலையை நெருங்கும் வேளையில், அஷ்டவக்கிரரை வழி மறித்த மூதாட்டி ஒருவர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தினார். அவரது விருப்பத்தைக் கேட்ட அஷ்டவக்கிரர், ‘வத்சியரின் மகளை நான் விரும்புகிறேன். அவளைத் திருமணம் செய்வதற்காகத்தான் இப்பயணம். மனதில் நினைத்த அவளை விட்டுவிட்டு உன்னைத் திருமணம் செய்தால் பெரும் பாவம் என்னைச் சேரும்’ எனக் கூறி அவருக்கு மறுப்பு தெரிவித்தார்.
அந்த மூதாட்டி தொடர்ந்து வற்புறுத்தியும் ஆசை வார்த்தைகளைக் கூறியும், அவரது விருப்பத்திற்கு அஷ்டவக்கிரர் இணங்கவில்லை. அவருடைய மன உறுதியைக் கண்ட அம்மூதாட்டி, ‘வத்சிய முனிவரின் வேண்டுகோளின்படியே வடதிசை தேவியான நான் உனது உள்ளத்தின் உறுதியைச் சோதித்துப் பார்த்தேன். எனது சோதனையில் நீ வென்றுவிட்டாய்’ என்று வாழ்த்தி, அவரை வழியனுப்பி வைத்தார்.
வடதிசை தேவி மூலமாக அஷ்டவக்கிரரின் மன உறுதியை அறிந்துகொண்டார் வத்சிய முனிவர். இமயமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு அஷ்டவக்கிரர் திரும்பியதும், தன் மகள் சுப்ரபாவை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்துக்குப் பிறகு அஷ்டவக்கிரர் சந்தோஷமாக வாழ்ந்தாலும், தன்னுடைய சாபத்தால் மகன் அடையும் துன்பங்களைக் கண்டு கஹோடகர் மனம் வருந்தினார். இதனால் தன் மகனை அழைத்து சமங்கா நதியில் மூழ்கிக் குளிக்குமாறு கூறினார். தந்தையின் சொல்படி சமங்கா நதியில் மூழ்கி குளித்து எழுந்த அஷ்டவக்கிரரின் உடலில் இருந்த வளைவுகள் அனைத்தும் நேராகி, சாபத்திலிருந்து விடுதலை பெற்றார்.
இதன் காரணமாகவே நதிகளில் நீராடும்படியும், முழுவதுமாக மூழ்கி எழும்படியும் நம்மைப் பெரியவர்கள் வலியுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. நதியில் மூழ்கி நீராடும்போது, அஷ்டவக்கிரரின் உடல் வளைவுகள் அனைத்தும் நேரானதைப்போல் நமது உடல் அழுக்குகளுடன் சேர்ந்து உள்ளத்து அழுக்குகளும் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
ஒருவரின் உண்மையான அடையாளம் என்பது அவரது உடல் அழகையோ தோற்றக் குறைபாடுகளையோ சார்ந்தது அல்ல. அறிவாற்றலே ஒருவருக்கு உண்மையான அடையாளமாகும் என்பதை அஷ்டவக்கிரரின் இக்கதை உணர்த்துகிறது. மேலும், உடலில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவமானங்களைக் கண்டு கலங்காமல், தன்னிடத்தே இருக்கும் அறிவில் நிலைத்திருப்பதே உண்மையான வலிமையாகும். உள்ளத் தூய்மையே உண்மையான அழகாகும் என்பதையும் கூறுகிறது.
(தொடரும்)

