வேத காலத்தில் வாஜச்ரவஸ் என்கிற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நசிகேதன் என்னும் மகன் இருந்தான். உலகத்தில் உள்ள அனைத்து நன்மைகளும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், விஸ்வஜித் என்னும் யாகத்தை நடத்தினார் வாஜச்ரவஸ். நன்மைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய அவருடைய மனம் மிகவும் குறுகிய எண்ணத்தைக் கொண்டிருந்தது. பால் கறக்க இயலாத, கன்று போட முடியாத குறையுள்ள பசுக்களை யாகத்தின்போது அவர் தானமாக அளித்தார். அத்துடன், எதற்கும் உதவாத வறண்ட நிலங்களையும், எந்தப் பயனும் தராத பொருட்களையும் பார்த்துப் பார்த்து வாஜச்ரவஸ் தானம் செய்தார்.
கர்வமோ அகம்பாவமோ துளியும் இன்றி, தானமளிக்கும் செயலில் ஒருவர் ஈடுபட வேண்டும். ஆனால், ‘நான் கொடுக்கிறேன்’ என்கிற அகந்தையோடு, ஒன்றுக்கும் உதவாதவற்றையே வாஜச்ரவஸ் தானமாக அளித்திருந்தார்.
இதைப் பார்த்து அவரது மகன் நசிகேதன் மனம் வருந்தினான். தந்தை செய்யும் தவறை அவருக்கு உணர்த்தும் பொருட்டு, ‘என்னை யாருக்கு தானம் அளிக்கப் போகிறீர்கள்?’ எனக் கேட்டான்.
நசிகேதனின் இந்தக் கேள்வியைக் காதில் வாங்காததுபோல் இருந்தார் வாஜச்ரவஸ். ஆனால் விடாமல் நசிகேதன் மீண்டும் மீண்டும் அக்கேள்வியைக் கேட்டான். இதனால் அவர் கோபம் கொண்டு, ‘உன்னை எமதர்மனுக்கு தானம் அளிக்கிறேன். போ!’ என்றார்.
தந்தை கூறியதைக் கேட்டு சிறிதும் அதிர்ச்சி அடையாமல், அவருடைய சொற்களை அப்படியே ஏற்றுக்கொண்டு எமலோகத்தை நோக்கிப் பயணம் செய்ய முடிவெடுத்தான் நசிகேதன். ஆனால் கிளம்பும் முன்பு, ‘நம் முன்னோர்கள் எத்தனையோ யாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், இது போன்று எவரும் செய்திருக்க மாட்டார்கள். நீங்கள் செய்வது பெரும் பாவம் தந்தையே. அதற்கான தண்டனையை நான் அனுபவிக்கிறேன்’ என வாஜச்ரவஸிடம் கூறிவிட்டு எமலோகம் நோக்கிப் புறப்பட்டான் நசிகேதன்.
எமலோகம் செல்லும் வழியில் பலவிதமான இறப்புகளைப் பார்த்தும், அவலக் குரல்களைக் கேட்டும் நசிகேதன் மனம் மருண்டாலும், உறுதியான எண்ணத்துடன் அவன் எமலோகத்தைச் சென்றடைந்தான். நசிகேதன் எமலோகம் சென்ற நேரம், எமன் தன் தந்தையைக் காண சூரியலோகம் சென்றிருந்தார். ஆனாலும் எமனைக் காண வேண்டும் என்கிற உறுதியுடன் அங்கேயே அவன் பொறுமையாகக் காத்திருக்கத் தொடங்கினான். ஏறத்தாழ 3 நாட்கள் கழித்து, ஒரு சிறுவன் தனக்காகக் காத்திருக்கும் செய்தியறிந்ததும், விரைவாகத் தன் லோகத்துக்குத் திரும்பினார் எமன்.
நசிகேதனைக் கண்ட எமன், மூன்று நாட்களாக அவனைக் காத்திருக்க வைத்ததற்காக மன்னிப்புக் கோரினார். அதன்பின், ‘உனது ஆயுள் இன்னும் முடியவில்லையே. நீ இங்கு வருவதற்கான காலம் வரவில்லையே சிறுவனே. எதற்காக இங்கு வந்துள்ளாய்?’ என ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு, தன் தந்தை செய்த யாகம் குறித்தும், அதன் முடிவில் அவர் தன்னை இங்கு செல்லப் பணித்தது குறித்தும் எமனிடம் கூறினான் நசிகேதன். ஒரு கோபத்தில் தந்தை அவ்வாறு கூறியிருந்தாலும், அவருடைய கூற்றை ஏற்று தன்னிடம் வந்த நசிகேதனை பாராட்டினார் எமன். எனினும், ஆயுள் முடியாமல் ஒரு மனிதன் எமலோகத்தில் இருப்பது தவறு என்று கூறி, மீண்டும் பூமிக்கே திரும்பிவிடுமாறு அவனிடம் அவர் கூறினார்.
மேலும், 3 நாட்கள் வரை தனக்காகக் காத்திருந்த நசிகேதனின் பொறுமைக்குப் பரிசாக மூன்று வரங்கள் அளிப்பதாகக் கூறிய எமதர்மன், ‘உனக்கு என்னென்ன வேண்டுமோ கேள்’ என்றார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த நசிகேதன், எமனுக்கு நன்றி கூறிவிட்டு, ‘நான் திரும்பி பூமிக்குச் செல்லும்போது என்னுடைய தந்தை எவ்விதக் கோபமும் இல்லாமல் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பதை முதல் வரமாகக் கேட்டான். அதைக் கேட்ட எமனும் சிறிதும் யோசிக்காமல் ‘அப்படியே ஆகட்டும்’ என்றார்.
இரண்டாவது வரமாக, ‘அக்னி யாகம் என்றால் என்ன? அதைச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து எனக்கு விரிவாக விளக்கிக் கூறுங்கள்’ என வேண்டிக் கேட்டான் நசிகேதன்.
அதற்கு எமன் அந்த யாகம் குறித்தும் அவற்றைச் செய்வதற்கான வழிமுறைகளையும் விரிவாக நசிகேதனுக்கு எடுத்துக் கூறினார். மிகவும் பொறுமையாக அதை நசிகேதன் கேட்டுக்கொண்டான். அச்சிறுவயதில் பொறுமையாகவும் பொறுப்புணர்வுடனும் நசிகேதன் நடந்துகொண்டதைக் கண்டு மகிழ்ந்த எமன், ‘இனிமேல் இந்த யாகம், நசிகேத யாகம் என உன் பெயரிலேயே அனைவராலும் அறியப்படும்’ என்று கூறி வரமளித்தார்.
எமதர்மனின் வரத்தில் அகமகிழ்ந்த நசிகேதன், மூன்றாவது வரமாக ‘மரணத்துக்குப் பிறகு வாழ்வு உண்டு என்று ஒரு சிலரும், வாழ்வு இல்லை என்று ஒரு சிலரும் கூறுகிறார்கள். மரணத்துக்குப் பிறகு வாழ்வு உண்டா இல்லையா எனத் தங்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள நினைக்கிறேன். இதையே எனது மூன்றாவது வரமாகக் கேட்கிறேன்’ என்றான்.
நசிகேதனின் மூன்றாம் வரத்தைக் கேட்டு அதிர்ந்த எமதர்மன், ‘சிறுவனே… தேவர்களிலும் இதைப் பற்றி அறிந்தோர் இல்லை. இது பரம தேவ ரகசியம். மேலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறக்கூடாது. இதற்கு மாற்றாக நீ வேறு வரம் கேள் தருகிறேன்’ என்றார்.
இதற்கு நசிகேதனோ, ‘இதைப் பற்றி அறிந்தோர் யாரும் இல்லை என நீங்களே கூறுகிறீர்கள். உங்களைத் தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. அதனால், எனக்கு இந்த வரம்தான் வேண்டும்’ எனப் பிடிவாதமாக நின்றான். உடனே எமன், ‘நசிகேதா… பூமியில் உனக்கு இறப்பில்லாத வாழ்வுடன் அநேகச் செல்வங்களுடன் அனைத்து ஐஸ்வரியங்களுடன் கூடிய வாழ்வு வேண்டுமா? பெரிய ராஜ்யத்திற்கு மன்னராக வேண்டுமா? எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன். ஆனால் இந்த வரத்தை மட்டும் கேட்காதே. இதற்கு இணையாக எதை வேண்டுமானாலும் கேள்’ என்றார்.
ஆனால் நசிகேதனோ, ‘ஏதோ ஒரு நாளில் நீங்கள் கூறிய அனைத்தும் அழிந்து போகக்கூடியதே. வாழ்வு நிலையற்றது. வயது முதிர்ந்தவுடன் இவை அனைத்தையும் வெறுத்து ஒதுக்கிவிடுவோம். உங்கள் தரிசனமும் வரமும் அவ்வளவு எளிதாகக் கிடைக்கக் கூடியது அல்ல. உங்களை நேரில் கண்டபோதே நான் பெரும் பேறு பெற்றவனாகிவிட்டேன். எனவே எனக்கு இந்த வரத்தைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்’ என உறுதியுடன் கூறினான்.
இதனால் வேறுவழியின்றி நசிகேதன் கேட்ட மூன்றாவது வரத்தை அளிக்கச் சம்மதித்தார் எமதர்மன். ஆன்மாவைப் பற்றியும் அது அடையும் பலன்கள் குறித்தும் அவனிடம் விரிவாக எடுத்துக்கூறினார். சொர்க்கம் மற்றும் நரகம், அவற்றை எவ்வாறு அடைவது, அவற்றிலிருந்து மோட்சம் எவ்வாறு மாறுபட்டது, ஆன்மாவின் மேன்மை என்ன ஆகியவை குறித்தும் நசிகேதனுக்கு விளக்கிக் கூறினார் எமதர்மன்.
இறுதியாக, ‘ஆன்மாவுக்கு அழிவில்லை. அது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. உடம்பு என்பது ஒரு தேர். அதில் புத்திதான் தேரோட்டி. மனம் என்பது கடிவாளம். உடலின் புலன்கள் என்பவை குதிரைகள். உலக விஷயங்களை நோக்கித் தேர் செல்வதற்கான பாதையில் ஆன்மா பயணிக்கும். மூச்சு நின்றுவிட்டால் மனிதன் என்பவன் பிணம். அதன்பிறகு அவனை விட்டு ஆன்மா வெளியேறிவிடும். மரணத்துக்குப் பிறகு எஞ்சி நிற்பது ஆன்மா மட்டும்தான். நீ கேட்டதற்கான பொருள் விளக்கம் இதுதான்’ என்று விரிவாக எடுத்துக் கூறி, செல்வம், ஆரோக்கியம், புகழ் எனச் சகல சம்பத்துகளையும் நசிகேதனுக்கு அளித்து அவனை வழியனுப்பி வைத்தார் எமதர்மன்.
யஜுர் வேதத்தில் காணப்படும் மிக முக்கியமான கத உபநிடதத்தில் கூறப்படும் நசிகேதனின் இக்கதை மரணத்தின் ரகசியத்தையும், ஆன்மாவின் நிலையான தன்மையையும் விளக்கிக் கூறுகிறது. மேலும், தன்னிடம் இருப்பவற்றில் பிறருக்குப் பயன்படும் பொருட்களைக் கொடுப்பதுதான் தானம் என்பதையும், எவ்வளவு கோபம் வந்தாலும் பிள்ளைகளிடம் தகாத வார்த்தைகளைப் பெற்றோர் பேசக்கூடாது என்பதையும் நமக்குக் கூறுகிறது.
பெரியவரோ சிறியவரோ யார் செய்தாலும் அது தவறுதான். தன் தந்தை வாஜச்ரவஸ் செய்த தவறைச் சுட்டிக்காட்ட நசிகேதன் தயங்கவில்லை. மேலும், கோபத்தில் தவறான வார்த்தைகளைத் தன்னுடைய தந்தை கூறினாலும், அவற்றுக்கு மதிப்பளித்து எமலோகம் செல்லவும் அவன் தயங்கவில்லை. அவன் எமலோகம் சென்றபோது அங்கு எமன் இல்லாவிடினும் பொறுமையுடன் காத்திருந்ததால், அவனுக்கு எமனிடம் இருந்து வரங்கள் கிடைத்தன. எண்ணிய செயலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருந்தால் பெரிய பலன்கள் கிடைக்கும் என்பதை இக்கதையிலிருந்து நாம் அறியலாம்.
நசிகேதன் கேட்ட மூன்றாவது வரத்தை அளிக்காமல் வேறு செல்வங்கள் தருகிறேன் என எமதர்மன் அவனைத் திசை திருப்ப முயற்சி செய்தாலும், தனக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது, அதை எமதர்மனிடம் இருந்து மூன்றாவது வரமாகப் பெற்றான் நசிகேதன். நாம் எண்ணிய செயலைச் செய்யும்போது நம் மனதைக் கலைக்கும் விதமாக எத்தனை தடங்கல்கள் வந்தாலும், எண்ணியதைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை நசிகேதனின் கதை நமக்குக் கூறுகிறது.
(தொடரும்)

