Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் #14 – இடையனின் ஆவி

இந்தியத் தொன்மக் கதைகள் #14 – இடையனின் ஆவி

வெகு காலத்திற்கு முன்பு, ஆந்திரப் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் கொரெல்லா காபரி என்பவன் ஆடுகளை மேய்த்து வாழும் இடையனாக இருந்தான். தினமும் அவன் மேய்ச்சலுக்குத் தன்னுடைய ஆடுகளைக் காட்டுப் பகுதிக்கு ஓட்டிச் சென்று மாலையில் வீடு திரும்புவான். ஒருநாள், அவ்வாறு அவன் மேய்ச்சலுக்குச் சென்றிருந்தபோது, அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த ஆடுகள் சிதறி மேய்ந்துகொண்டிருந்தன. அவை அனைத்தையும் ஒன்று சேர்க்க ஒரு நீளமான கம்பு அவனுக்குத் தேவைப்பட்டது.

இதற்காக அவன், அருகில் இருந்த ஒரு மரத்தின் மீதேறினான். அதன் கிளை ஒன்றின்மீது நின்றுகொண்டு, அந்தக் கிளை மரத்துடன் இணைந்திருந்த பகுதியை வெட்டத் தொடங்கினான். அந்நேரம் அவ்வழியாக வந்த வயதான பெரியவர் ஒருவர், அவனுடைய செயலைப் பார்த்தார். உடனே கிளையை வெட்டுவதை நிறுத்தும்படி காபரியிடம் கூறினார். ஆனால் அவர் கூறுவதைப் பொருட்படுத்தாமல் அவன் கிளையை வெட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டான்.

‘இக்கிளையை வெட்டிவிட்டால் நீ கீழே விழுந்துவிடுவாய்’ என்று கூறி, அப்பெரியவர் அவனை எச்சரித்தார். ஆனாலும் அவர் கூறுவதைக் கேட்காமல் மரக் கிளையை வெட்டுவதிலேயே அவன் கவனமாக இருந்தான். இதனால் உரக்கச் சத்தம்போட்டு காபரியின் செயலைத் தடுத்த அப்பெரியவர், ‘நான் கூறுவதை நம்பவில்லை என்றால் உனது மேலாடையைக் கழற்றி இக்கிளை மீது வைத்துவிட்டு, வேறொரு கிளையில் நின்றபடி இக்கிளையை வெட்டிச் சோதித்துப் பார்’ என்று உறுதியான குரலில் கூறினார்.

பெரியவர் தொல்லை செய்வதாக எண்ணிய காபரி, வேண்டா வெறுப்புடன் தனது மேலாடையைக் கழற்றி, தான் வெட்டிக்கொண்டிருந்த மரக்கிளையின் மீது வைத்தான். அதன்பிறகு வேறொரு கிளையில் நின்றபடி, தன்னுடைய மேலாடை இருந்த கிளையை வெட்டத் தொடங்கினான். அடுத்த ஓரிரு நிமிடங்களில், அந்தக் கிளையுடன் சேர்ந்து அவனது மேலாடையும் கீழே விழுந்தது. அதைக் கண்டு காபரி அதிர்ச்சியடைந்தான். அக்கிளையிலேயே நின்றுகொண்டு வெட்டியிருந்தால், தனது மேலாடைக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் நேர்ந்திருக்கும் என்பதை அவன் உணர்ந்துகொண்டான். உடனடியாக மரத்திலிருந்து கீழே இறங்கி, மிகுந்த பயபக்தியுடன் அப்பெரியவரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் காபரி.

‘சரியான நேரத்தில் எனது உயிரைக் காப்பாற்றி இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை நான் கண்டதில்லை’ எனப் பணிவுடன் கூறினான். ஆனால் அவனது செயலால் அப்பெரியவர் சங்கடத்துக்கு ஆளானார்.

‘நீங்கள் கூறுவது அப்படியே நடக்கிறது. அடுத்து எனக்கு என்ன நடக்கும்?’ என ஆர்வத்துடன் அவரிடம் கேட்டான். அவனுடைய கேள்வியால் எரிச்சலடைந்த அப்பெரியவர், ‘நீ நினைப்பதுபோல் எனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் சக்தி கிடையாது. நான் சாதாரணமானவன். யாராவது தான் நின்றுகொண்டிருக்கும் கிளையையே வெட்டுவார்களா? நான் உனக்குக் கூறியது மிகவும் சாதாரண விஷயம். இதைப் பெரிதுபடுத்தாதே’ எனக் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்படத் தயாரானார்.

அவர் புறப்படுவதைக் கண்ட காபரி, ‘உங்களுக்கு நடக்கப்போகும் அனைத்தும் தெரியும். ஆனால் நீங்கள் என்னிடம் கூற மறுக்கிறீர்கள். என் வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கூற உங்களுக்கு விருப்பமில்லையெனில் பரவாயில்லை. எனது இறப்பு எப்பொழுது நிகழும் என்பதை மட்டும் தயவுசெய்து கூறுங்கள்’ என்று கேட்டான்.

அப்பெரியவர் அவனுக்கு உண்மையை எடுத்துக் கூற முயற்சி செய்தார். ஆனால் அவனோ, அவர் கூறியது எதையும் கேட்காமல், தனது இறப்பு எப்பொழுது நிகழும் என்பதைத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தான். அதையே திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டான். அவனது தொடர்ச்சியான வற்புறுத்தலில் மிகுந்த எரிச்சலடைந்த அப்பெரியவர், வேறு வழியின்றி, ‘உனது மூக்கின் நீளம் சிறிதாகும்போது உன் இறப்பு நிகழும்’ என அவனிடமிருந்து தப்பிப்பதற்காக வாயில் வந்ததைக் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்டு காபரி யோசனையில் ஆழ்ந்திருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அப்பெரியவர் அங்கிருந்து நழுவினார். அவர் சென்றதைக்கூட உணராமல் தனது மூக்கின் நீளத்தை அளக்கும் செயலில் அவன் இறங்கினான். சிறிது நேரம் கழித்து ஆடுகள் அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு அவன் வீட்டிற்குத் திரும்பினான். ஆடுகள் இல்லாமல், கணவன் மட்டும் தனியாக வருவதைக் கண்ட அவனுடைய மனைவி குழப்பமடைந்தாள்.

‘ஆடுகள் எங்கே?’ எனப் பலமுறை அவள் கேட்டாள். ஆனால் அதற்குப் பதிலளிக்காமல், அவன் எதையோ யோசித்துக்கொண்டே இருந்தான். இதனால் அவனுடைய மனைவி ஆடுகளைத் தேடி காட்டிற்குச் சென்றாள். அங்கிருந்த ஆடுகளை ஒன்றுதிரட்டி வீட்டிற்கு அழைத்துவந்து பட்டியில் அடைத்தாள். தன்னுடைய கணவன் அவனது மூக்கையே தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதைப் பார்த்தாள். அவனிடம் அது குறித்துக் கேட்டாள். ஆனால் அவனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அவள் மனம் வருந்தினாள்.

அதன்பிறகு காபரி ஆடு மேய்க்கச் செல்லாமல், தினமும் வீட்டிலேயே இருந்தபடி தனது மூக்கின் நீளத்தை அளந்து பார்த்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் சோகத்துடன் காணப்பட்டான். இதனால் தன் கணவனை உற்சாகப்படுத்த நினைத்து, அவனுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துக் கொடுத்தாள். ஆனால் அந்த உணவுகள் எதையும் தொடாமல் அவன் சோகத்திலேயே ஆழ்ந்திருந்தான்.

ஒருநாள் எப்போதும்போல் தன்னுடைய மூக்கின் நீளத்தை அளந்து பார்த்தபோது, வழக்கத்தைவிட அதன் நீளம் சற்றுக் குறைந்திருப்பதாக உணர்ந்தான் காபரி. இதனால், தான் இறக்கப்போகும் நேரம் நெருங்கிவிட்டதாக முடிவு செய்தான். ஒரு பூவை எடுத்து தன் உடல் மீது வைத்துவிட்டு, மூச்சை இழுத்துப் பிடித்தவாறு கண்களை மூடி அசையாமல் படுத்துக்கொண்டான்.

ஆடுகளை மேய்த்துவிட்டு மாலை நேரம் வீடு திரும்பிய காபரியின் மனைவி, தன் கணவன் அசையாமல் படுத்திருப்பதைக் கண்டு அவனை எழுப்ப முயன்றாள். அவள் எவ்வளவு முயற்சி செய்தும், அவன் சிறிதும் அசையாமல் அப்படியே படுத்திருந்தான். இதனால், தனது கணவன் இறந்துவிட்டதாக முடிவுசெய்து அழுகையுடன் அவள் ஊர் மக்களைத் திரட்டினாள். காபரியின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்யத் தொடங்கினார்கள்.

துக்க மிகுதியில் காபரியின் உடல்மீது அவனுடைய மனைவி அடித்துக்கொண்டு அழுதாள். அவளுடைய வளையல்கள் உடைந்து, அதனால் லேசாக வலித்தாலும், அதைப் பொறுத்துக்கொண்டு அவன் அசையாமல் படுத்திருந்தான். அவனுக்குச் சொந்தமான ஆடுகளை அவனுடைய உறவினர்கள் பிரித்து எடுத்துக்கொண்டபோதும் அவன் அசையாமல் அப்படியே படுத்திருந்தான். அவனது மூக்கில் வைத்திருந்த பஞ்சு அரிப்பை ஏற்படுத்தியபோதும்கூட அசையாமல் இருந்தான்.

இறுதிச் சடங்குகள் முடிந்ததும், காபரியை இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள். புதைகுழியில் அவனைக் கிடத்தி மண்ணைப் போட்டபோது, அது அவன் முகத்தில் விழுந்தது. இதனால் ஏற்பட்ட அசௌகர்யம் தாங்காமல் பட்டென்று எழுந்து அமர்ந்தான் காபரி. இதைக் கண்ட அவனது உறவினர்களும் ஊர்மக்களுக்கும் பயந்து அலறினர். காபரியின் ஆவி அவனது உடலுக்குள் புகுந்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர். தான் உயிருடன் இருப்பது தெரிந்து மனைவியும் உறவினர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்று எண்ணிய காபரி, அவர்கள் தன்னைப் பேயென எண்ணி அலறி ஓடியதைக் கண்டு வேதனையடைந்தான். அவனது மனைவியும்கூட பயந்து ஓடி வீட்டுக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள். ஊரில் இருந்த எந்த வீடும் திறக்கப்படவில்லை.

தெருவில் தவிப்புடன் தனியாக அங்கும் இங்கும் நடந்த காபரிக்கு, சிறிது நேரத்தில் பசி எடுத்தது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் ஊருக்கு வெளியே இருக்கும் கோவிலில் சாமிக்குப் படையல் வைக்கப்படும். இதனால் அதை உண்ணலாம் என எண்ணி அங்கு சென்றான் காபரி. அவனைக் கண்டதும், பயத்தில் அலறியபடி தலைதெறிக்கப் பூசாரி ஊருக்குள் ஓடினார். படையலை உண்டுவிட்டு அங்கேயே அவன் தங்கினான். ஆனால் இரவு நேரம் நெருங்க நெருங்க அவனுக்குக் குளிரெடுக்க ஆரம்பித்தது. இதனால் ஊரின் குளத்தங்கரையில் சலவைத் தொழிலாளி துணிகளை வைத்திருப்பான் என நினைத்து அங்கு சென்றான்.

காபரியின் ஆவிக்குப் பயந்து தனக்குத் துணையாக ஒரு பலசாலியை அழைத்துக்கொண்டு, துணிகளை எடுக்க அப்போது குளத்தங்கரைக்கு வந்தான் அந்தச் சலவைத் தொழிலாளி. அங்கு தனக்குத் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டிருந்த காபரியைக் கண்டதும், சலவைத் தொழிலாளியும் அவனுக்குத் துணையாக வந்த பலசாலியும் பயந்து நடுங்கி ஊருக்குள் ஓடினர்.

இவ்வாறு ஊரார் ஒவ்வொருவராகத் தன்னைக் கண்டு பயந்து ஓடுவதைப் பார்த்த காபரிக்கு, தன்னுடைய முட்டாள்தனம் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. தன் தவறை உணர்ந்து, வீட்டிற்குச் சென்றான். அவனது மனைவி வீட்டின் கதவுகளைத் திறக்கவில்லை. வெளியே நின்றபடி நடந்த அனைத்தையும் அவளிடம் கூறி கண்ணீர் சிந்தினான். கணவனின் வெகுளித்தனத்தை எண்ணி நொந்துகொண்ட மனைவி, அவனை வீட்டிற்குள் அனுமதித்தாள். நடந்த உண்மையை ஊராரிடம் அவளே எடுத்துக் கூறினாள். அதன்பிறகு எப்போதும்போல் இருவரும் ஆடுகளை மேய்த்து வாழ்ந்தனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் வாய்மொழியாகக் கூறப்படும் இக்கதை, எதிர்காலத்தை எண்ணி அச்சத்தில் வாழாமல், வாழ்க்கையின் இயல்பான போக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை ஆழமாகப் பதிவு செய்கிறது. தனது மரணத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற கொரெல்லா காபரியின் தீராத வேட்கை, அன்றாட கடமையிலிருந்து அவனை விலகச் செய்து, விபரீதமான பிரச்னையில் சிக்க வைத்தது.

நம் கட்டுப்பாட்டில் இல்லாத விளைவுகளை எண்ணிக் கவலைப்படுவதைத் தவிர்த்து, வாழ்வை அதன் போக்கில் வாழ வேண்டும். நாளை என்ன நடக்கும் என்பதை நினைத்துக் கவலை கொள்ளாமல், நம்மிடம் இருக்கும் இன்றைய தினத்தை முழுமனதுடன் ரசித்து வாழ்தல் நன்று.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *