Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் #16 –கையேயியின் தியாகம்

இந்தியத் தொன்மக் கதைகள் #16 –கையேயியின் தியாகம்

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது. ராமாயணம் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றில் ஆண் கதாபாத்திரங்களே பெரும்பான்மையாகவும் முதன்மையாகவும் இன்றுவரையில் பேசுபொருளாக உள்ளன. ராமாயணத்தின் பெண் கதாப்பாத்திரங்கள் குறித்து அரிதாகவே பேசப்படுகின்றன. அவற்றின் சிறப்புகளும் தியாகங்களும்கூட முழுமையாகப் பேசப்படுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரமே கையேயி.

ராமரின் தந்தை தசரதருக்கு மூன்று மனைவிகள். அவர்களில் ஒருவர்தான் கையேயி. மற்ற இருவரையும்விட தன்னுடைய இரண்டாவது மனைவியான கைகேயியை தசரதருக்கு மிகவும் பிடிக்கும். தன்னுடைய தோழியான கூனி என்றழைக்கப்படும் மந்தாரையின் பேச்சைக் கேட்டு, தன் மகன் பரதன் நாடாள வேண்டும் என்பதற்காக, ராமரை வனவாசத்திற்கு அனுப்பிய தீய எண்ணம்கொண்ட தாயாகவே பெரும்பாலும் கையேயி அறியப்படுகிறார்.

ராமாயணத்தில் முதல் மற்றும் முக்கியத் திருப்புமுனையை கையேயியே ஏற்படுத்தினார். ராமர் வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்கிற வரத்தை அவர் தசரதரிடம் கேட்கவில்லையெனில், ராமாயணம் என்றொரு இதிகாசம் தோன்றியிருக்காது. தீய எண்ணத்தைக் கொண்ட தாயாகச் சித்தரிக்கப்படும் கையேயி செய்த தியாகம் மிகவும் பெரிது. தன்னுடைய மகன் பரதன் உட்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு 14 வருடங்கள் அவர் மனத்துயரை அனுபவித்தார்.

தசரதரின் தாயார் இந்துமதி மென்மையான மனம் கொண்டவர். சிறிய செடி கொடிகளிலும்கூட உயிரோட்டத்தை உணர்பவர். ஒருமுறை இந்துமதியுடன் பூங்காவில் உலாவுகையில், எதிர்பாராவிதமாக ஒரு செடியின் சிறிய தளிரைச் சிறுவன் தசரதன் ஒடித்துவிட்டான். செடியின் ஒடிந்த இடத்திலிருந்து துளித்துளியாகப் பால் வடிவதைக் கண்டு இந்துமதி பதறினார். மகனென்றும் பாராமல், ‘தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இச்செடி எவ்வாறு வாடுகிறதோ, அதே போன்று நீயும் உன் மகனைப் பிரிந்து கண்ணீர் வடித்து வாடி மடியக்கடவாய்’ எனச் சாபமிட்டார்.

பின்னர் இளைஞனான தசரதன் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றிருந்தார். அப்பொழுது, தன் தாய் தந்தைக்காகக் குடுவையில் தண்ணீர் எடுக்க முனைந்த சிரவணன் என்னும் சிறுவனை, யானை என நினைத்து தவறுதலாக அவர் அம்பெய்து கொன்றுவிட்டார். இதனால், ‘உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தால் உயிர் நீங்கக்கடவாய்’ எனச் சிரவணனின் பெற்றோர்களால் சபிக்கப்பட்டார் தசரதன். இவ்வாறு தசரதன் பெற்ற இரு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார் கையேயி.

ஒருநாள் தன்னுடைய மூத்த மகன் ராமனுக்கு அயோத்தி அரசராகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு முடிவெடுத்த தசரதன், ஜோதிடர்களை அழைத்து அதற்கான தகுந்த நேரத்தைக் குறித்தார். இதைத் தொடர்ந்து, பட்டாபிஷேகத்துக்கான நேரத்தையும், தசரதனின் ஜாதகத்தையும், ராமர் உள்ளிட்ட அரச குமாரர்களின் ஜாதகத்தையும் ஜோதிடர்களைக் கொண்டு கையேயி நன்கு ஆராய்ந்தார்.

தசரதன் பெற்றிருந்த இரு சாபங்களின் காரணமாக அரியணையில் எந்த அரச குமாரன் ஏறினாலும், அவன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதையும் அதனால் ஏற்படும் புத்திர சோகத்தால் தசரதரின் உயிர் பிரிவது நிச்சயம் என்பதையும் கையேயி தெரிந்துகொண்டார். தசரதரின் இறப்பு என்பது புத்திரனைப் பிரிவதால்தான் என்பது நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால், புத்திரனையாவது காப்பாற்றலாம் என முடிவெடுத்து, முன்பொருமுறை தசரதர் தனக்கு அளித்த இரு வரங்களை நினைவுகூர்ந்தார் கையேயி.

ஒரு முக்கியமான போரில் தசரதனின் தேரோட்டியாக இருந்து அவரது உயிரைக் கையேயி காப்பாற்றினார். அதில் மனம் மகிழ்ந்த தசரதன், கையேயியிடம் இரு வரங்களை அளித்து விருப்பமானதைக் கேட்குமாறு கூறினார். அதற்குக் கையேயி, ‘இப்பொழுது நான் வேண்டுவது எதுவும் இல்லை, சரியான சமயம் வரும்பொழுது இந்த இரண்டு வரங்களையும் கேட்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

தசரதரின் சாபங்களால் ஏற்படப்போகும் பிரச்னை குறித்து தெரியவந்ததும், அந்த இரு வரங்களைக் கேட்பதற்குச் சரியான சமயம் வந்துவிட்டது என்பதைக் கையேயி உணர்ந்தார். இரக்கமற்றவள் என்கிற பழியைக் காலம் முழுவதும் சுமந்தாலும் பரவாயில்லை, ராமனின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அதாவது, தன் மகன் பரதன் நாடாள வேண்டும் என்றும், ராமன் 14 நாட்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்றும், இரு வரங்களைக் கேட்கக் கையேயி முடிவு செய்திருந்தார். ஆனால் இரண்டாவது வரத்தைக் கேட்கும்போது நா குழறி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுவிட்டார். இதனால் மனமுடைந்த தசரதன், இந்த வரங்களைக் கேட்கவேண்டாம் என்று அவரிடம் மன்றாடினார். இருந்தும் தன் முடிவில் உறுதியாக இருந்தார் கையேயி.

ராமர் வனவாசம் சென்றுவிட்டால், சகோதரன் மீது கொண்ட அளவில்லா மரியாதையின் காரணமாகத் தன் மகன் பரதன் கண்டிப்பாக அரியணை ஏறமாட்டான் எனக் கையேயி உறுதியாக நம்பினார். ஒருவேளை, பரதன் அரியணையேறும் பட்சத்தில், அதனால் அவன் மரணிக்க நேரிடுவதை ஏற்றுக்கொள்ளவும் அவர் மனதளவில் தயாராக இருந்தார். அயோத்தி மக்கள் விரும்பும் அரசன் ராமன்தான் என்பதைக் கையேயி நன்கு அறிந்திருந்தார். அந்த வகையில், மக்களின் விருப்பத்திற்குரிய அரசனின் உயிரைக் காப்பாற்றத் தன் மகன் பரதனின் உயிரை அவர் பணயம் வைத்தார்.

கையேயி கேட்ட அவ்விரு வரங்களின் காரணமாகவே ராமர் வனவாசம் செல்ல நேரிட்டது. இதனால், தந்தையின் சொல்லைத் தட்டாத மகன் என்கிற அழியாப் புகழ் ராமனுக்கு உண்டானது. மேலும், பரதன் தன் சகோதரன் மீது கொண்டிருந்த பக்தியும் மரியாதையும் அயோத்தி மக்களுக்குத் தெரியவந்தது. மிக முக்கியமாக, கையேயி கேட்ட வரங்களாலேயே ராவணனின் அழிவும் நிகழ்ந்தது. தசரதனின் மரணத்தைத் தவிர, கையேயியால் விளைந்தது அனைத்தும் நன்மைகளே. ஆனால் கையேயிக்கு கிடைத்தது என்னவோ அவப்பெயரும் பழிச்சொல்லும் மட்டுமே. கையேயி செய்த தியாகத்தை அவளது மகன் பரதன் உட்பட யாரும் புரிந்துகொள்ளாமல் போனாலும், அனுமன் மூலமாக அவரது தியாகம் வெளிப்பட்டது.

இலங்கையில் ராவண வதம் முடிந்து சீதை, லட்சுமணன், வானர படைகள் சகிதமாக புஷ்பக விமானத்தில் ராமர் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அச்சமயம், வழியில் பரத்வாஜ முனிவரின் அழைப்பை ஏற்று அன்று இரவு அவரது குடிலில் தங்கச் சம்மதம் தெரிவித்தார் ராமர்.

இந்நிலையில், 14 வருடங்கள் வனவாசம் முடிந்து ராமர் அயோத்திக்குத் திரும்பவில்லை என்றால், அக்னிப் பிரவேசம் செய்துவிட அவருடைய சகோதரர்கள் பரதனும் சத்ருகனும் முடிவு செய்திருந்தார்கள். மறுநாள் விடிந்தால் 14 வருடக் காலகட்டம் முடிவுக்கு வரும் என்பதால், பரதனையும் சத்ருகனையும் அக்னிப் பிரவேசம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, தான் திரும்பி வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமனை அயோத்திக்கு அனுப்பி வைத்தார் ராமர்.

அயோத்திக்குச் சென்று அக்னிப் பிரவேசம் செய்யவிருந்த பரதனை தடுத்து நிறுத்திய அனுமன், ‘அம்மா எங்கே? அவரை நான் வணங்க வேண்டும்’ என்றார்.

உடனே பரதன், ‘அண்ணன் ராமரைப் பெற்றெடுத்த புண்ணியவதி இதோ…’ எனக் கௌசலையை காட்டினான்.

அவரை வணங்கிய அனுமன் மீண்டும் பரதனிடம், ‘அம்மா எங்கே? அவரை வணங்க வேண்டும்’ என்றார்.

‘ராமரை கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலியான லட்சுமணனையும், என் தம்பி சத்ருகனையும் பெற்ற அன்னை சுமித்திரை இவர்தான்’ எனக் காட்டினார் பரதன்.

அவரை வணங்கிய அனுமன், தற்போது வெளிப்படையாக, ‘உன்னைப் பெற்றெடுத்த தியாகி, அன்னை கையேயி எங்கே? அவரை வணங்க வேண்டும்’ என்றார்.

அனுமனின் வார்த்தைகளைக் கேட்டு துணுக்குற்ற பரதன், ‘அவளா தியாகி? அவள் மஹா பாவியாயிற்றே! அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்குப் பாவம் செய்துவிட்டேன் என நான் வருந்தாத நாளே இல்லை. அவளை ஏன் நீங்கள் வணங்க வேண்டும்?’ எனக் கேட்டான்.

அதற்கு அனுமன், அதுவரை யாரும் அறிந்திடாத கையேயியின் தியாகத்தைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தெளிவாக விளக்கி கூறினார். ‘பரதா… நீயும் இந்த உலகமும் அன்னை கையேயியை அறிந்துகொண்டது இவ்வளவுதான். உன் அன்னை எவ்வளவு பெரிய தியாகி தெரியுமா?…’ என்றபடி தசரதரின் சாபம் குறித்தும், அதனால் கையேயி எடுத்த தன்னலமற்ற முடிவு குறித்தும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, ‘அன்னை கையேயியினால்தான் ராமர் அழியாப்புகழ் அடைய நேர்ந்தது, அன்னையால்தான் வனத்தில் இருந்த எங்களுக்கெல்லாம் ராமரின் தரிசனம் கிடைத்தது, பல அசுரர்களின் வதமும் நிகழ்ந்தது. இந்தப் புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்க வேண்டும்’ எனக் கூறினார் அனுமன். அவர் மூலமாகவே பரதன் முதலானவர்களுக்கு கையேயியின் உண்மையான குணமும் அவரின் தியாகமும் தெரிந்தது.

கையேயியின் தியாகமானது, தன்னலமற்ற அன்பையும் அவரது கடமையையும் உலகிற்கு உணர்த்துகிறது. தன் சொந்த மகனைவிட ராமரை அவர் அதிகமாக நேசித்தார். ராமரின் நலனுக்காகத் தன் மீது விழுந்த பழிச்சொல்லைத் தாங்கிக்கொண்டது தாய்மையின் உச்சக்கட்ட நிலையாகும். பெரும்பாலான தியாகங்கள் புகழைத் தரும். ஆனால் கையேயியின் தியாகமோ அவளுக்குப் பழியையும் துயரத்தையுமே பெற்றுத் தந்தது. புகழை எதிர்பாராமல், லட்சியத்திற்காக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக்கொள்வதே உண்மையான தியாகம் என்பதை கையேயியின் வாழ்க்கை உணர்த்துகிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *