பண்டைய காலத்தில் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு அரசர் விக்கிரமாதித்தர், சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். காளிதாசர், தன்வந்திரி, வராகமிஹிரர், அமரசின்ஹா, வரருசி, சங்கு, வேதாள பட்டர், கடகற்பரர், க்ஷபணகர் ஆகிய அவருடைய 9 அமைச்சர்கள் நவரத்தினங்கள் என என்றழைக்கப்பட்டனர். இவர்களுள் வேதங்கள், ஜோதிடம், அரசியல், அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார் வரருசி. அரசர் எழுப்பும் சந்தேகங்களுக்கு எப்பொழுதும் அவரிடம் திருப்திகரமான பதில் இருக்கும். இதனால் அவர் அரசரால் பெரிதும் மதிக்கப்பட்டார்.
ஒருமுறை அரசர் விக்கிரமாதித்தர், ராமாயணத்தில் உள்ள முக்கியமான சுலோகத்தையும், அந்தச் சுலோகத்தில் உள்ள முக்கியமான வரியையும் கூறும்படி அரசவையில் கேட்டுக்கொண்டார். அன்று அவையில் இருந்த பண்டிதர்கள் அனைவரும் சேர்ந்து அக்கேள்விக்கு வரருசியால் மட்டுமே சரியான பதிலைக் கூற முடியும் என்றனர். ஆனால் அச்சமயம் வரருசி கூறிய எந்தவொரு பதிலும் அரசரைத் திருப்திப்படுத்தவில்லை.
இதனால் கோபம்கொண்ட அரசர் விக்கிரமாதித்தர், 41 நாட்களுக்குள் சரியான பதிலுடன் அரசவைக்குத் திரும்பி வருமாறு வரருசிக்கு கட்டளையிட்டார். அதேநேரம், சரியான பதிலை ஒருவேளை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில், திரும்பி வரத் தேவையில்லை என்றும் அரசர் நிபந்தனை விதித்தார். அரசரின் இந்த ஆணையைக் கேட்டு மனம் வருந்திய வரருசி, பதிலைத் தேடி நாடு முழுவதும் அலைந்தார். பல இடங்களுக்குப் பயணம் செய்து, பல அறிஞர்களிடம் கேட்டும் அவருக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அறிஞரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். ஒரே பதிலை யாரும் கூறவில்லை.
இதனால் தேடலுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தார் வரருசி. தொடர் பயணம் தந்த சோர்வால், ஒருநாள் பகல் பொழுதில் ஒரு மரத்தடியில் வரருசி ஓய்வெடுத்தார். அதீதமான சோர்வால் அப்படியே உறங்கிப்போனார். சிறிது நேரத்தில் யாரோ இருவர் பேசுவதைக் கேட்டு அவர் கண் விழித்தார். அந்தக் குரல்களைத் தெளிவாகக் கேட்கத் தொடங்கியதும், இரு மரதேவதைகள் பேசிக்கொண்டிருப்பதை வரருசி உணர்ந்தார். அவருக்கு மரதேவதைகள் பேசும் மொழி தெரிந்தமையால், அவர்கள் பேசுவதை அசையாமல் அப்படியே உன்னிப்பாகக் கேட்கலானார்.
அவை இரண்டும் ராமாயணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தன. அதில், காட்டிற்குச் செல்லும் லட்சுமணனுக்கு தாய் சுமித்திரை கூறும் அறிவுரையான, ‘ராமனைத் தந்தை தசரதனாக நினைத்துக்கொள். அண்ணி சீதையை நானென (தாயாக) நினைத்துக்கொள். வனத்தை அயோத்தியாக நினைத்துக்கொள். பயணம் சுகமாகிவிடும்’ என்கிற சுலோகத்தின் வரிகள் குறித்து அவை உரையாடின. அந்த சுலோகத்தில் ‘ஜனகரின் மகளைத் தாயாக (நானாக) நினைத்துக்கொள்’ (மாம் விதி ஜனகாத்மஜம்) என்கிற வரி மிக முக்கியமானது எனத் தங்களுக்குள் அவை பேசிக்கொண்டன.
தொடர்ந்து பேசிய அந்த மரதேவதைகளில் ஒன்று, ‘…கீழே உறங்கிக்கொண்டிருக்கும் பிராமணன், இன்று பிறக்கும் பறையர் குலப்பெண் ஒருத்தியை மணந்துகொள்ள வேண்டும் என்பது விதி’ எனக் கூறியது. இதைக் கேட்டதும் திடுக்கிட்டார் வரருசி. இருப்பினும், அரசர் விக்கிரமாதித்தரின் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதை எண்ணி மகிழ்ந்து, அங்கிருந்து அரசவைக்குப் புறப்பட்டார்.
மறுநாள் அரசவையில், ராமாயணத்தில் முக்கியமான சுலோகம் மற்றும் அதிலுள்ள முக்கியமான வரி ஆகியவற்றை எடுத்துக் கூறி, விக்கிரமாதித்தரின் பாராட்டைப் பெற்றார் வரருசி. அதன்பிறகு இதுதான் சரியான சமயம் என்று எண்ணிய அவர், தன்னுடைய விதியை மாற்றத் திட்டமிட்டார். ‘நேற்றைக்கு நாட்டின் எல்லையில் பறையர் குலத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து’ என அரசரிடம் வரருசி கூறினார். அவருடைய ஜோதிட அறிவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அரசர் விக்கிரமாதித்தர், அதை அப்படியே நம்பினார்.
இருந்தாலும் ஒரு குழந்தையைக் கொல்வதால் தெய்வங்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என பயந்தார். ஆனால் அதற்கு வரருசி ஒரு தீர்வைக் கூறினார். அதாவது, ஒரு சிறிய விளக்கை ஏற்றி, அத்துடன் சேர்த்து அக்குழந்தையைத் தெப்பத்தில் வைத்து ஆற்றில் விடுமாறு அறிவுரை கூறினார் வரருசி. அரசரும் அக்குழந்தையைத் தேடிக் கண்டறிந்து ஆற்றில் விடும்படி தன் வீரர்களுக்கு ஆணையிட்டார். அவ்வாணை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
இது நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, வரருசி ஒரு பயணத்தை மேற்கொண்டார். அப்பயணத்தின்போது பிராமணர் ஒருவர், தன் வீட்டிற்கு உணவு உண்ண வருமாறு வரருசியிடம் வேண்டுகோள் விடுத்தார். அவ்வீட்டில் உணவை உண்ண வேண்டுமென்றால் தனக்குச் சில நிபந்தனைகள் இருக்கின்றன எனக் கூறி வித்தியாசமான சில நிபந்தனைகளை விதித்தார் வரருசி. முதலில் அந்தப் பிராமணர் தயங்கினாலும், அதன்பின் அவருடைய மகள் பஞ்சமி அளித்த தைரியத்தில் வரருசியின் நிபந்தனைகளுக்கு அவர் ஒப்புக்கொண்டார். வரருசி விதித்த நிபந்தனைகளைத் தனது அறிவுத்திறனால் நிறைவேற்றினாள் பஞ்சமி.
பஞ்சமியின் அறிவுத்திறனால் கவரப்பட்ட வரருசி, அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பப்பட்டார். பிராமணரும் அகமகிழ்ந்து தனது மகள் வரருசிக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்த சில நாட்களில் பஞ்சமியின் தலையில் இருந்த ஒரு சிறிய தழும்பு குறித்துக் கேள்வி எழுப்பினார் வரருசி. அதற்குப் பஞ்சமி, தான் பிராமணரின் சொந்த மகள் இல்லை என்றும், தெப்பத்தில் ஒரு சிறிய விளக்குடன் ஆற்றில் மிதந்து வந்த குழந்தை என்றும் கூறினாள். மேலும், அந்த விளக்கின் நெருப்பு பட்டதால் ஏற்பட்ட தழும்புதான் இது எனவும், தெப்பத்தில் மிதந்து வந்த தன்னை இந்தப் பிராமணர் எடுத்து வளர்த்தார் எனவும் விளக்கினாள்.
மனைவி பஞ்சமி கூறியதைக் கேட்ட வரருசிக்கு அனைத்தும் புரிந்துபோனது. அன்று மரதேவதைகள் கூறியது உண்மையாகவே இன்று நடந்துபோனதை உணர்ந்துகொண்ட அவர், ஒரு பறையர் குலப் பெண்ணைத் தான் மணந்துகொண்டதால் பிராமணக் குலத்துக்குப் பெரும் இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக எண்ணி மனம் வருந்தினார். இதற்குத் தண்டனையாகப் பிராமணக் குலத்தினரிடம் இருந்து தன்னைத் தானே ஒதுக்கி வைத்துக்கொண்டு, மரணிக்கும் வரையில் புனிதப் பயணம் மேற்கொள்ள வரருசி முடிவெடுத்தார்.
தன் கணவரின் முடிவை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தாள் பஞ்சமி. இந்தப் பயணத்துக்கு நடுவே பஞ்சமி 11 முறை கருவுற்றாள். ஒவ்வொரு முறையும் குழந்தைகளைப் பெற்றெடுக்க வழியோரப் புதர்களில் அவள் தஞ்சம் புகுந்தாள். ஒவ்வொரு முறையும் பஞ்சமி குழந்தையைப் பெற்றெடுத்ததும், அக்குழந்தைக்கு வாய் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வியை அவளிடம் கேட்பார் வரருசி. ஒவ்வொரு முறையும் பஞ்சமி அதற்கு ஆம் எனப் பதில் கூறியதும், ‘வாயை அளித்த இறைவனுக்கு உணவையும் அளிக்கத் தெரியும். குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வா’ என்பார் வரருசி. கணவனின் கட்டளைக்கு அடிபணிவதை தவிர வேறுவழியின்றி பஞ்சமியும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு கணவரைப் பின்தொடர்வாள்.
இவ்வாறு பயணத்தின்போது பெற்றெடுத்த 11 குழந்தைகளை வழியிலேயே விட்டுவிட்டு வந்த பஞ்சமி, 12வது முறையாகக் கருவுற்றாள். இம்முறை குழந்தை பிறந்ததும், வழக்கம்போல் கணவர் கேட்ட, ‘குழந்தைக்கு வாய் இருக்கிறதா?’ என்கிற கேள்விக்கு, ‘இல்லை’ எனப் பதில் கூறினாள். இதைக் கேட்ட வரருசி, ‘குழந்தையை எடுத்துக்கொண்டு வா’ என்றார். கணவன் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் குழந்தைக்குப் பஞ்சமி பாலூட்ட முனைகையில், அக்குழந்தைக்கு உண்மையிலேயே வாயில்லாமல் போனது. இதனால் பயந்துபோன பஞ்சமி, வரருசியிடம் உண்மையைக் கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தக் குழந்தையை அருகிலிருந்த ஒரு குன்றுக்கு எடுத்துச் சென்று அங்கு ஓரிடத்தில் வைத்தார் வரருசி. உடனே அக்குழந்தை ஒரு சிலையாக மாறியது. அதுவே இன்று வடகேரளத்தில் பரவலாக வணங்கப்படும், ‘வாயில்லா குன்னில் அப்பன்’ என்று நம்பப்படுகிறது. இந்தக் கோவில் பாலக்காடு மாவட்டம் கடம்பாழிபுரம் என்னும் ஊரில் உள்ளது. குழந்தை சிலையான பிறகு, கேரளத்தின் மண்ணூர் என்கிற இடத்தில் வரருசி சமாதியடைந்தார்.
வரருசிக்கும் பஞ்சமிக்கும் பிறந்த 11 குழந்தைகளும் வளர்ந்து பின்னாளில் தாங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை அடையாளம் கண்டுகொண்டனர். இதில் சுவாரசியம் என்னவென்றால், 11 குழந்தைகளும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக வளர்ந்திருந்தனர். அதாவது, குழந்தைகள் பிறந்ததும் பஞ்சமி எங்கெல்லாம் அவர்களை விட்டுவிட்டு வந்தாளோ, அந்தந்தப் பகுதியில் இருந்த சாதியினரால் அப்பிள்ளைகள் எடுத்து வளர்க்கப்பட்டிருந்தார்கள். இப்படிப் பல்வேறு சாதியினரால் வளர்க்கப்பட்ட அந்த 11 குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகி, கேரளச் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்குத் தலைவராகினர்.
மேழத்தோள் அக்னிஹோத்ரி, பாக்கனார், பெருந்தச்சன், நாரணத்து பிராந்தன், காரக்கம்மா, அகவூர் சாத்தான், வடுதலா நாயர், வள்ளோன், உப்புக்கொற்றான், பாணனார், ராஜகன் ஆகியவையே அந்தப் 11 பிள்ளைகளின் பெயர்கள். பின்னாளில் உண்மையை அறிந்து ஒன்றிணைந்த அந்தப் பதினொரு சகோதரர்களும், பெற்றோர் இறந்த நாளில் ஒன்றுகூடி, அவர்கள் இருவருக்கும் இறுதிச்சடங்குகளைச் செய்தனர். கேரளத்தில் இன்றுவரையில் இவர்களின் வம்சாவளிகள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி, சம்பந்தப்பட்ட நாளில் வரருசிக்கும் பஞ்சமிக்கும் இறுதிச்சடங்கு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
கேரள நாட்டில் கூறப்படும் இந்த நாட்டுப்புறக் கதையானது, பிறப்பால் அனைவரும் சமம் என்கிற கருத்தை முன்வைக்கிறது. பிறப்பால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை என்பதும், ஒரு மனிதனின் சாதியை அவன் பிறக்கும் குடும்பம் தீர்மானிப்பதில்லை என்பதையும் இக்கதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. பறையர் குலத்தில் பிறந்த பெண்ணான பஞ்சமி, ஒரு பிராமணரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். பஞ்சமியின் வளர்ப்புத் தந்தையான அந்தப் பிராமணரால், குழந்தையாக ஆற்றில் மிதந்து வந்த பஞ்சமியின் முகத்தை வைத்து அவள் பறையர் குலப் பெண் என்பதைக் கண்டறிய முடியவில்லை. பஞ்சமியை ஒரு பிராமணரின் வீட்டில் வைத்துப் பார்த்ததால், அவளை ஒரு பிராமணப் பெண் என்றே வரருசியும் நினைத்தார். அன்று பிறந்த பறையர் குலப் பெண் இவள்தான் என்பதை அவரால் கண்டறிய முடியவில்லை. இவர்களால் மட்டுமல்ல, எந்தவொரு மனிதராலும் ஒருவரின் முகத்தை வைத்து அவர் என்ன சாதி என்பதைக் கண்டறிய முடியாது. பிறப்பால் அனைவரும் ஒன்றே என்கிற உண்மையை மறந்துவிட்டு சிலரின் சுயலாபத்திற்காக உருவாக்கப்பட்ட சாதி எனும் மாயையை நாம் இறுகப் பற்றிக்கொண்டு வாழ்கிறோம்.
12 குழந்தைகளும் ஒரே கருவறையில் பிறந்து வெவ்வேறு குடும்பத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்தாலும், உண்மையை அறிந்ததும் பெற்றோருக்கு இறுதிச்சடங்கு செய்ய ஒற்றுமையுடன் ஒன்று கூடினார்கள். நாம் வாழும் இடமோ, நாம் செய்யும் தொழிலோ, நம்மை வளர்த்தவர்களின் பின்னணியோ நம்மை வேறுபடுத்திக் காட்டினாலும், நாம் அனைவரும் ஒன்றே என்கிற உண்மையை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதைப் பஞ்சமியின் 12 குழந்தைகள் நமக்கு உணர்த்துகிறார்கள்.
(தொடரும்)

