Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் #19 – காந்தார இளவரசன்

இந்தியத் தொன்மக் கதைகள் #19 – காந்தார இளவரசன்

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் உருவானதற்கு, திரௌபதியே காரணம் என்கிற கருத்து இன்றளவும் நிலவி வருகிறது. திரௌபதி என்பவள், வெளிப்படையாகத் தெரியும் ஒரு சிறிய கருவி மட்டுமே. ஆனால், திரௌபதி பிறப்பதற்கு முன்பாகவே மகாபாரதம் உருவாவதற்கான விதை விதைக்கப்பட்டு, அது உறுதியுடன் வளர்ந்து பெரிய மரமாகியிருந்தது. உண்மையில், மகாபாரதப் போர் ஒரு பெண்ணுக்காக நடத்தப்பட்டது அல்ல. கண்முன்னே தன் குடும்பம் முழுவதும் சிறிது சிறிதாக நசுக்கிக் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்க, தனி ஒருவனால் நேர்த்தியாக நிகழ்த்தப்பட்ட போரே மகாபாரதம்.

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ராஜ்யங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது காந்தாரம். காந்தார அரசர் சுபலனுக்கு, காந்தாரி என்கிற புதல்வியும் நூறு புதல்வர்களும் இருந்தார்கள். காந்தாரியின் அழகையும், அறிவுத்திறனையும் கேள்விப்பட்ட அஸ்தினாபுர பேரரசின் பிதாமகர் பீஷ்மர், அவளை அஸ்தினாபுர இளவரசன் திருதராஷ்டிரனுக்குப் பெண் கேட்டு காந்தாரத்துக்கு சென்றார். அஸ்தினாபுர பேரரசையும் பீஷ்மரையும் பகைத்துக்கொள்ள விரும்பாத காந்தார அரசர் சுபலன், பார்வையற்றவரான திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை மணமுடிக்கச் சம்மதித்தார்.

ஆனால் காந்தார இளவரசர்களில் ஒருவனான சகுனி, தன் சகோதரியைப் பார்வையற்ற இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுக்க விரும்பவில்லை. தனது மண அழைப்பை ஏற்க மறுத்தால் அடுத்த நொடியே அஸ்தினாபுரத்தின் பெரும் படை உங்களது சிறிய காந்தார ராஜ்யத்தின் மீது பாயும் என்றும், காந்தாரத்தை அழிக்க, தான் ஒருவனே போதும் என்றும் பீஷ்மர் மிரட்டியிருந்தார். எனவே குடிமக்களின் நலனுக்காகத் தன் சகோதரி காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்கச் சம்மதித்தான் சகுனி. கோலாகலமாக திருதராஷ்டிரன் – காந்தாரி திருமணம் நடைபெற்றது. சில நாட்கள் கழித்து, காந்தாரி குறித்த ஒரு தகவலை அறிந்து கோபமுற்றார் பீஷ்மர்.

காந்தாரியின் ஜாதகத்தில் அவளுடைய முதல் கணவன் இறந்துவிடுவான் என்றிருந்ததால், முதலில் காந்தாரிக்கு ஓர் ஆட்டுக்கிடாவுடன் திருமணத்தை நடத்தி, அதன்பின் அந்த ஆட்டுக்கிடாவை பலியிட்டிருந்தார் சுபலன். இது குறித்துத் தெரிந்ததும், தங்களை ஏமாற்றி ஒரு விதவையை இளவரசன் திருதராஷ்டிரனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டார் எனக் காந்தார அரசர் சுபலன் மீது கடும் கோபம் கொண்டார் பீஷ்மர். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் எம் குலத்தைக் கேவலமாகப் பேசுவார்களே என நினைத்த அவர், அது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகக் காந்தார அரசர் சுபலனையும் காந்தார இளவரசர்களையும் அஸ்தினாபுரத்திற்கு நயவஞ்சமாக வரவழைத்து, அனைவரையும் சிறையில் அடைத்தார்.

திருமணத்துக்கு பிறகு, தன் கணவரால் காண முடியாத உலகத்தை இனி நானும் காணமாட்டேன் எனச் சபதமேற்று, தன் கண்களைத் துணியைக் கட்டி மறைத்துக்கொண்டாள் காந்தாரி. தன்னுடைய சகோதரர்களும் தந்தையும் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி அவளுடைய கவனத்துக்குச் செல்லவில்லை. ஒருபுறம் அஸ்தினாபுரத்தின் எதிர்காலமான நூறு சிசுக்களைக் காந்தாரி சுமந்துகொண்டிருந்தாள். மறுபுறம் பீஷ்மரின் கோபத்தால் சிறையில் துன்பத்தை அனுபவித்தார்கள் காந்தாரியின் தந்தையும் சகோதரர்களும்.

இருளடைந்த சிறையில் அடைக்கப்பட்ட சுபலனுக்கும் அவரது மகன்களுக்கும் நாளொன்றுக்கு ஒரு பிடி உணவும், சிறிதளவு நீரும் மட்டுமே வழங்கப்பட்டது. அது ஒருவருக்குக்கூடப் போதுமானதாக இல்லை. இப்படியே சென்றால், தங்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்த சுபலன், தன் மகன்களிடம் பேசினார். ‘நமக்குத் தினமும் அளிக்கப்படும் உணவை யாராவது ஒருவர் மட்டும் உண்டு உயிர் பிழைக்க வேண்டும். இல்லையெனில் காந்தாரம் என்றொரு இடம் இருந்ததே வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டுவிடும். நமது காந்தார மக்களுக்காகவும், இதற்கெல்லாம் காரணமான பீஷ்மனைப் பழிவாங்குவதற்காகவும் நம்மில் யாராவது ஒருவர் உயிருடன் இருந்தே ஆக வேண்டும்’ எனக் கூறினார்.

சுபலன் கூறியதை அவருடைய மகன்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தன் மகன்களில் மிகவும் புத்திசாலியான சகுனியே உணவுண்டு உயிர் பிழைத்திருக்க வேண்டும் எனச் சுபலன் முடிவெடுத்தார். அதன்படி அன்றிலிருந்து சிறையில் அளிக்கப்படும் உணவைச் சகுனிக்கு வழங்கி, மற்ற அனைவரும் உணவு உண்ணாமலும் நீர் அருந்தாமலும் ஒவ்வொருவராக மரணிக்கத் தொடங்கினார்கள்.

பசியாலும் தாகத்தாலும் தன்னுடைய சகோதரர்கள் கண்முன் மடிவதைக் கண்ட சகுனியின் மனதில் பீஷ்மர் மீதான வன்மம் கூடிக்கொண்டே சென்றது. மற்ற இளவரசர்கள் அனைவரும் இறந்துவிட, தான் இறக்கும் முன்பு இறுதியாகச் சகுனியிடம் பேசிய சுபலன், ‘நம்மை மிரட்டி அடிபணிய வைத்து நம் குல விளக்கான காந்தாரியை ஒரு குருடனுக்கு மணமுடித்து அவளது வாழ்வை இருளாக்கியது மட்டுமல்லாமல், நமது ராஜ்யத்தைப் பறித்து, நம்மைப் பசிக்கொடுமையாலும் தாகத்தாலும் வாடச் செய்து கொன்றுவிட்டான் பீஷ்மன். அவன் எவ்வாறு நயவஞ்சகமாக நம்மைச் சிறையில் அடைத்துச் சிறிது சிறிதாகக் கொன்றானோ அதேபோல் அவனையும் கொல்ல வேண்டும். எந்த வம்சத்தை விரிவுபடுத்த நம் வம்சத்தை அழித்தானோ, அந்த வம்சத்தை நீ வேரோடு அழிக்க வேண்டும். அவன் நமக்கு இழைத்த கொடுமைகளை நீ என்றும் மறந்திடாதே’ என்றார்.

தந்தை இறந்துபோகவிருப்பதை எண்ணி உள்ளம் நொந்து அழுதான் சகுனி. மகன் தனக்காக வருந்துவதைக் காணப் பொறுக்காத சுபலன், ‘அழாதே சகுனி. எனது விரல்களை வெட்டி எடுத்து பகடைகளாக மாற்றிக்கொள். நீ மனதில் நினைக்கும் எண்களாகப் பகடைகள் மூலம் தோன்றி நான் உன்னுடன் இருப்பேன். இனி உன் வாழ்நாள் லட்சியம் அந்த பீஷ்மனையும் அவனது வம்சத்தையும் அழிப்பதாக மட்டுமே இருக்கவேண்டும்’ எனக் கூறிவிட்டு இறந்துபோனார்.

வன்மத்தால் திடம்கொண்ட சகுனி, ‘பீஷ்மரை வீழ்த்த படைபலம் போதாது. வஞ்சத்தால்தான் அவரை அழிக்க வேண்டும். முதலில் எப்படியாவது சிறையில் இருந்து வெளியேறவேண்டும்’ என்கிற முடிவுக்கு வந்தான். பீஷ்மர் மீதான வஞ்சத்தை என்றும் மறந்திடக்கூடாது என்பதற்காகத் தன் காலை முடமாக்கிக் கொண்டான்.

சிறையில் மற்ற அனைவரும் இறந்து, சகுனி மட்டும் உயிருடன் முடமாக இருக்கும் தகவல் பீஷ்மருக்குச் சென்றது. சிறைக்கு வந்து சகுனியின் நிலையைக் கண்டார். முடமான ஒருவனால் தன்னையும் அஸ்தினாபுர பேரரசையும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற மமதையில், சகுனியை விடுதலை செய்தார் பீஷ்மர். சகுனியிடம், ‘உன்னுடைய சகோதரி காந்தாரிக்கு நூறு குழந்தைகள் பிறந்துள்ளன. இனி அஸ்தினாபுரத்தை எவராலும் வீழ்த்த முடியாது’ எனப் பெருமை பொங்கப் பேசினார்.

அதைக் கேட்ட சகுனி, உள்ளுக்குள் இருந்த வஞ்சத்தை மறைத்து, வார்த்தைகளில் பணிவைக் காட்டினான். தன் சகோதரியையும் மருமகன்களையும் கவனித்துக் கொள்வதற்காக அஸ்தினாபுரத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டான். பீஷ்மர் அனுமதியளித்தார். தன் சகோதரர்கள் மற்றும் தந்தைக்கு இறுதி மரியாதையைச் செய்த சகுனி, மறக்காமல் தந்தையின் விரல்களை வெட்டி எடுத்து, அவற்றைப் பகடைக்காய்களாக மாற்றிக்கொண்டான். அதன்பின் அஸ்தினாபுர அரண்மனைக்குச் சென்று காந்தாரியை சந்தித்தான்.

நடந்த உண்மையை மறைத்து, தந்தையும் சகோதரர்களும் ஒரு தீ விபத்தில் இறந்துவிட்டதாகக் காந்தாரியிடம் கூறினான் சகுனி. ‘எனக்கு இனி வேறு போக்கிடம் இல்லை. நான் உன்னுடனே இருந்துவிடுகிறேன்’ எனக் கூறி, அங்கு தங்குவதற்கு காந்தாரியிடம் அனுமதி பெற்றான். காந்தாரியிடம் சகுனி உண்மையைக் கூறாமல் மறைத்த விஷயம் குறித்துக் கேள்விப்பட்ட பீஷ்மர், அவன் மீதிருந்த சந்தேகத்தைக் கைவிட்டார்.

தங்களது ராஜ்யத்தில் காந்தாரி இருந்த நிலையையும் தற்பொழுது பார்வை இருந்தும் பார்வையற்றவளாக அவள் வாழ்வதையும் ஒப்பிட்டு சகுனியின் உள்ளம் கொதித்தது. பிஷ்மரை அழிப்பதோடு மட்டுமல்லாமல், எவ்வாறு தன் கண்முன் தனது குடும்பம் அழிந்ததோ, அதேபோல் பீஷ்மர் கண்முன் அவர் உருவாக்கியிருந்த அஸ்தினாபுர அரசு வாரிசு இன்றி மொத்தமாக அழிய வேண்டுமெனச் சபதம் மேற்கொண்டான் சகுனி.

இதன் காரணமாகவே தன் மருமகன்களான துரியோதனன் முதலான கௌரவர்கள் மனதில், தர்மன் முதலான பாண்டவர்களின் மீது வன்மத்தை உருவாக்கினான் சகுனி. இவ்வாறு இளவரசர்களிடையே பகையை ஏற்படுத்தி, பீஷ்மர் உருவாக்கிய அஸ்தினாபுர பேரரசை அழிவுப் பாதைக்கு அவன் அழைத்துச் சென்றான்.

தன் சபதத்துக்குப் பெரும் தடையாக இருந்த கிருஷ்ணரை சமாளித்து, தனது தந்தையின் எலும்புகளில் உருவாக்கிய பகடைக்காய்களால் தர்மனுடன் சூதாடி வென்று மகாபாரதப் போர் ஏற்பட சகுனி காரணமாக இருந்தான். இறுதியில், தன்னுடைய சபதத்தை நிறைவேற்றி, போரில் மரணமடைந்தான்.

ஓர் எளியவன் உருவாக்கிய மகாபாரதப் போரில் கௌரவர்கள் அழிந்து, தர்மன் முதலான பாண்டவர்கள் ஐவர் எஞ்சியிருந்தனர். போரில் மரணமடைந்தவர்களுக்காக அவர்கள் யாகம் ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். யாகத்திற்கு வந்த கிருஷ்ணர், ‘யாகத்தின் முதல் பாகத்தை யாருக்கு அளிக்கப்போகிறீர்கள்?’ எனக் கேட்டார்.

‘இதிலென்ன சந்தேகம்? போரில் வீர மரணமடைந்த, குலத் தோன்றலுக்குக் காரணமான பீஷ்மருக்குத்தான்’ என்றான் தர்மன். அதைக் கேட்ட கிருஷ்ணர், ‘போரில் வீர மரணமடைந்தவர்களுக்காக நடத்தும் யாகத்தில் சகுனிக்கு அல்லவா முதல் பாகத்தை அளிக்க வேண்டும்?’ என்றார்.

கிருஷ்ணரின் கேள்வியால் அதிர்ந்த பாண்டவர்களில் ஒருவனான பீமன், ‘தர்மத்தின் வழிநடந்த பீஷ்மரை விட்டுவிட்டு அந்த வஞ்சகனுக்கா யாகத்தின் முதல் பாகத்தை அளிக்க வேண்டும்? முதல் பாகம் என்பது வீர மரணமடைந்தவர்களுக்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை அந்தப் பாவிக்கா அளிக்கவேண்டும்? என்னவாயிற்று கிருஷ்ணா உனக்கு?’ எனக் கோபத்துடன் கேட்டான்.

‘ஆம்… அதற்குத் தகுதியானவன் சகுனி ஒருவனே’ என அமைதியாகப் பதிலளித்தார் கிருஷ்ணர்.

‘பிதாமகர் பீஷ்மரைவிடச் சகுனி உயர்ந்தவனா கிருஷ்ணா? நயவஞ்சகமே உருவானவனுக்கு, வீர மரணமடைந்தவருக்கான மரியாதையை அளிக்க வேண்டுமா?’ எனக் கேள்வி எழுப்பினான் அர்ஜுனன்.

’அர்ஜுனா… வீர மரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட லட்சியத்திற்காக எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்து, லட்சியத்தை நிறைவேற்றிய பின் உயிர் துறத்தலே வீர மரணமாகும். இதில் பீஷ்மரைவிட உயர்ந்தவன் சகுனியே’ என்றார் கிருஷ்ணர்.

‘பீஷ்மரின் எண்ணம் நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால், எங்களை அழிக்கவேண்டும் என்கிற சகுனியின் எண்ணமும்தான் நிறைவேறவில்லையே’ என ஏளனத்துடன் கூறிய அர்ஜுனனைப் பார்த்த கிருஷ்ணர், ‘போரில் உற்றார் உறவினர் மக்கள் என அனைவரையும் இழந்த நீங்கள், உயிருடன் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்’ எனக் கூறிப் புன்னகைத்தார்.

‘அவ்வாறெனினும் எங்களை அழிப்பதைவிடப் போரில் துரியோதனன் வெற்றி பெற வேண்டும் என்பதுதானே சகுனியின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அதுதான் நிறைவேறவில்லையே. பின் எவ்வாறு யாகத்தின் முதல் பாகத்தைச் சகுனிக்கு அளிக்க முடியும் கிருஷ்ணா?’ எனச் சந்தேகத்துடன் கேட்டான் பீமன்.

‘சகுனிக்கு நீங்கள் அனைவரும் எதிரிகளே. ஒரு பக்கம் ஐந்து எதிரிகள். மறு பக்கம் நூறு எதிரிகள். உங்கள் ஐவரையும் அழிப்பதாகக் கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமாகவே அழித்து, உங்களையும் நடைப்பிணங்களாக மாற்றிவிட்டான் சகுனி’ என்று கிருஷ்ணர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தார் திருதராஷ்டிரன்.

’என்ன? கௌரவர்களை அழிப்பதே சகுனியின் லட்சியமா? ஏன் கிருஷ்ணா?’ என்று அதிர்ச்சி விலகாமல் அவர் கேட்டார்.

‘சகுனிக்குப் பாண்டவர்களும் கௌரவர்களும் ஒன்றுதான். உங்கள் ஒட்டுமொத்த வம்சத்தையும் வேரறுப்பதே சகுனியின் நோக்கமாக இருந்தது. அதை நிறைவேற்றத் தனி ஒருவனால் முடியாது என்பதால் கௌரவர் பாண்டவர் இடையே பகையை உருவாக்கி தன் லட்சியத்தை நிறைவேற்றிக்கொண்டான் சகுனி’ என்றார் கிருஷ்ணர்.

‘பாம்பென்று தெரியாமல் பால் கொடுத்து வளர்த்திருக்கிறேனே. நல்லவன்போல் நடித்து ஏமாற்றியிருக்கிறானே துரோகி!’ எனப் பல்லைக் கடித்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார் திருதராஷ்டிரன்.

‘சகுனி பாம்பல்ல! அடிபட்ட புலி. அவன் துரோகி அல்ல. தன் மொத்தக் குடும்பத்தையும் இழந்து உங்களால் பாதிக்கப்பட்டவன் சகுனி’ என்றபடி, சகுனிக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் எடுத்துக் கூறினார் கிருஷ்ணர். மேலும், ‘இங்கிருக்கும் எல்லாரையும்விட சகுனி நல்லவன். உன் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காகப் பீமனை நீ கொல்ல நினைத்தது சரியென்றால் சகுனி செய்ததும் சரியே’ எனத் திருதராஷ்டிரனை பார்த்துக் கூறினார்.

தொடர்ந்து பேசிய கிருஷ்ணர், ‘தன் மகன் அபிமன்யுவை கொன்ற ஜெயந்த்ரனை கொன்று பழி வாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால், பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்றத் துரியோதனனை கொன்ற பீமன் நல்லவன் என்றால், கண்முன் தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதைப் பார்த்த சகுனி, அதற்குக் காரணமான பீஷ்மரையும் உங்கள் குலத்தையும் அழிக்க நினைத்த சகுனி, உங்கள் அனைவரையும்விட நல்லவனே. இப்பொழுது கூறுங்கள், யாகத்தின் முதல் பாகத்தைச் சகுனிக்கு தர முடியுமா முடியாதா?’ என்றார்.

’நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். சகுனிக்கே யாகத்தின் முதல் பாகத்தை அளிக்கிறோம்’ என்றனர் பாண்டவர்கள்.

மற்றவர்களைவிட அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டாலும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சகுனியின் இக்கதையில் இருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், யுத்தத்தில் வெற்றிபெற உடல் வலிமையோ படைபலமோ தேவையில்லை. சிறிது புத்திசாலித்தனமும் மன உறுதியும் இருந்தால் எவ்வளவு பெரிய போரிலும் வெற்றி பெறலாம். ஆதிகாலத்தில் இருந்தே பாதிக்கப்பட்டவனின் குரல்வளை பலம் வாய்ந்தவனால் நெறிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால், சகுனியின் செயல்கள் அனைத்தும் சூழ்ச்சிகளாகவே நம் கண்களுக்குத் தெரிகிறது.

எண்ணிய செயலில் எத்தனைத் தடைகள் வந்தாலும் மன உறுதியுடன் தடைகள் அனைத்தையும் தகர்த்து, தனி ஒருவனாகத் தன் நோக்கத்தை நிறைவேற்றிய சகுனியைப்போல், நாம் எண்ணும் செயலுக்காக மன உறுதியுடன் செயல்பட்டால், எத்தனை பெரிய செயலாயினும் செய்து முடிக்க முடியும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *