Skip to content
Home » இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

இந்தத் தொடரில் இதுவரை பார்த்த அரசிகள் பலரிலிருந்து இவர் வேறுபட்டவர். அரசிகள் அரசர்களின் வழியொட்டி அரசை நிர்வகிப்பது, போர்த்தலைமை ஏற்பது, எதிர்ப்பவர்களைப் போரிட்டு வெல்வது என்று அரசக் கடமைகளை நிறைவேற்றி வாழ்வது ஒரு வகை என்றால், 18ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வேரூன்றிவிட்ட பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனிக்குப் பெரும் பகையாக இல்லாமலும், அதேநேரம் முதலாவது விடுதலைப் போரில் ஈடுபட்ட மற்ற அரசுகள் மதிக்கும் அரசியாகவும், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனிக்கே கடன் வழங்கும் அளவு மிகுந்த செல்வ வளம் கொண்டிருந்த அரசாகவும் விளங்கிய ஓர் அரசியைப் பற்றியே இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

வலிமையான பொருளாதாரப் பின்னணியைக் கொண்டு, வடஇந்தியாவின் மத்தியப் பகுதியில் இருந்த பல அரசுகளுக்கும், மிகப்பெரும் தனியார் வியாபாரக் கேந்திரங்களுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும்கூட நிதிமூலமாக இருந்தவர் இந்த அரசி. சிந்தியா அரசக் குலத்தின் அரசருக்கு மனைவியானதன் மூலம் குவாலியர் அரசின் இராணியானார். வரலாற்றுப் பார்வையில் சுதேசி உணர்வு கொண்ட தேசிய அரசியாக அறியப்படும் அன்சா பாயின் வழி வந்தவர்தான் பெயர் பெற்ற அரசியல் தலைவரான மாதவராவ் சிந்தியா. அரசி அன்சா பாயைப் பற்றித் தனியாகவே எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் நிறைய உள்ளன.

பிறப்பு, இளமை, திருமணம்

பெய்சா பாய் 1784ஆம் ஆண்டு சக்காராம் காட்கேவுக்கும் சுந்தராபாய்க்கும் பிறந்தவர். சக்காராம் காட்கே மராத்தாவின் கொல்காப்பூரைச் சேர்ந்த போன்சுலே அரசக் குலத்தவர்களின் ஆளுமையில் இருந்த காகாய் சபையில் அங்கம் வகித்தவர். அவரது குடும்பத்துக்கு தேஷ்முக் என்ற பட்டப்பெயர் உண்டு. பதினான்கு வயது நிறைந்த பெண்ணாக பெய்சா பாய் மலர்ந்தபோது, குவாலியர் அரசரான தௌலட் ராவ் சிந்தியாவுக்கு அவர் மணம்செய்து வைக்கப்பட்டார். அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. இராணி பெய்சா பாய்க்குக் குதிரை ஏற்றம், வாட்போர், கேடயப் போர், போர்த் திட்ட வழிமுறைகள் என்று அனைத்திலும் சிறுவயதிலேயே பயிற்சி இருந்தது. முக்கியமாக அவரது குதிரையேற்றத் திறனைப் பற்றிய குறிப்பிட்ட செய்திகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அரச வாழ்வு

தௌலட் ராவ் சிந்தியாவிற்குப் பிரியமான மனைவியாக பெய்சா பாய் வாழ்ந்திருக்கிறார். சிந்தியா, எதிலும் தனது மனைவியின் ஆலோசனையைக் கேட்கத் தவறியதில்லை. இதற்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன. குவாலியர் அரசவையில் பெய்சாபாய் சொன்னவர்களுக்கு முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டன. தினப்படி நிர்வாக நடைமுறைகளில்கூட பெய்சாபாயின் ஆலோசனை கேட்கப்பட்டது.

பெய்சா பாயின் தந்தை சக்காராம், ஒட்டு மொத்த குவாலியர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். பிரித்தானியர்களுடன் நடைபெற்ற மராத்தா போர்களில் அரசி பெய்சா பாய், அரசர் சிந்தியாவோடு தோளோடு தோள் நின்று போர்க்களத்திலும் யுத்தம் நிகழ்த்தியிருக்கிறார். சக்காராமின் வலியுறுத்தலே குவாலியர் அரசு பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதற்கு முக்கியக் காரணம் என்றும் ஒரு பார்வை உண்டு.

ஒப்பீட்டளவில் தௌலட்ராவ் சிந்தியா முழு பிரித்தானிய எதிர்ப்பைக் கைக்கொள்ள விரும்பவில்லை என்றும், தனது மாமனாரின் ஆதிக்கத்தால்தான் அவர் பிரித்தானிய எதிர்ப்பைக் கைக்கொள்கிறார் என்றும் கிழக்கிந்திய கம்பெனி நினைத்தது. எனவே 1805இல் இரண்டாவது மராத்தா போரில் சிந்தியா தோல்வியுற்றபோது கிழக்கிந்திய கம்பெனி ஓர் ஒப்பந்தத்தின்படி ஆளுகையைத் தீர்மானிக்க வாய்ப்பளித்தது. அதன்படி தௌலத், குவாலியர் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது, திவான் பதவியிலிருந்து சக்காராம் விலக வேண்டும், அவ்வாறு செய்யும்பட்சத்தில் அரசி பெய்சா பாய்க்கு இரண்டு இலக்கம் ரூபாய் ஈட்டுப்பணமாக (சாக்கிர்) கிழக்கிந்தியக் கம்பெனி கொடுக்கும் என்றும் விதிகளை முன் வைத்தார்கள்.

இந்த விதிகளின்படி குவாலியரின் நிர்வாகப் பொறுப்பை அரசி பெய்சா பாய் ஏற்று, அடுத்த ஆறு ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அந்த ஆறு ஆண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் எழுதிய குறிப்புகளின்படியே அரசி பெய்சா பாய் ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கினார் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குவாலியரின் சுபேதாராக காவாலி என்பவரை சிந்தியா ஏற்கெனவே நியமித்திருந்திருந்தார். மராத்தா போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு சிந்தியா செல்வாக்கில்லாமல் இருந்ததாலும், அவருக்கும் அவரது மாமனார் சக்காராமுக்கும் இதே காரணத்தால் மருமகனின் மீது மனத்தாங்கல் இருந்ததாகவும் தெரிகிறது. தனது மருமகன் முழுமூச்சாக பிரித்தானியர்களை எதிர்க்கத் தயங்குகிறார் என்று சக்காராம் நினைத்தார். இந்த உரசல்களுக்கிடையில் 1809ஆம் ஆண்டு சக்காராம் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றதில் மருகனுக்கும் சுபேதாருக்கும் பங்கு இருந்திருக்கலாம் என்ற ஐயப்பட்ட அரசி பெய்சா பாய், முதலில் சுபேதார் காவாலியை அந்தப் பதவியில் இருந்து நீக்குகிறார்.

மெல்ல மெல்ல நிலைத்த அதிகாரம்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் போக்கு எப்படிப் போகும் என்று அனுமானித்த அரசி பெய்சா பாய், 1827இல் தனது கணவர் தௌலத்ராவ் சிந்தியா இறந்தபின், தனது தாயின் குடிவழியாகப் பிறந்த ஒரு சிறுவனைத் தத்தெடுத்து குவாலியரின் அரசராக அறிவிக்க நினைத்தார். ஏற்கெனவே தனக்குப் பிறகு அரசி பெய்சா பாய் முழு உரிமையுள்ள ஆட்சித் தலைவியாகத் திகழ்வார் என்று தௌலத்ராவ் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு குவாலியர் அரசின் சமய குருமார்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அது சோதிட ரீதியாக அரசுக்கு இடர்களைக் கொண்டு வரும் என்று கணித்துச்சொன்னார்கள்.

எனவே தனது கணவரின் உறவினர் ஒருவரின் மகனான முகுந்தராவ் என்ற சிறுவனைத் தத்து எடுத்தார் பெய்சா பாய். அந்தச் சிறுவனை ஜூன் 17, 1827இல் குவாலியரின் அரச வாரிசாக அறிவித்தார். அந்தச் சிறுவனுக்கு அரசப் பெயராக சங்கோஜிராவ் சிந்தியா என்ற பெயரும் சூட்டப்பட்டது. அவருக்குப் பிறந்த மகன் நோயினாலோ உடல்நலக் குறைவாலோ இறந்துபோனதாகத் தெரிகிறது. தத்து எடுத்த பிள்ளையை அரசராக அறிவித்து விட்டாலும், அந்தச் சிறுவனுக்கு வேண்டிய கல்வியோ, பயிற்சியோ அளிக்காமல் தானே நிர்வாகப் பொறுப்பை முழுதும் கைக்கொண்டிருந்தார் என்றும் பதிவு செய்கிறார்கள்.

அரச ஆணைகள் அரசி பெய்சா பாயின் பெயரிலேயே வந்தன. நாணயங்களில்கூட அரசியின் உருவமே அச்சிடப்பட்டது. 1829 வரையிலும்கூடத் தொடர்ந்த இந்த நிலையை ஓர் அளவில் கிழக்கிந்திய கம்பெனி எதிர்த்ததாகத் தெரிகிறது. ஆனால் அந்த எதிர்ப்பைக் கண்டும் காணாமல் அரசி தனது நிர்வாகத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார். கிழக்கிந்திய கம்பெனியும் முழுதாக அரசியை அடக்கிக் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லாது, அரசியிடம் நிதிமூலச் சேவைகளைப் பெறும் இடத்தில் இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.

நிதிமூல அதிகாரி

கிழக்கிந்திய கம்பெனி முக்கியமாகக் குறிவைத்த ஒரு நடவடிக்கை வரிவசூல் செய்யும் உரிமை. போர்கள், அரசுகளைக் கைப்பற்றுவது போன்ற அனைத்தும் அதனை முன்வைத்தே நடந்தன. கிழக்கிந்தியக் கம்பெனி வலுவான வியாபார, அரச, நிர்வாக அமைப்பாக நிலைபெறுவதற்கு முன்னால் இந்த வரி வசூல் செய்யும் வேலையை, அரசர்களுக்காகவும் சமத்தானங்களுக்காவும் தனியார் வியாபாரிகள், நிதி வணிகர்கள் போன்றவர்கள் செய்துவந்தார்கள். வசூலிக்கின்ற பணத்தில் ஒரு கட்டணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு மீதியை அரசுக்கு வழங்குவார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி வலுவடைவது ஒரு வகையில் அவர்களது வியாபாரத்தையும் பாதித்தது. இத்துடன் அவர்களோடு தொடர்பில் இருந்த உள்ளூர் பெருவியாபாரிகளின் வியாபாரங்களும் சுணக்கம் அடைந்தன.

கிழக்கிந்திய கம்பெனியைப் பெரிதாக வளர விடுவது தங்களது வியாபாரத்துக்கும் கேடு என்பதால் உள்ளூர் வியாபாரிகளும், நிதி வணிகர்கள் கூட்டமைப்பும் அரசர்களை அணுகி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களது சிந்தனைப் போக்தைத் தமக்குகந்தவாறு கொண்டு செல்லவும் தலைப்பட்டார்கள். கிழக்கிந்திய கம்பெனி இந்த வணிகங்களை மட்டுமல்லாது பெருமளவில் ஓப்பியம் என்ற போதை மருந்து வணிகத்தையும் கையாண்டுவந்தது. தாம் பிடிக்க எண்ணிய நாடுகளில் ஓப்பியம் பழக்கத்தைப் பரவ விட்டு, அந்த வியாபாரத்தால் பணம் பார்ப்பதும், பின் அந்த நாடுகள் போதைப் பழக்கத்தால் தடுமாறும்போது அவற்றைப் போரிட்டுப் பிடிப்பதும் அவர்களது உத்தியில் அடங்கியிருந்தது. ஓப்பியம் வணிகத்துக்குப் பெருமளவில் கிழக்கந்திய கம்பெனிக்குப் பணம் தேவைப்பட்டது.

அப்போதைய குவாலியரில் மணிராம், கோகுல் பரேக் என்ற இரண்டு பேர் நிதி வணிகர்களாக இருந்தனர். பெரும் அளவில் தேவைப்படும் நிதி இவர்களிடம் இருந்தே கிடைத்தது. அரசி பெய்சா பாய்க்கும் இவர்களது நிறுவனத்தில் பெரிய அளவில் பங்கு இருந்தது. அதோடு அரசியும் தனிப்பட்ட வகையில் நிதி வணிகராகச் செயல்பட்டார். பெரும் நிதி வணிகர்கள் மூன்று பேர் அரசி பெய்சாபாயின் கட்டுப் பாட்டில் இருந்ததால் குவாலியர் பகுதியைப் பொறுத்தவரை கிழக்கிந்தியக் கம்பெனி, பெய்சா பாயை ஒட்டியே நடந்துகொள்ள வேண்டியிருந்தது.

கடன், வணிகப் பரிமாற்று ஒப்பந்தங்கள், பங்கு வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும்நிதியைக் கையாளும் பெண்மணியாக இருந்தார் பெய்சா பாய். 1810 வாக்கிலேயே அவர் ஒரு தனிநபர் நிதிமூல நிறுவனராக இருந்தார். அக்கால வடஇந்தியாவில் நிதி நடுவமாக இருந்த உஜ்ஜைனி நகரமும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

வாழ்நாள் அதிகாரம்

கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அப்போது பெரும் நிதி தேவைப்பட்டது. அவர்கள் பெய்சாபாயிடம் பத்து இலக்கம் ரூபாய் கடன் கேட்டார்கள். அதற்குப் பதிலாக வாழ்நாள் இருக்கும் வரை குவாலியரின் நிர்வாக அரசியாக அரசி பெய்சாபாய் இருந்துகொள்ளலாம் என்பது உடன்பாடு. இழுத்துப் பிடித்த அரசி எட்டு இலக்கம் வரை தன்னால் தரமுடியும் என்று அவர்களைச் சம்மதிக்க வைத்தார். கிழக்கிந்திய கம்பெனி அந்தக் கடனை அதிகாரத்தைக் கொடுக்கும் பதிலியாகத் தள்ளுபடி செய்ய வைத்துவிடலாம் என்று நினைத்தது. ஆனால் சாமர்த்தியமாக இருந்த அரசி, பண உதவி கடன்தான் எனவும், கிழக்கிந்திய கம்பெனி அந்தக் கடனைத் திருப்பித் தருவதாக உறுதி செய்த பிறகே கடனைக் கொடுத்தார். பின்னர் அவர்களிடமிருந்து அந்தத் தொகையை வட்டியோடு வசூலித்தும்விட்டார்.

அந்தப் பணம் முழுவதும் அவர் நிர்வகித்து வந்த பனாரசின் வங்கியில் கிழக்கிந்திய கம்பெனியால் செலுத்தப்பட்டது. அந்த அளவுக்கு ஒரு நிதிமூலத் தனிநபர் நிறுவனமாகவும் அரசியாகவும் இருந்தார் பெய்சா பாய்.

மேலும் தனது அதிகாரத்தை உறுதி செய்ய நினைத்த அரசி பெய்சாபாய், அரசனாக இருந்த ஜங்கோஜிராவ் சிந்தியாவைத் தனது பேத்திக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் அந்தப் பெண் சிறிது காலத்தில் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. வாரிசற்று இருந்ததால் தனது மகளின் வயிற்றிலிருந்த இன்னும் பிறவாத குழந்தையை குவாலியரின் அரச வாரிசாக அறிவிக்க முயற்சி செய்தார். ஆனால் கிழக்கிந்திய கம்பெனியும் பிரித்தானிய நிர்வாகமும் அதனை ஒத்துக்கொள்ளவில்லை.

ஜங்கோஜிராவை குவாலியரின் அரசவையும் இராணுவமும் அரசராக ஏற்றுக்கொண்டு வாழ்நாள் வரை அரசி நிர்வாகம் செய்யலாம், அதன்பிறகு ஜங்கோஜிராவ் சிந்தியா நிர்வாகப் பொறுப்புக்கு வருவார் என்று சொல்லின. ஆனால் ஜங்கோஜிராவ் வயதுக்கு வந்தவுடன் அரசு நிர்வாகத்தைத் தனக்கு அளித்து விடவேண்டும் என்று கேட்க இருவருக்கும் உரசல்கள் தொடங்கின. ஜங்கோஜி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவைத் தனக்காக வேண்ட, அரசி பெய்சா பாயின் திறமையை அறிந்திருந்த கிழக்கிந்திய கம்பெனி குவாலியரின் உள்நாட்டு நிர்வாகத்துக்குள் தாம் நுழைய இயலாது என்று பதிலளித்தது.

அப்போதைய கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் ஆளுநர் வரை சென்றும், ஜங்கோஜியால் ஆதரவைத் திரட்ட இயலவில்லை. எனவே ஒரு கலக சதியை ஏற்படுத்தி அரசியைப் பதவி இறக்கிவிடலாம் என்று நினைத்தார் ஜங்கோஜி. 1832இன் முகரம் விழாவை ஒட்டிய கடைசி நாளன்று அரசைக் கைப்பற்றவும் அரசியைச் சிறைபிடிக்கவும் திட்டமிட, அதனை முன்னரே அறிந்து கொண்ட அரசி, அந்தச் சதியை முறியடித்தார். அரசிக்கு நிர்வாகத்திலும், நிதிமூல நிறுவனத்திலும் பேருதவியாக இருந்த திரியம்பக் ராவ் என்பவர் 1832இல் காலமாக அரசிக்கு நம்பிக்கையான ஆட்கள் நிர்வாகத்தில் குறையத் தொடங்கினர். படிப்படியாக குவாலியர் இராணுவம், அரச சபை போன்றவற்றில் ஜங்கோஜிராவுக்கு வேண்டியவர்கள் இடம்பெறத் தொடங்கினர். இப்போது அச்சத்தைக் கைவிட்டு கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் ஜங்கோஜியை ஆதரிக்க, குவாலியரின் நிர்வாகத்தைக் கைவிட்டுவிட்டு தனது சகோதரன் இந்துராவுடன் ஆக்ராவில் போய்த் தங்கினார்.

இறுதிக் காலத்திலும் தொடர்ந்த அதிகாரம்

அரசி நிர்வாகத்தைக் கைவிட்டாலும் அவரது திறமையையும், கோடிகளைக் கொண்டிருந்த அவரது நிதிமூல நிறுவனத்தின் சக்தியையும் அறிந்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அவருக்கு வருடம் நான்கு இலக்கம் ரூபாய்கள் அரச உதவித் தொகை கொடுக்கச் சம்மதித்தது. 1841ஆம் ஆண்டு அரசி பெய்சா பாய் நாசிக் நகரத்துக்குத் தனது இருப்பை மாற்றினார். பனாரசில் செயல்பட்டுவந்த அவரது வங்கி, பெரும் லாபத்துடன் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்தக் காலத்தில் வேல்சில் இருந்து வந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பென்னி பார்க்கசு என்ற பயணியை அரசி பெய்சா பாய் சந்தித்திருக்கிறார். பென்னி பார்க்கசின் விவரிப்பான எழுத்து, அரசி பெய்சா பாயின் பல திறன்களைப் பற்றிச் சொல்கிறது. ஆண்களைப்போல மராத்தியப் போர் உடை தரித்து, 58 வயதிலும் குதிரையேற்ற சவாரி செய்ய இயன்றதைப் பற்றி பென்னி பார்க்கசு வியந்து எழுதியிருக்கிறார்.

இதற்கிடையில் 1843இல் ஜங்கோஜி ராவ் சிந்தியா காலமானதைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்த குவாலியர் அரசராக ஜெயாஜிராவ் சிந்தியா மன்னராகிறார். அவருக்குத் தனது பேத்தியின் மகளான சிம்னாபாய் என்ற பெண்ணை அரசி பெய்சா பாயினால் மணமுடிக்க முடிகிறது. இது குவாலியர் அரசில் அரசி பெய்சா பாயின் அதிகாரத்தை மீண்டும் மறுஎழுச்சி செய்ய வைத்திருக்கிறது.

தனது நிதிமூல வங்கி, பெரும் சொத்துகள் போன்றவை குவாலியர் அரசருக்குக் கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்த அரசி பெய்சாபாய், 1847 முதல் 1856 வரை உஜ்ஜைனி நகரில் வசிக்கிறார். வட இந்தியாவின் நிதி நடுவமாக இருந்த உஜ்ஜைனி அவரது கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. 1856இல் மீண்டும் குவாலியருக்கு வந்து தங்குகிறார் அரசி பெய்சா பாய். இந்தச் சமயத்தில் 1857இல் ஏற்பட்ட சிப்பாயக் கலகத்தில் அரசியும் ஈடுபடலாம் என்று கிழக்கிந்திய கம்பெனியும், பிரித்தானிய நிர்வாகமும் அச்சப்பட்டன. ஆனால் அரசி பெய்சா பாய் வெளிப்படையாகக் கலகத்தில் ஈடுபடவில்லை. ஆனால் 1857இன் சிப்பாயக் கலகத் தலைவர்களான தாந்தியா தோப்பே போன்றவர்களுடன் அரசிக்கு நல்ல சுமுகமான தொடர்பு இருந்தது.

தாந்தியா தோப்பேயும் ஜான்சி இராணி இலக்குமி பாயும், குவாலியரின் அரசப் பொறுப்பை அரசி பெய்சா பாய் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்குக் கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் காண்பித்த அரசி, இருபுறங்களிலிருந்தும் அச்சம் கலந்த மரியாதையைப் பெற்று, கம்பி மேல் நடக்கும் வித்தைபோல அந்தக் காலத்தைக் கடந்தார். குவாலியரின் அரசக் குலத்தவர்கள், இளம் இராணிகள் போன்றவர்களை அந்தக் கலகச் சமயத்தில் அவர் வேறு இடத்துக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. அத்தகைய அரச நிர்வாக நுண்திறனைக் கொண்டிருந்தார் இராணி பெய்சா பாய்.

அரசி பெய்சா பாய், பல சமூகப் பணிகளிலும், வழிபாட்டுத் தலங்களைச் செப்பனிட்டு வைப்பதிலும் ஆர்வம் காட்டியவராகத் தெரிகிறது. 1828இல் வாரணாசியில் இருக்கும் கியான்வாபி கிணற்றைச் சுற்றிச் செப்பனிட்டு மண்டபங்கள் கட்டினார். வாரணாசியில் கங்கையின் தென்கரையில் சிந்தியா காட் என்ற பெயரில் இருந்த கரையைச் செப்பனிட்டு, ஆற்றுத் துறையை வசதியாகப் பக்தர்களுக்கு அமைத்துக்கொடுத்தார். சிந்தியா அரசக் குடும்பத்தினர் ஆட்சித் தலைநகரை குவாலியருக்கு மாற்றுவதற்கு முன்னர் உஜ்ஜைனி நகரே தலைநகராக இருந்தது. அங்கு கோபால கிருஷ்ணர் ஆலயம் ஒன்றையும் அரசி பெய்சா பாய் அமைத்தார். 1850ஆம் ஆண்டு குவாலியரில் அவரது பெய்சால் என்ற பெயரில் ஒரு பெரிய நீர்த்தேக்க ஏரி அமைக்கப்பட்டது.

1863இல் தனது இறப்பு வரை அரசி பெய்சா பாய் நிர்வாகத்திலும், அரசக் குடும்பத்திலும் சக்தி மிகுந்த பெண்ணாகவும், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியை அச்சத்திலும், பெரும் மரியாதையுடனும் அணுக வைத்தவராக இருந்தார். இவரது வரலாறு அனைவரும் அறியத் தகுந்த ஒன்றாகும்.

(தொடரும்)

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

1 thought on “இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)”

  1. இந்திய அரசிகளை பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொள்கின்றோம் அருமை

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *