சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இன்று செயற்படும் ஜொரசாங்கோவில் 1890இல் பிறந்தார் அசித் குமார் ஹல்தார். அவரது தாய்வழிப் பாட்டி ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி. எனவே ஹல்தாருக்கு தாகூர், மாமா தாத்தா உறவு.
ஹல்தாரின் தாத்தா ரக்கல்தாஸ் ஹல்தார், தந்தை சுகுமார் ஹல்தார் இருவருமே அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்ட ஓவியர்கள். கலைக்குடும்பத்தில் பிறந்த அசித்குமார் தனது ஓவியக் கல்வியை 1904 இல் (14 ஆம் வயது) கொல்கத்தா அரசு ஓவியப் பள்ளியில் தொடங்கினார். அங்கு அவர் ஓவியம், சிற்பம் இரண்டையும் கற்றார்.

1909-1911 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் கிறிஸ்டினா ஜேன் ஹெர்ரிங்காம் என்பவர் அமைத்த குழுவில் இடம்பெற்று அவருடன் அஜந்தாவிலேயே தங்கி, அஜந்தா ஓவியங்களைத் தீட்டும் பணியில் ஈடுபட்டார்.
அதேபோல் 1921இல் மத்தியப் பிரதேசத்திலுள்ள பாக் குகை ஓவியங்களையும் தீட்டினார். 1911-1915 ஆண்டுகளுக்கு இடையில் சாந்திநிகேதன் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘கலாபவனம்’ என்னும் பெயரில் ஓவியத்துக்கும் சிற்பத்துக்குமான தனிப் பிரிவை ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கியபோது அவருக்கு உறுதுணையாகச் செயற்பட்டார். 1923 வரை அங்கு முதல்வராகவும் பணிபுரிந்தார். பல புதிய படைப்பு வழிகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.
தனது படைப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ளும் விதமாகவும் மேலைநாட்டுப் படைப்புச் சிந்தனையைப் பற்றித் தெளிவாக அறியவும் 1923இல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஆனால், மேலை நாட்டு தத்ரூபப் படைப்பு வழியில் ஓவியனின் கற்பனைக்கான எல்லைகள் குறுகி இருப்பதாக உணர்ந்து கொண்டார்.
பயணத்தை முடித்துக்கொண்டு மீண்ட அவர் ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் மகாராஜா ஓவியப் பள்ளியில் ஓராண்டுக்காலம் முதல்வராகவும் அதையடுத்து லக்னோ சமஸ்தான மஹாராஜா ஓவியப்பள்ளியில் முதல்வராகவும் பணிபுரிந்தார்.
அஜந்தா, பாக் குகை ஓவியங்களை நகல் எடுத்த அனுபவத்தால் புத்தரின் வாழ்க்கைக் காட்சிகளை 32 ஓவியங்களாகத் தீட்டினார். இந்திய வரலாற்றை 30 ஓவியங்களாகப் படைத்தார்.

அசித்குமார் கவிதை படைப்பதிலும் ஈடுபட்டார். ஓர் இளம் கவிஞர் என்று ரவீந்திரநாத் தாகூர் அவரைக் குறிப்பிட்டுள்ளார். காளிதாசரின் ‘மேகசந்தேசம்’, ‘ருதுசக்ர’ ஆகிய இரண்டு காவியங்களையும் வங்க மொழியில் மொழிபெயர்த்தார். உமர்கய்யாம் கவிதைகளை ஓவியங்களாக்கினார். அஜந்தா அனுபவங்களை வங்க மொழியில் நூலாக்கினார் . ஹோ பழங்குடி மக்கள் பின்பற்றிய கலாசாரம், வாழ்க்கை ஆகியவற்றை நூலாக்கினார். வங்கத்துக் கலை மறுமலர்ச்சி இயக்கத்தில் அவர் பங்களிப்பு முக்கியமானதாகக் கருப்படுகிறது. லக்னோ நகரில் தமது 74 ஆவது வயதில் காலமானார்.
ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டன் 1935 இல் அவருக்கு ஃபெலோஷிப் கொடுத்து பெருமைப்படுத்தியது. அவ்விதம் பெருமைப்படுத்தப்பட்ட முதல் இந்தியரும் அவர்தான். அலகாபாத் அருங்காட்சியகத்தில் 1938இல் அவர் வைத்த ஒருநபர் காட்சி, தனிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பு:ஜொரசாங்கோ (இரண்டு மூங்கில் பாலங்கள்) தாகூர் பரி (bari) என்பது ரவீந்திரநாத் தாகூரின் குடும்பத்துப் பண்ணை நிலம். சாந்திநிகேதன் கல்விக்கூடம் அங்குதான் தொடங்கப்பட்டது. இது அந்த வளாகத்தின் ஒரு பகுதியாக இன்றும் உள்ளது. ரவீந்திரநாத் தாகூர் பிறந்த இல்லமும் அங்குதான் உள்ளது.