கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்களூர் அருகே ஒரு கிராமத்தில் மாதவ மேனோன் 1907 இல் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. மாதவ மேனோன் தனது பெற்றோருக்கு மூன்றாவது மகன். அவரது தந்தை திருவிதான்கூர் சமஸ்தானத்து அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் மாமன் இலங்கையில் காவல்துறையில் (ஆங்கில ஆட்சி) அதிகாரியாகப் பணிபுரிந்துவந்தார். 1914 இல் தனது ஏழாவது வயதில் மேனோன் மாமனுடன் இலங்கை சென்றார். அங்கு அவரது தொடக்கக் கல்விப்படிப்புத் தொடங்கியது. ஆனால், படிப்பில் மேனோனுக்குத் துளியும் நாட்டம் இருக்கவில்லை. எனவே ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லாமல் விருப்பம்போலச் சுற்றித் திரிவதுதான் அவரது செயற்பாடு. ஒரு நாள் அவரை அனாதைச் சிறுவன் என்று கருதி ஓர் ஆங்கிலேயன் கடத்திச் சென்றுவிட்டான். காவல்துறை பலநாள் தேடி சிறுவனை மீட்டு மாமனிடம் சேர்ப்பித்தது.

1915 இல் மேனோன் தமது கிராமத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஆறு மாதங்களுக்குப் பின் தனது மூத்த தமையனுடன் அவர் சென்னைக்கு வந்தார். பிரம்மஞானச் சங்கத் தலைவி அன்னி பெசன்ட் இப்போது IIT வளாகம் இருக்கும் வனத்தில் ஒரு கல்லூரியைத் தொடங்கியிருந்தார். அதில் பள்ளியும் இருந்தது. இது ஆங்கில அரசின் கல்விக்கு மாற்றானது. அதன் கல்விச்சான்றை ஏற்காதது. அப்பள்ளிக்கு G.V.சுப்பாராவ் என்னும் கல்வியாளர் முதல்வராக இருந்தார். அவர் அன்னி பெசன்ட் தொடங்கிய காசி ஹிந்து கல்லூரியில் இரு முதுநிலைப் பட்டங்கள் பெற்றவர். சங்கத்தின் உறுப்பினர். மேனோன் அந்தப் பள்ளியில் கற்கத் தொடங்கினார். இங்கும் அவரது ஈர்ப்பு படிப்பதில் இருக்கவில்லை. அவரது கலை நாட்டத்தைக் கண்டு கொண்ட முதல்வர் தனது உதவித் தொகையில் ஓவியம் கற்க அவரை 1925 இல் சாந்தி நிகேதனுக்கு அனுப்பி வைத்தார்.
மேனோன் நீர்வண்ணத்தில் ஓவியம் தீட்ட நந்தலால்போஸிடம் பயிற்சி பெற்றார். அவ்வப்போது கொல்கத்தா சென்ற அவர் அவனேந்திரநாத், ககனேந்திரநாத் டாகூர் இருவரிடமும் ஓவிய நுணுக்கங்களை அவர்கள் ஓவியம் தீட்டும்போது உடனிருந்து கவனித்து வளர்த்துக் கொண்டார். ஆனால் பொறுமை இல்லாத மேனோன், சாந்தி நிகேதனில் படிப்பை முடிக்கும் முன்னரே சென்னைக்கு மீண்டார். கொச்சின் திவான் C.G. herber அவருக்கு மாதம் 30/- ரூபாய் உதவித்தொகை கொடுத்து மதராஸ் ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பள்ளியின் முதல்வராயிருந்த ஓவியரும் சிற்பியுமான D.P.ராய் சௌத்ரியிடம் மேனோன் ஓவியம் பயின்றார்.
1950 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்து திவானாக இருந்த C.P.ராமசாமி ஐயரின் பரிந்துரையால் அவருக்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுண்கலைப் பிரிவில் ஓவிய ஆசிரியர் வேலை கிடைத்தது. 1971 இல் அந்தப் பிரிவு மூடப்படும்வரை அங்குப் பணிசெய்தார். 1974 முதல் அனைத்து பொதுத்தொடர்புகளிலிருந்தும் விலகி, தான் பிறந்த கிராமத்தில் வசிக்கத்தொடங்கினார். அவரது 77 ஆவது வயதில் அவர் இயற்கையுடன் கலந்தார்.
20 ஆம் நூற்றாண்டின் புது வரவான மேலை நவீனச் சிந்தனைப் படைப்பை அவர் முற்றிலும் புறந்தள்ளினார். அது போலி, ஏமாற்றுவேலை என்று வெளிப்படையாகச் சாடினார். இதனால் தனக்குக் கிட்டிய அவப்பெயருக்கு அவர் அஞ்சவில்லை. தமது வாழ்நாள் முழுவதும் நவீன ஓவியச் சிந்தனையுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு எந்த விருதும் கிட்டவில்லை. தான் ஒரு கவனிக்கப்படாத ஓவியர் என்பதில் அவருக்கு எவ்வித வருத்தமும் இருக்கவில்லை. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழும் கலைஞர் என்று மற்றவர்கள் கூறிய விமர்சனத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இருபதாம் நூற்றாண்டு தனக்கு எதையும் கொடுக்கவில்லை என்று கூறினார். (ஓவியர் S. ராஜம் கூட இவ்விதம்தான் சிந்தித்தார் என்பது என் அனுபவம்.)

தனது ஓவியங்களை விற்பதிலும் அவர் கடுமையான வழிமுறைகளைப் பின் பற்றினார். அவரது படைப்புகள் நுகர்பொருள் அல்ல. எனவே, அங்கு வியாபாரம் இராது. அங்கு வாங்குபவர் பேரம் பேச இடம் கிடையாது. ஓவியத்தின் விலையை ஓவியர்தான் முடிவுசெய்வார். ஓவியங்கள் விற்பதும் விற்காததும் அவருக்கு ஒரு பொருட்டல்ல. மாதவ மேனோன் ஒருபோதும் பிறரின் விருப்பத்துக்கேற்ப ஓவியம் தீட்டியதும் கிடையாது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவரது ஓவியங்கள் தொடர்ந்து விற்பனையாகின.
பெரும்பாலும் அவர் நீர்வண்ண ஓவியங்களைத்தான் தீட்டினார். அவை தாள் அல்லது பட்டுத்துணியில் உருவாயின. இயற்கையும் உயிரினங்களும் பெரும்பாலும் அவற்றின் கருப்பொருளாக இருந்தன. அவற்றில் கீழைநாட்டு ஓவிய பாதிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. வண்ணத்தைக் கழுவி ஓவியம் படைக்கும் உத்தி அவருக்கு மிகவும் பிடித்தமானது. சாந்தி நிகேதனின் ஓவியச் சிந்தனையைப் பறை சாற்றிய அவற்றில் கோடும் வண்ணமும் மிருதுவான விதத்தில் ஒளிராத வண்ணத் தொகுப்புடன் காணப்படும்.
0