Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

ஸ்யவாக்ஸ் சாவ்டா ஓவியங்கள்

குஜராத் மாநிலத்தில் உள்ள நவசாரி மாவட்டத்தில் 1914இல் ஸ்யவாக்ஸ் சாவ்டா (Shiavax Chavda) பிறந்தார். தனது 16 ஆவது வயதில் (1930) அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். 1935இல் லண்டன் நகரில் உள்ள ஸ்லேட் ஓவியப் பள்ளியில் (The Slate School) சிறப்பு ஓவியக் கல்வி பெற்றார். அதைத் தொடர்ந்து 1937இல் பாரிஸ் நகரில் உள்ள ‘Academic de la Grande Chaumiere’ என்னும் ஓவியப் பள்ளியில் தனது கூடுதல் உயர் படிப்பை முடித்தார்.

ஓவியப் படிப்பை முடித்த சாவ்டா இந்தியா முழுவதும் பயணித்து நம்மவரின் பண்பாடு, கலைச் சிந்தனை ஆகியவற்றைப் பற்றின ஆழ்ந்த அனுபவத்தை ஆலயங்களிலிருந்தும் எளிய மக்களிடமிருந்தும் பெற்றார். எளிய கிராம மக்களின் களங்கமற்ற வாழ்க்கை அவரை மிகவும் ஈர்த்தது. தமது பயணத்தில் காண்பதையெல்லாம் அவர் கோட்டோவியங்களாகப் பதிவு செய்து கொண்டார். அவரிடம் எப்போதும் ஒரு வரையும் புத்தகம் இருந்தது.

ஸ்யவாக்ஸ் சாவ்டா
ஸ்யவாக்ஸ் சாவ்டா

இந்திய நடன வகைகளில் அவருக்கு ஆழ்ந்த பற்று இருந்தது. அவற்றில் இருக்கும் ஒய்யார அசைவுகளும், திடமான தாவல்களும் அவரது ஓவியங்களில் இடம் பெறத் தொடங்கின. அவற்றில் பரத நாட்டியம் முதல் பழங்குடி மக்களின் குழு நடனம் வரையிலும் அடங்கும். அவரது மனைவி குர்ஷித் வாஜிஃப்தார் பரதநாட்டியம், கேரளத்து மோஹினி ஆட்டம் ஆகிய இருவகை நடனத்திலும் முதிர்ச்சி பெற்ற நடனமணியாகத் திகழ்ந்தார். தனது சகோதரிகளுடன் மேடைகளில் நடன நிகழ்ச்சிகளைக் கொடுத்து வந்தார். நடனத்துடன் சாவ்டாவுக்கு இருந்த பற்றானது மனைவியால் இன்னும் அதிகமானது. நிகழ்ச்சிகளின்போது அவர் அரங்கில் அமர்ந்தவாறு ஒரு டார்ச் விளக்கின் ஒளியில் நடன அசைவுகளை வரைந்து கொண்டிருப்பார்.

ஓவிய மாணவராக அவரைப் பாதித்த இரு ஓவியர்கள் 1-பேராசிரியர் Randolph Schwabe 2- Vladimir Polumin. பாரிஸில் இருந்தபோது ருஷ்ய பாலே நடனத்துக்கான அரங்க அமைப்பை Leon Bakst, Picasso இருவருடனும் சேர்ந்து அமைத்தார். இவரது சகலபாடியான கலை விமர்சகர் முல்க்ராஜ் ஆனந்த் நடத்திய மும்மாதக் கலை இதழான ‘மார்க் (Marg)’ தொடர்ந்து இவரது கலை சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு வந்தது.

ஸ்யவாக்ஸ் சாவ்டா ஓவியங்கள்

சாவ்டா தனது ஓவிய வழியை இளமைக்கால தத்ரூப உருவங்களைப் படைத்ததிலிருந்து வடிவமைத்துக் கொண்டார். உருவங்களிடம் காணப்படும் உறுதி, உடல் அசைவுகள், தோற்றம் போன்றவற்றைக் குறைந்த கோடுகளில் தமது ஓவியங்களில் வெளிப்படுத்தினார்.

சிறுவர் கதைகளுக்கும் சிறுவர் இதழ்களுக்கும் நாட்டியப் புத்தகங்களுக்கும் தொடர்ந்து ஓவியங்களை (Drawings) தீட்டிக் கொடுத்தார். இசைக் கலைஞர், நடனக் கலைஞர் என்று எல்லோரையும் தமது ஓவியத்தில் பதிவு செய்தார். ஹிந்துஸ்தானி இசையில் அவருக்குப் பெரும் நாட்டமிருந்தது. நடிகர் சுனில்தத், வைஜயந்தி மாலா நடித்து வெளிவந்த ‘ஆம்ரபாலி’ திரைப்படத்துக்கு உடை, அணிகலன்கள், மாளிகை அமைப்பு போன்றவற்றை அமைத்துக் கொடுத்தார்.

1956இல் லலித கலா அகாதமி சாவ்டா அவர்களை இந்தியாவின் மிகச் சிறந்த ஒன்பது படைப்பாளிகளில் (Eminent Artist) ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. முதுமைக் காலத்தில் மும்பையிலுள்ள டாடா திரையரங்கில் தாந்திரிக சுவர் ஓவியங்களை ஏணி வைத்த மேடையின்மீது ஏறித் தீட்டுவதற்கும் அவர் தயங்கவில்லை. அந்தத் தாந்திரிகம் சார்ந்த பல நூல்களையும் படித்து உள்வாங்கிக்கொண்ட பின்னரே சாவ்டா ஓவியங்களைத் தீட்டினார். அவை இன்றும் அங்கு உள்ளன. அவர் தமது வாழ்நாள் இறுதிவரை மும்பையிலேயே வசித்தார்.

ஸ்யவாக்ஸ் சாவ்டா ஓவியங்கள்

 

குறிப்பு: சாவ்டாவின் மனைவிக்கு அக்காளும் (ஷிரின் வாஜிஃப்தார்) தங்கையும் (ரோஷன் வாஜிஃப்தார்) உண்டு. பார்சி வகுப்பைச் சேர்ந்த இவர்கள் சிறுவயதில் அனாதை இல்லத்தில் வளர்க்கப்பட்டனர். மூத்தவளான ஷிரின் வாஜிஃப்தாரின் திருமணம் முல்க்ராஜ் ஆனந்த் உடன் நடந்தது. பார்சி சமூகத்தில் இம்மூவரும்தான் முதன் முதலாக இந்திய நடனத்தைக் கற்று மேடையேறி ‘வாஜிஃப்தார் சகோதரிகள்’ என்று பெரும் புகழ் எய்தியவர்கள். மும்பையில் ‘நிருத்ய மஞ்சரி’ என்னும் பெயரில் நடனப் பள்ளி ஒன்றைத் துவங்கி நடத்தினர்.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *