Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தின் ஒரு பகுதியான போலரம் என்னும் இடத்தில் கிருஷ்ணாஜி ஹௌலாஜி ஆரா பிறந்தார். அவரது தந்தை கார் ஓட்டிப் பிழைத்து வந்தார். தனது மூன்றாவது வயதில் ஆரா தாயை இழந்தார். தந்தை வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டார். ஆரா தனது ஏழாவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி ரயில் பிடித்து மும்பைக்குப் போய்ச் சேர்ந்தார்.

ஆரா, அங்குக் கார் துடைக்கும் சிறுவனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தில் வீட்டுவேலை செய்பவராகப் பிழைப்பைத் தொடர்ந்தார். எப்படியோ கிட்டும் நேரத்தில் தனக்கு விருப்பமான ஓவியம் தீட்டுவதில் ஈடுபட்டார். Times of India என்னும் தினத்தாளில் கலை விமர்சகராக இருந்த Rudolf Von Leydon (அவர் ஒரு கேலிச்சித்திரக்காரரும் கூட) ஆராவின் ஓவியம் தீட்டும் ஆர்வத்தைக் கண்டார். Illustrated Weekly of India இதழின் ஆசிரியர் Walter Langhammer (சிறந்த ஓவியரான இவர் ஒரு யூதர். ஹிட்லரின் பிடியிலிருந்து தப்பித்து இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். நவீன மேலைநாட்டு ஓவியச் சிந்தனையை இந்தியாவில் விதைத்தாரென்று அவருக்குச் சிறப்பும் உண்டு.) சிறுவனது திறமையைக் கண்டு மகிழ்ந்து ஆராவை ஜே.ஜே. ஓவியக்கல்லூரியில் சேர்ந்து முறையாக ஓவியம் கற்க வழிசெய்தார்.

K.H. ஆரா
K.H. ஆரா

ஆங்கில அரசின் உப்பு வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காந்திஜி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஐந்து மாதங்கள் சிறைவாசம் செய்தார் ஆரா. தனது வாழ்நாளில் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆனால் பெண்களின் தொடர்புடனேயே இருந்தார். (இதை அவரது தத்தெடுக்கப்பட்ட மகள் ரஞ்சனா பதான் ஒரு சமயம் குறிப்பிட்டுள்ளார்.)

அவரது தொடக்கக்கால ஓவியப்படைப்புகளில் நிலக்காட்சி, வரலாற்று-சமூக நிகழ்வுகள் கூடியவையாக இருந்தன. ஆனால் உடையற்ற பெண் ஓவியங்களுக்கும், still life எனப்படும் உறைந்த காட்சி ஓவியங்களுக்கும் அவர் பரவலாக அறியப்படுகிறார். தனது முதல் ஒரு நபர் காட்சியை ஆரா மும்பையில் 1942 இல் சேதன் உணவகத்தில் வைத்தார். கலை ரசிகர்களிடையே அது மிகுந்த அதிர்வை உண்டாக்கியது. PAG குழுவைத் தொடங்கியவர்களில் அவரும் ஒருவர். அவரது படைப்புகளை கலை விமர்சகர்கள் இருவிதமாக விமர்சனம் செய்தனர். பெண் ஓவியங்களில் உடற்கூறியல் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது ஒன்று. still life ஓவியங்களில் உள்ள கவர்ச்சி பெண் ஓவியங்களில் காணாமல் போய்விடுகிறது என்பது மற்றது. பிரான்ஸ் நாட்டு ஓவியர்கள் குறிப்பாக பால் சிசான் (Paul Cezanne) ஆராவை பெரிதும் பாதித்தார்.

K.H. ஆரா ஓவியங்கள்

தனது வாழ்நாளின் பிற்பகுதியில் ஆரா ஓவியக்காட்சிகளை வைப்பதைக் குறைத்துக் கொண்டார். ஆனால், நாளின் பெரும்பகுதியை ஓவியக் கூடத்திலேயே கழித்தார். தனது வருவாயில் பெரும்பகுதியை நலிந்த ஓவியர்களுக்குக் கொடுத்து உதவினார். தனது இறுதிக்காலத்தில் அவர் ஏழ்மையில் ஆதரவின்றி யாராலும் கவனிக்கப்படாத கலைஞராக இறந்து போனார். அவரது 71 ஆவது வயதில் மும்பையில் அவரது ஆவி பிரிந்தது. அவரது நண்பர்களான சூசா, ஹுசைன் போன்றவர்கள் பெற்ற புகழும் கவனிப்பும் பணமும் ஆராவுக்குக் கிட்டவில்லை.

K.H. ஆரா ஓவியங்கள்

கிட்டிய விருதுகள்

1944 – மும்பை ஆளுனர் விருது.

1952 – மும்பை ஆர்ட் சொசைட்டி ஓவியக்காட்சியில் தங்கப்பதக்கம்.

1984 – கலா ரத்னா fellow விருது – லலித கலா அகாதமி-டெல்லி.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *