Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

முன்னாள் ஆந்திரப்பிரதேசம் என்றும் இப்போது இரண்டு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள அன்னரம் கிராமத்தில் 1915இல் ராம் ரெட்டி – ரமணம்மா தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பாகாலா திருமால் ரெட்டி இவ்வுலகில் பிறந்தார் தந்தை விவசாயம் செய்துவந்தார். P.T. ரெட்டி. விவசாயத்தில் ஈடுபடவிரும்பாமல் பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக ஓவியம் கற்க முடிவு செய்தார். ஓவியம் கற்றலை மும்பை ஜே.ஜே. ஓவியக் கல்லூரியில் 1939இல் தனது 24ஆவது வயதில் கல்விக்கான உதவித்தொகை பெற்று முழுமை செய்தார். சுவர் ஓவியம் கற்கவும் அவருக்கு உதவித்தொகை கிட்டியது. ஓவியர் அமிர்தா ஷெர்கில் இவரைப் பெரிதும் பாதித்தார்.

P.T. ரெட்டி இந்தியாவுக்கு மேலைநாட்டு நவீனப் படைப்புச் சிந்தனையை அறிமுகம் செய்தவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். மும்பையில் சிறப்பாகப் பேசப்படும் PAG ஓவியர் குழு தொடங்கப்படுவதற்கு முன்பே 1941 இல் மும்பையில் அவர் தன்னுடன் இன்னும் நால்வர் கொண்ட ‘மும்பை சமகால இந்திய ஓவியர்கள்’ (Mumbai Contemporary India Artists) என்னும் ஓவியர் குழுவைத் தொடங்கி விட்டிருந்தார்.

P.T. ரெட்டி
P.T. ரெட்டி

தொடக்கமாகத் தத்ரூப ஓவியங்களை 1930களின் இறுதியில் இந்திய மரபுவழி, மேலை நாட்டுப் பிந்தைய இம்ப்ரஷனிச வழி இரண்டினாலும் ஈர்க்கப்பட்டு அவை கலந்தவிதமாக ஓவியங்களைப் படைக்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக அவரது படைப்புகளில் மற்ற ‘இஸங்களும்’ இடம்பெறத்தொடங்கின. சிற்பம் உலோகச் செதுக்கு முறைப் படைப்புகளையும் ஓவியங்களுடன் இணைத்தார்.

1940களில் இந்திய ஓவியர் என்னும் அடையாளத்தை இழந்துவிடாமல் இருக்கத் தனது படைப்புகளுக்கு இந்திய பண்பாட்டுச் சிந்தனை கூடிய கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவை நவீனப் பாணியிலேயே உருவாயின. அவரது படைப்புகள் மேலும் அரூபத் தோற்றம் பெறத்தொடங்கின. பௌத்த, இந்து மதங்களின் தாந்திரிகச் சிந்தனைகொண்ட வடிவங்களை அவற்றில் இணைத்து அவை பற்றின புதிய சிந்தனையை வெளிப்படுத்தினார். ஆனால் மதச் சிந்தனை அகற்றப்பட்டே படைப்புகள் உருவாகின. பன்முகக் கலைஞரான அவர் திரைப்படத்துக்கும் கலை இயக்குநராக இயங்கினார்.

‘நிலவில் இறங்குதல் (Moon Landing), காட்சிகள், நேரு சிந்தனை (Nehru Series) தொடர் படைப்புகள் வறுமையைப் பேசும் ஓவியங்கள் போன்றவை இந்தியா விடுதலை அடைந்ததை ஒட்டி அவரால் படைக்கப்பட்டவை. சமகால வாழ்க்கையும், அப்போதைய அரசியலையும் அவர் படைப்புகள் வெளிப்படையாகப் பேசின.

1960-70களுக்கு இடையில் தாந்திரிக வடிவங்களைப் பிணைத்து தங்களுக்கான தனித் தன்மையுடன் படைத்த பல ஓவியர்களுக்கு அவர் முன்னோடியாக விளங்கினார். அவர்களில், G.R. சந்தோஷ், S.H. ரஜா, மஹாவீர் மதானி, பிரெண் தே, ஹெச். ஹரிதாசன் போன்றோர் சிலர்.

யசோதா என்னும் பெண்ணை அவர் 1947இல் மணந்துகொண்டார். மனைவியின் கல்வியைத் தொடரச்செய்து M.A. Phd பட்டம் பெற உறுதுணையாகச் செயல்பட்டார். யசோதா ரெட்டி பரவலாக அறியப்பட்ட தெலுங்கு மொழி எழுத்தாளர். 22க்கும் மேற்பட்ட புதினங்களும் கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. ஹைதராபாத்தில் ‘சுதர்மா கலைக்கூடம்’ என்னும் பெயரில் அவர் தொடங்கிய கலைக்கூடத்தில் உள்ள தந்தையின் படைப்புகளை அவரது மகள் சுதாமா ரெட்டி (பேராசிரியர்) பாதுகாத்து வருகிறார்.

விருதுகள்-பெருமைகள்

– 1980- டெல்லி லலித கலா அகாதெமி – டெல்லி கலா ரத்னா பட்டம்.
– ஆஸ்தான சித்ரகார் பட்டம் – ஆந்திரப் பிரதேச அரசு
– Member of Genaral Board of ICCR (Indian Council for Cultural Relations)

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *