Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #21 – கே. ஸ்ரீநிவாசுலு

இந்திய ஓவியர்கள் #21 – கே. ஸ்ரீநிவாசுலு

ஓவியர் ஸ்ரீநிவாசுலு 1923இல் சென்னையில் பிறந்தபோதும் அவரது இளமைக்காலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்னும் சிறு நகரத்தில்தான் கழிந்தது. அவரது தந்தை சிறு பொம்மைகள் செய்வதிலும் நாடகத் திரைகள் தீட்டுவதிலும் வல்லவர். அதுதான் குடும்ப வருமான வழியும்கூட. அந்தச் சூழலில் வளர்ந்த ஸ்ரீநிவாசுலுவுக்கு இயல்பிலேயே அதில் ஈர்ப்பும் நாட்டமும் உண்டானதில் வியப்பேதுமில்லை. பதின்ம வயதிலேயே பிறருடைய உதவியின்றித் திரைகளை உருவாக்கும் வல்லமை அவருக்கு உண்டாயிற்று. பதினைந்து வயதானபோது சென்னைக்கு அனுப்பப்பட்டார்.

பொதுக்கல்வியில் நாட்டமில்லாத அவரை அவரது உறவினர் மதராஸ் ஓவியப் பள்ளியில் (1937இல்) சேர்த்துவிட்டார். அங்கு தேவி பிரசாத் ராய் சௌத்ரியிடம் ஓவியம் பயிலத் தொடங்கினார். கே.சி.எஸ். பணிக்கர் அவருக்கு ஓர் ஆண்டு முன்னவர். கிராமச் சூழலுக்கு முற்றிலும் எதிராக இருந்த அந்தப் பள்ளி, தொடக்கத்தில் புரிந்து கொள்ள இயலாததாக அச்சுறுத்தினாலும் அதை எதிர்கொண்டு 1940இல் தனது 17ஆவது வயதில் கற்றலை நிறைவுசெய்து ஓவியப் பட்டயம் பெற்றார். ஆங்கிலேய ஓவியர் Brangwyn நீர்வண்ண ஓவிய வழியில் ஈர்க்கப்பட்ட ஸ்ரீநிவாசுலு அம்மாதிரியான ஓவியங்களைப் படைக்கத் தொடங்கினார்.

கே. ஸ்ரீநிவாசுலு
கே. ஸ்ரீநிவாசுலு

வேலைக்காக அலைந்தபோது தற்செயலாக அடையாறில் உள்ள பிரம்மஞான சங்க வளாகத்தைக் கண்ட அவர் அந்த இயற்கையின் வனப்பில் மயங்கி பலமுறை அங்குச் சென்றார். அங்குள்ள காட்சிகளை ஓவியங்களாகவும் தீட்டினார். ஒருநாள் அவ்வாறு ஓவியம் தீட்டும் அவரை ருக்மிணிதேவி அருண்டேல் கண்டார். அவரது படைப்புத் திறமையைக் கண்டு பெசன்ட் பள்ளியில் அவரை ஓவிய ஆசிரியராகப் பணி நியமனம் செய்து விட்டார். அப்போது அவருக்கு ஒரு புதிய உலகத்துக்கான வாயில் திறந்தது.

1948 – 1951களுக்கிடையில் அவருக்கு ஆந்திராவில் இந்துப்பூரில் உள்ள லேபாக்ஷி ஆலயத்து சுவரோவியங்களைத் தீட்டும் வாய்ப்புக் கிட்டியது.. ஏறத்தாழ 500 ஓவியங்களை அவர் தீட்டினார். அது அவரது கலைத் திறனை வளர்க்கும் உரமாக அமைந்தது; ஒரு புதிய பாணிக்கும் வித்திட்டது.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் (1949 – 52) மதராஸ் அருங்கலை காட்சியகம் இலங்கையில் சிகிரியா மலைக்கோட்டையில் உள்ள சுவர் ஓவியங்களைத் தீட்டும் பணியை அவருக்குக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் பெரிய கோயில் சுவரோவியங்களைத் தீட்டவும் அழைத்தது. அவ்வோவியங்கள் அருங்காட்சியகத்தின் சுவர்களை அழகுபடுத்தியவாறு உள்ளன.

வங்காள ஓவியர் ஜாமினி ராயின் ஓவிய வழி ஸ்ரீநிவாசுலுவுக்குள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அவரது படைப்புகளிலும் அது படிந்தது. இருவருக்குமே படைப்புக்கான ஊற்றுக்கண் பழங்குடிக் கலைப் பாணிதான். ஜாமினி ராய்க்கு சந்தாலா பழங்குடியினர் என்றால் ஸ்ரீநிவாசுலுவுக்கு ராயலசீமாவின் சுகாலி இனத்தவர். இருவருமே கிராமிய நாடகத்தால் தாக்கம் பெற்றவர். ஸ்ரீநிவாசுலு கொண்டபள்ளிப் பொம்மைகள் தோற்பாவை ஓவியக் கலை இரண்டையும் உள்வாங்கியவர்

1955இல் சிறாரிடம் ஓவியம் படைக்கும் ஆர்வத்தை வெளிக்கொணர்வது தொடர்பான இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா இரு நாடுகளிலும் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஸ்ரீநிவாசுலு இந்திய அரசால் அனுப்பப்பட்டார்.

1960இல் மெழுகு வண்ணம் (vax crayon) நீர்வண்ணம் இரண்டையும் இணைத்து ஸ்ரீநிவாசுலு படைத்த ஓவியங்களில் முன்னர் இருந்த படைப்பு வழி அகன்று போனது. முற்றிலும் ஒரு புதிய வழி தோன்றியது. இப்போது உருவங்களில் கோடுகள் அடர்த்தி கூடியதும் தடிமனானதுமாக மாறின. விழிகள் செவ்வகமாக உருமாறின. உருவங்களில் நளினம் விலகி முரட்டுத்தனம் இடம் பெற்றன. ஆனால் ஆந்திராவின் பழங்குடி கலைப் பாணி மட்டும் மாறவில்லை. அன்றாடக் காட்சிகள்தான் தொடர்ந்து ஓவியமாயின. திருப்பதி மரப்பாச்சிப் பொம்மையின் அமைப்புடனும் கொண்டபள்ளிப் பொம்மைகளின் வண்ணத் தேர்வுடனும் அழுத்தமான கிராமிய ஓவியராக அவர் வளர்ந்தார். எண்ணெய் வண்ணத்தில் அவர் ஒருபோதும் ஓவியங்களைப் படைத்ததில்லை.

1963இல் பெசன்ட் பள்ளி ஓவியர் பணிப் பொறுப்பிலிருந்து விலகி Design Demonstration Centre, Govt. of Madrasஇல் பொறுப்பாளராகப் பணிக்கு அமர்ந்தார். 1975 இல் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்தார் .(இந்த விவரம் அதாவது அவர் அங்குப் பணிபுரிந்த காலம் அதன் பின் அவருக்கு மாற்றல் கிட்டியதா அல்லது அங்கேயே பணி ஓய்வு பெற்றாரா என்பது தெரியவில்லை.) சென்னையிலேயே வாழ்ந்து அங்கேயே காலமான அவரை அந்த நகரம் ஒருபோதும் பாதிக்கவில்லை

1994ஆம் ஆண்டு ஸ்ரீநிவாசுலு அடையாறில் (சென்னையில்) தமது இல்லத்தில் காலமானார். தமது கடைசி வருடங்களில் குடிப் பழக்கத்துக்கு அடிமையானார். மரணம் திடீரென்று வந்தது.

1985இல் கலாரத்னா விருது டெல்லி லலித் கலா அகாதெமியால் வழங்கப்பட்டது.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *