Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

ராம் குமார் ஓவியம்

ஹிமாசல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் திரு ராம் குமார் வெர்மா,  23-9-1924ல் ஒரு நடுத்தர வருமானமுள்ள குடும்பத்தில் பிறந்தார். இவருடன் சேர்த்து இவரது சகோதரச் சகோதரிகளின் எண்ணிக்கை எட்டு. இவரது தந்தை பாட்டியாலா சமஸ்தானத்தில் ஊழியராகப் பணிசெய்தார்.

ராம் குமார் முதுகலைப் பட்டம் பெற (பொருளாதாரம்) டெல்லியில் உள்ள St.Stephen’s College இல் படித்துக் கொண்டிருந்தார். 1945 இல் ஒரு நாள் தனது கல்லூரித் தோழர்களுடன் கனாட் ப்ளேஸ் (Connaught Place) கடைத்தெருப் பகுதியில் இலக்கின்றித் திரிந்துகொண்டிருந்தபோது தற்செயலாக ஓர் ஓவியக் காட்சியைக் காண நேர்ந்தது. அக்காட்சி மீண்டும் மீண்டும் அவரை இழுத்தது. அதுபற்றி, ‘அதுவரை இம்மாதிரியான ஓவியங்களைக் கண்டிராத எனக்கு இந்த நிகழ்வு ஒரு புதிய அகக் கதவைத் திறந்து வைத்தது.’ என்று பின்னர் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிடுகிறார்.

ராம் குமார்
ராம் குமார்

பட்டம் பெற்றபின் கிட்டிய வங்கி வேலையை 1948 இல் உதறிவிட்டு சாந்திநிகேதனில் பயின்ற ஓவியர் சைலோஸ் முகர்ஜியை (Sailoz Mukherji) முதன்மை ஆசிரியராகக் கொண்டு ஓவியரும் நாடக நடிகருமான சாரதா உகில் டெல்லியில் நடத்திவந்த ஓவியப் பள்ளியில் ஓவியம் பயிலத் தொடங்கினார். அங்கு Still Life வகை ஓவியத்தைத் தீட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அப்போது அவருக்கு ஓவியர் ரஸாவுடன் (A.H.Raza)  நட்பு மலர்ந்தது. அவரைப் போலத் தானும் பாரிஸ் நகரம் சென்று விரிவான ஓவியம் கற்க விரும்பிய அவர் தனது தந்தையிடம் ஒருவழிப் பயணச் செலவுக்கான தொகையை மன்றாடிப் பெற்று பாரிஸ் நகரம் சென்றார். அங்கு ஆந்த்ரே லோதே (ஆந்தரே லோதே பிரான்ஸ் நாட்டில் பிறந்த க்யூபிஸ்ட் ஓவியர் ), கலை எழுத்தாளர் பெஃர்னாண்ட் லெகர் இருவரது வழிநடத்தலில் மேலைப் பாணி ஓவியம் பயின்றார். ராம் குமாருக்கு M.F.ஹுசைனுடனும் நட்புக் கிளர்ந்தது. அது பின்னாளில் இறுகி வளர்ந்தது.

நவீன பாணி அணுகுமுறையில் ஓவியங்களை அவர் அப்போதுதான் படைக்கத் தொடங்கினார். அதிலிருந்து மெல்ல மெல்ல அவர் அரூப ஓவியப் படைப்பிற்கு நகர்ந்தார். ஆனால் ஹுசைனுடன் வாரணாசி (காசி) சென்றது அவருள் ஒரு பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்தது. உலகியல் வாழ்க்கையில் தோன்றுவதும் உயிர்த்திருப்பதும் இறப்பதும் அங்கு அருகருகே நிகழ்ந்ததைக் கண்ட அவர் புதிய சிந்தனைப் பார்வையுடன் 1966 இல் ‘காசி’ ஓவியங்களைத் தீட்டினார். இது அவரது உருவம் சார்ந்த – உருவமற்ற படைப்புகளுக்கு ஓர் இடைவெளிக் கோடாகப் பார்க்கப் படுகிறது. கட்டட அமைப்பையும் நிலக்காட்சிகளையும் பின்னி அவர் படைத்த ஓவியங்களில் இந்தியப் பண்பாடும் உளவியலும் புதிய கோணத்தில் வெளிப்பட்டன.

ராம் குமார் ஓவியம்

தனது நண்பர்களான ஓவியர் ரஸா (A.H.Raza) M.F.ஹுசைன் இருவரின் தூண்டுதலால் அவர் Prograssivi Artist’s Group குழுவில் உறுப்பினராகச் சேர்ந்தார். குழுவின் மூலம் தனது தனிமனிதர் காட்சியைப் பார்வைப்படுத்த முடிந்தது. ஆனால் ஹுசைனைப்போல அவர் திரைப்பட உலகுடன் தொடர்பு கொள்ளவில்லை. ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) போராட்டத்தில் கலந்துகொண்டதால் ஜே.ஜே. ஓவியக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸூஸா (F.N.Souza) போலவோ மத ஈடுபாடுகொண்ட ரஸா போலவோ அவர் இருக்கவில்லை. அவரது சிந்தனை பொதுத்தன்மை என்பது பாரிஸ் நகரத்து மேலைநாட்டுப் படைப்பாளிகளுடனேயே பொருந்தி இருந்தது. உருவத்தை ஓவியத்திலிருந்து அகற்றி அருவத்தை அங்கு இடம்பெறச்செய்த முதல் இந்திய ஓவியராக அவரைக் கலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அவரது அரூபம் என்பது பிறர் அறியாத மாயவெளி அல்ல. வானுக்கும் நதிக்கும் பாறைக்கும் உள்ள தொடர்பை ஒளி பரவி வெளிக்கொணர்வதைப் போன்றது. பொதுவுடமைச் சிந்தனை அவரைப் பெரிதும் ஈர்த்தது. அவரது தொடக்கக்காலப் படைப்புகளில் இதைக்காணலாம்.

ராம் குமார் தனது வாழ்நாள் முழுவதும் டெல்லி நகரிலேயே வசித்தார். 14-4-2018ல் காலமானார்.

தனது மறைவுக்குப் பின்னரும் ஒருவர், தொடர்ந்து வாழ்பவரால் நினைக்கப் படுவது என்பது அவருக்கு உகந்தாக இருக்கவில்லை. ‘ஒரு மனிதனை எவ்வளவு காலம் மறக்காது இருக்க முடியும்? 100, 200 அல்லது 500 ஆண்டுகளுக்குப் பின்னர்? எனக்கு இது ஏற்புடையதாக இல்லை. என் படைப்புகளைத் தவிர நான் வாழ்ந்த தடயமே அழிந்துவிட விரும்புகிறேன்’ என்று ஒரு பேட்டியில் அவர் குறிப்பிடுகிறார்.

அவர் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஹிந்தி மொழியில் இரண்டு புதினங்கள், ஒரு பயண நூல், எட்டுச் சிறுகதை – கட்டுரைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. அவரது தம்பி நிர்மல் குமார் வெர்மா, ஹிந்தி மொழியில் புகழ்பெற்ற படைப்பாளி.

பெற்ற விருதுகள்

1972 – பிரேம் சந்த் சம்மான் (இது மஹாராஷ்டிர அரசின் ஹிந்தி சாஹித்திய அகாதமி சிறந்த எழுத்தாளர் கவிதை – உரைநடை ஒருவருக்கு அளிக்கும் விருது).

1985-86 காளிதாஸ் சம்மான் (மத்திய பிரதேச அரசால் 1980 முதல் வழங்கப்படும் இந்த விருது செவ்வியல் கலைகளான நடனம், இசை, நாடகம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் உச்சம் தொட்டவர் என்று தேர்வு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இசை, நடனம் ஓர் ஆண்டிலும் நாடகம் ஓவியம் ஓர் ஆண்டிலும் என்னும் முறையை மாற்றி 1986-87 லிருந்து நான்கிற்கும் ஒவ்வொரு ஆண்டிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.)

1972 – பத்மஸ்ரீ விருது

2011 – லலித் கலா அகாதமி-டெல்லி கலா ரத்னா விருது (Fellow)

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *