ரோமன் கத்தோலிக்க கிருஸ்துவத் தம்பதியருக்கு மகனாக 1924இல் பிரான்ஸிஸ் நியூடோன் ஸூஸா கோவாவில் உள்ள சால்காவ் (Saligao) பகுதியில் பிறந்தார். ஆங்கில ஆசிரியரான அவரது தந்தை, ஸூஸா மூன்றுமாதக் குழந்தையாக இருந்த போதே தனது 24ஆவது வயதில் காலமானார். தாயார் உடை தயாரிப்பவராகத் தொழில் தொடங்கினார். 1925இல் இருந்து இவர்கள் மும்பை நகரில் வசிக்கத் தொடங்கினர். இளம் வயதிலேயே ஸூஸாவை வைசூரி நோய் தாக்கியதால் உண்டான தழும்புகள் அவரது முகத் தோற்றத்தையே மாற்றிவிட்டன.
1937இல் அவர் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள புனித ஸேவியர் கல்லூரியின் பள்ளியில் தொடங்கினார். பள்ளிக் கழிப்பறைச் சுவரில் அவர் பாலியல் காட்சிகளை வரைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டார். அவரது விளக்கம் நிர்வாகப் பாதிரிக் குழுவுக்குத் திருப்தி அளிக்கவில்லை எனவே அவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். அத்துடன் பள்ளிப்படிப்பு நின்றுபோனது. 1940 இல் ஸூஸா தனது 16 ஆவது வயதில் ஜே.ஜே. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். 1945இல் காந்தியால் தொடங்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு (Quit India movement)’ போராட்டத்தில் இணைய ஸூஸா மாணவர்களைத் தூண்டியதால் அவர் ஓவியக் கல்லூரியிலிருந்து விலக்கப் பட்டார். அத்துடன் அவரது ஓவியப் படிப்பும் முடிவுக்கு வந்தது. ஒரு குறுகிய காலம் அவரது நாட்டம் பொதுவுடைமை இயக்கத்திலும் சென்றது.

1948இல் Prograssive Artist’s Group குழு தொடங்கப்பட்டது. 1949இல் அது ஒரு குழுக் காட்சியை மும்பையில் நிகழ்த்தியது. பொதுவில் காணத்தகாதவை என்று அவரது இரண்டு ஓவியங்கள் காட்சியிலிருந்து காவல்துறையால் நீக்கப்பட்டன. காவல்துறை அவரது இல்லத்திலும் தேடுதல் வேட்டை நடத்தியது. 1949 இல் போர்சுகீஸ் கடவுச் சீட்டில் அவர் லண்டன் நகரில் வசிக்கப் புறப்பட்டுப் போனார். தொடக்கத்தில் ஓர் ஓவியராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்வது கடினமாக இருந்ததால் இதழியல் துறையில் பணிசெய்தார்.
1950இல் இந்திய உயர் ஸ்தானிகராக (high commissioner) இருந்த கிருஷ்ணமேனோன் அவரை லண்டனில் இருந்த இந்திய மாணவர் பணியகத்துக் கட்டடத்தில் சுவர் ஓவியம் தீட்ட ஏற்பாடு செய்தார். 1959 இல் அக்கட்டடம் இடிக்கப்பட்டது; அத்துடன் ஓவியங்களும் அழிந்துபோயின
1954இல் Peter Watson அவரது மூன்று ஓவியங்களை ஒரு குழுக்காட்சியில் சேர்த்துக் கொண்டார். அவை பலராலும் பாராட்டப்பட்டன. மூன்று ஓவியங்களும் விற்றும் போயின. 1955இல் Stephen Spencer நடத்திவந்த Encounter (the major anti-communist intellectual weapon during the Cold War. The monthly Encounter magazine that carried pieces from practically every writer and scholar during that period who was not either a communist or an active fellow traveler) என்னும் பத்திரிகையில் அவர் எழுதிய Nirvana of a Maggot என்னும் கட்டுரை வெளி வந்தது. அவரது இளவயது, பின்னாளோவியர் பற்றின தன்விளக்கக் கட்டுரை பலரது கவனத்தையும் கவர்ந்தது. Gallery one காட்சிக்கூடத்தின் சொந்தக்காரர் Victor Musgrave யிடம் ஸூஸாவை Stephen Spencer அறிமுகம் செய்துவைத்தார். 1955இல் அங்குக் காட்சிப்படுத்தப்பட்ட அவரது ஒரு நபர் காட்சியில் அனைத்து ஓவியங்களும் விற்றுத் தீர்ந்தன. இவ்விரண்டும் அவரது புகழ் கூடிய ஓவிய வாழ்க்கைக்குத் தொடக்கமாக அமைந்தன. அவருக்குப் புகழும் பணமும் குவியத் தொடங்கின. 1959 மே மாதம் அவரது தன்வரலாறு நூல் ‘Words and Lines’ லண்டனில் வெளியிடப்பட்டது. 1960 முதல் அவரை குடிப்பழக்கம் ஆட்கொண்டது.
கலை விமர்சகர் Berger John அவரது படைப்புகளில் பல உத்திகளின் கூட்டுக்கலவை இருப்பதாகவும், குறிப்பாக அவர் expressionism பாணியைப் பின்பற்றுவதாகவும் அதே நேரத்தில் இரண்டாம் உலகப்போருக்குப்பின் தொடங்கப்பட்ட Art Brut (மிருகத்தனமான கலை) சிந்தனையும் அவற்றில் கலந்து உள்ளது என்றும் குறிப்பிட்டார். யசோதரா டால்மியா (Yashodhara Dalniya, ஓவியர் அமிர்தா ஷெர் கில் வாழ்க்கை நூலுக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர்) அவரது படைப்புகளில் பாலியல் உணர்வுகள் தூக்கலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சமுதாய உயர்வை மட்டும் ஓவியமாக்கக் கூடாது, அதன் இருண்ட பகுதியையும் உடலுறவின் தடையற்ற வெளிப்பாட்டையும்கூட ஓவியமாக்க வேண்டும்; அதில் தடை இருக்கக்கூடாது என்று தன் மன அடித்தளத்திலிருந்து கருதினார் ஸூஸா. கஜுராஹோ போன்ற காமத்தைப் பேசும் ஓர் ஆலயம் இருக்கும் நாட்டில் பால் உணர்வை அருவருப்பானதாகப் பார்ப்பது மிகவும் தவறு என்னும் சிந்தனைதான் இருந்தது. அதை அவர் வெளிப்படையாகக் கூறவும் படைக்கவும் செய்தார். அவருக்கு எந்த விருதும் – இந்தியாவில் கிட்டவில்லை என்பதும் ஒரு முக்கியச்செய்தி.
1967 முதல் அவர் நியூயார்க் நகரில் வசிக்கத்தொடங்கினார். தான் காலமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் மும்பை திரும்பினார். 2002இல் அவர் உயிர் பிரிந்தது.