கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள குத்துப்பரம்பா என்னும் ஊரில் 1924இல் பிறந்த கே.ஜி. சுப்ரமண்யன் என்கிற குத்துப்பரம்பா கணபதி சுப்ரமண்யன் தனது கல்லூரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் வர்த்தகப் பாடத்தை முதன்மையாகக் கொண்டு தொடங்கினார். காந்திஜியின் விடுதலைப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டார். கல்லூரியிலிருந்து விலக்கப்பட்ட அவரை ஆங்கில அரசு மற்ற அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கவும் தடை விதித்தது.
1944இல் சாந்திநிகேதன் நுண்கலைப்பிரிவான கலாபவனில் ஓவியம் கற்கச் சென்றதுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. ஓவியப் பேராசான்கள் நந்தலால்போஸ், பினோத் பிஹாரி முகர்ஜி ராம் கிங்கர் பைஜ் போன்றவர்களின் பார்வையில் தனது ஓவியக் கல்வியை 1948இல் நிறைவு செய்தார்.

1951இல் மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் (பரோடா) நுண்கலைப் பிரிவில் ஓவிய விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். 1956இல் குறுகிய மேற்படிப்புக்காக உதவித்தொகை பெற்று லண்டனில் உள்ள ஸ்லேட் நுண்கலைப்பள்ளியில் பயிற்சிபெற்று மீண்டார். 1966இல் Rockfeller Fellow விருதின் மூலம் நியூயார்க் நகரத்திலும் தனது கற்றல் திறத்தை மேம்படுத்திக் கொண்டார். அதுவும் குறுகியகாலப் படிப்புதான். அவருக்குப் பேராசிரியர் பதவி உயர்வு பரோடா ஓவியப்பள்ளியில் கிட்டியது.
1980இல், தான் ஓவியம் கற்ற சாந்திநிகேதன் விஸ்வபாரதி கலாபவனத்திலேயே சுப்ரமண்யன் ஓவியப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 1989இல் அவரது பணிக்கால முடிவில் நிறுவனம் அவருக்கு ஒரு சிறப்பான விழா எடுத்துப் பெருமை செய்தது. 2004இல் பரோடா சென்ற அவர் 29-6-2016இல் தனது உயிர் பிரியும் வரை வதோதராவில் வசித்தார்.
தனது படைப்புக்கான நூலிழையாக அவர் கேரளச் சுவரோவியம், காளிகாட் ஓவியப் பாணி, பட்சித்ர (ஒடிஷா) பாணி, ஆப்பிரிக்க முகச் சிற்பங்கள், மேலைநாட்டுக் க்யூபிஸம் அனைத்தையும் இணைத்து ஒரு தனித்த விதமான ஓவியங்களைப் படைத்தார். அவற்றில் ‘மணி’ என்று தமிழில் கையொப்பமிட்டார். அவர் சாந்திநிகேதனில் அனைவராலும் ‘மணி தா’ என்று அன்புடன் குறிப்பிடப்பட்டார். மானிட குணங்களில் அன்பும் வெறுப்பும் சமமாகச் செயற்படுவதைத் தமது படைப்புக் கருப்பொருளாக அமைத்துக்கொண்டார். உருவங்களைச் சிதைத்த போதும் உடற்கூறியல் இலக்கணத்தைப் பிழையின்றிப் பின்பற்றினார்.
ஓவியங்களுடன் கூடிய சிறுவர்க்கான பல நூல்களை அவர் எழுதி வெளியிடச் செய்தார். மாபெரும் சுவரோவியங்களையும் பல இடங்களில் தீட்டினார். சாந்தி நிகேதன் கலாபவன வளாகத்தில் கருப்பு வெள்ளை மட்டுமே கொண்ட சுவர் ஓவியம் 1990, 1993 என்று இரு காலகட்டங்களில் உருவாகி நிறைவுற்றது. 2009இல் அதன் இரண்டாம் படைப்பு தீட்டப்பட்டது. அவர் எழுதிய நூல்கள், சுவர் ஓவியங்கள் இவற்றின் பட்டியல் நீளமானது. புகழும் பதவியும் விருதும் அவருக்கு வந்து குவிந்தன.
அவர் பெற்ற விருதுகளில் சில
1965 – லலித கலா அகாதெமி டெல்லி அனைத்திந்திய கலைக்காட்சியில் ஓவியத்துக்கான விருது.
1968 – First International Triennale-Delhi தங்கப்பதக்கம்.
1975 – பத்மஸ்ரீ விருது.
1981 – காளிதாஸ் சம்மான் விருது.
1985 – லலித கலா அகாதெமி டெல்லி கலா ரத்ன (Fellow) விருது.
1992 – விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்
1993 – கேரள லலித கலா அகாதெமி fellow விருது
2004 – லலித கலா அகாதெமி, டெல்லி தனது பொன்விழா நிறைவாண்டில் அளித்த லலித் கலா ரத்னா விருது.
2005 – நுண்கலை அகாதெமி, கொல்கத்தா அளித்த வாழ்நாள் சாதனையாளருக்கான விருது.
2006 – பத்மபூஷண் விருது.
2012 – பத்மவிபூஷண் விருது.