Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #26 – கிரிஷன் கன்னா

இந்திய ஓவியர்கள் #26 – கிரிஷன் கன்னா

கிரிஷன் கன்னா ஓவியஙகள்

இப்போது பாகிஸ்தானில் உள்ள ஃபைஸ்லாபாத் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட லியால்புர் நகரில் கிரிஷன் கன்னா 1925இல் பிறந்தார். 1938-1942களில் அவர் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் செர்விஸ் கல்லூரியில் வின்ட்சர் (Windsor) நகரில் உள்ள தனியார் பள்ளியில் தொடக்கக் கல்வி பெற்றார். 1942இல் லாஹூர் அரசினர் கல்லூரியில் சேர்ந்து 1946இல் உயர் கல்வியை முழுமை செய்தார். ஓவியம் தீட்டுவதில் இருந்த ஆசையால் லாஹூரில் ஷேக் அஹமத் என்னும் ஓவியரிடம் தொடக்கமாக ஓவியம் பயின்றார். மக்களின் அன்றாட வாழ்க்கையை ஓவியங்களில் பதிவு செய்யத் தொடங்கினார்.

கிரிஷன் கன்னா
கிரிஷன் கன்னா

இந்தியா பாகிஸ்தான் நாடுகள் உருவானபின் 1948இல் அவரது தந்தை குடும்பத்துடன் இந்தியக் குடிமகனாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார். கல்வியை முடித்த கன்னா க்ரின்ட்லே வங்கியின் (Grindleys Bank) மும்பைக் கிளையில் பணிபுரியத் தொடங்கினார். மும்பையில் ஓவியர்களால் அப்போது தொடங்கப்பட்ட ‘Progressive Artist Group’ ஓவியக் குழுவில் உறுப்பினராகப் பதிந்துகொண்டார். வங்கிப் பணியின்போது 1953இல் பணி மாற்றம் பெற்ற அவர் சென்னையில் வாசம் செய்தார். கர்நாடக இசையைப் பெரிதும் விரும்பிக் கேட்டார். 1961ஆம் ஆண்டில் 14 ஆண்டுகள் பணிபுரிந்த வங்கி வேலையை விட்டுவிலகி முழுநேர ஓவியனாக வாழத் தொடங்கினார்.

ராக் ஃபெல்லர் அறக்கட்டளை மூலம் கிட்டிய உதவித்தொகையில் 1962இல் அவர் ஜப்பான் நாடு சென்று கீழைவழி ஓவியம் பயின்றார். ஸுமி-இ (Sumi-e – ‘ஸுமி’ என்றால் கருப்பு; ‘இ’ என்றால் ஓவியம் என்பது ஜப்பான் மொழிப் பொருள்) என்னும் ஜப்பானின் கருப்பு மசி கொண்டு ஓவியம் படைக்கும் முறை, ஜப்பான் மசியில் எழுதும் முறை இரண்டும் அவர் விரும்பிக் கற்றவை. புதுடெல்லி திரும்பிய அவர் அங்கேயே தொடர்ந்து வசிக்கத் தொடங்கினார்.

1970களில் கிழக்குப் பாகிஸ்தானில் வெடித்த புரட்சி பங்களாதேஷ் என்னும் தனி நாடு தோன்றக் காரணமாயிற்று அந்தப் பாதிப்பில் அவர் அது சார்ந்த தொடர் ஓவியங்களைப் படைத்தார். ‘The Game’ என்னும் தலைப்பில் அவற்றைக் காட்சிப்படுத்தினார். 80களில் அவர் படைத்த பேண்ட் இசைக்கும் குழுவினர் (Bandwallas’) ஓவியங்கள் டெல்லியில் அவர் சந்தித்த இசைக்குழுவினர் உண்டாக்கிய தாக்கம்தான். அவை அவருக்குப் பெரும் புகழைக் கொணர்ந்து சேர்த்தன. பின்னர் தனிமனிதத் துயரங்கள் அவரது படைப்புகளின் கருப் பொருளாக இடம் பெறத்தொடங்கின. 94 வயது முதியவரான அவர் தற்போது டெல்லியில் மகளுடன் வசிக்கிறார்.

கிரிஷன் கன்னா ஓவியஙகள்

அவர் பெற்ற விருதுகளின் பட்டியல்

1965 – லலித கலா அகாதெமி -டெல்லி நடத்தும் அனைத்திந்திய ஓவியக்காட்சியில் சிறந்த ஓவியத்துக்கு விருது (Cash award).
1968 – புது டெல்லியில் நடைபெற்ற முதலாவது ட்ரினாலே கலைக்காட்சியில் (1st Triennale of Contemporary World Art) தங்கப்பதக்கம்.
1986 – ஈராக்நாட்டு அதிபர் விருது (International Festival of Arts-Bagdad).
1986 – பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் கலை பினாலே ( First Biennale of Art at lahore Pakistan) விழாவில் தங்கப்பதக்கம்.
2004 – கலா ரத்னா (Fellowship) லலித கலா அகாதெமி – டெல்லி விருது.
1990 – பத்மஸ்ரீ விருது.
2011- பத்மபூஷண் விருது.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *