Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #39 – ஜார்ஜ் கெய்ட்

இந்திய ஓவியர்கள் #39 – ஜார்ஜ் கெய்ட்

ஜார்ஜ் கெய்ட் ஓவியங்கள்

ஓவியர் ஜார்ஜ் கெய்ட் இலங்கை கண்டி நகரில் 17 ஏப்ரல் 1901இல் பிறந்தவர். அந்த நாட்டில் மிகப் பெரிய கலைஞராகப் போற்றப்படுபவர். அவரது படைப்புகளில் க்யூபிஸத்தின் தாக்கம் – குறிப்பாக பிகாஸோ – வெளிப்படையாகத் தெரியும். அவரிடம் அவரது சமகால ஓவியர் ஹென்ரி மத்தீஸின் பாதிப்பும் உண்டு. அவர் தமது கல்வியை ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட கண்டியில் உள்ள டிரினிடி கல்லூரியில் பெற்றார். பௌத்த, ஹிந்து மதங்கள் அவரைப் பெரிதும் ஈர்த்தன. இதனால் புத்தரின் ஜாதகக் கதைகளும், ஹிந்து மதப் புராண இதிகாசங்களும் அவரது படைப்புக்களுக்கான கருப்பொருள்களாகின. அஜந்தா ஓவிய வழியும் அவரது ஓவியங்களில் படிந்தது. புத்தரின் ஜாதகக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்துப் பல ஓவியங்களைத் தீட்டினார்.

ஜார்ஜ் கெய்ட்
ஜார்ஜ் கெய்ட்

ஓவியர் ஜார்ஜ் கெய்ட் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட கவிஞரும் கூட. ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்’ அவரை மிகவும் பரவசப்படுத்தியது. அதை ஆங்கிலத்திலும், சிங்கள மொழியிலும் கவிதைகளாக வடித்தார். நூலில் தமது கோட்டு ஓவியங்களையும் இணைத்தார். 1940இல் அது மும்பையில் அச்சிடப்பட்டது. அந்தக் கோட்டு ஓவியங்களில் காணப்படும் எளிமையும் திடமான பிசிறு இல்லாத கோடுகளும் நான் ஓவியக் கல்லூரியில் கற்ற காலங்களில் பெரிதும் என்னைப் பாதித்தன. இந்தியாவுக்கு அடிக்கடி வந்து குறுகிய, நீண்டகாலத் தங்கல்கள் செய்தார். அந்த வருகைகள் அஜந்தா ஓவியம், பௌத்தச் சிற்ப நுணுக்கங்கள் பற்றின தெளிவையும் பெற அவருக்கு உதவின. ரபீந்திரநாத் தாகுர் இலங்கைக்கு 1930 இல் வருகை தந்தபோது அங்கு அவரைச் சந்தித்தது ஜார்ஜ்க்கு கலைபற்றின ஒரு புதிய கதவைத் திறந்துவைத்தது.

ஜார்ஜ் கெய்ட் ஓவியங்கள்

1943இல் இலங்கையில் தோன்றிய கொலம்போ 43 குழு (Colombo’43 Group) இவர் போன்ற பல இளம் ஓவியர்களை ஒருங்கிணைத்தது. தமக்கான பாணியில் பயணித்த அவர்கள் ஒரு குழுவாகவே இயங்கினர். இலங்கையின் கண்டி நடனத்தைப் பிரபலமாக்கப் பெருமுயற்சிகளை அக்குழு எடுத்துக்கொண்டது.

இலங்கையில் தபால் தலைகளில் இவரது ஓவியங்கள் பலமுறை இடம் பெற்றன. அவரது ஓவியங்கள் உலகெங்கும் காட்சிப்படுத்தப்பட்டன. 31 ஜூலை 1993ல் ஜார்ஜ் கெய்ட் காலமானார்.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *