Skip to content
Home » இந்தியா 75 : சிறப்பிதழ்

இந்தியா 75 : சிறப்பிதழ்

இந்தியா 75 : சிறப்பிதழ்

கிழக்கு டுடேவிலிருந்து வெளிவரும் முதல் சிறப்பிதழ் இது. மிகக் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு, அதைவிடவும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவருகிறது, ‘இந்தியா 75’.

இருபதுக்கும் அதிகமாக படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களிலிருந்து வீரஞ்செறிந்த சில அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சில முக்கிய ஆளுமைகள் நினைவுகூரப்பட்டிருக்கிறார்கள். சில முக்கிய நிகழ்வுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் முன்னேற்றங்களும் போதாமைகளும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

காந்தியின் முக்கியப் படைப்பொன்றை ஆர். பட்டாபிராமன் அறிமுகப்படுத்துகிறார். பகத் சிங்கையும் அவர் தோழர்களையும் SP. சொக்கலிங்கம் நினைவுகூர்கிறார். நமது தேசியக் கொடியை அறிமுகப்படுத்தி நேரு ஆற்றும் ஒரு முக்கியமான உரையை இஸ்க்ரா மொழியாக்கம் செய்திருக்கிறார். மூவர்ணத்துக் கொடியின் மையமாகச் சக்கரம் ஏன் இருக்கிறது என்பதற்கு நேரு முன்வைக்கும் காரணம் கவனிக்கத்தக்கது.

அக்களூர் இரவி மொழிபெயர்த்த சுனில் கில்நானியின் ‘இந்தியா எனும் கருத்தாக்கம்’ நூலிலிருந்து சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் நூலிலிருந்து ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. ராமச்சந்திர குஹா, நயன்தாரா சகல் ஆகியோரின் நூல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் பொருத்தம் கருதி வெளியிடப்பட்டுள்ளன.

விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு போதுமான அளவுக்கு இன்னமும் வலியுறுத்தப்படவில்லை என்பதை எஸ். கிருஷ்ணனின் கட்டுரை அழுத்தமாக உணர்த்துகிறது. பாளையக்கார்கள் முன்னெடுத்த வீரமிக்கப் போராட்டங்களை அவர் கவனப்படுத்துகிறார். வேலூர்ப் புரட்சி குறித்து கா.அ. மணிக்குமார் எழுதியிருக்கும் முக்கிய ஆய்வு நூலிலிருந்து ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. காந்தியக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை பற்றிய ஒரு சுவையான சித்திரத்தை ஜனனி ரமேஷ் வழங்குகிறார்.

சமகாலத்தின் முக்கியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான ஜே.என். தேவி சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை முன்வைத்து எழுதிய ஓர் ஆங்கிலக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வீரமாமுனிவரை முன்வைத்துப் பண்பாட்டுப் பரிமாற்றங்களை விவாதிக்கிறார் ஆனந்த் அமலதாஸ் சே.ச.

அறிவியலும் தொழில்நுட்பமும் வளரும்போது நம் தேசமும் உடன் சேர்ந்து வளரும் என்று நேரு நம்பினார். குறிப்பாக, அறிவியல் கண்ணோட்டத்துக்கு அவர் கூடுதல் அழுத்தம் கொடுத்தார். இன்றைய இந்தியா அத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறதா? அதை இன்றைய அரசு ஊக்குவிக்கிறதா? நன்மாறனின் கட்டுரை நம் காலத்தின் முக்கியப் பிரச்னையொன்றைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டி விவாதிக்கிறது.

‘சுதந்திரம்’ என்னும் கருத்தாக்கம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெண் விடுதலை எப்போது என்று வினவுகிறார் நிவேதிதா லூயிஸ். சூழலியல் உரிமைகள் பெறுவது எப்போது என்கிறார் ஹரி பாரதி. இது கொண்டாடப்படவேண்டிய தருணம் மட்டுமல்ல விழித்தெழுந்து செயல்படவேண்டிய தருணமும்கூட என்கிறார் கி. ரமேஷ். நம் கண்முன்னால் களவாடப்படும் நம் கலை, வரலாற்றுச் செல்வங்களை நாம் ஒன்றிணைந்து தடுத்தாகவேண்டும் என்று குரல் கொடுக்கிறார் கோ. செங்குட்டுவன்.

புத்தகங்களால், புத்தகங்களுக்காக இயங்கும் ஓர் இதழ் என்பதால் இந்தச் சிறப்பிதழிலும் புத்தகங்கள் கணிசமான இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டன.

சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் 25 ஆங்கில நூல்களை அரவிந்தன் கண்ணையனும் விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்யும் சில முக்கியமான தமிழ் நூல்களை சித்ரா பாலசுப்ரமணியனும் பட்டியலிடுகிறார்கள். வாசிக்கும் ஆர்வம்கொண்ட அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான பரிந்துரைகளாக இவை அமைந்துள்ளன.

பார்த்தா சாட்டர்ஜியின் புதிய நூலை கௌதம் ராஜ் அறிமுகப்படுத்துகிறார். அறிவியலுக்கு நாம் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கோடு சுந்தர் சருக்கையின் ‘அறிவியல் என்றால் என்ன?’ நூலின் அறிமுகப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

சி. சரவணகார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ என்னும் பெருநாவல் விரைவில் கிழக்கு வெளியீடாக வெளிவரவிருக்கிறது. அந்நாவலுக்கு ஆசிரியர் எழுதிய முன்னுரை இன்று வெளியிடப்படுகிறது.

‘இந்தியா 75’ சிறப்பிதழுக்கு உற்சாகமாகப் பங்களித்த அனைத்துப் படைப்பாளர்களுக்கும் மனம் கனிந்த நன்றி.

இதழ் குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

0

பகிர:
nv-author-image

ஆசிரியர்

‘கிழக்கு டுடே’ இணைய இதழின் ஆசிரியர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *